சரணாகதியே வாழ்வின் உயர்நிலை

 

ஸ்ரீராமகிருஷ்ணர் தம்மிடம் வருபவர்களைப் பற்றிச் சொல்வார்:
இங்கு வரும் பக்தர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒரு வகையினர் ‘கடவுளே! எனக்கு முக்தியை அளியுங்கள்’ என வேண்டுவர்.
அந்தரங்க வட்டத்திலுள்ள மற்றொரு பிரிவினர் இவ்விதமெல்லாம் கேட்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை,‘நான் யார்’ என்பதைத் தெரிந்துகொள்வதும், ‘அவர்கள் யார்’ என்பதைப் புரிந்து கொள்வதும், எங்களுக்கிடையே என்ன உறவு என்பதை அறிந்துகொள்வதிலுமே திருப்தியுறுவர்”.
சுவாமி ராமகிருஷ்ணானந்தர் இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். பக்தியின் சரியான உதாரணம் சுவாமி ராமகிருஷ்ணானந்தர்தான்.
அதைப் பற்றி அவரே சொல்கிறார்:
‘உண்மையான பக்தி சுயநலமற்றது. பக்தர் ஏழையாகவோ, பணக்காரராகவோ இருக்கலாம். இறைவனைத் தவிர வேறு எவரிடமும் பக்தரின் ஆன்மா லயிப்பதுமில்லை. கடவுளிடமிருந்து அவர் எதையும் பெற விரும்புவதுமில்லை. ஆனால் இறைவனுக்கு எதையாவது படைக்கத்தான் அவர் எப்போதும் விரும்புகிறார். கடவுளின் உண்மையான பக்தன் ‘முழு மனிதன்’ என்ற நிலையையும் கடந்தவனாக இருக்க வேண்டும்.
‘ஒரு முழுமனிதன், தன்னிறைவும் போதுமென்ற திருப்தியும் உடையவன். விளிம்புவரை நீர் நிறைந்திருக்கும் ஒரு நீர்த்தேக்கம்கூடத் தன்னிறைவு உடையதுதான். எனினும் அந்த நீர், தேக்கி வைக்கப்பட்டிருக்கும்வரை அதனால் பிறருக்குப் பயனில்லை. அப்படியே தன்னிறைவு பெற்றவரும் பிறரைத் திருப்திப்படுத்த முடியாது.
‘ஆனால் ஒரு ஜீவநதியின் தொடக்கமான நீரூற்றில் நீர் நிறைந்திருப்பது, பொங்கிப் பெருகிப் பிறருக்குப் பயன்படத் தொடர்ச்சியாக நீரை வழங்கிக் கொண்டிருப்பதற்காகத்தானே!
‘உண்மை பக்தனும் இப்படித்தான். அவன் தனக்காக இன்றி, தனது அன்புக்குரிய தலைவருக்காகவும், அவரைச் சார்ந்தவர்களுக்காகவுமே வாழ்கிறான்.’
சுவாமி ராமகிருஷ்ணானந்தர் தமது குருதேவருக்காகவே வாழ்ந்தார். குருதேவர் நோயுற்ற இறுதிநாட்களில் அவர் செய்த சேவையைப் பற்றி குருதேவரின் இல்லறச் சீடர்களுள் சிறந்தவரான டாக்டர் ராமச்சந்திர தத்தர் இவ்வாறு கூறுகிறார்:
‘அன்புச் சகோதரா! மனிதனாகப் பிறந்த நீ, இந்த மனிதகுலத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகளைப் புரிந்து வருகிறாய். அதனால்தான் குருதேவரின் தனிக் கருணைக்குப் பாத்திரமானாய். அவரது கருணையால், அவரைச் சுற்றியிருப்போருக்குத் தலைமை வகிக்கிறாய். அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மகன் நீயே. அவரது பணியாளனும் நீயே’.
ராமகிருஷ்ணானந்தரின் காலடியில் அமர்ந்து பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. 1911-இல் இறுதி நாட்களில் சுவாமிகள் நோயுற்று, கொல்கத்தாவுக்குக் கொண்டு வரப்பட்டபோது அவரை இருமுறை தரிசிக்கும் பேறு அடியேனுக்குக் கிடைத்தது.
சுவாமிகள் 1911 ஆகஸ்டில் மறைந்த பிறகு மடத்தில் பிரம்மசாரியாகச் சேர்ந்த நான் சென்னை மடத்துக்குப் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டேன். அங்கே பக்தியும் துறவும் நிறைந்த சுவாமிகளின் ஆத்மா எங்கும் நிறைந்திருப்பதை நிதரிசனமாக உணர முடிந்தது.
ஆனால் சென்னை மடத்தில் ஒரு தென்னிந்திய பிரம்மசாரி
கூட இல்லாதது கண்டு ஆச்சரியப்பட்டேன். எனினும் சுவாமிகளின் திருக்கரம் பட்டும் அவரது அர்ப்பணிப்பு உணர்வால் உந்தப்பட்டும் தங்களது வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொண்ட சிறந்த பக்தர்களைச் சந்திக்கும் பேறு பெற்றேன்.
சுவாமிகளின் சகோதரச் சீடர்கள் – ஒவ்வொருவரும் ஆன்மிகச் சிங்கங்கள் – சுவாமிகளைப் பற்றி மிக உயர்வான எண்ணம் கொண்டிருந்தனர். ‘சசிமகராஜின் தாக்கம் தென்னிந்தியாவில் ஒரு ஜீவசக்தியாக நிலவி வருகிறது’ என்று சுவாமி பிரம்மானந்தர் கூறுவார்.
‘ராமகிருஷ்ண மடத்தை உண்மையில் தொடங்கியது சசி மகராஜ்தான். ராக்காலோ, சரத்தோ ஏன் சுவாமிஜியோகூட இல்லை’ என சுவாமி பிரேமானந்தர் அறுதியிட்டுக் கூறுவார்.
சுவாமிகளின் மகத்தான துறவையும் பக்தியையும் சேவையையும் வியக்கத்தக்க வலிமையையும், மாற்றம் செய்யும் ஆற்றலையும் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர்கள் மூலமாகவும், சென்னை மடத்தின் பக்தர்கள் மூலமாகவும் அறிந்து, அவரையே என் வாழ்வின் லட்சியபுருஷராக ஏற்றுக் கொண்டேன்.
அப்போது, எதிர்காலத்தில் சென்னை மடத்தின் மூன்றாவது தலைவராக வருவேன் என்றோ, சுவாமிகளின் காலடித் தடத்தில் என் எளிய பயணத்தை மேற்
கொள்வேன் என்றோ நான் அறிந்திருக்கவில்லை.
1911 முதல் 1917 வரை சென்னை மடத்தில் நான் இருந்த காலத்தில் தவம், ஆன்ம ஒழுக்கம், துறவு, சேவை ஆகியவற்றின் மூலம் சுவாமிகள் 14 ஆண்டு காலமாகக் கட்டி வளர்த்திருந்த ஆன்மிகச் சூழலை நேரடியாக என்னால் உணர முடிந்தது. இவர்கள் போன்ற ஒளிமிக்க ஆத்மாக்களைப் புரிந்து கொள்ள நுண்ணுணர்வு இருந்தால்தான் முடியும்.
அப்போதுதான் மனம் எனும் நிலத்தை அவர்கள் தமது எண்ணங்களாலும், ஆன்ம அதிர்வுகளாலும் எவ்வாறெல்லாம் பக்குவப்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பதை உணர முடியும்.
சென்னை மடத்திலிருந்த எங்களுள் பலர் குருதேவரின் கருணையால் மட்டுமல்ல, சுவாமிகள் விட்டுச் சென்ற ஆன்மிகச் சூழலில் உலவியதாலும் மிகுந்த பயடைந்தோம்.
ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஆச்சாரியர்களும் வாழ்ந்து புனிதப்படுத்திய தென்னிந்தியத் தீபகற்பத்திற்கு குருதேவரின் செய்திகளைக் கொண்டு சேர்க்கும் பணிக்கு முற்றிலும் தகுதியான துறவி சுவாமிகளே ஆவார்.
1883-இல் சரத்துடன் சேர்ந்து ஸ்ரீராமகிருஷ்ணரை முதன்முதலில் அவர் சந்தித்தார். சரத் பின்னர் சுவாமி சாரதானந்தர் ஆனார். இந்த முதல் சந்திப்பின் போது அவர்களிடம் குருதேவர் பின்வருமாறு கூறினார்:
‘செங்கற்களையும் ஓடுகளையும் ட்ரேட் மார்க் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பின்னர் சூளையில் வைத்து எரியூட்டுகின்றனர். நன்றாகச் சுட்ட பின் அவற்றின் மீதான சின்னங்கள் எப்போதும் அழிவதில்லை. அது போல் உலகியல் வாழ்வில் நுழையுமுன்னரே ஆன்மிகம் என்ற முத்திரை உங்கள்மீது பதிக்கப்பட வேண்டும். அதன் பின் எவற்றின் மீதும் பற்றுதல் ஏற்படாது.
‘ஆனால் இப்போதெல்லாம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மிகவும் இளவயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். அவர்கள் தங்கள் படிப்பை முடிக்கும்போது குழந்தைகளுக்குத் தந்தையாகி, தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வேலை தேடி இங்குமங்கும் அலையும்படி ஆகிவிடுகிறது.
‘குடும்பத்திலுள்ள பலரது வயிற்றுப்பசியைப் போக்குவதற்காக, போதுமான சம்பளத்துடன் கூடிய ஒரு வேலையை அடைவது அவ்வளவு சுலபமானதல்ல. எனவே கடவுளைப் பற்றி எண்ணுவதற்கே இவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை’.
ஸ்ரீராமகிருஷ்ணர் இவ்வாறு கூறியதைக் கேட்ட அங்கிருந்த இளைஞன் ஒருவன், ஐயா, திருமணம் செய்து கொள்வது தவறா? அது இறைவனின் விருப்பத்திற்கு எதிரானதா?” என்று கேட்டான்.
அப்போது ஸ்ரீராமகிருஷ்ணர் அலமாரியிலிருந்த ஒரு புத்தகத்திலுள்ள பைபிளின் வாக்கியம் ஒன்றை உரக்க வாசிக்கச் சொன்னார். அதில் திருமணம் பற்றிய ஏசுநாதரின் கருத்து பின்வருமாறு அமைந்திருந்தது.
‘தாயின் கருப்பையிலிருந்தே சிலர் அலிகளாகப் பிறக்கிறார்கள். சிலர் மனிதர்களால் அலிகளாக ஆக்கப்படுகிறார்கள். மற்றும் சிலர் ஆண்டவனின் சாம்ராஜ்யத்தின் பொருட்டு அலிகளாக (பிரம்மசாரிகளாக) மாறுகிறார்கள். எவர் பெற்றுக் கொள்ள முடியுமோ, அவர் பெற்றுக் கொள்ளட்டும்!’
ஸ்ரீராமகிருஷ்ணர் சசியிடம், ‘நீ கடவுளை உருவமாகப் பார்க்க விரும்புகிறாயா அல்லது அருவமாக உணர விரும்புகிறாயா?’ என வினவினார். அதற்கு அவர் சொன்ன பதில் குருதேவரை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்து, சசி மகராஜின் குணநலனைப் பிரதிபலிப்பதாக அமைந்தது.
அவர் சொன்னார் : ‘இறைவன் இருக்கிறார் என்பது பற்றியே எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. பிறகு அவர் இப்படி இருப்பாரா, அப்படி இருப்பாரா என எப்படிக் கூற முடியும்?’
குருதேவருக்கு முழு மனதுடன் சேவை
குருதேவர் மிகவும் நோயுற்றிருந்தபோது சசியின் பி.ஏ. தேர்வு நெருங்கிக் கொண்டிருந்தது. சசியும் பிற இளம் சீடர்களும் எவ்விதத் தயக்கமுமின்றித் தங்களது படிப்பையும் – ஏன் இல்லங்களையும் துறந்து குருதேவருக்குச் சேவை செய்ய ஆரம்பித்தனர்.
குருதேவரின் நோய் எல்லாச் சீடர்களையும் ஒருங்கிணைத்து அவர்களைச் சகோதரச் சீடர்களாக்கியது. ஒரு நாள் அந்த இளஞ்சீடர்கள் அனைவருக்கும் துவராடையைக் கொடுத்து ராமகிருஷ்ண துறவியக்கத்தைத் தொடங்கி வைத்தார் குருதேவர்.
1886, ஆகஸ்ட்டில் அவர் மகாசமாதி அடைந்தார். அப்போது அருகிலிருந்த சசி, பின்னொரு நாளில் அதைப் பற்றிக் கூறினார்:
‘தமது இறுதிப் பயணத்தின்போது குருதேவர் ஆனந்தமாகவும் உற்சாகமாகவும் இருந்தது போல் முன் எப்போதும் இருந்ததில்லை. ஸ்ரீராமகிருஷ்ணர் தமது உடலை விடுத்த விநாடிதான் அவரது வாழ்வின் பேரின்பத் தருணமென்று கருதுகிறேன். அவரிடம் ஓர் ஆனந்த அதிர்வு பொங்கி வழிந்தது. அவரது உடலெங்கும் மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன.’
ராமகிருஷ்ண மடத்தின் முக்கியத் தூண்
தகனத்திற்குப் பிறகு, தமது குருவின் அஸ்தியைத் திரட்டியெடுத்த சசி, அதனை காசிப்பூர் தோட்ட இல்லத்திற்கும் பிறகு வராக நகரிலிருந்த துறவியர் மடத்திற்கும் எடுத்துச் சென்றார்.
அங்கே குருதேவருக்கு நித்தியப் பூஜைகள் செய்யும் முறையை ஏற்படுத்தினார்.
ஸ்ரீராமகிருஷ்ணரின் படத்தை ஓர் அடையாளமாக வைத்து, குருதேவர் ரத்தமும் சதையுமாக உயிருடன் இருந்தபோது அவருக்கு எவ்வாறு பணிவிடை செய்தாரோ, அது போலவே முழுமனதுடனும் பக்தியுடனும் சேவை செய்து வந்தார். அங்கிருந்த அனை
வருமே தங்கள் குருதேவர் அந்த மடத்தில் உயிருடன் உலவுவதை உணர்ந்தனர்.
அது மட்டுமல்ல, தமது சகோதரத் துறவியர் தங்களை மறந்து ஆன்மிகச் சாதனைகளிலும் பக்திப் பாடல்களிலும் மூழ்கியிருந்தபோது ஓர் அன்புத் தாயைப் போல அவர்களை எழுப்பி உணவூட்டினார்.
சசியின் இப்பணிவிடையைக் குறித்துப் பின்னர் சுவாமி விவேகானந்தர் கூறுவார்:
சசி, மடத்தின் முக்கியத் தூணாக விளங்கினார். அவர் இல்லாவிட்டால் மடத்தில் எங்கள் வாழ்வு ஒன்றுமில்லாது போயிருக்கும். துறவியர் பல சமயம் உணவை மறந்து ஜபத்திலும் தியானத்திலும் மூழ்கிக் கிடக்கும் போது, அவர் அவர்களுக்காக உணவுடன் காத்திருப்பார். சில சமயம் அவர்களைத் தியானத்திலிருந்து இழுத்து வந்தும் உணவூட்டுவார்.”
மிகவும் கஷ்டமான காலத்தில் – அதாவது மடத்தின் சிறுசிறு தேவைகளைக்கூட நிறைவேற்றுவதற்கு வசதியற்றுப் போனபோது சுவாமிகள் வராகநகர் உயர் நிலைப் பள்ளியில் தினமும் 2 மணி நேரம் ஆசிரியராகப் பணியாற்றி மடத்தைப் பராமரித்தார்.
பின்னர் துறவியர் பலரும் பரிவ்ராஜகர்களாகக் கிளம்பிச் சென்றபோது, அவர் மடத்திலேயே தங்கியிருந்து தமது குருவுக்கும், அவரது சீடர்களுக்கும் அன்பையும் பக்தியையுமே குறிக்கோளாகக் கொண்டு சேவை செய்து வந்தார்.
‘சசி மகராஜ்தான் மடத்தை உண்மையில் தோற்றுவித்தவர்’ என்று சுவாமி பிரேமானந்தர் சொன்னதில் எவ்வித வியப்புமில்லை.
ஒரு சமயம் நன்கொடை பெற மைசூர் அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரைச் சந்திக்க சசி மகராஜும் சகோதரி தேவமாதாவும் சென்றனர். அந்த அதிகாரி அவர்களை இரண்டு மணி நேரத்திற்கு மேலாகக் காக்க வைத்தார். முடிவில், அவரைச் சகோதரி சந்தித்ததும் அவரிடம் தாங்கள் வந்த நோக்கத்தைக் கூறத் தொடங்கினார்.
சட்டென அவரை இடைமறித்த அந்த அதிகாரி, ‘அடடா, இந்த ராமகிருஷ்ணரைப் பற்றி ஏன் இவர்கள் இவ்வளவு அலட்டிக் கொள்கிறார்கள் என்று புரிய
வில்லையே’ என்றார்.
சுவாமிகளுடன் சென்றிருந்த சகோதரி தேவமாதாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
அப்போது சுவாமிகள் அதிகாரியின் பக்கம் திரும்பி, புன்னகைத்து, உங்களுக்கு ஸ்ரீராமகிருஷ்ணர் பற்றி சொல்கிறேன். நான் அவருக்குப் பணிவிடை செய்தவன்’ என்று சுவாமிகள் பேசப் பேச அதிகாரியின் அகக்கண் திறந்தது.
அதோடு ஆசிரமக் கட்டிட நிதிக்காகத் தனது பங்கினையும் அளித்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s