விவேகானந்தரைக் கற்ற இளைஞர்கள்


விவேகானந்தரைக் கற்ற இளைஞர்கள்
Training_aug2005

மைசூரிலிருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் சர்கூர் என்ற அழகிய கிராமம். ஏதோ பழங்குடியினருக்காக நடக்கும் பணிகளைக் காட்டப் போவதாகச் சொன்னார்கள். ‘சுவையான விஷயமில்லை’ என்று நாங்கள் நினைத்துக் கொண்டோம்.
ஆனால் ஒரு தல யாத்திரை தரக்கூடிய அற்புத அனுபவமும் திறமையான மனித சக்தியை வெளிப்படுத்தும் இளைஞர் கூட்டத்தைப் பார்க்கும் பிரமிப்பும் எங்களுக்கு ஒருங்கே ஏற்படப் போகின்றன என்பதை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
எங்கள் வண்டி குண்டுங்குழியுமான சாலையில் குதித்தாடிச் சென்ற விதம் படகுப் பயணம் போலிருந்தது. திடீரென அக்கிராமத்திற்குப் பொருந்தாத, சென்னை, பம்பாய் போன்ற மாநகரத்திலிருந்து பெயர்த்து வந்து வைத்தது போன்ற ஒரு பெரிய மருத்துவமனை கண்ணில் பட்டது!
அதன் நிர்வாகி டாக்டர் பாலசுப்பிரமணியன் எங்களை வரவேற்றார். மருத்துவமனையின் முகப்பில் இருந்த Vivekananda Memorial Hospital என்ற பெயர் எங்களிடம் மகிழ்ச்சியைத் தோற்றுவித்தது.
அங்கு எக்ஸ்ரே, மகளிர் மருத்துவ ஆய்வுத்துறை, ரத்த வங்கி, இணைய தளம் மூலம் சிகிச்சை (Tele Medicine Linkup) நவீன அறுவை சிகிச்சை முதலிய மருத்துவ வசதிகளும் உள்ளன. இணைய தளம் மூலம் வெளிநாட்டு மருத்துவர்களின் தொடர்புடன் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது அந்த குக்கிராமத்தில்! வருடத்திற்குச் சுமார் 35,000 நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள். முக்கால்வாசி நோயாளிகள் பழங்குடியினர்.
‘சிகிச்சை கட்டணம் எவ்வளவு?’ என்று கேட்டதற்கு, ‘பழங்குடியினருக்கு எல்லாம் இலவசம்’ என்று கூறி எங்களை அசர வைத்தார் டாக்டர். அப்போதுதான் அது ‘சுவாமி விவேகானந்தர் இளைஞர் இயக்கம்’ (Swami Vivekananda Youth Movement – SVYM) என்ற பெயரில் நடக்கும் சேவை மையம் என அறிந்தோம்.
எங்கள் மனதில் எழுந்த கேள்விகளைப் புரிந்து கொண்ட டாக்டர் பாலசுப்பிரமணியன், நான் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து ஒரு மருத்துவராகவே விரும்பினேன். 92% மதிப்பெண் வாங்கியிருந்தும், மருத்துவ சீட் கிடைக்கவில்லை. விருப்பமில்லாது பெங்களூரிலுள்ள பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். முதல் நாளே எனக்கு ‘ராகிங்’ அனுபவம். அதனால் கல்லூரிக்கு மறுபடியும் செல்வதில்லை என முடிவெடுத்தேன்.
Hospital_aug2005
கல்லூரிக்கு அருகே இருந்த ராமகிருஷ்ண ஆசிரமத்திற்குச் சென்றேன். மனம் தளர்ந்த எனக்கு ஆசிரமத்தின் இதமான சூழ்நிலை புத்துணர்ச்சியைக் கொடுத்தது. அங்கு விவேகானந்தரின் நூல்களை மெல்ல மெல்ல படித்து முடித்தேன்; எனக்கு மெய்சிலிர்த்தது. அப்போது நான் எவ்வளவு தூரம் அதைப் புரிந்து கொண்டேன் என்பது சந்தேகமே; என்றாலும் நான் பழைய மனிதனாக இருக்கவில்லை.
விவேகானந்தருக்குத்தான் ஏழைகளிடம் என்ன ஒரு கருணை, அன்பு! (டாக்டரின் முகபாவத்திலிருந்து அவர் தம்மீது அந்நாட்களில் விவேகானந்தரால் ஏற்பட்ட தாக்கத்தை மீண்டும் அனுபவித்ததுபோல் தோன்றியது).
ஏழைகளுக்காக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உத்வேகம் என்னுள் எழுந்தது. அதற்கேற்ப ஒரு மாதத்திற்குப் பின் மைசூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது!
மருத்துவக் கல்லூரியில் படித்தபோது நானும் சக மாணவர்களும் மைசூர் புறநகர் பகுதிகளில் (ஞாயிறு மட்டும் இயங்கும்) இரண்டு மருத்துவமனைகளை ஆரம்பித்தோம். மைசூர் ராமகிருஷ்ண ஆசிரமத்தின் அப்போதைய தலைவர் ஸ்ரீமத் சுவாமி சுரேஷானந்தரின் அன்பும் ஆலோசனையும் எங்களுக்கு மிகவும் ஊக்கமளித்தன.
நகர மக்களைவிட கிராமத்தினருக்கே அடிப்படை வசதிகள் தேவை அல்லவா? எனவே படிப்பு முடிந்ததும் சிறிதும் மருத்துவ வசதிகள் இல்லாத பழங்குடியினர் வாழும் பிரம்மகிரி என்ற கிராமத்தில் நானும் மற்றொருவரும் சேர்ந்து 1984-இல் மருத்துவமனை ஒன்றைக் கீற்றுக் கொட்டகையில் ஆரம்பித்தோம்.
பல்வேறு தடைகள் வழிமறித்தன. பழங்குடியினர் அல்லாதவர் நாங்கள் அரசியல் நோக்கத்துடன் வந்திருப்பதாக நினைத்தனர். பழங்குடியினரோ எங்களைச் சந்தேகித்தனர். (பொதுவாக நகர மக்கள் அவர்களிடம் போவது ஏமாற்றத்தானே!) எங்களுக்குக் கொலை மிரட்டல்கூட வந்தது. ஆனால் சுவாமிஜியின் சிந்தனைகளை நெஞ்சில் நிறைத்து முன்னேறிச் சென்றோம்.
கடினமான பாதை; சோதனை இன்றி எப்படிச் சாதிக்க முடியும்? மருத்துவ உதவிகள் மட்டுமே போதுமானவை அல்ல என விரைவில் அறிந்து கொண்டோம். பல பிரச்னைகளை, குறைபாடுகளைத் தீர்க்க வேண்டியிருந்தது. படிப்படியாக எங்கள் பணி வளர்ந்தது. பழங்குடியினருக்காக உணவு, உடை, பாட நூல்கள், தங்கும் வசதி போன்றவற்றுடன் பள்ளி ஒன்றைத் துவக்கினோம். மாதத்திற்குப் பத்து ரூபாய் கட்டணம் என்று நிர்ணயித்தோம். படிப்படியாக மக்கள் மனதில் இடம் பிடித்தோம்.
மேலும் பழங்குடியினருக்குக் கல்வியின் அவசியத்தை உணர்த்த அவர்களைப் பேரூந்தில் அழைத்து வந்து பள்ளியைச் சுற்றிக் காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியிருந்தது; சில சமயம் மாணவர்களைத் துரத்திப் பிடித்தும் படிக்க வைக்க வேண்டியிருந்தது; சுருங்கச் சொன்னால், அது தாய் தன் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாக வளர்ப்பது போலிருந்தது!
பிறகு, எங்களுக்கு அரசு உதவியும் அங்கீகாரமும் கிடைத்தன; 1993-இல் அரசின் தேசிய இளைஞர் விருதும் கிடைத்தது. இப்போது நாங்கள் 200 பேர் இருக்கிறோம்.
சுகங்களை அனுபவிப்பதும் சம்பாதிப்பதும் மட்டுமே மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்குப் போதுமானவை அல்ல என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். எனவே எங்கள் குழு தன் பணியின் மூலம் வாழ்க்கையின் உயர்ந்த லட்சியங்களை அடைய முயற்சிக்கிறது.
சமுதாயத்திடமிருந்து நாம் எத்தனையோ பெறுகிறோம். கஷ்டப்பட்டு உழைத்த மக்களின் வரிப் பணத்தை லட்சக்கணக்கில் கொட்டி அரசு மருத்துவ, பொறியியல் கல்லூரிகளை நமக்காக அமைக்கிறது. சமூகத்திலிருந்து இவ்வளவு பெற்ற நாம் சிறிதாவது அதற்குக் கைம்மாறு செய்ய வேண்டாமா?” என்று வேகத்துடன் கேட்டார் டாக்டர்.
தன்னலமற்ற சேவையைத் ‘தட்டிக் கழிக்க இயலாத கடமை’ என்று தன்னடக்கத்துடன் கூறிய டாக்டரின் உணர்வு எங்களை நெகிழ வைத்தது.
Nurse_training_aug2005
அடுத்து, காட்டிற்குள் ஹொசஹள்ளி என்ற கிராமத்தில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான பள்ளியைப் பார்க்கச் சென்றோம். கபினி அணைக்கு அருகே இருந்த அவ்விடத்தில் யானைகள் அடிக்கடி வரும் என்பதால் வயல்களில் பரண் அமைத்திருந்தனர். சாலையில் சென்று கொண்டிருந்த இரு பழங்குடிச் சிறுமிகள் எங்களிடம் கன்னடத்தில் ஏதோ கேட்டனர்.
நாங்கள் விழித்ததைப் பார்த்துப் புன்னகையுடன், ‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று சரளமாக ஆங்கிலத்தில் கேட்டு எங்களை அசர வைத்தனர். எங்கள் திகைப்புக்கு விடையாக ’ That is our school’ என்று தூரத்தில் தெரிந்த பள்ளிக்கூடத்தைச் சுட்டிக் காட்டினர்.
அப்பள்ளியில் கணினிகள், தொலைநோக்கி, அறிவியல்கூடம் ஆகிய அனைத்தும் இருந்தன. அறிவியல்கூடத்திலிருந்த கண்ணாடிக் குப்பிகளில் பல வகைப் பாம்புகள், தேள்கள் மற்றும் காட்டுப் பூச்சிகள் திரவத்தில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன.
எங்களுக்கு அவற்றைக் காட்டியவர், இவற்றையெல்லாம் காட்டிலிருந்து மாணவர்களே பிடித்து வந்தார்கள்! அது மட்டுமல்ல, அவர்களே நூறு வகைப் பாம்புகளைக் கண்டறிய முடியும்” என்றார்.
இயற்கை அன்னை வழங்கும் அறிவும், கடினச் சூழ்நிலை தரும் தைரியமும் நிறைந்த இந்தத் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால் நகர மாணவர்களை மிஞ்சிவிடுவார்கள் என்பது எங்களுக்குப் புரிந்தது.
அதை நிரூபிப்பதுபோல் இங்குள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களால் ‘பவர்பாயிண்ட் பிரசன்டேஷன்’ தர இயலும் என்றும் அறிந்தோம். மேலும் படிப்புடன் பண்பாட்டையும் வளர்க்கும் ஓவியம், கலைப்பொருள்கள் செய்தல், நடனம், விவேகானந்தரைப் பற்றிய நன்னெறிப் பாடங்கள் முதலியவை கற்பிக்கப்படுகின்றன.
இது போல் கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினால் மட்டுமே இந்தியா உயர்வடையும் என்பது சுவாமிஜியின் ஆணித்தரமான கருத்து.
தற்போது SVYM அமைப்பு கிராமங்களில் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் தொழிற்பயிற்சி, சுகாதாரம், குழந்தை வளர்ப்பு முதலிய பணிகளைச் செய்கிறது. மேலும் வித்யாவாஹினி, சிக்ஷணவாஹினி என்ற நடமாடும் ஊர்திகள் கல்வி, மருத்துவ உதவி செய்ய மக்களைத் தேடிச் செல்கின்றன.
மைசூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் இயக்கத்திற்கு 2004- ஆம் ஆண்டு சென்னை பகவான் மகாவீர் ஃபவுண்டேஷனின் விருது வழங்கப்பட்டுள்ளது.
(விவரங்களுக்கு: SWAMI VIVEKANANDA YOUTH MOVEMENT, HANCHIPURA ROAD, SARGUR H.D.KOTE TALUK, MYSORE DT., KARNATAKA – 571 121.
web: http://www.vivekamysore.com)
சுவாமிஜியின் வார்த்தைகள் பிணத்திற்கும் உயிரூட்டும் என்று சுவாமி துரியானந்தர் கூறுவது வழக்கம். சாதாரண ‘ராகிங்’ போன்ற தொல்லைகளைச் சமாளிக்க முடியாமல் மனம் சோர்ந்த இளைஞருக் குப் பிறருக்கு வழிகாட்டக்கூடிய மேன்மையை அளித்த சுவாமிஜி யின் சக்திதான் எவ்வளவு மகத்தானது!
சுவாமி தக்ஷஜானந்தர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s