1% அறிவு 99% உழைப்பு

அறிவியலில் 1093 கண்டுபிடிப்புகளைச் செய்து சாதித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன்.
அந்தக் காலத்தில் மின்சாரத்தைச் சேமித்து வைக்கும் பேட்டரிகள் மிகக் கனமாகவும், எளிதில் உடையக் கூடியவையாகவும் இருந்தன. எடை குறைந்த, உறுதியான பேட்டரியைக் கண்டுபிடிக்க முயன்றார் எடிசன்.
ஆராய்ச்சியில் ஒன்பது வருடங்கள் ஓடின. சுமார் எட்டாயிரம் முயற்சிகள் தோல்வியுற்றன. ‘எடிசனின் பேட்டரி கனவு முயற்சி தோல்வி’ எனப் பத்திரிகைகள் திரும்பத் திரும்ப எழுதின. ஆனால் எடிசன் தளரவில்லை.
நாம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்யத் தயாராக இருந்தால், இயற்கையும் தன் ரகசியங்களை வெளிப்படுத்த மறுக்கப் போவதில்லை” என்று அவர் அடிக்கடி கூறுவார்.
ஒரு நிருபர் அவரிடம், தங்களது 8000 ஆராய்ச்சிகளும் வீண்தானே?” என்று கேட்டார்.
எடிசன் கூறினார்: இல்லை. இந்த 8000 விதங்களில் எனது பேட்டரியை உருவாக்க முடியாது என்று கண்டுபிடித்தேன். ஒருவேளை நான் அந்த பேட்டரியை உருவாக்க முடியாவிட்டாலும் எனக்குப் பின் வரும் அறிஞர்கள் இந்த எட்டாயிரம் விதங்களைத் தவிர்த்து, வேறு புதிய விதத்தில் தங்கள் ஆராய்ச்சியைத் தொடரலாமே?”
மேலும் இரண்டாயிரம் முயற்சிகளுக்கும் பிறகு அவரே அந்த பேட்டரியைக் (nickel-iron-alkaline storage battery) கண்டுபிடித்தார்.

அக்காலத்தில் தாம் வசித்து வந்த நியூயார்க் நகரின் வீடுகளிலும் வீதிகளிலும் மின்சார விளக்குகள் ஒளிவீச வேண்டும் என்பது எடிசனின் ஆசை.
ஆனால் கேஸ் மற்றும் எண்ணெய் விளக்குகளை மட்டும் உபயோகித்துக் கொண்டிருந்த காலத்தில் அவரது ஆசை நிறைவேறும் என்பதை அவரைத் தவிர மற்ற விஞ்ஞானிகள் உட்பட யாரும் நம்பவில்லை. விஞ்ஞானிகள் எடிசனுக்கு எதிராகத் தங்கள் கருத்துகள் மூன்றை ஆணித்தரமாகக் கூறினர்.
ஒன்று, மின்சாரத்தைப் பல இடங்களுக்கு வினியோகிக்க முடியாது. இரண்டு, அப்படியே முடிந்தாலும் ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு அதைப் பயன்படுத்துவார்கள் என்பதைக் கணிக்க முடியாது. மூன்று, மின்சார விளக்கு கேஸ் லைட் போல மலிவானதல்ல.
அக்காலகட்டத்தில் அறிவியல் அந்த அளவே வளர்ந்திருந்ததால் அவர்கள் கூறியதில் உண்மை இருந்தது.
வழிகள் இல்லாவிட்டால் அவை உருவாக்கப்பட வேண்டும் என்பது எடிசனின் சித்தாந்தம். அவர் தமது ஆராய்ச்சிக்கு உதவும் ஒவ்வொரு புத்தகத்தையும், கட்டுரையையும் விடாமல் படித்தார்.
இருநூறு நோட்டுகளில், 40,000-த்திற்கும் மேற்பட்ட பக்கங்களில், தம் கருத்துகளையும் வரைபடங்களையும் பதித்து ஆராய்ந்தார்.
கடைசியில் அவர் கனவு நனவாகியது. உலகிலேயே மின்விளக்குகளால் ஒளி பெற்ற முதல் நகரம் என்ற பெருமையை நியூயார்க் நகரம் பெற்றது.
பத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும் அவரைப் பாராட்ட ஓடோடிச் சென்றபோது அவர் தமது ஆராய்ச்சிக்கூடத்தில் வேறோர் ஆராய்ச்சியை ஆரம்பித்திருந்தார். அவரது மகத்தான ஆராய்ச்சி வெற்றி குறித்து பத்திரிகையாளர்கள் கருத்து கேட்டபோது அவர் புன்னகையுடன் சொன்னார்: நேற்றைய கண்டுபிடிப்பு பற்றிப் பேசி இன்றைய நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை.”
ஒரு சாதனை புரிந்துவிட்டால் அதிலேயே மகிழ்ந்து திளைத்து மயங்கும் மனிதர் மத்தியில், உலகச் சாதனையே புரிந்த போதிலும் அது நேற்றைய கண்டுபிடிப்பு என இயல்பாகச் சொல்லி அடுத்த சாதனை படைக்கக் கிளம்பிய இவர் அற்புத மனிதர் அல்லவா?

இளைஞர்களே, சோதனைகளைக் கடந்தே சாதனைகள் வரும். எடிசனின் வெற்றியில் ஒரு சதவீதம் அறிவு, 99 சதவீதம் உழைப்பு” என்ற பொன்மொழி பிரசித்தமானது.
அந்த ஒரு சதவீதத்தை இறைவன் நம் எல்லோருக்கும் தந்துள்ளான். அத்துடன் 99% உழைப்பைச் சேர்த்தால் எவரும் எடிசனைப் போல் சாதனை படைக்கலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s