அன்னையின் அன்புக் குழந்தைகள்


அன்னையின் அன்புக் குழந்தைகள்

அண்மையில் அன்னை ஸ்ரீசாரதாதேவி அவதரித்த தலமான ஜெயராம்பாடி செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
அங்கு அன்னையின் திருமடியில் தவழும் இரு ‘வயதான குழந்தைகளைத்’ தரிசிக்க முடிந்தது.
SwNishpruhanandar

அவர்களுள் ஒருவர் சுவாமி நிஸ்ப்ருஹானந்தர் (வீரேஸ் மகராஜ்).
கண்ணால் கண்டதும் நம்மில் ஆனந்தம் பொங்கச் செய்பவரே இறையடியார். அத்தகையவர்களுள் ஒருவர் வீரேஸ் மகராஜ். அவர் வாழ்நாள் முழுதும் கடும் உழைப்பு, ஆத்மார்த்தமான சேவை, எளிமை, இறைபக்தி, சாஸ்திரப் படிப்பு என்று தம் தவ வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்.
அப்படிப்பட்ட ஒரு துறவியின் வாழ்க்கை நெறிமுறைகளை அறிந்து கொள்வது நம் வாசகர்களுக்கு, குறிப்பாகப் பக்தர்களுக்கு அவசியம் என்பதால் அவரிடம் உரையாடினோம்.
‘மக்களிடமிருந்து குறைவான உதவியும், இறைவனிடமிருந்து அதிக உதவியும் பெறுவது’ என்று சுவாமி விவேகானந்தர் ஆன்மிக வாழ்க்கையைப் பற்றிக் கூறுவார்.
வயதானாலே நாடி நரம்புகள் தளர்ந்து நம்மில் பலரும் பிறர் உதவியை நாடுகிறோம்; அன்பிற்காக ஏங்குகிறோம். ஆனால் இந்தச் சுவாமிகளோ தம் நீண்ட வாழ்க்கையில் எதையும் சாராது உள்ளார். உடன் இருப்பவர்களுக்குத் தம்மால் இயன்றதை வழங்குகிறார். எதையும் சாராமல் இருப்பதென்பது, இறைவனை மட்டுமே சார்ந்திருப்பது என்று நமக்கு உணர்த்துகிறார்.

வீரேஸ் மகராஜ் தமது காரியங்களுள் தொண்ணூறு சதவிகிதத்தைத் தாமே செய்கிறார். உண்பது, குளிப்பது, துணி துவைப்பது, நடப்பது, படிப்பது, முடிவெடுப்பது போன்ற அனைத்தையும் தாமே செய்து கொள்கிறார்.
‘இது போன்றவற்றை ஒருவர் தாமே செய்யாமல், வேறு யார் செய்வார்களாம்?’ என நீங்கள் கேட்கலாம். சுவாமிகள் அவ்வாறு செய்வதில் ஒரு சிறப்பு உள்ளது. அது அவரது வயது.
சுவாமிகளின் வயது பற்றி அவரிடமே கேட்டோம். பெரிதாய் ஒன்றும் இல்லை. பிரசிடெண்ட் மகராஜைவிட (பூஜனீய ஸ்ரீமத் சுவாமி ரங்கநாதானந்தர்) ஒரு வயது குறைவு” என்றார்.
தவத்திரு சுவாமி ரங்கநாதானந்த மகராஜிடம் சமீபத்தில் ஒருவர் அவரது வயதைப் பற்றிக் கேட்டபோது அவர், நான் 96 வயது இளைஞன்” என்றாராம்.
இப்போது சொல்லுங்கள், வீரேஸ் மகராஜின் செயல்கள் உங்களை வியக்க வைக்கவில்லையா?
சுவாமிகளைத் தரிசித்ததும் நாங்கள் பெற்ற ஆனந்தம் அளவில் அடங்காது. குழந்தை போன்ற அந்த முகத்தின் முன்பு நாமும் குழந்தை ஆகிறோம்.
அதே சமயம் அவரது 95 வருட வாழ்க்கை வரலாற்றை நோக்கினால், அவரிடமிருந்து கற்க வேண்டியவை ஆயிரம் உள்ளன என்பது புரிகிறது. உடனே ஒரு மாணவனாய் அவர் முன் அமர்கிறோம்.
ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடரான சுவாமி அகண்டானந்தரிடம் மந்திர தீட்சை பெற்றவர் நம் சுவாமிகள். சுவாமி விவேகானந்தர் உலக மக்களுக்குச் சேவை செய்யத் தொடங்கும் முன்பே, அகண்டானந்தர் சார்காச்சி என்ற ஒரு சிறு கிராமத்தில் சேவையைத் தொடங்கியவர். தாம் அப்படிப்பட்டவரின் சீடர்தான் என்பதை வீரேஸ் மகராஜ் இன்றளவும் நிரூபித்து வருகிறார்.
தம் தள்ளாத வயதிலும் ஆசிரமத்துப் புத்தக விற்பனை நிலையத்தில் அமர்ந்து பணி புரிகிறார். நாங்கள் அவரை வீடியோ எடுக்க விரும்பினோம். அப்போது அவர் மெதுவாக இரண்டு நூல்களைக் கையில் எடுத்தார். அவை அன்னை ஸ்ரீசாரதாதேவியின் படங்களைக் கொண்ட வங்காள நூல்கள். அவற்றைத் தமது நெஞ்சின் மேல் ஒரு சிறுவனைப் போல் வைத்துக்கொண்டு, ம், இப்போது எடு” என்று சிம்மக் குரலில் கூறினார். அன்னையிடம் அவருக்கு அந்த அளவிற்குப் பக்தி.

அப்போது இரண்டு இளைஞர்கள் அங்கு வந்தார்கள். எங்களுக்கு அவர்கள் சாதாரணமாகத் தோன்றினார்கள். ஆனால் சுவாமிகள் அவர்களின் பிரச்னையை உணர்ந்தார் போலும்.
வந்தவர்கள் ஒன்றும் கூறாமலே சுவாமிகள் தாமே சில நூல்களைப் புரட்டி, இதைப் படியுங்கள்; எல்லாம் சரியாகிவிடும்” என்றார். நூலை வாங்கியவர்கள் தங்களுக்குத் தேவையானதைப் பெற்ற மகிழ்ச்சியில் சென்றார்கள். ‘மனதைக் கட்டுப்படுத் துவது எப்படி?’ என்ற நூலை அவர் எடுத்துக் கொடுத்திருந்தார்.
வீரேஸ் மகராஜைப் புகைப்படம் எடுக்க முயன்றோம். சுவாமிகள், ‘பிறகு பார்க்கலாம்’ என்று சொல்லிவிட்டார். பிறகு அவருடன் நடந்து செல்லும்போது அங்கிருந்த சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை முன்பு நாங்கள் நின்றோம். அப்போது சுவாமிஜியின் சிலை முன் நின்று அவர், போட்டோ எடுக்க விரும்பினாயே, இந்தப் பின்னணியில் என்னை போட்டோ எடு” என்று கூறினார்.
தம் இஷ்டதெய்வங்களின் பின்னணியில்தான் தம்மைப் பிறர் அறிய வேண்டும் என்று சுவாமிகள் விரும்பினார்.
சுவாமிகளின் இன்னொரு தனித்துவம், அவரது உடல் பலம். இன்றும்கூட அவர் துவைத்த துணியை, அவர் பிழிந்த பின் நாம் பிழிந்தால் நம் கைதான் வலிக்கும். துணியிலிருந்து சிறிதும் நீர் வருவதில்லை.
அவர் சிறுவயது முதலே கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டுள்ளார்; வாலிப வயதில் திறமையான கால் பந்தாட்ட வீரராக விளங்கினாராம். மடத்தில் சேர்ந்து துறவியான பிறகும் கால்பந்தாட்டச் சங்கங்களிலிருந்து அதிகமாகப் பணம் தருவதாகக் கூறி அவரை அழைப்பார்களாம்.
அப்படிப்பட்ட வலுவான கால்கள் தற்போது சற்றே தளர்ந்து வளைந்து வேகமாக நடக்க ஒத்துழைப்பதில்லை என்றாலும் இன்றும் அன்னை ஸ்ரீசாரதாதேவியின் கோவிலில் அமர்ந்து ஆரதிப் பாடல் (தீபாராதனை) அவர் பாடும்போது உண்டாகும் ஆனந்தம் பக்தர்களை மெய் மறக்கச் செய்யும்.
அவர் ஹார்மோனியம் வாசித்துப் பாடாத நாட்களில் ஓர் ஓரத்தில் நாற்காலியில் அமர்ந்து பக்தியுடன் பாடுகிறார். தீபாராதனை முடிந்ததும் அவரைத் தரிசிக்கும் குழந்தைகளுக்குத் தம் பெரிய சட்டைப்பையிலிருந்து சாக்லெட்டுகளைத் தருகிறார்.
அப்போது அக்குழந்தைகள் அவர் முகத்தில் தங்கள் முகங்களைப் பார்ப்பது போன்ற உணர்வைப் பெறுகிறார்கள்.
சுவாமிகளின் ஜீரண சக்தி நம்மால் நினைத்துப் பார்க்க முடியாதது. அவர் ஆசைப்பட்டு எதையும் உண்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் அவரது ஜாடராக்னி மிகவும் சக்தி வாய்ந்தது; உழைக்கும் இளைஞன் ஒருவன் உண்ணும் அளவிற்கு இவரும் உண்கிறார். உணவுக்கூடத்திற்கு அவரே சென்று நாற்காலியை நகர்த்திச் சரிசெய்து அமர்கிறார். உடன் உண்பவர்களுக்கு, ‘அவருக்கு இதை அதிகம் பரிமாறு. ம், நல்லா சாப்பிடுங்க’ என்று அவர்களை ஊக்கப்படுத்துகிறார்.
இயல்புதானே! ஜெயராம்பாடியில் வந்தவர்களுக்கெல்லாம் இப்படித்தானே அன்னை ஸ்ரீசாரதாதேவி வாரி வாரி வழங்கினார்! அந்தத் தலத்தில் கடந்த 46 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் வீரேஸ் மகராஜ் அவ்வாறு கூறுவதில் வியப்பென்ன!
சுவாமிகள் 1928-ஆம் ஆண்டு மடத்தில் சேர்ந்தார். 1946-ல் சந்நியாசம் பெற்று டாக்கா, ஸ்ரீநகர், மும்பை போன்ற மடத்தின் பல கிளைகளில் சேவையாற்றினார்.
பல வருடங்களுக்கு முன்பு சென்னை ராமகிருஷ்ண மடத்திற்குச் சுவாமிகள் ஒருமுறை வந்தார். அன்று அன்னை ஸ்ரீசாரதையின் ஜெயந்தி விழா. அவர் வங்காளி என்பதால் மடத்துத் துறவிகள் அவரை வங்காளப் பாடல்களைப் பாடும்படி கேட்டுக் கொண்டார்கள். அதன்படி சுவாமிகளும் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.
இவ்வாறு வீரேஸ் மகராஜைத் தரிசித்தது எங்களுள் பெரும் சக்தியை ஊட்டியது என்றால், இதே ஆசிரமத்தின் பிரபீர் மகராஜைத் தரிசித்தது எங்களுள் அமைதியை நிரப்பியது.
SwSamanandar
சுவாமி சிவானந்தரின் சீடரான சுவாமி சமானந்தருக்கு (பிரபீர் மகராஜ்) வயது 87.
பசி, பயணம், வெயிலில் களைத்து கொல்கத்தாவிலிருந்து ஜெயராம்பாடி ஆசிரமத்தில் பிற்பகல் இரண்டு மணியளவில் நுழைந்த எங்களுக்கு முதலில் தரிசனம் தந்தவர் இவர்.
எங்களைக் கண்டதும், ‘எங்கிருந்து வருகிறாய்? என்ன விஷயம்?’ என்றெல்லாம் கேட்காமல், அன்னை ஸ்ரீசாரதை கேட்பது போல, ‘சாப்பிட்டாயா?’ என்று சுவாமிகள் கேட்டபோது, வெயிலின் சூட்டிற்கு இளநீர் தருவது போன்ற அனுபவம்.
ஒரு காலத்தில் சுவாமிகள் அதிகம் பேசாமல் இருந்தாராம். எதையும் தர்க்க Žரீதியில் அலசி எதிராளியை அசத்துவாராம். அப்படிப்பட்டவர் இன்று எப்படிப் பரிணமித்திருக்கிறார் தெரியுமா?
பிரபீர் மகராஜ் சிரித்தால் எப்படியோ நமக்கும் சந்தோஷம் தொற்றிக் கொள்கிறது. அவர் எல்லோரையும் ஒரு வாஞ்சையு டனே பார்க்கிறார்.
ஒருமுறை சுவாமிகள் மகாத்மா காந்தியைச் சந்தித்து மாலை அணிவித்தாராம். அந்த நிகழ்ச்சியை அவர் இன்று விவரிக்கும் போதும் புத்துணர்ச்சியுடன் கூறுகிறார். காந்திஜி அப்போது கூறியதை அப்படியே கூறிக் காட்டுகிறார்.
சுவாமிகள் தமக்கும் பிறருக்கும் பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்ததால் இன்றும் காலையிலும் மாலையிலும் தீபாராதனை முடிந்ததும் ஆசனத்தில் அமர்ந்து ஜபமும் தியானமும் செய்கிறார். அங்குள்ள கொசுக்களால் அவரது தியானத்திற்கு எந்த இடையூறும் இல்லை. அப்படியொரு மன ஒருமைப்பாடு!
தினமும் மாலை கோயில் வளாகத்தில் அமர்ந்து பக்தர்களுடன் உரையாடுகிறார். சுவாமிகளுக்குக் கேட்கும் திறன் மிகவும் குறைந்திருப்பதால் அவர் எல்லாவற்றையும் உரக்கவே கூறுகிறார்; சிரிக்கிறார். இந்த சுவாமிகளும் தம் காரியங்களைத் தாமே செய்து கொள்கிறார். அவரது காரியங்கள் ஒவ்வொன்றும் துல்லியமாக உள்ளன. ஒரு கொசுவலையை மடிப்பதுகூட முறையாகச் செய்கிறார்.
சுவாமிகள் நூல்களைப் படிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளார். செய்தித்தாள்களைச் சிறிது வாசிக்கிறார். எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் அளிக்கிறார். ஆனால் அவரது குருவான சுவாமி சிவானந்தரைப் பற்றிக் கேட்டால், சரி. பிறகு பார்க்கலாம்” என்று கூறி விரட்டிவிடுகிறார். தங்களை மறைத்துக் கொள்வதில் இந்த சாதுக்களுக்குத் தனிப் பெருமை!
‘சிவானந்தரிடம் தீட்சை பெற்றிருந்தாலும் அவருடன் அதிக காலம் சுவாமிகள் வாழவில்லை; மேலும் தம் குருவின் மீதுள்ள அதீத பக்தியின் காரணமாக அவரைப் பற்றிக் கூற விரும்புவதில்லை’ என ஜெயராம்பாடி ஆசிரமத்துத் தலைவர் சுவாமி அமேயானந்தர் எங்களிடம் கூறினார்.
சுவாமிகளும் நன்கு உணவருந்துகிறார். ஏதோ தட்டில் போட்டதை வாயில் போடுவதுதான் உண்பது என்று நம்மில் பலரும் நினைக்கிறோம். ஆனால் இந்த சாதுக்கள் தங்கள் உடலை ஒரு சிறந்த இயந்திரத்தை இயக்கும் பொறியாளர்கள் போல் இயக்குகிறார்கள்.
‘சரீரம் ஆத்யம் கலு தர்ம ஸாதனம்’ – தர்மத்தைக் கடைப்பிடிப்பதற்கான சாதனம் உடல் என்று சாஸ்திரம் கூறும். அதற்கான விளக்கத்தை பிரபீர் மகராஜிடம் காணலாம். உணவருந்திய பிறகு அவர் தமது பால் டம்ளரை நேர்த்தியாகத் துடைத்து சட்டைப்பையில் இட்டுக் கொள்வதைப் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும்.
உணவிற்குப் பிறகு அவர் தமது பிரியமான நாய் லாலுவைக் கூப்பிடுவார். அதற்கு உணவளிப்பார். ‘சாப்பிடுடா’ என்று அவர் வங்க மொழியில் கூறுவதைக் கேட்டதும் அந்த நாய் நன்றியோடு உண்ணும். குனிய முடியாததால் சுவாமிகள் தமது கைத்தடியையே கையாகக் கொண்டு நாயைத் தடவிக் கொடுப்பார்.
இவ்வாறு இந்த இரு சுவாமிகளும் ஒவ்வொரு கணத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இருவரும் தங்களது வாழ்நாள் சாதனைகளை நமக்குக் கூற மறுத்தாலும் இந்த அளவாவது அவர்களைப் பற்றிய செய்திகள் நமக்குக் கிடைத்தது பற்றி மகிழ்ந்தோம்.
குருதேவர் நம்மீது கொண்டுள்ள கருணையால்தான், தாமும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விக்கும் ராமகிருஷ்ண மடத்துத் துறவிகளான இவர்களைத் தரிசிக்கும் பாக்கியம் நமக்குக் கிட்டியது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s