சைதன்ய மகாபிரபு

Chaitanyar_Aug12

சைதன்ய மகாபிரபு தினமும் அதிகாலையில் புரி ஜகந்நாதரின் தரிசனத்திற்குப் புறப்படுவார்.
நாட்டிய மந்திரின் கிழக்கே உள்ள கருடஸ்தம்பத்தின் அருகில் மேற்கு நோக்கி நிற்கும் ஜகந்நாதரின் திருவுருவைத் தாகம் மிக்க சாதகப் பறவை போல உற்று நோக்கித் தரிசனம் செய்வார்.
கோயில் உள்ளே நுழைந்த உடனேயே அவரது மனம் அகமுகமாக ஆழ்ந்துவிடும். புறவுணர்வை இழந்த தன்மயமான அவரது சித்தம் ஜகந்நாதரின் பாத கமலங்களில் லயித்துவிடும். கருட ஸ்தம்பத்தைப் பிடித்தவாறு நின்று கொண்டிருப்பார்.
கண்களிலிருந்து பரமானந்தப் பெருக்கின் காரணமாகப் பக்திக் கண்ணீர் வழிந்தோட ஜகந்நாதருடன் ஐக்கியமாகிச் சிலையாக நிற்பார்.
அபிஷேகம், பூஜை ஆகியவற்றுக்குப் பின் பாடப்படும் ஆரதி ஒலி கேட்ட பிறகே அவர் புற உணர்வை அடைவார். ஜகந்நாதரை வணங்கித் தம் குடிலுக்குத் திரும்புவார்.
ஒரு நாள் வழக்கம்போல் கோவிலை அடைந்து கருடஸ்தம்பத்தின் அருகில் அசைவற்ற நிலையில் தன்னை மறந்து நின்று கொண்டிருந்தார் சைதன்யர்.
அன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஜகந்நாதரைக் கண நேரமாவது கண்ணாரத் தரிசிக்க மாட்டோமா என்ற ஆதங்கத்துடன் பக்தர்கள்
அங்குமிங்கும் நுழையத் தவித்தனர்.
ஒரு கிராமத்துப் பெண் ஜகந்நாதரின் தரிசனம் காணக் கோவிலுக்கு வந்திருந்தாள். பக்தர்கள் கூட்டத்தில் சிக்கித் திக்குமுக்காடினாள். இறைவன் தரிசனம் கிடைக்காதோ என்று அஞ்சிப் பரபரப்படைந்தாள்.
கண்களில் நீர் வழிய, ‘ஜகந்நாதா, ஜகந்நாதா’ என்று அரற்றியபடி கருடஸ்தம்பத்தின் அருகில் வந்து எட்டிப் பார்த்தாள். பிரபு ஜகந்நாதர் சற்றே தெரிந்தார். முழுவதும் பார்க்க முடியவில்லை.
தரிசன தாகம் அவளைச் சுற்றுப்புறத்தை மறக்கச் செய்தது. கருடஸ்தம்பத்தின் மீது ஒரு கால் வைத்தவள் தன்னை அறியாமல் அருகில் நின்றவரின் தோளில் மறுகாலை வைத்தாள். கைகுவித்தாள். ஜகந்நாதரின் முழுத் தரிசனத்தைக் கண்டாள்.
என்ன செய்கிறோம் என்ற உணர்வு சிறிதும் அற்றவளாகத் தரிசனம் கண்டு உடல் சிலிர்த்து மகிழ்ச்சியில் ஆரவாரித்தாள்.
சைதன்யருடன் வந்த கோவிந்தர், தரிசனம் முடித்து அவள் சைதன்யரின் தோள் மீது காலூன்றி நிற்பதைக் கண்டார்! இந்தக் காட்சியைக் கண்ட மற்ற பக்தர்களும் அதிர்ச்சியில் நின்றனர்.
கோவிந்தர் சைகை மூலம் அவளுக்கு நிலைமையை உணர்த்த முற்பட்டார். இதற்குள் புறநினைவு பெற்ற மகாபிரபு பக்தையின் தரிசன ஆனந்தத்தைத் தடுக்க வேண்டாம் என்றார்.
சிறிது நேரத்தில் தன்னிலை மீண்ட பக்தை அவசரமாகக் கீழே இறங்கித் தன் செயலுக்கு வருந்தி சைதன்யரின் பாதங்களைப் பலமுறை பணிந்து மன்னிப்பு வேண்டினாள்.
அவளைச் சமாதானப்படுத்தி, அபயம் அளித்தார் சைதன்யதேவர்.
குடில் திரும்பும் வழியில் கோவிந்தரிடம், ஜகந்நாதரிடம் வைத்த பக்தியின் காரணமாக என் மீது காலை வைத்ததைக்கூட அப்பெண்மணி உணரவில்லை. பக்தியால் ஆண், பெண் பேதமும் அவளுக்கு மறந்து போயிற்று. இதுவல்லவா உண்மையான பக்தி! இது எனக்கு என்றைக்குச் சித்திக்குமோ?" என உருகினார் பக்தசிரோன்மணியான ஸ்ரீசைதன்யதேவர்.

– சுவாமி சாரதேஷானந்தர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s