இன்னும் ஒரு மைல்கல்


விஜயத்தின் வளர்ச்சியில் இன்னும் ஒரு மைல்கல்

ஈரோடு, கொங்கு கலையரங்க மேடையில் ஸ்ரீராமகிருஷ்ணர், ஸ்ரீசாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் படங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பின்னணியில் சுவாமி விவேகானந்தர் தமது காந்தக் கண்களால் ஒவ்வொருவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார்.
இவ்வளவு சிறந்த ஏற்பாடுகள் எதற்காக? இந்த மாபெரும் விழாவின் நாயகன் யார்?
‘யாரை வணங்குவதால் அந்தக் கணமே தங்கமாக மாறிவிடுவார்களோ, அவரின் செய்தியுடன் வீடு வீடாகச் செல்லுங்கள். அமைதியின்மை எல்லாம் போய்விடும்’ என்று சுவாமிஜி போற்றிய ஸ்ரீராமகிருஷ்ணரின் பெயரில் வெளிவரும் ஸ்ரீராம
கிருஷ்ண விஜயம்தான் விழா நாயகன்.
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் தனது 92-ஆம் ஆண்டில் 1,50,000 சர்குலேஷனைக் கடந்ததைப் பத்திரிகை உலகில் பதிவு செய்யும் விழா 23.9.2012 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
முதலில் சுவாமி ஹரிவ்ரதானந்தர் குழுவினரின் இசைத்தேன் மழையில் இன்பமாய் நனைந்தது அரங்கம். 8 வயதுச் சிறுவன் ஹரீஷ்வரனின் சுலோகப் பொழிவு ஈர்ப்பு விசையை இன்னும் கூட்டியது.
வரவேற்பு வசந்தம் : ஸ்ரீராமகிருஷ்ண சேவா சமிதியின் தலைவர் திரு. யு.ஆர்.சி.தேவராஜன் தமது வரவேற்புரையில், ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தின் 92 வருட பயணத்தையும், அது கடந்து வந்த பாதையையும் நினைந்து தனது வியப்பையும் சிலிர்ப்பையும் வெளிப்படுத்தினார்.
சுவாமி விவேகானந்தர் தமது 39 வயதுக்குள் ஏற்படுத்திய உலகளாவிய தாக்கத்தில் நெகிழ்ந்து, அவரது கனவை நனவாக்க விஜயம் செயலாற்றி வருவது அவருக்கான காணிக்கை என மகிழ்ந்தார்.
இன்று பிற பத்திரிகைகள்கூட ஆன்மிகம் குறித்துச் சிந்திக்கவும் எழுதவும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயமே வழிகாட்டி என மொழிந்தார்.
குமுதம் பத்திரிகைக்குப் ‘பக்தி’யும், ஆனந்த விகடனுக்கு ‘சக்தி’யும் வருவதற்கு ஸ்ரீராமகிருஷ்ண விஜயமே ஆதர்சமாய் அமைந்ததென்று வார்த்தை வசந்தம் வீசினார்.
சில வாசகர்களின் விமர்சனத் துளிகள் : விஜயத்தை வாசித்தவர்களின் அனுபவங்கள் விதவிதமாய் வெளிப்பட்டன விழா மேடையில்.
‘இளைஞர்களுக்கான சுயமுன்னேற்ற வழிகாட்டி ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்’ என்றார் கோவை மாணவி செல்வி பவித்ரா.
‘கங்கையின் ஒவ்வொரு துளியும் போல் விஜயத்தின் ஒவ்வோர் எழுத்தும் புனிதம் வாய்ந்தது’ என்றார் காஞ்சிபுரம் வாசகி ராஜராஜேஸ்வரி.
‘ஆசிரியர்களுக்கான ஓர் ஆசிரியர் விஜயம்தான்’ என்றார் ஈரோடு ஆசிரியர் ஸ்ரீபாதராஜன்.
‘விஜயத்தின் வாசகர்கள் ஒவ்வொருவரும் மாணிக்கவாசகர்கள்’ என்றார் சென்னை பரமசிவம்.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ‘விவேகானந்தரைக் கற்போம்’ என்னும் புதிய நூலை ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி மகராஜ் வெளியிட, சிறப்பு விருந்தினர் சுகி சிவம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் அலுவலர்களான ஆர்.முரளி, அ.சேதுராம், ரா.ரமேஷ் – முகவர்கள் திரு. சந்திரசேகர் மற்றும் பிரபு - ஈரோடு யு.ஆர்.சி. மற்றும் சென்னை ஆதம்பாக்கம் டி.ஏ.வி. பள்ளியின் தாளாளர்கள், வாசகர்கள் என அனைவரின் சேவையைப் போற்றுமுகமாகவும், ஊக்கத்தை இன்னும் ஏற்றுமுகமாகவும் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தர் விருதுகள் வழங்கிப் பெருமைப்படுத்தினார்.

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் இதழல்ல, இயக்கம்: ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவரான ஸ்டாலின் குணசேகரன், ‘இன்றைய மக்களின் பல்வேறு ரசனைக்கு மத்தியில், விஜயம் விற்பனையில் 1,50,000 சர்குலேஷனைக் கடந்துள்ளது, பரந்து விரிந்த வாசகர் கூட்டத்தைத் தனக்கென அது கொண்டுள்ளது என்பதற்கான சான்று. (நவம்பர் மாத சர்குலேஷன் 1,57,000- ஆசிரியர்)
‘ஏனெனில் 1,50,000 என்பது விற்பனை அளவில் ஓர் எண்ணிக்கையே தவிர, வாசிப்பில் அது பல லட்சம் வாசகர்களைச் சென்றடைகிறது. பள்ளி, கல்லூரி, நூலகம், தனிநபர் எனப் பல நிலைகளில் விஜயம் கொள்ளை கொண்டுள்ள இதயங்கள் கோடியினைத் தாண்டும்.
‘92 ஆண்டுகளாக விஜயத்தின் வாசகர் வட்டம் தொடர்ந்து விரிந்தபடி இருக்கிறதெனில், இதனை ஒரு பத்திரிகையாக அல்ல, மக்கள் மனதுள் ஒரு மாபெரும் பண்பாட்டு மறுமலர்ச்சியை ஏற்படுத்துகிற மாபெரும் இயக்கமாகவே கருதுகிறேன்.
‘ஆன்மிக இதழுக்கான 100% இலக்கணம் வகுத்தது விஜயம் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற சுவாமிஜியின் அருள்மொழியை அடியொற்றி மனிதநேயம் என்னும் மகத்துவத்தைப் பல கோணங்களில் வெளியிட்டு அன்பைத் தழைக்கச் செய்யும் அற்புதப் பணியை ஆற்றி வருகிறது ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்.
‘எந்த இளைஞர் கூட்டம் பாரம்பரியம் குறித்த பெருமையையும், நிகழ்காலம் குறித்த கவலையையும் எதிர்காலம் குறித்த கனவையும் சுமக்கிறதோ, அந்தக் கூட்டம் மட்டுமே ஒரு வலிமையான நாட்டை உருவாக்க முடியும். இளம் தலைமுறையினர் தம் மூதாதையர் பற்றிய வரலாற்றை அறிந்திருக்க வேண்டும். இப்பணியினைச் சிரமேற்கொண்டு செய்து வருகிறது விஜயம்.
‘இந்தியாவின் பெருமையை உலகிற்கு உணர்த்திய சுவாமிஜியின் வழியொழுகி, வரலாற்றின் மூலம் பாரம்பரியப் பெருமையைச் சொல்லித் தன்னம்பிக்கையை இளைஞர்களிடையே வளர்த்து வருகிறது விஜயம். எனவே ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளை விஜயத்தைக் கண்டிப்பாக வாசிக்கச் செய்தல் வேண்டும். இது வீட்டுக் கடமை மட்டுமன்று; நாட்டுக்கடமையும்கூட’ என்று விஜயம் பற்றிய வண்ணமழை பொழிந்தார்.
சுவாமி கமலாத்மானந்த மகராஜ், இந்த விழா பகவான் தந்த ஓர் அருமையான பாக்கியம். நூற்றுக்கும் மேற்பட்ட அளவில் இன்று வெளிவந்து கொண்டிருக்கும் ஆன்மிக இதழ்களுள் காலத்தால் மூத்ததும் நடையில் இளமையுமான ஒரு பத்திரிகை ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்.
92 ஆண்டுகளாக ஓர் ஆன்மிகப் புரட்சியின் மூலம் சமூக மறுமலர்ச்சிப் பணியை விஜயம் மேற்கொண்டு வருகிறதெனில், இதன் எல்லாப் புகழும் ஸ்ரீராமகிருஷ்ணரையே சாரும்" என்று அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தினார்.
பத்திரிகை வடிவில் பகவானின் தமிழக விஜயம்: கோவை, ராமகிருஷ்ண வித்யாலயத்தின் செயலர் சுவாமி அபிராமானந்த மகராஜ், பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் இந்தியாவின் பல பகுதிகளுக்கு யாத்திரையாகச் சென்றபோதும் தமிழகத்தில் மட்டும் அவரது திருவடிகள் படவில்லையே எனும் ஏக்கம் பலரது நெஞ்சிலும் உள்ளது.
அக்குறையைப் போக்கவே, ஸ்ரீராமகிருஷ்ணர் ‘ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்’ வடிவில் இல்லம்தோறும் வந்து இதயங்களில் எல்லாம் அருள்கிறார்" என்று மொழிந்தார்.
ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தர், பலரும் குறிப்பிட்டதைப் போல், இன்று வெளிவந்து கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான ஆன்மிக இதழ்களில் தனித்தன்மையும் தனிச்சிறப்பும் கொண்டு மிளிர்கிறது விஜயம். குருதேவரின் செய்திகள் பாமர மக்களையும் சென்றடையவும், அவை அந்த மக்களுக்குள் ஓர் உத்வேகத்தை உண்டு பண்ணவும் ஒரு பத்திரிகை தேவை’ என்னும் சுவாமி விவேகானந்தரின் எண்ணத்தை ஈடேற்றி வருகிறது விஜயம்.
‘மனித வாழ்வின் லட்சியம் இறைக்காட்சி காண்பதே. அதனை ஏழை எளியவர்க்குச் செய்யும் சேவைகள் மூலம் அடையலாம்’ என்று சுவாமிஜி கூறியதை மக்களிடம் கொண்டு சேர்த்து, அவர்தம் சிந்தையைத் தூண்டும் மகத்தான பணியைச் செய்து வருகிறது விஜயம்.
நல்ல செய்திகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதன் மூலம் மக்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்க முடியும் என்னும் அசையாத நம்பிக்கையுடன் தொடர்ந்து இயங்கி வரும் விஜயம் தன் மக்கள் சேவையில் மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்" என்று அருள்மழை பொழிந்தார்.
சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள், ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தின் அளவை வெறும் 1,50,000 என்னும் எண்ணில் அடக்கிவிட முடியாது. ஏனெனில், ஊடகங்களில் வரும் எனது பெரும்பாலான தொலைக்காட்சி உரைகள் வாயிலாக மட்டும் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைகிறது விஜயம்" என்றார்.

விழாவின் நிறைவாக, ஸ்ரீராமகிருஷ்ண சேவா சமிதியின் செயலர் ஜி.வி.தன்னாசி நன்றிப் பூக்களை நவின்றார்.
வரவேற்புரை முதல் நன்றியுரை வரை பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீசாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் அருளுரைகளே நிரம்பிப் பொங்கி வழிந்ததால் இவ்விழா வெறும் கொண்டாட்டமாக மட்டும் அல்லாமல் வீர்யமிகு எழுச்சியாக அமைந்ததைக் கலந்து கொண்டோரின் முகமலர்ச்சி அடையாளம் காட்டியது.
‘வெற்றிக்குத் தேவை வலக்கையோ, இடக்கையோ அல்ல நம்பிக்கைதான்’ என்று மக்களிடையே நம்பிக்கையை வளர்க்கும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் பக்தர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஆன்மிகம், சுயமுன்னேற்றம், மனிதநேயம், மனநலன் போன்ற அனைத்துத் துறை சார்ந்த செய்திகளிலும் ஒரு மாபெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

One response to “இன்னும் ஒரு மைல்கல்

  1. ஓங்கட்டும் குரு ராமகிருஷ்ணர் புகழ்
    வீசட்டும் விவகானந்தர் வீரம். பெருகட்டும் அன்னயைின் அருள். விஜயம் என்றென்றும மகான்களின் மணம் பரப்பட்டும். தமிழகமெங்கும் தரணியெங்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s