கேட்காவிட்டால்!!!

கேட்டால் ஒன்றுதான், கேட்காவிட்டால் எல்லாம்!

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர் சுவாமி அகண்டானந்தர். அவரது சீடர் சுவாமி நிராமயானந்தர்.
அவரது இளமைக் காலப் பெயர் விபூதி. வங்காளத்திலுள்ள சார்காச்சி ஆசிரமத்தில் தமது குருவுக்கு அவர் சேவை புரிந்து வந்தார்.
மாதவ சதாசிவ கோல்வால்கர் என்ற இள வயது பேராசிரியர் வாராணசி இந்து பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தார். அவ ருக்கு ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு. அதனால் தம்மை வழிநடத்த உத்தமமான குருவை அவர் தேடிக் கொண்டிருந்தார்.

swami-akhandananda

சுவாமி அகண்டானந்தர் சார்காச்சியில் இருப்பதை அறிந்து, மந்திர தீட்சை பெறுவதற்காக அவரிடம் சென்று தீட்சையும் பெற்றார்.
பிறகு தமது குருவுடன் சிறிது காலம் தங்கினார் கோல்வால்கர். குருவின் மகத்துவத்தை அறிந்து, அவரது எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்து வந்தார். சுவாமிகளும் அவரது குருபக்தியினால் மகிழ்ந்தார்.
ஒரு நாள் இரவு சுவாமிகள் யாருடனோ பேசும் சத்தம் கேட்டது. இதை பக்கத்து அறையிலிருந்த பிரம்மசாரி விபூதி கேட்டார்.
தூக்கம் கலைந்து எழுந்த அவர், ‘யாருடன் சுவாமிகள் இந்த நேரத்தில் இவ்வளவு சத்தமாகப் பேசுகிறார்? ஒருவேளை சுவாமிகளுக்கு ஏதாவது தேவை இருக்குமோ?’ என்று எண்ணி அவருடைய அறையை நோக்கிச் சென்றார்.
அறையின் கதவு திறந்திருந்தது. உள்ளே காத்திருந்தது ஆச்சரியமான ஒரு காட்சி!

மண்ணெண்ணெய் விளக்கின் மெல்லிய ஒளிக்கீற்று. சுவாமிகள் அபயம் அளிக்கும் விதத்திலும், கோல்வால்கர் அவர்முன் கை கூப்பி மண்டியிட்டும் அமர்ந்திருந்தனர்.
கோல்வால்கரின் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்து சுவாமிகள், மகனே, உனக்கு இந்தப் பிறவியிலேயே பிரம்மஞானம் கிடைக்கும்” என்று ஆசீர்வதித்ததை விபூதி செவியுற்றார்.

தமது சகோதரச் சீடரான கோல்வால்கருக்குக் கிடைத்தப் பெரும் பேற்றை நினைத்து மகிழ்ந்த விபூதி, அவர் உண்மையில் கொடுத்து வைத்தவர் என எண்ணினார்.
ஆனால் அடுத்த கணம் தமக்கு அத்தகைய ஆசீர்வாதம் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் அவரது இதயத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், தாம் அதற்குத் தகுதியில்லை போலும் என தம்மையே சமாதானம் செய்து கொண்டார் அவர்.

சில நாட்கள் கழித்து கோல்வால்கர் தமது குருவின் அனுமதியுடன் காசிக்குத் திரும்பி விட்டார். சில வருடங்களுக்குப் பிறகு அவர் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) முக்கிய பொறுப்பை ஏற்று தேசப் பணியில் திறம்படச் செயலாற்றினார்.
தமது தேச சேவையாலும் தெய்விக வாழ்க்கையாலும் ‘குருஜி’ என்று மரியாதையுடன் நாட்டு மக்களால் அழைக்கப்பட்டார்.

பிரம்மசாரி விபூதி அப்போதைக்கு சமாதானம் அடைந்தாலும், அவரது மனம் தமக்கு அத்தகைய ஆசிகள் கிடைக்கவில்லையே என ஏங்க ஆரம்பித்தது. நாளுக்கு நாள் வருத்தம் அதிகரித்தது.

அப்போது ஒரு நாள் சுவாமிகள் அவரிடம், நான் கழிவறை செல்கிறேன். தண்ணீர் கொண்டு வருகிறாயா?” என்று அன்புடன் கேட்டார். குரு முன்னால் நடக்க, பின்னால் சீடரும் தண்ணீருடன் சென்றார்.
கழிவறையின் அருகில் சென்ற சுவாமிகள் திரும்பி விபூதியைப் பார்த்து, விபூதி, இதோ பார். எதையாவது வேண்டி பிரார்த்தனை செய்தால், அது மட்டுமே நமக்குக் கிடைக்கும். ஆனால் யார் எதையும் வேண்டுவதில்லையோ, அவர்களுக்கு எல்லாம் கிடைக்கும்” என்று கூறிவிட்டு நடக்கலானார்.

உடனே விபூதி, மன அமைதி அடைந்தார். ஆம், எவ்வளவு உயர்ந்த ஓர் ஆன்மிக உண்மையை சுவாமிகள் உணர்த்திவிட்டார். ஆசீர்வாதத்தை வேண்டுவதுகூட சாதாரண நிலையே!
ஆன்மிக வாழ்க்கையில் எதையாவது விரும்புபவர்களுக்கு அதுமட்டும் கிடைக்கிறது; எதையும் விரும்பாதவர்களுக்கு எல்லாமே கிடைக்கிறது.

அன்று முதல், எதையும் கேட்க வேண்டும் என்ற எண்ணம்கூட இல்லாமல் குருவுக்குத் தமது சேவையைத் தொடர்ந்தார் விபூதி. ‘நிர்வாசனா’ (ஆசையற்ற தன்மை) பெறத்தான் பிரார்த்திக்க வேண்டும்’ என்று அன்னை ஸ்ரீசாரதா தேவியாரும் கூறுகிறார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s