வீர சுனிதா

வீர சுனிதா
– டாக்டர் அல்பனாகோஷ்

ஒரு சனிக்கிழமை மாலை. வேதியியல் இறுதி ஆண்டு மாணவர்களுக்குக் கல்லூரி முடிந்து இதோ, பிரிவு மாணவிகள் பரிசோதனை வகுப்பை முடித்தாயிற்று.

அப்போது பரிசோதனைக்கூடத்தின் உதவியாளர், உங்களைப் பார்க்க ஒரு ராணுவப் பெண் வந்திருக்கிறார் என்றாள்.
எனக்கு தெரிந்து அப்படி யாருமே இல்லையே என்று எண்ணியபடி சென்று பார்த்தேன். வியப்பிலும் வியப்பு.

நான்தான் உங்கள் சுனிதா என ஓடி வந்து வணங்கினாள். என் கண்களை நம்பவே முடியவில்லை! இவள் எப்போது இப்படி மாறினாள் என்று வியந்த நான், நீயா? எப்படி இந்த உடையில்! என்று வினவினேன்.

womensoldier

மற்ற மாணவிகளுக்கோ ஆச்சரியம்! இருக்காதா என்ன? ஒரு மிலிட்டரி ஆபீசரான பெண், அதுவும் தங்களைப் போல் அதே கல்லூரியில் படித்தவள் எனும்போது. சுனிதா அந்த மாணவிகளுக்கும் ஹாய் சொன்னாள்.

டிபென்ஸ் சர்வீஸ் தேர்வில் தேறி, பயிற்சி முடித்து ஜம்மு காஷ்மீரில் முதல் போஸ்டிங் ஆனதையும், தற்போது தன் சொந்த ஊரான ராஞ்சி அருகிலுள்ள நாம்கும் எனும் ஊருக்கு மாற்றலாகி வந்துள்ளதையும் கூறினாள் சுனிதா.
நீண்ட நேரம் நாங்கள் எல்லோரும் சுனிதாவிடம் பேசிக் கொண்டிருந்தோம். என்னிடம் விடைபெற்றுத் தன் ஜீப்பில் ஏறிப் போனாள். இன்று தன்னம்பிக்கை நிறைந்த இவள், முன்பு எவ்வாறு இருந்தாள் என்று சற்றே பின்னோக்கி என் மனதை ஓட விட்டேன்.

அது பி.எஸ்ஸி வேதியியல் முதலாமாண்டு வகுப்பு. குதூகலமாகப் பட்டாம்பூச்சிகளாக மாணவிகளைப் பார்த்தாலே எனக்கு உற்சாகம் பிறக்கும்.
ஆ! இது என்ன அந்தக் கடைசி பெஞ்சில் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்திருப்பவள் எதையோ பறி கொடுத்தவள் போலிருக்கிறாளே!

ஒரு நாள் சக ஆசிரியைகளிடம் அவளைப் பற்றிக் கேட்டேன். உடனே அவர்கள், அந்த ரோல் நம்பர் 12 தானே! உம்மணாமூஞ்சி! அதுக்கு எதுலேயும் ஆர்வமே கிடையாது என்று பொரிந்தார்கள்.

அடுத்த நாள் அந்த ரோல் நம்பர் 12 -ஐ இடைவேளையின்போது தனியே கூப்பிட்டேன். சுனிதா, ஏன் வகுப்பில் எந்த ஆர்வமும் இல்லாமல் இருக்கிறாய் என்று நான் உன்னைக் கேட்கலாமா? என்றேன்.

தலையைக் குனிந்து கொண்டு மௌனமானாள்.
புத்தகங்கள் வாங்கப் பணம் ஏதாவது தேவையா? நான் தருகிறேன் என்ற என் கேள்விகளுக்கெல்லாம் பதில் ஏதும் கூறவில்லை.
பின் அவளை ஆதரவாக அணைத்தபடி, உன் பிரச்னை எதுவாயிருந்தாலும் சொல்லம்மா. நான் உதவுகிறேன் என்றேன்.

கண்ணீருடன், தன் கைப்பையிலிருந்து ஒரு புகைப் படத்தை எடுத்துக் காட்டித் தழுதழுத்த குரலில், இது என் தம்பி ஜாய்.

நாங்கள் இருவரும் ஒரு நாள் மாலை கடையிலிருந்து திரும்பும்போது சில விஷமிகள் என்னை டீஸ் செய்தார்கள். ஒருவன் என்னைத் தொட, மற்றவன் என் பர்ஸைப் பிடுங்க, மற்ற இருவரும் கேலி செய்ய நான் பயந்து போனேன்.

அவர்களை எதிர்த்து ஜாய் மோதினான். ஒருவன் கழியால் அவன் தலையில் அடித்ததால் அவன் மயக்கமடைந்தான். நல்ல வேளையாக அங்கு வந்த மக்களைக் கண்டு நால்வரும் ஓட, நான் ஜாயை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போனேன்.

தண்டுவடத்தில் அடி விழுந்ததால் அவனால் முன் போல உட்காரவோ, நடக்கவோ முடியவில்லை. நம்பிக்கை இழந்து, ஜாய் சரிவர வாய் பேசக்கூட சக்தியற்றுப் போனான். இந்த விபத்து எங்கள் குடும்பத்தைச் சிதைத்துவிட்டது. அப்பாவும் பணியிலிருந்து ஓய்வு பெறும் நேரம். நான் ஒருத்தி ஏதாவது செய்தாக வேண்டும். ஆனால் மனமோ எதிலும் பதியவே இல்லை மேடம் என்று கூறி ஓவென அழுதாள்.

நான் ஆறுதல் கூறினேன்: நடந்தது நடந்துவிட்டது. மீண்டும் காலம்தான் அதைச் சரி செய்யணும். ஆனால் நீ உறுதியாக இருந்தால் உன் குடும்பத்துக்கு உதவலாம். பிரச்னையை எதிர்கொள், face the Brute என சுவாமி விவேகானந்தர் கூறுவாரே!

பின் சுவாமிஜியின் வாழ்வில் வாராணசியில் நடந்த நிகழ்ச்சியைக் கூறினேன்: சுவாமிஜியைப் பல குரங்குகள் துரத்தின. அவர் ஓடினார். அவை இன்னும் வேகமாகத் துரத்தின. இதைக் கண்ட துறவி ஒருவர், அவற்றை எதிர்த்து நில் என்று கத்தினார்.
சுவாமிஜி ஓடாமல் நின்று அவற்றைத் திரும்பி, தைரியமாக முறைத்துப் பார்த்தார். குரங்குகள் உடனடியாக ஒரே ஓட்டமாக ஓடிவிட்டன. இது எல்லோருக்கும் ஒரு பாடமம்மா. நீயும் அந்தப் பயங்கரமான விதியைத் தைரியமாக எதிர்நோக்கினால் அந்தக் குரங்குகள் போல் அது ஓடிவிடும்.

என்னால் செய்ய முடியுமா மேடம்? என்று தயங்கிய சுனிதாவிடம், முடியும் என்று தைரியமூட்டினேன்:

வலிமையே வாழ்வு என்பார் சுவாமிஜி. நீயும் விளையாட்டு, படிப்பு ஆகியவற்றில் பங்கேற்று உறுதியாகச் செயல்படு. வீட்டிலுள்ள அனைவரும் வாடி துக்கப்பட்டால் பயன் ஏதுமில்லை. வா மகளே! உன்னுள் இருக்கும் சக்தியை உணர்ந்து செயல்படு. நீ உறுதியாய், வலிமையாய் இருந்தால் உன் குடும்பத்தைக் காப்பாற்றலாம்
அதன் பின்னர் சுனிதா வகுப்புகளில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தாள். நான் நடத்திய பாடம் மட்டுமல்லாது, பிற பாடங்களில் ஏற்பட்ட சந்தேகங்களுக்கும் என்னை அணுகினாள். அவளது செயல்பாடும், பழகும் விதமும் நன்றாகவே மாறின.

ஆறு மாதங்களுக்குப் பின் ஒரு நாள் புன்னகையுடன் என்னிடம் வந்து, என்னை ஆசிர்வதியுங்கள் என்றாள். எதுக்கும்மா? என்று கேட்டதும், கையிலிருந்து ஒரு மெடலை எடுத்துக் காட்டினாள்.

மேடம்! தேசிய இளைஞர் தினப் போட்டியில் சுவாமிஜியைப் பற்றிப் பேசியதற்காக எனக்குக் கிடைத்த பரிசு இது! என்றதும் வியந்து போனேன்.
அட! வாயே திறக்காத சுனிதாவா இப்படி! சுவாமிஜியைப் பற்றிப் பேசி, பரிசு வேறு! என்று நினைத்தேன். வியந்தேன்.
அப்போது அவள், சுவாமிஜி அந்தக் குரங்குகளை எதிர்த்த கதை கூறினீர்களே, அது என் மனதில் ஆழப்பதிந்துவிட்டது!

நானும் ஜாயும் சுவாமிஜியின் புத்தகங்களை வாங்கிப் படித்தோம். அவன்தான் இந்தப் பேச்சையே எழுதிக் கொடுத்தான்! அவனும் இப்போது பட்டப்படிப்பு சேர்ந்துள்ளான். நான் என் லட்சியத்தை அடைய என்.சி.சி. யில் சேர்ந்துவிட்டேன். எல்லாம் நீங்கள் காட்டிய வழி மேடம் என்றாள்.

பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவுடன் என்னைப் பார்க்க வந்தவள், என் லட்சியத்தை அடையாமல் விட மாட்டேன். ஆம் மேடம்! விழித்திரு, லட்சியத்தை அடையும் வரை நில்லாது செல் என்று சுவாமிஜிதான் கூறியிருக்காரே என்றாள்.

அன்று சென்றவள் இப்போது தன் லட்சியத்தை அடைந்துவிட்டு ஒரு வீர யுவதியாக, நாட்டைக் காக்கத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவளாக என் முன் வந்து நிற்கிறாள்!!

சுவாமிஜி! நான் ஒரு கல்லூரி ஆசிரியை. உங்கள் சொற்கள்தான் நான் என் கடமையைச் செய்ய எனக்கு உந்துசக்தி. ஆனால் இது என்ன! உங்கள் வாழ்வில் நிகழ்ந்த எதிர்த்து நில் என்ற அந்த ஒரு சம்பவம் இந்த இளம் சுனிதா, மனமொடிந்து போன அவள் தம்பி, பெற்றோர் யாவரின் வாழ்க்கையையும் நிமிர வைத்துவிட்டதே!

சுவாமிஜி! பல ஆண்டுகளுக்குப் பின்னும் உங்கள் சொற்களுக்குத்தான் என்ன வலிமை!

நீங்கள்தான் நம் இளைஞர்களின் நிரந்தர ஹீரோ! உங்களுக்கு வணக்கங்கள் என எண்ணி அவரை வணங்கினேன்.
educate-your-women-first

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s