ஐந்து ரூபாயில் அவள்! – ரூபாய் 10000 பரிசு பெற்ற கதை

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நடத்திய சிறுகதைப் போட்டியில் ரூபாய் 10000 பரிசு பெற்ற கதை

ஐந்து ரூபாயில் அவள்!

story1_4

1980- ஆம் வருடம். ஒரு நவராத்திரி வெள்ளிக்கிழமை.

“குருக்களய்யா, குருக்களய்யா…..”

குரல் கேட்டு, கொலுவின் முன் பூஜைக்குத் தயார் பண்ணிக் கொண்டிருந்த நான் வாசலுக்கு விரைந்தேன். பக்கத்து ஊர் செட்டியார் நின்றிருந்தார்.

“வாங்கோ” என்றேன்.

“அப்பா இல்லையா தேவி? இன்னிக்கு நவராத்திரி உபயம் எங்களது. பூஜை சாமான்களை வாங்கிக்க அப்பாவை வரச் சொல்லும்மா வீட்டுக்கு” என்றார்.

மெனக்கெட்டு சைக்கிளில் வந்தவர் பொருள்களையும் கொண்டு வந்திருக்கலாம். அம்மாவிடம் விபரம் சொன்னேன்.

“அண்ணா எங்கே?”

“கோவில்ல நாகாபரணமும், திருவாச்சியும் தேய்க்கறார். தம்பி வெள்ளிக் கவசம் தேய்க்கறான்”

“தங்கைகள்?”

“மாதங்கி அம்பாளோட புடவையை சோடாப்பு போட்டு தோய்க்கறா, வைதேகி கோவிலை அலம்பி விடறா, சியாமளி பூ பறிக்குறா”

“எல்லோருக்கும் வேலை இருக்கே. பூஜைக்கு வேண்டியத நான் பாத்துக்கறேன். நீ போய் வாங்கிண்டு வந்துடு. போறதுக்கு முன்னாடி தாத்தா பிராஹாரத்துல புல் செதுக்கறா. காபிக்குப் பால் இல்லை. டிகாஷனைச் சுட வைச்சு தரேன் கொண்டு குடுத்துடு”.

ஆத்துக்கு அருகிலேயே கோவில், டிகாஷனைத் தாத்தாவிடம் கொடுத்தேன்.

நல்ல வெயில். நான்கு மைல், நடந்தே போய் பூஜைப் பொருள்களைச் சுமந்து வந்தேன், செட்டியார் வீட்டிலிருந்து. அம்மா லலிதா சகஸ்ரநாமத்தைக் கூறிக் கொண்டே பூஜை பண்ணிக் கொண்டிருந்தாள்.

குழம்பு மணம் வாசல் வரை வந்தது. அம்மா விட்ட இடத்திலிருந்து சமையலைத் தொடர்ந்தேன். வேளக்கீரை குழம்பு, பூசணி கறி, உருளை, கோஸ், கேரட் சாப்பிட ஆசைதான். அதை வாங்கக் காசு வேண்டுமே.

எங்கள் தோட்ட காய்கறிகள் மட்டுமே சமையலில் இடம் பெறும். பருப்பற்ற மொட்டைக் குழம்பானாலும், வெறும் கிள்ளு ரசமானாலும் அம்மா சமையலுக்கே தனி ருசிதான்.

சித்து கோவிலுக்குப் போய் வந்த அப்பா கோவில் வாசலில் அர்ச்சனைக்குக் காத்திருந்த பெண்மணியுடன் துர்க்கை சந்நதிக்கு விரைந்தார்.

“வரிசையா ஆறு குழந்தைகள். அதிலும் நாலு பெண்கள். எப்படித்தான் கரையேத்தப் போறீங்களோ சாமி?” என்றார் அந்தப் பெண்மணி.

“எல்லாம் அவ பாத்துப்பா” என்றார் அப்பா, அம்பாள் சந்நதியைக் காட்டியபடி.

அர்ச்சனை முடிந்து, நவராத்திரி அபிஷேகத்திற்கு அண்டால ஜலத்தைக் கட்டிவிட்டு, உச்சிகாலமும் முடித்துவிட்டு, தாத்தா, அண்ணா, தம்பி, தங்கைகளுடன் ஆத்துக்கு வந்தார் அப்பா.

அனைவரும் சேர்ந்து சாப்பிட, அம்மா பரிமாறினார். அப்ளாம் பொரித்துத் தரச் சொல்லி தம்பி பிடிவாதம் பிடித்தான். எண்ணெய் இல்லையே, அப்ளாத்தின் இருபுறமும் எண்ணெய்த் தடவி சுட்டு ஒப்பேற்றினார் அம்மா. சாப்பாடானது.

அப்பாவும் தாத்தாவும் பூ கட்டத் தொடங்கினர். அம்மா கோலத்திற்கு மாவரைத்தார். நானும் தங்கைகளும் முத்தாலத்தி பண்ணிக் கொண்டிருந்தோம்.

“இன்னிக்கு கார்த்தாலேர்ந்து கோயில் வேலை செஞ்சுண்டே இருக்கமே, ஏன் தாத்தா?”

“பேரனே, இன்னிக்கு நவராத்திரிடா”.

“போ தாத்தா. சித்த நாழிகூட என்னை விளையாட விடல. இதை எடுத்திண்டு வா, அதைச் செய்னு எல்லாரும் என்னை ஏவிண்டே இருந்தா.”

“தப்பு கண்ணப்பா, ஸ்வாமிக்குச் செய்யற எதையும் அலுத்துண்டு செய்யக் கூடாது. ஆசையாசையா செய்யணும். அப்பத்தான் அம்பாள் ஓடி வருவா, நாம வேண்டிக்கற எல்லாத்தையும் தருவா.”
story1_3
“அம்பாள் வரச்சே, நாம கஷ்டம் தீர்க்க வேண்டிக்கலாமா தாத்தா?”

“அட படுவா, நமக்கென்னடா கஷ்டம்?”

“நினைச்சத சாப்பிட முடியலியே?”

“ருசியா கிடைக்கலதான். ஆனா அரைவயறு மோர்சாதமானும் கிடைக்குதே. இதுகூட கிடைக்காம எத்தனை பேர் பிச்சை எடுக்கறா?”

“அது சரி, நம்ம படிப்பு?”

“அதுக்கென்னடா கொறைச்சல்?”

“பேனா, பென்சில் எது கேட்டாலும் அப்பா வாங்கித் தரமாட்டேங்கறா. வேப்பங்கொட்டை பொறுக்கிக் காசு சேர்க்கறோம். விளக்கேத்தினா மாமா பத்து காசு தரா. தென்னைக்குத் தண்ணி ஊத்தினா தொராசு மாசம் 2 ரூபா தரா. இதெல்லாத்தையும் வெச்சுண்டுதான் படிக்கறோம். அக்காவை +1 சேர்க்க இந்தக் காசும் போறல. அக்காவோட டீச்சர்ஸ் எல்லாரும் சேர்ந்து காசு போட்டுப் படிக்க வெக்கறா. இது கஷ்டமில்லையா தாத்தா?”

“இவ்வளவு கஷ்டப்பட்டாலும், உங்களுக்குப் படிப்பு வருதே. எத்தனையோ குழந்தைகள்ட்ட காசுருக்கு, ஆனா படிப்பு வரல. ஆடு மாடு மேய்க்கற, வயல் வேலை பார்க்கற குழந்தைகளால பள்ளிக்கூடமே போக முடியலையே?

“….”

“அதோட மட்டுமில்ல, எத்தனை பேர் சொந்தங்கள் இல்லாம அநாதையா இருக்கா? உனக்கு எல்லா சொந்தமும் இருக்கே! எத்தனை பேர் ஊனமா இருக்கா? ஆனா, நீ ராஜாவாட்டம் இருக்கியே!”

“ம், நீ சொல்றது சரிதான் தாத்தா, ஒத்துக்கறேன். ஆனா எத்தனை பேர் பங்களா, கார், பணம்னு வச்சிருக்கா. நம்மகிட்ட ஒண்ணும் இல்லையே”

“அது அவாளோட பூர்வ ஜென்மப் பலன்டா. நாம போன ஜென்மால ஏதோ பாவம் பண்ணியிருக்கோம். அதுக்கான பலனை அனுபவிச்சு ஆகணும். அதான் நமக்குக் குட்டி, குட்டி கஷ்டங்கள் வருது. இந்தக் கஷ்டங்கள் அடுத்த ஜென்மால வரக் கூடாதுன்னு நினைச்சேன்னா திருடாம, பொய் சொல்லாம, கெட்டது பண்ணாம எல்லார்ட்டயும், அன்பா இருந்து தெய்வபக்தியோட நல்லவனா வாழணும்.”

“அப்ப, சாமிகிட்ட என்ன வேண்டிக்கிறதாம்?”

“இவ்வளவு அறிவோட, அழகோட, நிறைஞ்ச சொந்தங்களோட எல்லாத்துக்கும் மேல பகவத் கைங்கர்யம் பண்ற இடத்துல என்னைப் படைச்சதுக்கு நன்றி தாயே… அப்படீன்னு மனசு நிறைஞ்சு அம்பாள்ட்ட சொல்லு.”

தாத்தா கூறுவதைக் கேட்ட நாங்களும் அம்பாளுக்கு மனப்பூர்வமாய் நன்றி சொன்னோம்.

சாயங்காலம் அம்பாளுக்குக் குளிரக் குளிர அபிஷேகம் நடந்தது. அழகாய் மடிசார் கட்டி, உள்ளாரம், கரவாரம், காதுதோடு, கவசம் சாற்றப்பட்டது.

சகஸ்ரநாமம், அஷ்டோத்ரம் வாசிக்கப்பட்டு நைவேத்யமும் முடிந்து, தூப தீபாராதனைகள் காட்டப்பட்டன. மனம் முழுவதும் பக்திப் பரவசம்.

பிரசாத விநியோகம். உபயதாரருக்கு மாலை மரியாதையுடன் பிரசாதம் வழங்க, தட்டில் சில சில்லறைகளைச் சிதறவிட்டார் உபயதாரர்.

கூட்டம் மொத்தமும் கரைய, ஓரிருவர் மட்டுமே நிம்மதியாய் வெளி மண்டபத்தில் அமர, நானும் ஆத்துக்கு வந்தேன்.

ஐந்து நிமிடம்கூட ஆகியிருக்காது.

‘அம்மா மதுவனேஸ்வரி…!’ என்று கத்தியபடி நிறைய பேர் ஓடினர். என்னவென அறிய நாங்களும் ஓடினோம். கூட்டத்தின் முன்னே இருந்த அப்பா சம்பவத்தை விவரித்தார்.

பூஜை முடிந்து கூட்டம் கலைந்ததும் அப்பா தட்டுகாசை எண்ணியிருக்கிறார்.
இரண்டு 50 காசுகள், இரண்டு கால் ரூபாய்கள், ஒரு 20 காசு, 2 பத்து பைசா, ஒரு 5 பைசா மொத்தம் 1 ரூபாய் 95 காசுகள் தட்டில் இருந்தது.

ஆவேசத்துடன் மொத்த காசையும் கையிலெடுத்தவர் அம்பாளுக்கு அருகில் சென்று, காலம்பரேலேர்ந்து மொத்த குடும்பமும் சேந்து எவ்ளோ செஞ்சோம், எல்லாத்தையும் பாத்துண்டுதானே இருந்தே.

பூஜ தட்டுல ஒரு அஞ்சு ரூபா காசை விழ வைக்க உன்னால முடியாதா? ம்…., இந்த ரெண்டு ரூவா மட்டும் நேக்கு எதுக்கு? நீயே வெச்சுக்கோ என்று அம்பாளின் பாதத்தில் பொட்டென்று போட்டு விட்டு, வெளியில் வந்தார் அப்பா.

அங்கே ஒரு பெண்மணி நின்றிருந்தார்.
கனன்ற கோபத்தை அடக்கியபடி குங்குமப் பிரசாதம் வழங்க, பெற்றவர் தட்டின் முன் கை நீட்ட ஐந்து ரூபாய் நோட்டு ஒன்று விழுந்தது.

ஸ்தம்பித்தார் அப்பா.

குங்குமம் வழங்குவதற்குத் திரும்பியவர், “நீங்க வெளியூராம்மா?” என்று கேட்டபடி திரும்பினால்…., அங்கே யாருமில்லை.

சந்நதியைக் கடக்க 20 அடி தூரம், ஓடியிருந்தால் கூட கண்ணிலிருந்து மறைய வாய்ப்பேயில்லை. அப்பா வெளி மண்டபத்திற்கு ஓடி வந்தார்.
வாசலில் அமர்ந்திருந்தவர்களிடம், இப்ப ஒரு அம்மா வெளில போனாளா? என்றார்.

“சாமி, யாரும் வரலையே. நாங்க இங்கேதான் இருக்கோம், உள்ளேயும் யாரும் போகல.”

“இல்லப்பா, இப்பதான் பிரசாதம் அவாளுக்குக் குடுத்தேன். அஞ்சு ரூபா தட்சணைகூட போட்டாளே.”

“இருக்கவே இருக்காது சாமி. யாரும் உள்ளயும் போகல, வெளியவும் வரல….” அடித்துக் கூறினர்.

“பச்சைப் புடவை கட்டிண்டிருந்தாப்பா.”

சட்டென்று அப்பா நிதானித்தார். ஏதோ உணர்ந்தார் போல். அம்பாளுக்கருகில் ஓடிப் போய் பார்த்தார், அதே பச்சைப் புடவை!!

“அம்மா…அம்மா” இறைந்து கத்தினார்.

கண்ணீர் ஆறாய்ப் பெருகியது.

தோளில் இருந்த துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்தார்.

“அம்மா, நீ இருக்கடி, இருக்க! என் புலம்பல் உன் காதுல விழுந்துதாம்மா? போறும்மா, போறும்.

“நான் பிறந்த பலனை அடைஞ்சுட்டேன். உனக்குத் தெரியும். எனக்கு என்ன செய்யணும்னு, செஞ்சுண்டும் இருக்க. புரியர்து.

“நான் மனுஷன்தானேம்மா, புத்தி பெசகி உங்கிட்ட கோபப்பட்டுட்டேன். என்னை மன்னிச்சுடும்மா… நான் யாரும்மா? சாதாரணமானவன்.

“நான் கேட்டத கொடுக்க ஓடி வந்தியாம்மா? இது போறும்மா. நான் பாக்யவான். எல்லாத்தையும் நீ பார்த்துப்பேன்னு நம்பிக்கையோட இருந்தேன். ஏதோ அஞ்ஞானம் கோபம் வந்துடுத்து. மன்னிச்சுடும்மா…”

அப்பா, திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லோரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ஆசையாசையா பூஜை பண்ணினா அம்பாள் வருவாள்ன்னு நீதான் சொன்னியே தாத்தா, அப்பறம் ஏன் எல்லாரும் பிரமிப்பா பாக்கறா?” என்று கேட்டுக் கொண்டிருந்தான் தம்பி தாத்தாவிடம் சர்வ சாதாரணமாக.

ஊர் மொத்தமும் பரவசத்துடன் அவளது காலடியில். நடப்பது அனைத்தையும் எப்போதும் போல் புன்சிரிப்புடன் பார்த்தபடி இருந்தாள் அன்னை மதுவனேஸ்வரி. *

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s