Loving Mother…

அன்பு அம்மா

loving mother

அதோ பாருடா, வாத்தியார் சொன்னாரே, அந்த ஸைக்ளாப்ஸ் (ஒற்றைக் கண் ராட்சசன்) ஒரு பெண்ணாய் வந்திருக்கிறான்” என்றான் ரமேஷ்.

நாங்கள் எல்லோரும் திரும்பிப் பார்த்தோம். அங்கே என் அம்மா. ஒரே கண்ணுடைய, மற்றொரு கண்ணுள்ள இடத்தில் கறுப்புத் தழும்புடன் பயமுறுத்தும் முகத்தோடு என் அம்மா.

நாங்கள் ஏழைகள். என் அப்பா… அவர் என்ன ஆனாரோ தெரியாது. என் அம்மா கீரை, கிழங்குகள் பறித்து விற்று வந்தாள். நாங்கள் பாடம் படிக்க வந்த இடத்திற்கு இந்த அம்மா ஏன் வந்தாள்?

‘ஒற்றைக்கண் டோரியா? ஊரைப் பார்க்க வாரியா’ என்று பாடினான் ஒருவன். எனக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. என் அம்மாவின் நிலைக்காகப் பரிதாபம் சிறிதும் தோன்றவில்லை.

‘பார்ரா, நம்ம மணியோட அம்மாடா’ என்று தன் கண்டுபிடிப்பை அறிவித்தான் சேது. இப்போது எல்லோருடைய ஏளனப் பார்வையும் என் மீது! நெருப்பை உமிழ்வது போல் அம்மாவை நோக்கி ஒரு பார்வையை வீசிவிட்டு அந்த இடத்திலிருந்தே ஓடிப் போனேன்.

உன் அம்மாவுக்கு ஒரு கண்தானா?” அடுத்த நாள் பலரின் விசாரிப்பு. எனக்கு உடலெல்லாம் எரிந்தது.
ஐயோ, இந்த உலகிலிருந்தே அம்மா ஒழிந்து போகக் கூடாதா?” என்று நினைத்தேன்.
அம்மா, இப்படி ஏன் ஒற்றைக் கண்ணோடு இருக்கிறாய்? உன்னால் எனக்கு எப்போதும் அவமானம்
தான். என்னை எல்லோரும் கேலி செய்கிறார்கள். நீ ……. போகக்கூடாதா” என்று வார்த்தைகளால் சுட்டேன்.

அம்மா மௌனமாக இருந்தாள். இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் எனக்கு வலித்தது.
‘சொன்னது நல்லதுதான்! என் நிலைமையை அம்மாவிற்குப் புரிய வைக்க வேண்டுமல்லவா’ – என் கௌரவம் அந்த வலியை நீக்கியது.
எனக்கு எந்த தண்டனையும் என் அம்மா தரவில்லை. நானோ, அவள் உணர்ச்சிகளைச் சின்னா
பின்னமாகச் சிதைத்திருந்தேன். ஆனால்….,

அன்றிரவு. யதேச்சையாக விழித்த நான் நீரருந்தச் சமையலறைக்குச் சென்றேன். அங்கே அம்மா சத்தமின்றி அழுது கொண்டிருந்தாள்.
நான் அம்மாவைக் கூர்ந்து நோக்கினேன். உடனே முகத்தைத் திருப்பிக்கொண்டேன். மாலையில் நான் அவளிடம் கூறிய கடுஞ்சொற்கள் என் காதில் எதிரொலித்தன. இதயத்தின் மூலையில் அந்த வலி மீண்டும்!

ஆனாலும் அம்மாவை அப்போதும் வெறுத்தேன்.
அம்மாவின் மீதான வெறுப்பும், எங்கள் ஏழ்மையும், ‘நன்கு படித்து, உழைத்து வாழ்வில் வெற்றி பெறுவேன்’ என என்னுள்ளேயே சபதமிடச் செய்தன.
அப்போது நான் ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.
நன்கு படித்தேன்; அம்மாவை விட்டு கரக்பூருக்குச் சென்று மேற்படிப்பும் பெற்றேன். அங்கே பல்கலைக்
கழகத்தில் பெருமதிப்புடன் பணியேற்றேன்.

திருமணம், சொந்த வீடு, என் அழகான குழந்தைகள் என எல்லாம் நல்லதாகப் போய்க் கொண்டிருந்தன.
சில வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் என்னைப் பார்க்கத் திடீரென ஒரு பாட்டி வந்தார். யார் இவர்?
எனக்கு முதலில் புரியவில்லை.
சே, இது என் அம்மா. அதே ஸைக்ளாப்ஸ். வெறுப்பா, அருவருப்பா என்றே தெரியாத உணர்ச்சி.

உள்ளேயிருந்து வந்த என் மகள் ஒற்றைக்கண் மூதாட்டியைக் கண்டதும் ஓவென்று அலறியபடி
பயத்துடன் ஓடி ஒளிந்தாள்.
வெறுப்பின் உச்சத்தில் இருந்த நான் சிறிதும் இரக்கமில்லாமல், யார் நீ? எனக்கு உன்னைத் தெரியவே தெரியாதே?” என்று வறண்ட குரலில் கூறினேன்.
பிறகு நான், என் வீட்டிற்கு வந்து என் மகளைப் பயமுறுத்த உனக்கு என்ன தைரியம்? கெட் அவுட்” என்று கத்தியபடி வாயிலைக் காட்டினேன்.

மன்னித்துக் கொள்ளப்பா” என்றபடி வெளியேறினாள் அந்த மூதாட்டி. அப்பா, நல்லவேளை! என்னை அவள் அடையாளம் கண்டு கொள்ளவில்லை.
இனி அவளைப் பற்றி நினைக்கவே மாட்டேன்; கவலைப்படவும் மாட்டேன்.
அமைதியாகக் காலம் கடந்தது.

ஒரு நாள் நான் படித்த பள்ளியின் பழைய மாணவர் தினத்திற்கான அழைப்பிதழ் வந்தது. என்னைக் கேலி செய்த சக மாணவர்களுக்கு என் பெருமையை, படாடோபத்தைக் காட்ட, இன்று சரியான சந்தர்ப்பம்.

என் மனைவியிடம் வியாபாரம் தொடர்பாக வெளியூர் செல்வதாகக் கூறிவிட்டு என் சொந்த ஊருக்குச் சென்றேன். நான் எதிர்பார்த்த கௌரவத்தோடு பழைய மாணவர் தினத்தில் அபாரமாகப் பங்கேற்றேன்.
ஏதோ ஓர் ஆர்வத்தில் என் இளமைக் காலத்தில் நாங்கள் வீடு என்று சொல்லிக் கொண்ட ஓலைக் குடிசையைக் காணச் சென்றேன். அங்கே…

என் தாய் வெறும் தரையில் பேச்சு மூச்சற்றுக் கிடந்தாள். என்ன கொடுமை! அப்போதுகூட
என் கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீரும் வரவில்லை.
அவளது கையில் ஒரு காகிதம், எனக்கு எழுதப்பட்ட ஒரு கடிதம்.

அன்பு மகனே, நான் நீண்ட நாள் வாழ்ந்துவிட்டதாக நினைக்கிறேன்.
இனி நீ வசிக்கும் இடத்திற்கு நான் என்றுமே வர மாட்டேன்…. எப்போதாவது ஒரு முறை நீ என்னைப் பார்க்க வருவாயா? இப்படிக் கேட்பதுகூட சரியில்லையோ என்று தோன்றுகிறது.
நீ பள்ளி விழாவிற்கு வரப்போகிறாய் என்று கேட்டு மகிழ்ந்தேன். ஆனால் பள்ளிக்குக் கண்டிப்பாக வர மாட்டேன். இந்த ஒற்றைக்கண் அம்மா அங்கும் வந்து உன்னைக் கேலிக்கு ஆளாக்க மாட்டேன்.

கண்ணே, ஒன்றை மட்டும் தெரிந்துகொள். நீ கைக்குழந்தையாக இருந்தபோது ஒரு விபத்தில் சிக்கி, ஒரு கண்ணை இழந்துவிட்டாய். ஒரு கண் மட்டுமே உள்ள குழந்தையாக நீ வளர்வதை இந்தத் தாயால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.

என் கண்ணுக்குக் கண்ணான உனக்கு, எனது ஒரு கண்ணை வைத்து வைத்தியம் செய்யும்படி மருத்துவர்களை மன்றாடிக் கேட்டுக் கொண்டேன்.

எனக்கு ஒரே பெருமிதம்! ‘என் மகன் உலகின் காட்சிகளையெல்லாம் முழுமையாகக் கண்டு களிக்கிறான். அதுவும் என் கண் மூலமாக’ என்று மகிழ்ந்தேன்.

நீ என்ன செய்தாலும், எப்படிப் பேசினாலும் அது என் மகிழ்ச்சியைக் குலைத்ததில்லை.
சிறுவனாக நீ என்னைச் சுற்றிச் சுற்றி வந்த அந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது. நீ இல்லாத வெறுமை என்னை வாட்டுகிறது. என் கண்ணே, நீயே என் உலகம். உன் மீதான என் அன்பு அளவற்றது.

இப்படிக்கு
உன் அம்மா”

அக்கடிதத்தைப் படித்தவுடன் என் உலகம், நான் எதையெல்லாம் கௌரவம் என எண்ணினேனோ அவை அனைத்தும் என் கண்முன்னே சுக்கு நூறாய்ச் சிதறின. என் ஆணவம் அழிந்தது.

எனக்காகவே வாழ்ந்த என் அம்மாவுக்காக ஓவென்று தரையில் வீழ்ந்து கதறியழுதேன்!

தன் கண்ணையே வழங்கி என்னை வளர்த்த என் அம்மாவிற்கு நான் இதுவரை சிந்தாத கண்ணீரையெல்லாம் ஒரேயடியாகக் கொட்டித் தீர்த்தேன்.
ஆனால் என்ன பயன்? அம்மாவின் உயிர்தான் அங்கில்லையே! அம்மா, ஓ அம்மா!

One response to “Loving Mother…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s