என் பிள்ளைகளுக்குப் பரீட்சை…

அருள்மிகு கற்பகாம்பாள் சன்னதி. தேவி பிரசன்னமாகக் காட்சி தருகிறாள். சன்னதியில் வேறு பக்தர்கள் இல்லை.

குருக்களைப் பார்த்து அர்ச்சனா தயங்கி நின்றாள்.

ஏன் அங்கேயே நிக்கறேள்? இங்கே வாங்கோ. அர்ச்சனையா? பேர் சொல்லுங்கோ? என்றார் குருக்கள்.

குருக்கள் தன் வேண்டுகோளைக் கேட்பாரா? அதைக் கேட்டு மனப்பூர்வமாக அம்பாளிடம் வேண்டிக் கொள்வாரா? என அர்ச்சனா தயங்கினார்.

பேர் சொல்லுங்கோம்மா?

சுவாமி, உங்களிடம் ஒரு வேண்டுகோள் என்றார் அர்ச்சனா மெல்ல.

students2

வேண்டுகோளா? என்னிடமா? அம்பாள் தானம்மா அனைத்தையும் ஆட்டுவிக்கிறாள்…

சுவாமி, நீங்க என் குறைகளைக் கேட்டு அம்பாளிடம் சொல்லி அர்ச்சனை செய்யணும்….

சற்று மெல்லிய குரலில் குருக்கள் கேட்டார்: ஆத்துலே ஏதாவது பிரச்னையா?

இல்லை சுவாமி, இன்னிக்கு +2பரீட்சை எழுதுற என் பிள்ளைகள் நல்லா, சமர்த்தா எழுதணும்னு அம்பாளுக்கு அர்ச்சனை செஞ்சு கொடுங்கோ

சரி, பிள்ளைங்க பேரைச் சொல்லுங்கோ

சுவாமி அதுக்கு முன்னாடி, எதை முன்னிட்டு என் பிள்ளைங்களுக்காக அர்ச்சனை செய்யணும்னு நான் சொல்லணும் என்றார்.
நெறைய மார்க் வாங்கணும்னுதானே…?

அர்ச்சனா தீர்க்கமாக ஆரம்பித்தாள்:
அது மட்டுமில்லே சுவாமி. என் பிள்ளைங்க இன்னிக்குப் பரீட்சை எழுதப் போகுதுங்க. மொதல்ல, பரீட்சை நேரத்துலே அவங்க ஆரோக்கியமா இருக்கணும்.
……………
ரெண்டாவது, என் பிள்ளைங்களுக்குப் பரீட்சைப் பயம் வந்துடவே கூடாது.
……………
மூணாவது, சரியா தேர்வு எழுத முடியாதுன்னு நினைச்சி அவங்க டென்ஷனாயிடக் கூடாது என அர்ச்சனா கூறுவதற்குள்,
குருக்கள், பலே, பிள்ளைங்க நிறைய மார்க் வாங்கணும்னு சொல்ற அம்மாக்கள பார்த்துருக்கேன்.ஆனா நீங்க வித்தியாசமா இருக்கேள் என்றார் அவளது கழுத்தில் தொங்கிய டாலரைப் பார்த்தபடி.

அர்ச்சனா தொடர்ந்தார்: இன்னும் ரெண்டு இருக்கு சுவாமி. என் பிள்ளைங்க, படிச்ச எதையும் மறந்திடக் கூடாது; அதோட சரியான நேரத்துக்குள்ளாற தேர்வை முழுசா எழுதி முடிச்சுடணும்.

கடைசியா அவங்க எக்ஸாம் ஹாலுக்குப் போகும்போது தன்னம்பிக்கையோட போகணும்; பரீட்சை எழுதி முடிச்சதுக்கப்புறம் சந்தோஷமாவும், நிறைவாவும் ஹாலை விட்டு வெளியில வரணும்.

தன் பிள்ளைகள் மீது ஒரு தாய்க்கு இவ்வளவு அறிவுப்பூர்வமான பாசமா என வியந்தார் குருக்கள்.

வழக்கமாகக் கூறும் சஹ குடும்பானாம்… என்ற பூஜை மந்திரங்களைச் சொல்லாமல், ஒங்களுக்கு அம்பாள் நிச்சயம் அனுக்ரஹம் செய்வாள். சரி, உங்க ரெண்டு பிள்ளைங்களோட பேரையும் சொல்லுங்க? என்று கேட்டார் குருக்கள்.
அர்ச்சனா அம்பாளை வணங்கியபடி, ரெண்டு பிள்ளைங்க இல்ல சுவாமி… என்று கூறி ஒரு பெரிய பட்டியலை நீட்டினார். குருக்கள் அதைப் படித்தார்.

அபிஜித், அமலா, மோகனா, ரஞ்ஜன் என்று தொடங்கி சையது, ஸ்டீபன்… என்று முடிந்த பட்டியலைப் பார்த்த அவர், என்னம்மா இது?இவாள்ளாம் யாரு? என வியந்தபடியே கேட்டார்.

அவங்கள்ளாம் என் பிள்ளைகள்

கடைசி ரெண்டு பேரும் கூடவா?

students1

ஆமா சுவாமி, அவங்க 52 பேரும் நல்லா படிச்சி, பெரிய ஆளா வந்து நம்ம சமுதாயத்துக்கு நல்ல பேரு வாங்கித் தரணும் என்றார் அந்த அரசுப் பள்ளி ஆசிரியை அர்ச்சனா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s