ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் சிறுகதைப் போட்டி

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா விநாயக சதுர்த்தி, 29.8.14 அன்று சென்னை விவேகானந்த பண்பாட்டு மையத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

அன்று பிரபல தமிழ்ப் பத்திரிகையாளர்கள் அனைவரையும் ஒரு சேர மேடையில் காண முடிந்தது, தமிழ் ஆர்வலர்களுக்கு ஒரு விருந்து.

pict1

வரவேற்புரை நிகழ்த்திய ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தின் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர்,
“ ’மிக மேலான கருத்துகளை ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்லும் வழியை நிர்ணயிக்க வேண்டும்’ என்றார் சுவாமி விவேகானந்தர்.

“அதன் எதிரொலியாக இன்று விஜயம் பல இல்லங்களுக்குச் செல்கிறது. 1,75,000 என்ற மொத்த சர்குலேசனில் இளைஞர்கள் 1,20,000 பேர் என்பது முக்கியமானது.

விஜயத்தின் சிறுகதைப் போட்டியின் முதல் முயற்சியிலேயே சுமார் 1000 கதைகள் வந்தன. அவற்றுள் 700 கதைகள் புதிய எழுத்தாளர்கள் படைத்தது என்பது நம்பிக்கையை ஊட்டுகிறது.

“ வந்த கதைகளில் பலவும் சிறப்பம்சங்களோடு இருந்தன. எனவே 8 பரிசுகள் என முதலில் அறிவித்ததை மாற்றி 18 கதைகள் பரிசுக்குரியவையாகத் தேர்ந்தெடுத்தோம்.
“தமிழ் எழுத்தாளர்கள் இலக்கியத்தில் உயர் பரிசுகளான ஞானபீட விருது போன்றவற்றைப் பெறுவதற்கு இது ஒரு பிள்ளையார் சுழி” என்றார்.

விழாவில் பங்கேற்ற தமிழ் அறிஞர்கள் ஆற்றிய உரையின் சாரம் இதோ:
ஸ்ரீராமகிருஷ்ண – விவேகானந்த இலக்கிய ஆய்வாளரான திரு.பெ.சு.மணி: ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் காலத்திற்கேற்ப மாறி வருகிறது. ஆயிரம் எழுத்தாளர்களைத் தமிழில் எழுதத் தூண்டி, அதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தது ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்.

சுவாமி விவேகானந்தரை அறிந்தவர்கள் இது போன்ற வெகுஜன ஈர்ப்பு முயற்சியை ஏற்றுக் கொள்வார்கள். உலகளாவிய நல்ல கருத்துகள், தன்னம்பிக்கை, சமுதாயத்திற்குத் தேவையான கருத்துகள் யாவும் விஜயத்தில் இடம் பெறுகின்றன.

ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீசாரதாதேவி மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகிய திருமூவர்களை ‘நவீன ப்ரஸ்தான த்ரயம்’ எனலாம். ஏனெனில் அவர்களது தொடர்பில்லாத எந்த நவீன இலக்கியமும் இன்றில்லை.

ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் பல காலம் ‘ கரு உண்மை; உரு கற்பனை ‘ என்ற பகுதியில் வெளிவந்த சிறுகதைகள் யாவும் ஆன்மிகத்திற்குப் புதிய அர்த்தம் தந்து, அதை நடைமுறைப்படுத்திய கதைகள். அவற்றுள் ‘அதுதான் கவிதை’, ‘உயிர்மெய் எழுத்து’ ஆகிய சிறுகதைகள் மிகச் சிறப்பானவை.

இந்தப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை ‘வேண்டத்தக்கது அறிவாய் நீ; வேண்டியதனைத்தும் தருவோய் நீ’ என்ற திருவாசகத்தின் குரலைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

குமுதம் ஜோதிடம் ஆசிரியர் திரு. ஏ.எம்.ராஜ கோபாலன்: எந்தவித கவர்ச்சிகரமான அம்சமும் இல்லாது, தவறான படமும் கருத்துமின்றி ஆன்மிகம் மட்டுமே குறியாகச் செயல்பட்டு வரும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் 1,75,000 பிரதிகள் விற்பனை என்ற இலக்கைத் தொட்டுள்ளது விசேஷம்.
ஒரு முறை ஒரு தம்பதியினர் புத்திரபாக்கியம் வேண்டி, ஜாதகம் பார்ப்பதற்காக என்னிடம் வந்தனர். அவர்களுக்கு எளிய பரிகாரம் ஒன்று கூறினேன்.

சில மாதங்களில் கீதா என்ற அந்தப் பெண்மணி கருவுற்று, ஒரு குழந்தை பெற்று, அதற்கு இப்போது நாலரை வயது ஆகின்றது. பக்தி மிகுந்த அந்தப் பெண்ணிடம் வினவியபோது, அவர்கள் வீட்டில் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் மட்டுமே வாங்குவார்கள் என்றும், தான் கருவுற்ற காலத்தில் விஜயம் இதழை அவர் வாசித்தார் என்றும் குழந்தை அதைக் கிரகித்துக் கொண்டது என்றும் கூறினார்.

சுவை குறையாமல் ஆன்மிக அமுதத்தைத் தரும் பத்திரிகை விஜயம். அதைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெற்று மகிழ்கின்றனர்.

பாரத சமுதாயத்தில் இன்று விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதற்கு ஸ்ரீராமகிருஷ்ண விஜயமும் ஒரு காரணம். இந்துக்களின் ஆன்மிகச் சக்திக்கு ஆன்ம பலமே காரணம். பலவிதக் கொடுமை, இன்னல்களைத் தாண்டி இந்து சமுதாயம் இன்று பிழைத்திருப்பதில் விஜயத்தின் பங்கும் உள்ளது.

‘தினமலர்’ ஆசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தி :
ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தை நான் கடந்த 25 ஆண்டுகளாகப் படித்து வருகிறேன். அதன் இன்றைய வளர்ச்சியைக் கண்டு மலைப்புதான் ஏற்படுகின்றது.

ஒவ்வொரு வீட்டிலும் உள்ள தொலைக்காட்சிகளில் ஆபாச சினிமாக்கள் ஒளிபரப்பாகின்றன. அது தவிர மாமனார், மாமியார்- மருமகள் சண்டை, ஓர் ஆணுக்கு உரிமை கொண்டாடும் இரு பெண்கள், சதிகள், சண்டைகள், குழப்பம் போன்ற காட்சிகளையெல்லாம், குப்பைகளெயெல்லாம் வீட்டில் வந்து கொட்டுகின்றன.

எனவேதான் நல்ல செய்திகளை மட்டும் தாங்கி வரும் விஜயம் போன்ற பத்திரிகைகளைக் குடும்பத்தில் யாவரும் படிக்க வேண்டும் என்கிறேன்.
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் விரைவில் 2 லட்சம் விற்பனைப் பிரதிகளை எட்டப் பிரார்த்திக்கிறேன்.

பிறகு முதல் பரிசு பெற்ற மதுபாரதி அவர்களுக்கு திரு. கிருஷ்ணமூர்த்தி பரிசளித்துக் கௌரவித்தார்.

‘புதிய தலைமுறை’ ஆசிரியர் திரு.மாலன்: மால்கம் ஆதிசேஷையா சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தபோது ஒரு முறை மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பயோட்ரானிக்ஸ் என்ற புதிய துறையைத் தொடங்கி வைக்கச் சென்றிருந்தார்.

அப்போது அவரிடம் அது போன்ற புதிய துறைகளைச் சென்னை பல்கலைக் கழகத்தில் ஏன் தொடங்கக் கூடாது என்று கேட்டார்கள்.
‘சென்னையில் அது போன்றவற்றைச் செய்ய முடியாது. ஏனெனில் அது பழைய பல்கலைக் கழகம். புதியது செய்ய மாட்டார்கள்’ என்றார் அவர்.

ஆனால் இதோ பழமையான ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் புதுமை படைத்துள்ளது. 94 வயதான இதழ் தன் மரபையொட்டிப் புதுமையைக் கொண்டு வருவது எளிதல்ல. அந்த வகையில் விஜயத்தின் இந்தச் சிறுகதைப் போட்டியும் ஒன்று.

‘சிறுகதை இலக்கியம் நைந்து வரும் சூழலில், கண்ணெதிரிலேயே இழப்பைத் தடுக்கவும் புதுப்பிக்கவும் என்ன செய்யலாம்? என்று நினைத்திருந்த வேளையில் விஜயத்தின் சிறுகதைப் போட்டிக்குத் தலைவணங்கி நன்றி கூறுகிறேன்.

pict2

தொடர்ந்து திரு.எஸ்.குருமூர்த்தி இரண்டாம் பரிசு பெற்ற ஜெ.தனுசுக்குப் பரிசளித்துக் கௌரவித்தார். மூன்றாவது பரிசை பொள்ளாச்சி அபி, திரு. ஏ.எம்.ராஜகோபாலன் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

பின்பு ஊக்கப் பரிசுகளை மற்ற சிறப்பு விருந்தினர்களிடமிருந்து கதாசிரியர்கள் பெற்று மகிழ்ந்தனர்.

கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியம் : நம் நாடு சிக்கல்களைச் சந்தித்த போதெல்லாம் அவற்றைக் களைவதில் ராமகிருஷ்ண மடத்திற்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கும் முக்கியப் பங்கு உண்டு. தற்போது தமிழ் சிறுகதை இலக்கியம் சந்தித்து வரும் சிக்கல்களைக் களையும் வகையில் இந்தப் போட்டியை ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நடத்தியுள்ளது.

இளம் எழுத்தாளர்களுக்கு விஜயம் நல்ல அடையாளத்தைத் தந்துள்ளது. ஸ்ரீராமகிருஷ்ண மடம் நல்ல விதையை இன்று விதைத்துள்ளது. நல்ல மகசூலைப் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

‘தி இந்து’ இணைப்பிதழ்களின் ஆசிரியர் திரு. அரவிந்தன்: பெரிய விஷயங்களைக்கூட கதையாகக் கூறினால் மனதில் நிற்கும். ஸ்ரீராமகிருஷ்ணர் சின்னச் சின்னக் கதைகள் மூலம் சுருக்கமான அறிவுரைகளை வழங்கியவர்.

இன்றுள்ள எல்லா ஆன்மிகப் பத்திரிகையிலும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தின் செல்வாக்கு அடியொற்றி இருக்கிறது. நாலு பேருக்கு நல்லது சொல்லி வருவதில் விஜயம் ஒரு முன்னோடி.

‘அமுதசுரபி’ ஆசிரியர் திரு. திருப்பூர் கிருஷ்ணன்: மேடையில் உள்ள பல பத்திரிகை ஆசிரியர்களையும் அன்பர்களாக்கிய பெருமை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தையே சாரும். அண்மைக் காலமாக ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் புதிய பாய்ச்சலில் உள்ளது.

சிறுகதைகளுக்கு விஜயம் தருவது பரிசல்ல; பிரசாதம். பரிசுக்குரிய கதைகளில் சிறுகதைக்குரிய லட்சணங்களான – ‘எடுப்பு – தொடுப்பு – முடிப்பு’ ஆகியவை சிறப்பாக உள்ளன. பக்தி இலக்கியம் என்ற பிரிவு இதுவரை சிறுகதைகளில் கூறப்படவில்லை. அக்குறையை ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் பூர்த்தி செய்துள்ளது.

துறவிகளான வால்மீகி, வியாசர் போன்றோர் சிறந்த இலக்கியங்களைத் தந்தனர். அதுபோல் ஸ்ரீராமகிருஷ்ண விஜயமும் துறவிகளால் நடத்தப்படும் பத்திரிகை.

‘நல்ல, சிறந்த விஷயங்கள் கொடுத்தும் லட்சம் பிரதிகளைத் தாண்டலாம்’ என்பது மற்ற பத்திரிகை ஆசிரியர்களுக்கு ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் தரும் செய்தி.

‘விஜயபாரதம்’ ஆசிரியர் திரு. வீரபாகு : நல்ல விஷயங்களை நாம் படிக்க வேண்டும். மற்றவர்களுக்கும் கூற வேண்டும். அந்தச் சமுதாயப் பணியை ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் செவ்வனே செய்து வருகிறது.

‘தினமணி’ ஆசிரியர் திரு. வைத்தியநாதன்: இந்தச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர்களுக்குப் பாராட்டு விழா, விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறுவது அவர்கள் செய்த புண்ணியம். இந்த விழாவை நடத்தும் ஸ்ரீராமகிருஷ்ண மடம் இந்தியாவின் தலைசிறந்த தியாக சீலர்கள் நிறைந்துள்ள நிறுவனம்.

ஆன்மிகத்தை மட்டுமே முன்னிறுத்தி, ஒழுக்கத்தை மட்டுமே கூறும் விஜயத்தின் விற்பனை சுமார் 2 லட்சம் என்றால் அது 2 கோடிக்குச் சமம்.

மற்ற பத்திரிகைகள் அந்தந்த நேரம் புரட்டுவதற்கு மட்டுமே. ஆனால் விஜயம் ஐந்து தலைமுறைக்குப் பிறகும் புதியதாக, சிறந்ததாக உள்ள பத்திரிகை. நல்ல எழுத்தாளர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய இன்றைய நிலையில், தமிழ் கூறும் நல்லுலகிற்கு அவர்களை அறிமுகம் செய்து உதவிக் கொண்டு வருகிறது விஜயம்.

பிறகு, ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்த மகராஜ் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.

முத்தாய்ப்பாக 90 வயதைக் கடந்த ஓவியர் சங்கர் அவர்களுக்குப் பாராட்டுப் பத்திரமும் ரூ. 35,000/- நிதியும் வழங்கப்பட்டன.

pict3

இவர் 34 வருடங்களாக விஜயத்திற்குப் படக்கதைக்கான ஓவியங்களை வரைந்து படங்களுக்கு உயிரூட்டிப் புகழ் பெற்றவர்.

இறுதியாக திரு. எஸ்.குருமூர்த்தி சிறப்புரையாற்றினார்.
விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வர் வி.வி.சுப்ரமணியம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
சுவாமி கௌதமானந்த மகராஜ் ஆசியுரை வழங்கினார். சுவாமி அபவர்கானந்தர் நன்றி கூற விழா நிறைவு பெற்றது.

One response to “ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் சிறுகதைப் போட்டி

  1. All children should have tamil knowledge to read and imbibe good thoughts and good qualities

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s