கல்கியின் …..

கல்கியின் …..

விவேகானந்தர் ஜீவிய சரித்திரம் என்ற புத்தகத்தில், சுவாமிகளின் பால்ய மனோரதம் இன்னதென்பதை நான் படித்தபோது எனக்கேற்பட்ட உணர்ச்சியை வர்ணிக்க முடியாது.

ஆ! குழந்தை நரேந்திரனின் ஆசை யாது?
கையில் சவுக்கு வைத்துக்கொண்டு, சொடுக்கிச் சொடுக்கி, குஷியாக ஜட்கா வண்டி ஓட்ட வேண்டும் என்பதுதான்.

நரேந்திரனால் ஜட்கா வண்டிக்காரனாக முடிந்ததா? அந்தோ! இல்லை. பின் என்ன பயன்?

சுவாமி விவேகானந்தருக்கே பாலிய மனோரதம் நிறைவேறவில்லை என்றால், சாதாரண மனிதர்கள் பற்றிக் கூறவே வேண்டியதில்லை.

Kalki_humour

ராமசாமி, அரங்கசாமி, முனிசாமி, குமாரசாமி, கிருஷ்ணன், உஸ்மான், ரங்கன், நான் ஆகியோர் சிறுபையன்களாயிருந்தபோது ஒரே சந்தின் மூலையில் ஒருங்கு கூடி கோலி விளையாடியவர்கள். அக்காலத்தில் ஒரு நாள், நாங்கள் மேற்கொள்ளவிருக்கும், ஒவ்வொருவரின் மனோரதமும் இன்னதென வெளியிடலானோம்.

ஆ! அவற்றை இப்போது எண்ணிப் பார்க்கும்போது, எனது நண்பர்களில் ஒருவருடைய மனோரதமாவது நிறைவேறியிருப்பதை நான் காணவில்லை.

ராமசாமி ஆசைப்பட்டதெல்லாம் என்ன? பியூன் வேலை
தான். டங், டங், டங் என மணியடித்து விட்டு, பிள்ளைகள் – வாத்தியார்கள் எல்லோரும் அறைகளுக்குள் போனதும் தாழ்வாரத்தில் தூணில் சாய்ந்தபடி சிவனே என்று தூங்க வேண்டுமென்பது தான் அவர் மனோரதமாயிருந்தது.

இது நிறைவேறிற்றா? இல்லை.
இந்த இன்பகரமான வாழ்க்கையை விட்டு, ஸர் ஸி.பி. ராமஸ்வாமி ஐயர், கே.சி.ஐ.இ. என்ற நீளப் பெயர் தாங்கி, வைஸ்ராய்களும் கவர்னர்களும், ராஜாக்களும், ராணிகளும் கூப்பிடும் இடத்துக்கெல்லாம் கை கட்டிக் கொண்டு ஓடும்படியான கதிதான் அவர் தலையில் எழுதியிருந்தது. வாழ்க்கையின் கொடுமை அப்படி!

அரங்கசாமியின் மனோரதம் பிரமாதமில்லை. சத்திர மணியக்காரர் உத்தியோகந்தான். இதாவது நிறைவேறிற்றா? எல்லா ஏற்பாடுகளும் நடந்து, முடிவில் கிடைக்கலாம் என்ற நிலைமை ஏற்பட்ட சமயத்தில், திடீரென்று கை நழுவிப் போய்விட்டது. ஆசாபங்கமுற்ற நண்பர் அரங்கசாமி அய்யங்கார் கடைசியில் போயும் போயும் ‘ஹிந்து’ பத்திரிகை எடிட்டர் ஆக நேர்ந்தது!

முனிசாமியின் சமாசாரமென்ன? தாலுகா கச்சேரி டபேதார் ஆக வேண்டுமென்று அத்தியந்த ஆசை கொண்டு இராப்பகல் அதே சிந்தனையாய் இருந்தார் பேர்வழி. அந்த ஆசை நிறைவேறவில்லை.

பல அவஸ்தைகள் பட்டு, கடைசியில் கேவலம் மந்திரி உத்தியோகமும் பார்க்க நேர்ந்தது. ஆண்டவனே! டபேதார் உத்தியோகம் மட்டும் ஆகியிருந்தால், மந்திரி வேலையிலிருந்து பாதியில் தள்ளிவிட்டார்களே, அந்த மாதிரி தள்ளியிருக்க முடியுமா?

குமாரசாமி கிராம கணக்குப்பிள்ளையாக ஆசைப்பட்டார். முடிவில், கல்வி மந்திரியாகத்தான் அவரால் முடிந்தது. நாமொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைக்குமென்பது பொய்யா?

கிருஷ்ணன் ஒரு டீக்கடை வைத்து நடத்த வேண்டுமென்று விரும்பியிருந்தார். நடக்கவில்லை. திவான் வேலையும், அதுவும் இதுவும் பார்த்துத் திண்டாடித் தெருவில் நின்றுவிட்டு, கடைசியில் ஏழு வருஷமாய் லா மெம்பர் வேலையிலே உட்கார்ந்திருந்தார்.
ஆ! வாழ்க்கையில் இவருக்கு இருக்கக்கூடிய ஏமாற்றத்தை எண்ணும்போது எனக்குக் கண்ணீர் பெருகுகிறது.

நண்பர் உஸ்மான், வெற்றிலை வியாபாரம் பண்ண ஆசை கொண்டிருந்தார். அது கைகூடாமல், ஹோம் மெம்பர் ஸ்தானத்தில் அல்லாவின் அருளைத் தியானித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

ரங்கன் மனோரதம் என்ன? பழக்கடை வைத்துக் கொண்டு, ஒட்டு மாம்பழங்களைக் கூரிய கத்தி வைத்துக் கொண்டு, நைஸ், நைஸாக அறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான். அதற்குப் பதிலாக ஆசாமி மனிதர்களுடைய தேகங்களை அறுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்.
ரங்காச்சாரி என்றதும் குழந்தைகள்கூடப் பயப்படும்படியான நிலைமைக்கு வர நேர்ந்துவிட்டது. பாவம்!

ஆதாரம் : ஆனந்த விகடன் 10.6.1933

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s