படிப்பு என்பதும் கல்வி என்பதும் வேறு வேறா?

கேள்வி : படிப்பு என்பதும் கல்வி என்பதும் வேறு வேறா?

சுவிர்: சமைப்பதும், சமைத்துப் பிறருக்குப் பரிமாறி, தான் சாப்பிடுவதும் ஒன்றாகிவிடுமா?

சமைப்பது = படிப்பு
சமைத்து, பரிமாறி, பசியாறுவது = கல்வி

படிப்பும் (Literacy), கல்வியும் (Education) வேறு வேறானவை. படிப்பு என்பது புத்தகத்தில் இருப்பதைப் படித்துவிட்டு, பரீட்சையில் பாஸாகி, தன் கை நிறைய சம்பளமோ, பிறர் வயிறு எரிய கிம்பளமோ வாங்க வைக்கும் ஒரு அனுமதிச் சீட்டு – அவ்வளவுதான்.

கல்வி என்பது ஆழமான ஒன்று; நம்மை மனதளவில் விரியச் செய்வது.
உண்மை பேசு; பிறருக்கு உதவு; மகிழ்ச்சியுடன் இரு; திறமையுடன் நடந்து கொள் – என்றெல்லாம் நீதி நூல்கள் கூறுகின்றன. நீதிகளைப் படித்தால் மட்டும் போதாது. அவற்றின்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கூறுகின்றன.

படித்ததைக் கடைப்பிடித்தல் என்பது சமயக் கல்விக்கும் ஒழுக்கக் கல்விக்கும் ஒத்து வரும். ஆனால் பொறியியல், கம்ப்யூட்டர் போன்றவற்றில் படிப்பதை எல்லாம் கடைப்பிடிக்க முடியாது என்று பலர் நம்புகிறார்கள்.

இது ஆழமாக யோசிக்க வேண்டிய விஷயம்.
படிப்பு பணத்தைத் தரும், தொழிலைத் தரும் என்று மட்டும் நினைப்பவன் சாதாரணமானவன். படிப்பு பிழைப்புக்கான ஒரு வழி என மட்டும் நினைத்தால், அது குறைவுபட்ட சிந்தனையே.
edu1

முன்னேற நினைப்பவன் தான் படித்ததைக் கொண்டு தனக்கும் பிறருக்கும் ஏதாவது ஒரு நல்ல வகையில் பயன்படுமா என்று யோசிப்பான். கல்வி என்பது மாடி எனில் படிப்பு படிகள் ஆகும்.

பொறியியல், தகவல் தொடர்பு தொழில் நுட்பம் போன்ற துறைப் படிப்புகளையும் கல்வியாக்க முடியும். எப்படி?
1. எதைக் கற்றாலும் ஆர்வத்துடன் படித்தால், அதிலுள்ள ஆழமான விஷயங்கள் புரியும்.
2.முறையாகச் சிந்திக்கும்போது நவீனச் சிந்தனைகள் தோன்றும். எப்படி?
நாமும் இயற்பியலைப் படிக்கிறோம், சர்.சி.வி. ராமனும் படித்தார்.
நாமும் கணக்கு போடுகிறோம், ராமானுஜனும் கணிதம் போட்டார். நம்மில் பலர் எந்தப் படிப்பு படித்தால் எவ்வளவு பணம் பண்ண முடியும் என்று கணக்குப் போடுகிறோம்.

பிரபஞ்சத்தைப் பார்ப்பது என்னவோ, நமக்கும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங்குக்கும் ஒன்று தான். ஆனால் அவர் பிரபஞ்சத்தின் தோற்றம், தன்மை, அதன் வளர்ச்சி, மாற்றம் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார் (இத்தனைக்கும் ஸ்டீபன் ஹாகிங் உடல் ஊனமுற்றவர், பேச முடியாதவர்).

அறிஞர்கள் யாவரும் சாதாரணமாகப் படிப்பதில்லை. எதைப் படித்தாலும், எதைச் செய்தாலும், சிந்தித்தாலும் அதைத் தங்கள் வாழ்க்கையின் மையப் பகுதிக்கு – உயிர்ப் பகுதிக்கு – அவர்களால் எடுத்துச் செல்ல முடிகிறது.

அதனால் இயற்கை தன் அறிவுச் சுரங்கத்தை அவர்களுக்குத் திறந்து காட்டுகிறது. உயிர்ப் பகுதிக்குச் சென்று பிரபஞ்ச உண்மைகளைக் கண்டுபிடித்துக் கூறுவதால், அந்த உண்மைகள் உலகிற்கு உயிரூட்டி வருகின்றன.

நாம் கவனமாகவும் ஆழமாகவும் படித்தால் அது நம் வாழ்க்கையின் உணர்வுகளோடு ஒன்றி விடுகிறது. அப்போது நாம் வெறும் படிப்பாளியாக இல்லாமல் கல்விமான் ஆகிறோம்.

படிப்பு ஒரு காலகட்டத்திற்கானது; ஆனால் கல்வி தொடர்ந்து நாம் கற்றுக் கொள்ளவும் அதன் மூலம் நம்மைப் புதுப்பித்துக் கொள்ளவும் செய்யும் ஒரு முறை ஆகும்.

அதனால்தான் சுவாமி விவேகானந்தர், ஏற்கனவே உள்ள பூரணத்துவத்தை வெளிப்படுத்துவதுதான் கல்வி என்றார். அதோடு அவர், கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பதல்ல; அது மனதின் இயல்பான ஆற்றலை வளர்ப்பது என்றும் கூறினார்.
ஆகவே நீ படிக்கும் காலத்திலேயே நன்கு சமைக்கக் கற்றுக்கொள்; மனமாற பிறருக்குப் பரிமாறத் தெரிந்து கொள். நீயும் வயிறு நிறைய உண்ண மறந்துவிடாதே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s