Real Donation…

நேபாள நாட்டை ஆண்டு வந்தான் பிரதாபருத்திரன்.

பூகம்பம் காரணமாகத் தலைநகரில் இருந்த ஏகலிங்கர் ஆலய கோபுரம் சரிந்திருந்தது. ஏகலிங்கர் மீது பக்திமிக்க மன்னன், புதுகோபுரம் கட்ட நிதியளிக்கும்படி தனவந்தர்களிடம் வேண்டினான்.
அவர்களும் நிறைய நன்கொடைகள் பொன்னாகவும், பொருளாகவும் லட்சங்களில் தந்தனர். நிதிமந்திரி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நன்கொடை வசூலித்து வந்தார்.

துர்காபுரி என்ற ஊரில் கூலித் தொழிலாளி குசேலசிங் என்பவன் மந்திரியிடம் வந்து, “ஐயா! என்னிடம் ஏழு அணாதான் உள்ளது. கால் கால் அணாவாக சேர்த்து வைத்த பணம். இதை ஏகலிங்கரிடம் சேர்த்து விடுங்கள்” என்று கூறி, உண்டியலில் பணத்தைப் போட்டுவிட்டு, திருப்தியாக “ஏகலிங்கா! ஏகலிங்கா!” என்று கூறியபடி போனான்.

ancientbronze2

நன்கொடையாளர்களுக்கு நன்றி கூற மன்னன் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். அவனது குலகுரு அங்கு முக்கிய விருந்தினர். நிதியமைச்சர் நன்கொடையாளரின் பெயர், தந்த தொகையை வாசித்தபோதெல்லாம் அரங்கில் ஒரே கரகோஷம்.

மன்னன், “அன்பர்களே! உங்கள் பெயர்கள் கல்லில் பொறிக்கப்படும். அதிக தொகை தந்த தனபதிசிங்கின் பெயர் முதற்பெயராக இருக்கும்” என்றான் கம்பீரமாக.
குலகுரு அமைதியாக இருந்தார். நிதியமைச்சர் உண்டியலைத் திறந்து நிதியாக வந்த தங்க நாணயங்களை மேசை மீது கொட்டினார்.

தங்கக்காசுகளுக்கு நடுவே குசேலசிங்கின் செப்புக்காசுகளும் இருந்ததைக் கண்ட மன்னன், “சே! இதையா ஏகலிங்கருக்குச் சமர்ப்பிப்பது?” என்று கோபப்பட்டான்.

மந்திரி, “அரசே! அந்த ஏழை குசேலசிங்கின் ஆர்வம் காரணமாக நான் இதை ஏற்றுக் கொண்டேன். மன்னியுங்கள் அரசே!” என்றார்.

“பிச்சைக்காரனின் அற்பக்காசு ஏகலிங்கருக்கு வேண்டாம். அதை அப்புறப்படுத்து” என்றான் மன்னன். கட்டளை நிறைவேற்றப்பட்டது.

பிறகு மன்னன் குலகுருவை வணங்கி, “குருவே! நான் செய்ததெல்லாம் சரிதானே…?” என்று கேட்டான்.

“எல்லாம் சரிதான், ஒன்றைத் தவிர. கொடையாளர் பெயரைக் கல்லில் பொறிக்கும்போது முதல் பெயராக குசேலசிங்கின் பெயரைப் பொறித்திடு” என்றார்.

“தங்களுக்கு நினைவு தவறி விட்டதாக கருதுகிறேன், குருவே!” என்றான் மன்னன் ஏமாற்றத்துடன்.

“இல்லை, பூரண நினைவுடன் தான் பேசுகிறேன். பிறர் கொடுத்தவை நன்கொடையல்ல. ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சிக் கிடைத்த நன்கொடை. அவை மாசுபட்ட காணிக்கை. அரசின் செல்வாக்கைப் பெறுவதற்காக வழங்கப்
பட்ட லஞ்சம். அதை ஏகலிங்கர் ஏற்க மாட்டார்.
குசேலசிங் ஒருவன்தான் தன் முழுச்செல்வத்தையும் மனப்பூர்வமாகத் தியாகம் செய்தான். அவனது ஏழு அணாவையே ஏகலிங்கர் ஏற்பார்” என்றார் குலகுரு.

மன்னனுக்கு அகத் தெளிவு ஏற்பட்டது. குசேலசிங்கின் ஏழு அணாக்களுடன் மன்னன் கோபுரப் பணியைத் தொடங்கினான்.

கோபுரம் கட்டி முடிந்தது. கோபுரத்தின் முன்புறத்தில் ஒரு கல்லின் மீது பொறிக்கப்பட்டிருந்த வாசகம் இதுதான்:
“புதிய கோபுரம் குசேலசிங் அவர்கள் உபயம்”.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s