என்ன சொல்கிறது இஸ்லாம்

என்ன சொல்கிறது இஸ்லாம் – கவிகோ அப்துல் ரஹமான்

 அரன் என்றாலும் வரம் தருவாய்.
அரி என்றாலும் சரி என்பாய்.
கர்த்தர் என்றாலும் அர்த்தம் நீயே.
அல்லா எனில் நீ அல்லாமல் வேறு யார்?
இல்லை என்பர் சிலர்.
அந்த இல்லை என்பதும் உன் பேரே.
சொந்தப் பெயர் ஒன்று இல்லாதாய்
எந்தப் பெயரால் உனை அழைப்பேன்?
இஸ்லாம் என்றாலே முழுமையாக இறைவனிடத்திலே தன்னை ஒப்புவித்தல் என அர்த்தம்.

mecca
‘கடவுளே, நீ இயக்குகிறாய், நான் இயங்குகிறேன். துன்பம் வந்தாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில் அதுவும் நீ தந்த பரிசு’. இப்படி ஏற்றுக் கொண்டால் இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை. சரியான மன நிலைக்கு வந்து விடுவார்கள்.
எல்லாம் செய்வது நானே என்று எண்ணுவதால்தான் துன்பம் வருகிறது.
பார்வையற்றவர்கள் யானையைப் பார்த்த கதை நமக்குத் தெரியும். அவரவர் அவரவர்களுக்குத் தெரிந்த இடங்களிலே நின்று இறைவனைத் தரிசித்திருக்கிறார்கள்.
நமது அறிவு வரையறைக்குட்பட்டது. படைக்கப்பட்ட அறிவு படைத்தவனை முழுமையாகக் காண முடியாது. முழு உண்மையை மனித அறிவால் புரிந்து கொள்ள முடியாது.
மத வேற்றுமைகளை இஸ்லாம் கூறவே இல்லை. இறைவன், எல்லா நாட்டிற்கும், எல்லா சமயத்திற்கும் எல்லாக் காலத்திற்கும் வழிகாட்டுகிறான் – வேதங்களின் மூலமாக, திருத்தூதர்களின் மூலமாக!
எல்லா மதங்களையும், இஸ்லாம் இறைவனது மார்க்கம் என்று சொல்கின்றது. திருத்தூதர்கள் வாயிலாக எல்லா நாட்டு மக்களுக்கும், எல்லா மதத்தினருக்கும் இறைவன் வழிகாட்டுகிறான். அதனால் வேதங்கள் எனப்படுபவை யாவும் ஒரே மூலத்திலிருந்தே வருகின்றன.
ஒரு சமயத்தை மற்ற சமயத்தவர் புரிந்து கொள்வது இல்லை. மாறாக, தவறாகப் புரிந்து கொள்கிறார்கள்.
இதுவே இன்றுள்ள பிரச்னை.
தன் தோட்டத்துப் பூவுக்கே வாசம் உண்டு, அடுத்தவர் தோட்டத்தில் இருப்பது பூவே இல்லை என்கிறார்கள்.
எல்லாப் பூக்களும் நிறத்தில் வேறுபடலாம். ஆனால் அவற்றில் இருக்கும் தேன் ஒரே சுவையுடையது.
இது தேனீக்குத்தான் தெரியும். எல்லா மதத்திற்கும் அடிப்படை ஒன்றே என்பது ஞானிக்குத்தான் தெரியும். சமயவாதிக்குத் தெரியாது. அவன் தன் தோட்டத்துப் பூவே பூ என்று சாதிப்பான்.
ரிக் வேதத்து வாக்கியம் இது. ‘ஏகம் சத் விப்ரா: பஹுதா வதந்தி’ – இறைவன் ஒருவனே; நாம் அவனைப் பல பெயரிட்டுப் பேசுகிறோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயர் வைத்து, தனித்தனி ஆண்டவன் என நினைக்கிறார்கள்.
சர்ச்சோ, மஸ்ஜித்தோ அல்லது எந்த மதத்தின் வழிபாட்டுத் தலமானாலும், எங்கே இறைவனின் பெயர் உச்சரிக்கப்படுகிறதோ, அதற்குப் பாதிப்பை ஏற்படுத்துபவன் மனிதனே அல்ல.
இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இறைவனுக்கு ஆயிரம் திருப்பெயர்கள் உண்டு என்று குர்ஆன் கூறுகிறது. இதை மக்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். பெயரில் வேற்றுமை இருந்தாலும் கூறப்படும் பொருள் ஒன்றுதானே!
மதங்கள் ஏன் வெவ்வேறாக இருக்கின்றன? ஏன் இறைவன் ஒரே மதத்தை உண்டாக்கக் கூடாது?
குர்ஆனில் பதில் உள்ளது. ஒவ்வோர் இடத்திலிருந்து புறப்படுபவன் வெவ்வேறு வழியாகத்தான் வந்தடைய வேண்டும்.
ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்குப் போக வேண்டும் என நினைக்கிறவர்கள் எல்லோரும் ஒரே திசையை நோக்கியா போக முடியும்?
வடக்கிலிருந்து வருகிறவன் தெற்கு நோக்கி வர வேண்டும். தெற்கிலிருந்து வருபவன் வடக்கு நோக்கிச் சென்றால்தான் இலக்கை அடைவான்.
மாறாக, சண்டையிலேயே இவர்கள் நேரத்தைச் செலவிட்டால் எங்கும் போக முடியாது.
சென்னை என்று வழிகாட்டி உள்ளது. நடந்து அல்லது வாகனத்தில் போனால் தானே போய்ச் சேர முடியும். சென்னை என்ற போர்டைப் பார்த்தபடி பலர் அங்கேயே நிற்கிறார்கள்.
அந்த வழிகாட்டிப் பலகைதான், நமது மார்க்கம். இஸ்லாம் ஒரு மார்க்கம், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி.
‘வெவ்வேறானவர்களுக்கு வெவ்வேறு வழியை நான் வகுத்திருக்கிறேன்’. இது குர்ஆனில் வரும் வார்த்தைகள்.
கீதையிலேயும் இது இருக்கிறது: ‘நான் பல வழிகளை உண்டாக்கியிருக்கிறேன், நீ வந்து சேர்.’
நபிகள் நாயகம் சொன்னார்: ‘இந்தியாவில் ஒரு தூதர் உதித்தார். அவர் கருப்பானவர். காலா என்பது அவர் பெயர்.’ ஸ்ரீகிருஷ்ணரைத்தான் அப்படி வர்ணிக்கிறார். காலா என்றால் கருப்பு.
இறைவன் ஒருவனே வணங்குதற்குரியவன், வேறு யாருமில்லை; இருக்க முடியாது. ஏனென்றால், படைத்தவன் ஒருவன்தான். சகல அண்ட சராசரங்களையும், எல்லா உலகங்களையும் படைத்தவன் ஒருவன்தான். இதை நாம் புரிந்து கொண்டால் சமயச் சண்டைகள் கிடையாது. எல்லாச் சமய நோய்களுக்கும் அது நிவாரணம்.
உலகம் இயங்குவதைப் பார்த்தே இதைத் தெரிந்து கொள்ளலாம். சூரியன், சந்திரன், பூமி எல்லாவற்றையும் படைத்தவன் ஒரே இறைவனாகத்தான் இருக்க முடியும். சூரியன் வேறு கடவுள், சந்திரன் வேறு கடவுள் என்றால் என்னவாகும்? குழப்பம்தான் மிஞ்சும்.
ஒரே இறைவன் என்பதால்தான் அததது, அந்தந்த ஒழுங்கில் போய்க் கொண்டிருக்கிறது. இதற்காக லட்சத்து இருபத்து நான்காயிரம் தூதர்களை அனுப்ப வேண்டியுள்ளது.
மனிதர்களுக்கு எத்தனை பேரை அனுப்பியும் புத்தி வரவில்லை. திருந்த மாட்டேன் என்கிறார்கள். அதனால்தான் இவ்வளவு தூதர்கள்.
ஆண்டவன் ஒரே மதமாகப் படைத்திருக்கக் கூடாதா? மனிதனாகவே உண்மையைத் தெரிந்து கொண்டு தேர்ந்தெடுக்கிறானா பார்ப்போம் என இறைவன் மனிதர்களுக்குத் தேர்வு வைக்கிறார்.
இறைத்தூதர்களை நான் அனுப்பியிருக்கிறேன் என்கிறது இஸ்லாம். தூதர்களிடம் இறைவன், ‘நீ கட்டாயப்படுத்தக் கூடாது. உண்மையை எடுத்து வை. ஏற்பவன் ஏற்றுக் கொள்ளட்டும், இல்லை என்றால் நான் அவனைப் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறி அனுப்புகிறார்.
இறைவன் நபிகள் நாயகத்திற்கும் கூறுகிறார்:
‘உண்மையை எடுத்துரைப்பது மட்டுமே உங்கள் வேலை. ஏற்பதும் ஏற்காததும் அவர்கள் விருப்பம். உங்களை அவர்களின் பாதுகாவலராக அனுப்பவில்லை; எனது தூதராகத்தான் அனுப்புகிறேன்.’
ஆகவே கட்டாயப்படுத்தக் கூடாது. மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை.
‘கடவுளை வெவ்வேறு பெயரால் வணங்குகிறார்கள். அவர்களை இகழ்ச்சியாகப் பேசாதீர்கள்’ என்று குர்ஆனில் ஒரு வாக்கியம் உள்ளது.
‘வசுதைவ குடும்பகம்’ என்று இந்து மதம் சொல்கிறது. எல்லா உயிரினமும் ஒரே குடும்பம். எல்லோரையும் பேதம் பார்க்காமல் எவன் நேசிக்கிறானோ, அவனையே இறைவன் நேசிப்பான் என்று இஸ்லாம் கூறுகிறது.
விஞ்ஞானம் பிரித்துப் பார்க்கிறது. அஞ்ஞானம் எதையும் பார்ப்பதில்லை.
மெய்ஞ்ஞானம் மட்டுமே இணைத்துப் பார்க்கும்.
யார் அபேதமாகப் பார்க்கிறானோ அவன்தான் சத்தியத்தை, ஞானத்தை அறிந்து கொள்ள முடியும்.
பிரித்துப் பார்ப்பவனால் ஞானத்தை அறிய முடியாது. ‘ஒன்றாகக் காண்பதுவே காட்சி’ என்று ஔவையார் சொல்கிறார்.
காட்சி என்றால் தரிசனம். மனிதர்களை மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்தையும் ஒன்றாகப் பார்க்க வேண்டும்.
படைப்பு எவ்வாறு தொடங்கியது? ஏதோ ஒரு சிற்றுயிர் முதலில் தோன்றியது, அதுவும் சேற்றிலே! அச்சிற்றுயிரிலிருந்தே எல்லா உயிர்களும் தோன்றின, மனிதன் உட்பட.
எல்லா உயிர்களும் நீரில் பிறந்தன என்று எல்லா வேதங்களிலும் உள்
ளது. அதைப் பரிணாமக் கொள்கையால் புரிந்து கொள்ள வேண்டும்.
இறைவன் ஒருவன் என்பதால்தான், உயிர்கள் நீரில் பிறந்தன என்ற வாக்கியம் எல்லா வேதத்திலும் இருக்கிறது. ஆதிவாசிகளுடைய நாட்டுப்புறப் பாடலிலும் உள்ளது.
ஆச்சரியமாக இல்லையா?
எந்த விஞ்ஞானியாலும் கண்டு பிடிக்க முடியாதவை பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய புத்தகங்களில் உள்ளன.
இறைவன் ஒருவன் என்பதை நம்பி ஏற்றுக் கொண்டு நற்செயல்கள் செய்யுங்கள் என இறைவன் குர்ஆனில் தெளிவாகக் கூறுகிறார்.
நீ பாவம் செய்ததற்குப் பரிகாரம் ஒரு புண்ணியம் செய்! நற்செயல்கள்தான் உன் பாவத்தைப் போக்குவதற்கான, தவற்றைத் தீர்ப்பதற்கான வழி. ‘எல்லோரையும் நேசி, யாரையும் பழிக்காதே. பிறர் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ, அதையே நீ பிறருக்குச் செய்’ என்கிறார் நபிகள் நாயகம்.
இது மகாபாரதத்திலும் உள்ளது. புத்தரும், ஏசுவும் கூறியிருக்கிறார்கள். சமணத்திலும் உள்ளது. ஒவ்வொரு மதத்தினரும் இதைக் கடைப்பிடித்தாலே போதும்.
மதத்தின் பெயரால் போர் செய்யத் தயாராக இருக்கிறான். ஆனால் மத நூல்களைப் படித்துக் கடைப்பிடிக்கத் தயாராக இல்லை. அவரவர் மதத்தை நன்றாகப் படித்து அதிலுள்ள நல்ல விஷயங்களைக் கடைப்பிடித்தாலே போதும். அதைச் செய்வதில்லை.
‘ஒருவனை யாராவது கொலை செய்துவிட்டால், அவன் முழு மனித இனத்தையும் கொன்றவன் ஆவான். அவன் மனிதனே இல்லை’ என்கிறது குர்ஆன்.
‘உன் இனம் தவறு செய்கிறது , அநீதி செய்கிறது என்று தெரிந்திருந்தும் அதற்கு ஆதரவு அளித்தால் அதற்குப் பெயரே இனவெறி’ என்றார் நபிகள் நாயகம்.
அதுதானே இங்கு ஜாதி, மதம் மற்றும் இனம் ஆகியவற்றின் பெயரால் நடக்கிறது. ‘நீதியிலிருந்து தவறாதீர்கள். உங்கள் பகைவரிடத்திலும் நீங்கள் அநீதியாக நடக்காதீர்கள். அங்கேயும் நீங்கள் நீதியைத் தான் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று குர்ஆன் கூறுகிறது.
தீவிரவாதத்திற்கு இஸ்லாத்தில் இடமே கிடையாது.
சிலர் அப்படிச் செய்கிறார்கள் என்றால் அவர்கள் முஸ்லீம்களே கிடையாது. ஒரு முஸ்லீம் தீவிரவாதியாக இருக்க முடியாது. ஒரு தீவிரவாதி முஸ்லீமாக இருக்க முடியாது. முஸ்லீம் என்று இல்லை, எந்த மதவாதியும் தீவிரவாதியாக இருக்க முடியாது. எந்த மதத்தைச் சேர்ந்தவராயினும் இன்னொருவனை அடி, உதை, கொலை செய் என்று எந்த மதம் சொல்கிறது?
‘பகைவனையும் நேசி’ என்றுதானே சொல்கிறது.
இறைவன் அன்பானவன். உயிர்களுக்கு நீ தீங்கிழைத்தால் அவன் சகித்துக் கொள்ளமாட்டான்.
இதுதான் அனைத்து மதங்களின் செய்தியாகும்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s