பகவான் விரும்பும் பத்து புஷ்பங்கள்

பகவான் விரும்பும் பத்து புஷ்பங்கள்

பக்தர்களே! தியானம் புரிவதற்காக ஸ்ரீராமகிருஷ்ணர் அல்லது உங்களது இஷ்டதெய்வத்தின் திருவுருவப் படத்தைப் பூக்களால் அலங்கரியுங்கள்.

பத்து மலர்களைச் சேகரித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். ஊதுபத்தியின் மணம் நாலா பக்கத்திலும் பரவட்டும்.

பகவானின் முன்பு அமர்ந்துள்ள நீங்கள் அவரை அன்புடன் நோக்குங்கள். அவரது புன்னகை உங்களது எல்லாக் கவலைகளையும் நீக்கிவிடும்.

ஒளிரும் திருவிளக்கின் சுடர் மேல்நோக்கிச் செல்வதுபோல் உங்கள் மனமும் உயர்ந்த, புனிதமான சிந்தனைகளைச் சிந்திக்கட்டும்.
நித்ய பூஜையில் பத்துவித மலர்களை மானசீகமாக இறைவனுக்குப் படைக்க வேண்டும் என்று தந்த்ர சாஸ்திரம் கூறும்.

இந்தப் பூக்கள் உங்களுக்கும் உங்கள் இஷ்டதெய்வத்திற்கும் நடுவிலுள்ள தடைகளை நீக்குபவை.
நிமிர்ந்து அமர்ந்து ஒரு முறை மூச்சை உள்ளே இழுத்து வெளியேவிடுங்கள்.

ஓம் பூர் புவஸ்ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி|
தியோ யோ ந: ப்ரசோதயாத்||
என்று மூன்று முறை காயத்ரி மந்திரத்தைப் பொருள் புரிந்து உச்சரியுங்கள்.

பொருள்: யார் நமது மேலான அறிவைத் தூண்டி விடுகிறாரோ, அந்தச் சுடர்க் கடவுளின் ஒளியைத் தியானிப்போம்.

கீழ்க்கண்டவற்றைச் சிந்தித்தும் கூறியும் பூக்களைக் ஒவ்வொன்றாகக் கடவுளுக்குச் சமர்ப்பியுங்கள்

lotus

முதல் பூ – அறியாமையின்மை – அமாயம்: அறிவின் திறவுகோல் மன ஒருமைப்பாடு என்றார் சுவாமி விவேகானந்தர். அதன்படி, உங்கள் மனதை ஸ்ரீராமகிருஷ்ணர் மீது குவியுங்கள். அதனால் உங்கள் அறிவு விரியும். அறியாமை மறையும். மாயையில் சிக்காத, பந்தமற்ற நிலை உங்களுக்குக் கைகூடும்.
இப்போது அறியாமையின்மை – அமாயம் என்ற மலர் என் நெஞ்சுக்குள் உதித்துள்ளது. அந்த மலர்தான் என் கைகளில் உள்ளது. அதை ஞானவடிவான ஸ்ரீராமகிருஷ்ணரின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

lily_flower

இரண்டாம் பூ – அகங்காரமின்மை – அநகங்காரம்: நான், நான் என்று ஓயாமல் நம் நெஞ்சில் ஓலமிடும் நமது அகங்காரத்தைத் துறந்தால் ஆண்டவன் நம்மோடு உறவாடுவான். அந்த உறவின் மூலம், நமக்குள் வினயம் மலரும். அந்த வினயம் பல நயங்களை நம் வாழ்வில் பெருக்கும்.

அப்படி மலர்ந்த நம் கையிலுள்ள அநகங்காரம் – அகங்காரமின்மை என்ற இந்த மலரை, எள்ளவும் அகங்காரமற்ற என் அன்னை ஸ்ரீசாரதாதேவியின் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.

img5

மூன்றாம் பூ – பற்றின்மை – அராகம் : 30 வருடங்கள் தக்ஷிணேஸ்வரக் கோயிலில் வாழ்ந்த ஸ்ரீராமகிருஷ்ணரிடம், நீங்கள் வெளியே போங்கள் என்று கோவில் காவலாளி கூறினார்.
மறுகணம் காற்றாக குருதேவர் புறப்பட்டார்.
போகச் சொன்னது அவரை அல்ல என்று கோயில் அதிகாரி மன்னிப்பு கோரியதும், மறுகணம் எந்தச் சலனமுமின்றி உள்ளே வந்தார், பற்றின்மையின் உருவான பகவான்.
பற்றுக பற்றற்றானை என்று பறைசாற்ற வந்த பகவானின் பாதங்களில், என் கையிலுள்ள அராகம்-பற்றின்மை என்ற பூவை அர்ப்பிக்கிறேன்.

rose

நான்காம் பூ – செருக்கின்மை – அமதம்: ஒருவனுக்குள்ள அழகு, அறிவு, திறமை, பேச்சாற்றல், பணம், பதவி போன்றவையாவும் இறைவன் தந்தவை. அவற்றைப் பெற்ற ஒருவன், எல்லாம் என்னால்தான் வந்தன, நானே இவை எல்லாவற்றுக்கும் காரணம் என இறுமாந்தால், அவன் கடவுளை இகழ்கிறான்.
இறைவா, என்னிடம் அந்த நிலை இல்லாத தன்மையான செருக்கின்மை – அமதம் என்ற பூவை புனிதா, நின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன், என்னைச் செருக்கற்றவனாக்கு.

flower

ஐந்தாம் பூ – மோகமின்மை – அமோஹகம்: மோகத்தைக் கொன்றுவிடு அல்லால் என் மூச்சை நிறுத்திவிடு என்று பராசக்தியிடம் வேண்டினார் பாரதி.

எதன் மீதும் அல்லது யார் மீதும் கட்டுப்பாடற்று ஆசைப்படுவது மோகம். மோகம் இல்லாவிட்டால் மனதில் ஆற்றலும் அமைதியும் நிலைக்கும்.

எதன் மீதும் நான் மோகம் கொள்ளாதிருக்க எனக்கு ஆண்டவன் அருளட்டும். அதற்காக மோகமின்மை – அமோஹகம் என்ற இம்மலரை ஸ்ரீராமகிருஷ்ணரின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

05
ஆறாம் பூ – கர்வமின்மை – அதம்பம்: பிரபஞ்சத்திலுள்ள பெரும் சக்திகளான நீர், நிலம், வாயு, அக்னி, ஆகாசம் ஆகிய யாவும் கடவுளின் கட்டளைக்கு அடங்கி நடந்து தங்கள் பணிகளைச் செய்கின்றன.
கடவுள் மீது ஆர்வம் இருப்பவருக்கு, தன் மீது கர்வம் இருக்காது. ஆடம்பரம் கூடாது.
கடவுளின் சக்தியைத் தேக்கி வைக்கவும், திரட்டி வைக்கவுமே நாம் வாழ்கிறோம். அந்த நிலையைப் பெற்றிட இவ்வாறு வேண்டுங்கள்:
இறைவா, நானே பெரியவன், மற்றவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்ற கர்வம் என்னிடத்தில் சிறிதும் இல்லாதபடி என்னை உன் குழந்தையாக்கு. அந்த நிலையைப் பெற வேண்டி, கர்வமின்மை அதம்பம் என்ற இந்தப் பூவைக் காணிக்கையாக்குகிறேன்.

04
ஏழாம் பூ – வெறுப்பின்மை – அத்வேஷம்: (கடவுள் முன்பு சத்தமாக உரையுங்கள்) தவறு செய்துவிட்டார்கள் என்று நான் இதுவரை யாரையெல்லாம் வெறுத்தேனோ, அவர்களை நான் இன்று மன்னித்துவிடுகிறேன். யாரெல்லாம் தவறாகப் புரிந்துகொண்டு என்னை வெறுக்கிறார்களோ, அவர்களிடம் நான் நல்ல உறவை வளர்த்துக் கொள்வேன்.
ஏனெனில், அனைவரும் என் இஷ்ட தெய்வத்தின் பிள்ளைகள். தெய்வத்தின் குழந்தைகளை வெறுத்துவிட்டு, அந்த தெய்வத்தின் அன்பை நான் பெற முடியாது.
ஆகவே வெறுப்பின்மை – அத்வேஷம் என்ற என் கையில் உள்ள இப்பூவை, அன்பின் திரட்சியான அன்னை ஸ்ரீசாரதைக்கு அர்ப்பணிக்கிறேன்.

lord-buddha
எட்டாவது பூ – அமைதிகுலையாமை – அக்ஷோபகம்: ஸ்ரீராமகிருஷ்ணர் மறைந்த பிறகு ஒரு வேளை உணவுகூட இல்லாதபோதும் அன்னை ஸ்ரீசாரதை தமது அக அமைதியை இழக்கவில்லை.
பிற்காலத்தில் எண்ணற்றோர் அன்னபூரணியே என்று அவரை ஆராதித்தபோதும் அவர் பெருமையால் சிறிதும் நிலைகுலையவில்லை.
ஆனால், ஒரு சிறு வார்த்தைகூட என் அமைதியைக் குலைத்துவிடுகிறது. அந்தப் பலவீன நிலை மாறிட இதோ அமைதி குலையாமை – அக்ஷோபகம் என்ற பூவை அமைதியே வடிவான ஸ்ரீசாரதையின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

mahavir
ஒன்பதாம் பூ – பகையின்மை – அமாத்சர்ய: பகை, எனப்படுவது மனிதனின் மனம் எனும் ஈர விறகில் எழும் புகை. அது அவனுக்குள் இருக்கும் ஆன்மிக அக்னியைக் கொழுந்து விட்டெரியச் செய்யாது.
நான் இனி யார் மீதும் பகை உணர்வைக் கொள்ள மாட்டேன்; யாரும் என் மீது பகை கொள்ளும்படியும் நான் இருக்க மாட்டேன் என்ற உறுதிமொழியை இன்று நான் ஏற்கிறேன்.
இதோ, அந்த உறுதிமொழியின் வெளிப்பாடாக என் கையிலுள்ள அமாத்சர்ய மலரை, அன்பின் பிடியில் அகப்படும் மலையான ஆண்டவா, உனக்கே அர்ப்பணம்.

06
பத்தாம் பூ – லோபமின்மை – அலோபம்: (உரக்கக் கூறலாம்) என் உண்மையான சொரூபம் தெய்விகமானது; தெய்வத்தின் குழந்தை நான். சோகம், மோகம் இல்லாத ஆன்ம சாம்ராஜ்யம் என்னுடையது.
அப்படிப்பட்ட நான் உலக ஆசைகள், சிற்றின்பங்கள், பெயர், புகழ், பணம், பதவி போன்றவற்றில் என் கவனத்தைச் சிதறடிக்க மாட்டேன்.
இவற்றால் பாதிக்கப்படவும் மாட்டேன் என்ற என் மனதின் அலையாத தன்மையான அலோபம் -லோபமின்மை என்ற இப்பூவை என் ஆன்மாவின் நாயகனான ஸ்ரீராமகிருஷ்ணருக்குச் சமர்ப்பிக்கிறேன்.

(நின்று உச்சரியுங்கள்) பகவானே, இந்தப் பத்து மானசீக மலர்களை உன் திருவடியில் சமர்ப்பிக்கிறேன். இவற்றை ஏற்று என்னை உன்னுடையவனாக்கு; உத்தமனாக்கு!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

முடிவில், பகவானை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குங்கள். உங்களது பக்திக்குத் தக்கபடி பகவானின் அருளை நீங்கள் பெறுவீர்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s