ஆனந்த தியானம்

ஆனந்த தியானம்

அன்பு பக்தர்களே, தியானிப்பதற்கு அமைதியான இடத்தில் அமருங்கள்.

சநாதன புருஷர் ஸ்ரீராமகிருஷ்ணர் நம் சங்கடங்களைத் தீர்த்து நம் நெஞ்சில் என்றும் நிலைபெற வேண்டும் என்று முதலில் வேண்டுங்கள்.

சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் – படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய இறைவனின் முத்தொழில்களைக் குறிக்கும்

ஓங்காரத்தை உரக்க உச்சரியுங்கள்.
ஓங்காரத்தை முதல் முறை கூறும் போது சுத்தமான காற்று உள்ளே செல்ல, சிந்தனையும் உள்ளமும் சுத்தமானது என்று நம்புங்கள்.

ஓங்காரத்தை இரண்டாம் முறை உச்சரியுங்கள். உங்களது சோகங்கள் என்ற மேகங்கள் காற்றோடு காற்றாகப் பறந்துவிட்டதாக எண்ணுங்கள்.

மூன்றாம் முறை ஓங்காரத்தை உச்சரித்த பின் – உங்களது தோல்விகள், அவமதிப்புகள் அனைத்தையும் கடவுளிடம் விட்டுவிட்டதாக நம்புங்கள்.

நிமிர்ந்து அமர்ந்து உங்கள் மனதைக் குவியுங்கள். நெஞ்சின் மீது கரம் குவித்துக் கூறுங்கள்.

பகவானே ஸ்ரீராமகிருஷ்ணரே, இன்பமும் துன்பமும் கடந்த ஆனந்தம் பெறுவதற்காகத்தான் உங்கள் முன் அமர்ந்துள்ளேன். உங்களது இயல்பான நிலை அமைதியானது. அந்த நிலையை அடியேனும் பெற்றிட அருளுங்கள்.

ஆனால் இன்று நம் நிலை எப்படி?
தினமும்…
உண்பதில் இன்பம், உறங்குவதில் ஓயாத இன்பம்,
பார்ப்பதில் பேரின்பம், கேட்பதில் மகிழ்ச்சி, தொடுவதில் கிளர்ச்சி, பேசுவதில் எழுச்சி – என்று எத்தனை காலம்
தான் இப்படி கண், காது, மெய், வாயால் அனுபவிக்கும் விஷய சுகங்களையே சுகங்கள் என்று நம்புவது!

இந்த வெளிப்புற இன்பங்களே எனக்கு வேண்டியவை என எத்தனைக் காலம்தான் நம்பி ஏமாறுவது? துன்பம் என்னைத் தொடர்வதை எத்தனைப் பிறவிகளில்தான் நான் தொடர்வது?
இன்பம் – துன்பம் இல்லாத, சுகம் – துக்கம் இல்லாத, எதிர்
பார்ப்பு-ஏமாற்றம் இல்லாத, பசி – தாகம் துன்புறுத்தாத, எனது இயல்பான ஆனந்தநிலையை நான் மீட்டெடுப்பது எப்போது? இவ்வாறு ஆழ்ந்து யோசியுங்கள்.

பின் இந்தச் சிலவற்றை உங்கள் மனக்கண் முன் கொண்டு வாருங்கள். 1. புத்துணர்வு தரும் காலைச் சூரியன், 2.வெள்ளித் தட்டென மின்னும் பௌர்ணமி நிலவு, 3.மலை நடுவே முகிழும் அருவி, 4.வெள்ளையுள்ளம் படைத்த பிள்ளை முகம்.

Dhyanam

ஆனந்தமாக வாழுங்கள் என்று மனதார உங்களை வாழ்த்தியவர்களை மானசீகமாக வணங்குங்கள். உங்கள் நன்மைக்காகப் பாடுபடுகிறவர்களை நன்றியுடன் நினையுங்கள்.

உங்கள் பெற்றோரின் பாதங்களைத் தொட்டுப் பணிந்ததை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களது குருவின் புனித கரம் உங்கள் சிரசின் மீது இருப்பதாக நம்புங்கள்.

இவர்களை எல்லாம் ஆழ்ந்த உணர்வுடன் நினைத்தால் மௌனமாகிவிடும் உங்கள் மனக்கிலேசங்கள்.
சுகம் என்றால் இந்திரியங்கள் மூலம் வரும் சுகம் அதாவது விஷயானந்தம் மட்டுமே என்று ஆணியால் அடிக்கப்பட்டவர்களாக, அசைய முடியாமல் மனதளவில் மயங்கித் தவிக்கிறோம்.
‘ந அல்பே சுகமஸ்தி’ – மலினமானவற்றில் இன்பமில்லை என்கிறது உபநிஷதம். ஆனால் நம் மனமோ ஒவ்வொரு கணமும் இந்திரியங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓடுகிறது. புலன்கள் ஒவ்வொன்றும் நம் உள்ளத்தைப் புரிந்து கொள்ளாமல் வீணாக அலைகின்றன.

ஐந்து புலன்கள் என்ற ஐந்து திருடர்கள், ஆனந்தம் என்ற நம் ஆன்மிக நிதியை அபகரிக்கக் கூடாது என்பதால் இறைவனிடம் இப்படி வேண்டுங்கள்.

‘ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது
அகத்தினில் நீ இலையோ அருணாசலா!’
உங்களது வலது கை விரல்களை மடக்கி, முஷ்டியாக்கிக் கொள்ளுங்கள். இதனால் ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகியவை நன்கு அடக்கப்பட்டதாக பாவியுங்கள்.

ஸ்ரீராமகிருஷ்ண பக்தன் என்ற நான், எதைக் காணச் சொல்கிறேனோ, அதை மட்டும் என் கண்கள் இனி காணட்டும்.
ஸ்ரீராமகிருஷ்ண பக்தை என்ற நான், எதைக் காதால் கேட்கச் சொல்கிறேனோ, அதை மட்டும் என் காதுகள் கேட்கட்டும்.

இவ்வாறு ஒவ்வொரு புலனுக்கும் கட்டளையிடுங்கள்.
சிங்கம் கர்ஜித்தால் காட்டில் எல்லா விலங்குகளும் அடங்கி ஒடுங்கிவிடும் என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

நம் மனமான காட்டில் வீண் ஆசைகள், உடலாலும் உள்ளத்தாலும் சோம்பல், வாழ்வில் உயர்நோக்கமின்மை, தொண்டில் சுறுசுறுப்பின்மை, மனிதநேயமின்மை, கடவுளிடத்தில் பக்தியின்மை போன்றவற்றால் நாம் விலங்கிடப்பட்டிருக்கிறோம்.

அந்த விலங்குகள் யாவும் ஓடி ஒளிந்துவிடவும் – ஒழிந்து போகவும் – நம்முள் பக்தி எனும் சிங்கம் கர்ஜிக்கட்டும்.

ஸ்ரீராமகிருஷ்ணர் சோகமாக இருந்து ஒருமுறைகூட நான் அவரைப் பார்த்ததில்லை என்றார் அன்னை ஸ்ரீசாரதாதேவி.

அப்படிப்பட்ட அந்த நித்ய ஆனந்தமூர்த்தியை அகத்தில் எழுந்தருளச் செய்வதற்காக சற்று நேரம் தியானியுங்கள்…
இப்போது உங்கள் அகத்தில் சாந்தமும் நிம்மதியும் இருக்கி
றதா? என்று கவனியுங்கள். உங்களது நெஞ்சம் என்ன ஒலியை எழுப்புகிறது என்று உற்றுக் கேளுங்கள்.

நீங்கள் தீக்ஷை பெற்றவர் என்றால், உள்ளுக்குள் உங்கள் இஷ்ட மந்திரம் எங்கிருந்தோ ஒலிக்கும். அவ்வாறு ஒலிப்பது கேட்காவிட்டால், மும்முறை மந்திரத்தை மௌனமாக முழங்குங்கள். உங்கள் முழு மனதையும் மந்திர ஒலியால் நிரப்புங்கள்.

புலன்களால் பெறும் விஷயானந்தத்தைவிட உயர் சுகங்களைக் காட்டச் சொல்லி இறைவனிடம் வேண்டுங்கள்.
இந்தப் பிரார்த்தனையால் உங்கள் மனம் மெல்ல விஷயானந்தத்திலிருந்து உயரே எழும்புகிறது.

பக்தி மலர்ந்தால் அடுத்து நம்முள் புலனடக்க இன்பம் அதாவது சம சுகம் உதிக்கும். சம சுகத்தில் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

உள்ளம் நல்லவற்றில் நிலைபெறும்.
தெய்வ நினைவு திடமாகும்.
நமது உண்மை நிலையான தெய்விகத்தை உணர்வதற்கு சேரமான் பெருமானின் பாடலைச் சொல்லுங்கள்.

சிந்தனை செய்ய மனம் அமைத்தேன்
செப்ப நா அமைத்தேன்
வந்தனை செய்யத் தலைஅமைத்தேன்
கை தொழ அமைத்தேன்
பந்தனை செய்வதற்கு அன்பமைத்தேன்
மெய் அரும்ப வைத்தேன்
வெந்தவெண்ணீறணி ஈசற்கு
இவை யான் விதித்தனவே.
திருநீறு அணியும் பெருமானே!

என் மனம் உன்னையே சிந்தனை செய்யட்டும். நாக்கு உன்னையே பாடட்டும். தலை உன்னையே வணங்கட்டும். உள்ளத்தில் உன்னைக் கட்டுவதற்கு அன்பு வைத்தேன். மனம் மொழி மெய்யால் உன்னையே வணங்கி மகிழ்கிறேன். எனது கவலைகள் எல்லாம் அகலுவதை நான் உணர்கிறேன்.
இந்த வேண்டுதலால் விஷயானந்தத்திலிருந்து உங்களது புத்தியும் மனமும் ஏற்படுத்திய சங்கல்பம் விடுபடும்.
உங்களது பாவம் எப்படியோ அந்த அளவிற்கு பவசாகர சம்ஸ்காரத்தின் தாக்கம் குறையும்.

இப்போது உங்கள் மனம் பவித்திரமாகிவிட்டது. பஜனானந்தம் உங்கள் உணர்வில் ஏற்படுகிறது. உங்களுக்கு எதிரில் உள்ள அருள்வடிவான ஸ்ரீராமகிருஷ்ணரை அன்புடன் கவனியுங்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணரைச் சந்தித்த போதே, என் அகத்தில் ஓர் ஆனந்தக் கலசத்தை அவர் வைத்துவிட்டார் என அன்னை ஸ்ரீசாரதாதேவி கூறுவார்.

(உரக்கக் கூறுங்கள்) பகவானே! ஸ்ரீராமகிருஷ்ணரே, வேண்டியதைத் தரும் கல்பதரு நீங்கள்! அன்னை ஸ்ரீசாரதாமணிக்குத் தாங்கள் அளித்த ஆனந்தக் கலசத்திலிருந்து ஒரு துளியாவது எனக்கும் தாருங்கள்.
விஷயானந்தத்திலிருந்து என்னை பஜனானந்தத்திற்குக் கொண்டு செல்லுங்கள்.

தங்களது திருநாமத்தை ஓதுவதையும் தங்களுக்கான கைங்கர்யத்தையும் இறைத்தொண்டினையும் நடத்திடும் பஜனானந்தத்தை அருளுங்கள்.

பிரம்மானந்தத்தை நோக்கி என்னை அழைத்துச் செல்லுங்கள்.

ஓம் தேஜோsஸி தேஜோ மயி தேஹி |
வீர்யமஸி வீர்யம் மயி தேஹி|
பலமஸி பலம் மயி தேஹி |
ஓஜோsஸி ஓஜோ மயி தேஹி |
மன்யுரஸி மன்யும் மயி தேஹி |
ஸஹோஸி ஸஹோ மயி தேஹி ஓம் ||

நீ ஆன்ம சக்தி; எனக்கு ஆன்ம சக்தியைத் தருவாய்.
நீ ஒழுக்க சக்தி; எனக்கு ஒழுக்க சக்தியைத் தருவாய்.
நீ உடல் சக்தி; எனக்கு உடல் சக்தியைத் தருவாய்.
நீ தெய்விகசக்தி; எனக்கு தெய்விக சக்தியை தருவாய்.
நீ தைரியம்; எனக்குத் தைரியம் தருவாய்.
நீ பொறுமையின் உரு; எனக்குப் பொறுமையைத் தருவாய்.

பக்தர்களே, இந்தப் பிரார்த்தனையை எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம் உரைத்திடுங்கள். ஆனந்தம் கை கூடுவதை அனுபவியுங்கள்.

ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s