பாரதியார் விரட்டிய பேய்

பாரதியார் விரட்டிய பேய்!

புதுவையில் தந்தையாருக்கு நண்பர்கள் பலர். அதில் பிராமணர் அல்லாதார்தான் அதிகம்.
சுப்பையாப் பத்தர் என்பவர் தந்தையாரிடம் தேவதா விசுவாசம் வைத்திருந்தவர்.(கடவுளாக மதித்திருந்தார்) விதிவசமாக அவரின் மகனுக்கு நோய் கண்டது.
நோய் என்றால் ஜுரம், வயிற்றுவலி என்றில்லை; மூளைக்கோளாறும் இல்லை. ‘பேய் பிடித்திருக்கிறது’ என்று அவனைப் பார்த்தவர்கள் கூறினார்கள். பத்தர் மிகுந்த கவலையடைந்தார்.

தெரிந்த மந்திர தந்திரங்கள் எல்லாம் செய்து பார்த்தார். வைத்தியத்திற்கும் ஏராளமாகச் செலவிட்டார். நோய் குணமாகவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் தந்தையாரிடம் வந்து யோசனை கேட்டார்.

பத்தரே, பையனை உள்ளே அடைத்து வைக்காதீர். அவனைக் காலை, மாலையில் சமுத்திரக்கரைக்கோ, தோட்டங்களுக்கோ அழைத்துச் செல்ல வேண்டும். அவன் மனது மகிழும்படி நாம் நடக்க வேண்டும். நீர் மந்திரவாதிகளைக் கொண்டு அவனை அடித்து மிரட்டி மிக அதிகம் அவனைத் தொந்தரவு செய்துவிட்டீர்…”

பத்தர் இடைமறித்து, சாமி, நான் சொல்வதற்கெல்லாம் அவன் மாறு செய்கிறான். வீட்டில் யாரிடமும் அவனுக்குப் பயமில்லை. நான் அவனைக் காலையும் மாலையும் இங்கு அழைத்து வருகிறேன். தாங்கள்தான் குணப்படுத்த வேண்டும்” என்றார்.

Bharathiyar

பத்தரே, அப்படியே செய்யும். அவன் இங்கு வருவதனால் ஏதாவது பயன் உண்டாகிறதா என்று பார்க்கலாம்” என்றார் தந்தை.

பத்தர் மகிழ்ச்சியோடு, நாளை பையனைக் கூட்டி வருகிறேன், சாமி” என்று கூறிச் சென்றார்.
பொழுது விடிந்ததும் ஏழு மணிக்கே மகனோடு வந்தார் பத்தர். தந்தையார் தம் இஷ்டதெய்வமாகிய பராசக்தியைத் துதித்து வணங்கித் தமது கையால் சக்தியின் பிரசாதமாகிய குங்குமமும் திருநீறும் இட்டார்.

இவ்விதம் மூன்று நாள் காலையும் மாலையும் எங்கள் வீட்டுக்கு வந்து போனதால் பையனது ஆர்ப்பாட்டம் சற்று அடங்கியது என்றாலும், நல்ல தெளிவு ஏற்பட வில்லை.

பத்தர் அப்பாவிடம் அழாக்குறையாக,சாமி, இப்படியெல்லாம் பாடினால் பேய் போகாது; போ, போ, போ என்று துரத்தினால்தான் போகும்” என்றார்.

பேய் என்று ஓர் உருவம் உமது மகன் மேல் ஏறி உட்கார்ந்திருக்கிறது என்று நினைக்கிறீரா?”

ஆமாம் சாமி, இது பேயில்லாவிட்டால் பின் என்ன?”
பழைய வழக்கங்களில் ஜனங்களுக்கு என்ன நம்பிக்கை பார்த்தாயா? எனது தியானத்திற்கு – பிரார்த்தனைக்கு – போகாத பேய், ஓட்டினால் போய்விடுமா? பத்தரே, உமது இஷ்டப்படியே செய்யலாம். எப்படி ஓட்ட வேண்டும்? மந்திரம் சொல்லியா?”

நீங்கள் என்ன சொல்லியானாலும் ஓட்டுங்கள்; பேய் போய்விடும்.”

தந்தை: உமது திருப்திப்படியே ஓட்டுகிறேன்.

வலிமையற்ற தோளினாய் போ, போ, போ!
மார்பிலே யொடுங்கினாய் போ, போ, போ!
பொலிவிலா முகத்தினாய் போ, போ, போ!
பொறியிழந்த விழியினாய் போ, போ, போ!
ஒலியிழந்த குரலினாய் போ, போ, போ!
ஒளியிழந்த மேனியாய் போ, போ, போ!
கிலிபிடித்த நெஞ்சினாய் போ, போ, போ!
கீழ்மையென்றும் வேண்டுவாய் போ, போ, போ!

இதைக் கேட்டுக் கொண்டிருந்த பத்தர் மகன் கூக்குரலிட்டுக் கொண்டு, போறேன்” என்று கத்திக் கீழே விழுந்தான்.

தந்தையார் ஓடிச் சென்று அவனைத் தூக்கி மடியில் கிடத்தி ஆசுவாசப்படுத்தினார். பின்பு அவனை அன்பான, இதமான, தைரியத்தையும் உற்சாகத்தையும் ஊட்டும்படியான வார்த்தைகள் கூறித் தேற்றினார்.

பத்து நாளில் அவன் முற்றிலும் குணமடைந்தான்.
பத்தரின் மகிழ்ச்சிக்குக் கங்குகரையில்லை. சாமி, பாடற மாட்டைப் பாடிக் கறக்கணும், ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும். பேயைத் தோத்திரம் பாடினால் போகாது, அடிச்சு விரட்டணும்” என்றார் பத்தர்.

ஆமாம் பத்தரே” என அவரைத் தட்டிக் கொடுத்தார் தந்தையார்.

அவர் சென்ற பின்பு, நம்பிக்கை மனிதனுக்குச் சிறந்த ஔஷதம். ஒன்றிலும் தீராத நோய் பத்தருக்கு என்னிடமுள்ள நம்பிக்கையால் தீர்ந்துவிட்டது பார்த்தாயா?

பத்தர் மகனுக்கு நோய் தீர்ந்ததைப்போல் நம் நாட்டுக்கும் நோய் தெளிந்து, தேசம் நன்மையடைய வேண்டும்” என்று கூறிப் பராசக்தியை வணங்கினார்.

மேலே குறிப்பிட்ட பாட்டு, இங்கு கூறிய சந்தர்ப்பத்தில் எழுதியதன்று. பத்தரைச் சமாதானப்படுத்துவதற்காக அந்தச் சமயத்தில் என் தந்தை பாடிய பாட்டு இது.

நன்றி: தங்கம்மாள் பாரதி படைப்புகள், அமுதசுரபி வெளியீடு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s