உயிர்மை – உள்ளுணர்வு கதை

உயிர்மை
– பாமதி மைந்தன் – உள்ளுணர்வு கதை

மக்களுக்குத் தீமை செய்தவர்கள் அதோ அங்கே, அரசின் சாராயத்தைச் செரிப்பதற்காகச் சாய்ந்துக் கிடக்கிறார்கள், வெட்டப்பட்ட மரங்களாக.

அவர்களைப் பயத்துடன் பார்த்துப் பார்த்து, சுவரின் பக்கத்திலிருந்து இரண்டு வயதான குரல்கள் வந்தன.

“நாம் இந்தப் பிள்ளைகளுக்கு அப்படி என்ன துரோகம் செய்துவிட்டோம்? நம்மை ஏன் இவர்கள் வாழவிட மாட்டேன் என்கிறார்கள்?”

“வெயிலிலும் மழையிலிலும் எவ்வளவோ சிரமங்களை நாம் ஏற்றுக்கொண்டு, இவர்களுக்கு நன்மை செய்தாலும், சே, நன்றி கெட்ட ஜனங்கள் இவர்கள்”

“நம்மையும் இவர்கள் விரைவில் தீர்த்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது”

Uyirmai_1

“நாம் பரம்பரை பரம்பரையாக இந்த மக்களுக்காகப் பாடுபட்டு வருகிறோம். இதைப் பற்றி இவர்கள் சிந்திக்கவே மாட்டேன் என்கிறார்களே!”

“ம்…, நான் பல வாரமாக மிகவும் சிரமப்பட்டே மூச்சுவிட்டு வருகிறேன். இவர்களுக்கு மூச்சுவிட உதவி வரும் எனக்கு இவர்கள் தரும் பரிசு-எனக்கு உயிரோடு சமாதி கட்டுவதுதான்.”

“வயதான காலத்தில் இவர்கள் எனக்குப் பேருதவியாக இருப்பார்கள் என்று எண்ணி ஏமாந்துவிட்டேன்…”

இவ்வாறு பேசிப் பேசி அந்தப் புலம்பல்கள் அழுகுரலாயின.

“நம் தலைவிதி அவ்வளவுதான்…, இவர்கள் உயிரோடு சித்ரவதை செய்தோ, அணுவணுவாக இப்படி என்னைக் கொல்வதற்கு முன்போ, நானே என் உயிரை விட்டு விடலாமென இருக்கிறேன்.”

“நண்பா, பயப்படாதே. அவர்கள் செய்த காரியத்தால் என்னாலும் மூச்சுவிட முடியவில்லை. அதற்காக நாமே நம் மூச்சை விட்டுவிடுவது புத்திசாலித்தனமல்ல.”

“பின் என்னை என்னதான் செய்யச் சொல்கிறாய்?” பீதியான கதறலாக அது கேட்டது.

சற்று மௌனம்.
வீசிய வெப்பக் காற்று, சில கணங்களில் தென்றலானது. குப்பைகள் பறந்தன. ஓரிரு மரங்களிலிருந்து இலைகள் விழுந்தன ஆசிகளாக. சட்டென வயதான குரல்களுள் ஒன்று ஆனந்தமாகக் கேட்டது:

“அதோ, நம்மைச் சேர்ந்த ஒருவன் தனது தடைகளைத் தகர்த்தெறிந்துவிட்டு மேல் எழும்பி நிற்கிறான் பார், ஆஹா அருமை”

“ஆ… ஆ… ஆமாம், தோழனே. இந்தச் சின்ன வயதில் இவ்வளவு துணிச்சலா…?”

“துணிச்சலல்ல தோழா, நான் உயிர் உடையவன், நான் ஜடமல்ல என்று இந்த மக்களுக்குப் பறைசாற்றும் உயிர்த் துணிச்சல் அது. உயிரின் அறைகூவல். வரும் தடைகள் பற்றியோ, சஞ்சலங்கள் குறித்தோ ஓயாத கவலைகள் அல்ல, வாழ்க்கை என்ன என்பதைக் காட்டும் அறிகுறி அது”

“ஆம், நான் மறந்திட்ட உயிர்மைப் பாடத்தை உணர்த்திய அந்தச் சிற்றுயிருக்கு ஒரு சலாம்”

யார் இந்த இரண்டு மூத்த குடிமகன்கள்?

சுவரின் ஓரத்திலிருந்து இரண்டு பெரிய மரங்கள் அசைந்தன ஆனந்தமாக. இரண்டும் உயரத்திலிருந்து குனிந்து பார்த்துப் பேசிக் கொண்டன.

Uyirmai_2

அங்கே தரையில்.., புதிதாகப் போடப்பட்டிருந்த ‘சிமெண்ட் ப்ளாக்’ நடைபாதை இடுக்கில் முளைத்து, கம்பீரமாக நின்றது ஒரு தளிர்! அதைப் பார்த்துவிட்டுத்தான் அந்த இரண்டு மரங்களும் உற்சாகமாயின.

ஓரிரு மாதங்களுக்குப் பிறகு அந்த இரண்டு மரங்களின் அடியில், மனிதர்கள் போட்ட சிமெண்ட் தரையில் ஒரு பெரிய விரிசல் வந்தது.

ஓ, அது அந்த மரங்களின் உயிர்’மை’யின் கையெழுத்து!

மனிதர்களின் பேராசைகளை முறியடித்து, வெற்றி கொண்டதற்கான அந்த மரங்களின் ‘ஆட்டோகிராப்’பா அது!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s