பொங்கல்

பொங்கல் பண்டிகைக்கான காரணங்கள் பல.
அவற்றுள் ஒன்று:இந்திரன் தனக்கான பூஜை நிறுத்தப்பட்டதால் கோபங்கொண்டு ஆயர்பாடியையே அழிக்கப் பெருமழை பொழிந்தான்.கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து,அதன் கீழே ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்தான்.

தன் பிழை உணர்ந்து பிரார்த்தித்த இந்திரனிடம்,சங்கராந்திக்கு முதல்நாள் உன் நினைவாக மக்கள் கொண்டாடுவர்.அது உன் பெயரான போகி என வழங்கப்படும் என்றார் கண்ணன்.
fb15JanPongal
வெள்ளம் வடிந்ததும்,ஆயர்கள் தம் வீடுகளில் பழுதுபட்ட இடங்களைச் செம்மண்ணால் பூசி,பழைய பொருள்களை எரித்து,புதியனவற்றைச் சேர்த்தனர்.அதுவே போகிப் பண்டிகை ஆயிற்று.

மறுநாள் முந்தைய துன்பங்களை நீக்கிய கடவுளுக்கு நன்றி கூறும்வண்ணம் சூரிய உதயத்தில் பொங்கலிட்டுப் படைத்தனர்.அடுத்த நாள் தங்களுக்கு உதவிபுரியும் கால்நடைச் செல்வங்களை நீராட்டிக் கொம்புகளில் வண்ணம் தீட்டி,பொங்கலிட்டு அவற்றை வணங்கியது மாட்டுப் பொங்கலானது.

அடுத்த நாள் அவர்கள் எல்லோரின் துன்பங்கள் நீங்கின.தங்களது உறவினர்களைக் கண்டு ஆனந்தம் பெற்றது காணும் பொங்கலாக ஆனது.
மார்கழி மாதம் முழுதும் பாவை நோன்பிருந்த ஆண்டாள் தன் தேகவுணர்வு நீங்கி,தெய்வ உணர்வு பெறுவதற்காக,உடல் உணர்வுக்கு அதிபதியான காமனிடம் இவ்விதம் வேண்டுகிறாள்:

தையொரு திங்களும் தரைவிளக்கித் தன் மண்டல,மிட்டு மாசி முன்னால்
ஐயநுண் மணற் கொண்டு தெரு வணித்து அழகினுக்கலங்கரித் தனங்கதேவா
உய்யவு மாங்கொலோ என்று சொல்லி உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை வேங்கடவற்கென்னை விதிக்கிற்றியே.
தை மாதம் முழுதும் கண்ணன் வரும் தரையை அலங்கரித்து,அழகான மண்டல வடிவில் கோலமிட்டு,மாசி முதல் பட்சத்தில் நுண்ணிய மணலால் அவன் வரும் இடத்தை அலங்கரித்தேன்.மேலும்,மேலான தெய்வ உணர்வு பெற உன்னையும் உன் தம்பி சாமனையும் தொழுதேன். தீப்பொறிகளை வெளிப்படுத்தும் சக்கரத்தை ஏந்தியிருக்கும் வேங்கடபெருமானிடம் என்னைக் கொண்டு சேர்.

மேலும் ஆண்டாள் இவ்வாறு பிரார்த்திக்கிறாள்: வெண்மையான நுண்ணிய மணலைக் கொண்டு, வழியை அலங்கரித்து, கிழக்கு வெளுக்கும் முன்னே நீராடி,முள்,எறும்பு முதலியன இல்லாத விறகுகளை நெருப்பிலிட்டு, பொங்கலைப் படைத்து நோன்பு நோற்கிறேன்.

காமதேவனே! தேன் சிந்தும் மலர் அம்புகளைத் தொடுத்து கடல் போன்ற நிறமுடையவன் திருநாமத்தை உன் அம்பில் எழுதி, கொக்கின் வாயைப் பிளந்த பெருமானிடம் என்னைச் சேர்த்திடு.

இதன் மூலம் வாழ்வின் அகம் மற்றும் புற வளர்ச்சிக்கு தை மாதம் பொங்கல் நோன்பிருப்பது சிறப்பு என்பது தெளிவு.
பொங்கு என்ற வினை அல் விகுதி பெற்று பொங்கல் ஆனது.இந்த வினை/பெயர் அடியாகத் தோன்றியுள்ள பொங்கடி, பொங்கத்தம் என்று சுமார் 47 தமிழ்ச் சொற்கள் வழக்கில் உள்ளன.
பொங்கு என்பதன் பொருள் மிகுதல்.அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் மிகுதியை,வாழ்வின் வளப் பெருக்கத்தைக் காட்டும் அரும் பெரும் நாளாகிறது.

பொங்கலும் அதன் தத்துவமும்
சூரியன் வடக்கு நோக்கி உத்தராயணப் பயணம் தொடங்குவது தை மாத முதல் நாள்.அவ்விதம் புது நிலை புகும் சூரியனுக்கு நன்றி கூறவும்,அவனருளால் கிடைத்த புத்தரிசியைப் பொங்கச் செய்து இஞ்சி,மஞ்சள்,கரும்பு போன்றவற்றுடன் இணைத்து கதிரவனுக்குப் படைப்பதால் இந்த நாள் மகிமை பெற்று விளங்குகிறது.
பொங்கல் பானையின் கழுத்தில் மஞ்சள், இஞ்சிக் கொத்து, கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றைக் கட்டுவர்.

மஞ்சள் மங்களப் பொருள்.சகல பாக்கியங்களையும் தரும்.இஞ்சி கிருமி நாசினி,மருத்துவக் குணங்கள் கொண்டது.வாழை எளிமையைக் குறிக்கிறது.எந்தப் பொருளிலும் நிறை குறையுண்டு.குறையைத் தள்ளி நிறையை ஏற்கக் கற்க வேண்டும் என்பதைக் கரும்பு உணர்த்தும்.
இவ்விதம் கதிரவனால் கிடைத்த பொருள்களை மீண்டும் அவனுக்கே படைத்து நன்றி தெரிவிக்கும் நன்னாள் பொங்கல் திருநாள்.

உழவுக்கு ஏற்றம் தரும் கால்நடைச் செல்வங்களை வணங்கி நன்றி தெரிவிக்கும் நாளாக மாட்டுப் பொங்கல் அமைந்துள்ளது.
காணும் பொங்கல் அன்று மூத்தோர்களைச் சந்தித்து ஆசி பெறுவர்.உற்றார் உறவினர்களின் வாழ்க்கை வளத்தைக் கண்டு அன்றைய தினம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வர்.

பொங்கல் விழா மேலும் ஒரு தத்துவத்தையும் கூறுகிறது.
அடியார் நிமலத் திரு அகத்துள் அன்பு
பொறுமை அவா அறுத்தல்
அடுப்பு ஆங்கு அமைத்து,மலக்
காட்டத்ததிக ஞானக்கனல் மூட்டி
மடி யாதிருந்த உயிர்க் கலசம் வழிய
அருள் பேர் உலை வார்த்து
மாறாப் பெருமை சிவானந்த
மதுரச் சோறு தினம் பொங்கி.

அடியார்களது தூய்மையான திரு உள்ளத்தில் இறை அன்பு, பொறுமை, ஆசையற்ற நிலை என்ற மூன்று நிலைகளைக் கொண்ட அடுப்பு அமைத்து,ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை அழிக்கும் ஞானத்தீயை மூட்டி,இந்த உடலில் மடியாதிருக்கும் உயிர்க் கலசம் பொங்கி வழியுமாறு அருளாகிய உலையினை வார்த்து ஒருபோதும் மாறாத,பெருமையுடைய சிவானந்தம் என்று போற்றப்படும் ஆனந்த மதுரச் சோறு பொங்கி தினமும் உண்போம்.
-இது சிதம்பரம் சுவாமிகள் அருளிய பாடல்.

வாழ்விற்கு ஏற்றம் அளிக்கும் எல்லா சக்திகளுக்கும் நன்றி தெரிவித்துப் போற்றும் நாளாக பொங்கல் திகழ்கின்றது. அத்துடன் ஆன்மிகத் தத்துவமும், நடைமுறை வாழ்க்கைத் தத்துவமும் பொங்கல் விழாவில் இழையோடுகின்றன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s