சத்சங்கங்களின் அவசியம்

சேலத்தில் நடைபெற்ற ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்களின் மாநாட்டில் ஸ்ரீமத் கௌதமானந்தர் ஆற்றிய உரையின் சுருக்கம்.

Satsang

ஸ்ரீராமகிருஷ்ணரின் உள்ளம் எப்படிப் பரந்து விரிந்து இருந்ததோ, அது போல் இந்தப் பந்தலும் பலர் அமரும் வகையில் பரந்து விரிந்து வாருங்கள், வாருங்கள் என்று அனைவரையும் அழைப்பது போல் உள்ளது.

சத்சங்கம்: ஒருமுறை குருதேவரைச் சந்திக்க இரவு 9 மணிக்கு பலருடன் கேசவ சந்திரசேன் வந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் இரவு 10 மணி வரை அறையில் அமர்ந்து அவருக்கு அறிவுரை அருளினார். பின் பஞ்சவடிக்கு அழைத்துச் சென்று இரவு 11 மணி வரை பேசிக்கொண்டிருந்தார்.

பக்தர்கள் ஒன்று சேர்வது ஸ்ரீராமகிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த விஷயம். ‘நீங்கள் மட்டும் தனியாக முன்னேற முயலாமல் ‘உங்களுடன் பலரையும் சேர்த்துக் கொண்டு முன்னேறுங்கள்’ என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

ஸ்ரீராமகிருஷ்ணர், ‘இல்லறத்தார்களின் பக்தி துறவிகளின் பக்தியைவிடச் சிறந்தது. ஏனெனில் துறவிகள் எல்லாவற்றையும் துறந்துவிட்டு இறைநாமத்தை ஓதுகிறார்கள். ஆனால் இல்லறத்தாரோ, தலையில் பெரிய பளுவை வைத்துக் கொண்டு ஊர்வலத்தைப் பார்ப்பவரைப் போல, இல்லறச் சுமைகளைத் தாங்கியவாறே இறைவனையும் நினைக்கிறார். இதற்கான அதிக ஆற்றல் அவருக்கு இருக்க வேண்டும்’ என்கிறார்.

இறைவனின் சாந்நித்தியம் : ஸ்ரீராமகிருஷ்ணர் பக்தர்களை அழைத்து சத்சங்கத்திற்கு ஏற்பாடு செய்யச் சொல்வார். அங்கு சென்று மணிக்கணக்கில் உபதேசங்கள், பஜனை முதலியவற்றை நிகழ்த்துவார். அடிக்கடி சமாதி நிலை அடைவார். அவர் இவற்றைப் பக்தர்களுக்கு அனுபவமாக அளித்தார்.

இவ்வாறு பக்தர்கள் கலந்து கொண்டு ஓர் இயக்கம் உருவாக வேண்டும் என்பது ஸ்ரீராமகிருஷ்ணரின் விருப்பம். ஒரு பக்தர் தான் பார்த்த ஒரு கூட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டபோது குருதேவர் ‘அது எந்தக் கூட்டமாக இருந்தாலும், அங்குள்ள ஆயிரமாயிரம் பேர் ஒரே சிந்தனை உள்ளவர்களாக விளங்குவது என்பது பெரிய விஷயம். நான் அங்கே இருந்தால் இறைவனை எண்ணி சமாதி நிலைக்குச் சென்றிருப்பேன்’ என்றார்.

சத்சங்கங்களின் தேவை: தற்காலத்தில் பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் இல்லை. பெற்றோரும்  கணிதம், அறிவியல் போன்றவற்றையே கற்றுத் தாருங்கள் என்கிறார்கள். இந்த முறையில்தான் நம் சமுதாயம் செல்கிறது. இந்நிலையில் இது போன்ற சத்சங்கங்கள் மிகவும் அவசியமாகின்றன.

இது போன்ற மாநாடுகள் புனித நதிகள் போன்றவை. நாம் அவற்றில் நீந்தும் சிறுவர்கள் போல் நம்மை அறியாமல், அதிக முயற்சியின்றியே ஆன்மிக முன்னேற்றம் பெறலாம்; பக்தி எனும் நதியில் நாம் மிதக்கலாம். மூன்று நாட்கள் வெளி உலகை மறந்து, பத்திரிகைச் செய்திகளை மறந்து பக்தி நதியில் நாம் மூழ்கித் திளைக்கலாம்.

ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி நான்கு நாட்கள் சிந்தனை செய்கிறோம் என்ற எண்ணமே பக்தர்களுக்கு ஆன்மிகத்தில் முன்னேற உற்சாகமும் நம்பிக்கையும் அளிக்கிறது.

இத்தகைய ஒரு மாநாட்டில் பங்கேற்ற ஒரு பக்தை ‘நாம் கைலாயம், வைகுண்டம் என்று கேட்டுள்ளோம்; இந்த மாநாட்டைப் பார்த்த பிறகே அவை எப்படி இருக்கும் என்று புரிந்தது’ என்றார். இதுவே பக்தர்களின் அனுபவத்திற்குச் சான்று.

சேவை நெறி: குருதேவர் பக்தர்களிடம் ‘நாமஜபமும், கீர்த்தனமும் பண்ணுங்கள்; சத்சங்கமும் ஜீவசேவையும் செய்யுங்கள்’ என்பார்.

ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு நாள் பக்தர்களிடையே வைணவ தர்மத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இறைபக்தி, ஜீவ சேவை, உயிர்களிடம் தயை என்ற கருத்துக்களைக் கூறினார்.

ஒவ்வொரு மனிதனிலும் இறைவனையே பார்த்து அவனுக்குச் சேவை செய்ய வேண்டும். இதன் மூலமாகவே ஒரு புதிய நெறி உண்டாகிறது. இன்றைய உலகிற்கு, தற்போதைய மனிதனுக்குத் தேவையானது சுவாமிஜி கூறும் பக்தியும் சேவையும் இணைந்த நடைமுறை வேதாந்தம்தான். சுவாமி விவேகானந்தர் இந்தச் செய்தியை எல்லோருக்கும் கொண்டு சேர்த்தார்.

உலகம் ஏதோ ஒரு விதமாகச் சென்று கொண்டிருக்க, நாம் மட்டும் ஆன்மிகம், சேவை என்று சென்று கொண்டிருக்கிறோமே? இது சரியா என நமக்கே ஒரு சந்தேகம் ஏற்படலாம். நல்லோர் இணக்கத்தில் ஈடுபட்டால் உங்களுக்கு இந்தச் சந்தேகமே எழாது.

கொல்கத்தாவில் உள்ள காங்குர்காச்சி ஆசிரமத்தில் நான் தங்கியிருந்த சமயம் மூத்த சுவாமிகள் ஒருவர் ஆசிரமத்தின் எதிரே இருந்த தொழிற்சாலையைக் காட்டி, என்னிடம் ‘இதைப் பார்க்கும்போது உனக்கு என்ன தோன்றுகிறது?’ என்று கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

கொல்கத்தாவாசிகளுக்கு தக்ஷிணேஸ்வரத்திற்கோ, பேலூர் மடத்திற்கோ சென்று ஆன்மிக செய்திகளைக் கேட்க நேரம் கிடையாதே. அதனால் தொழிற்சாலைகள் சூழ்ந்துள்ள பரபரப்பான இந்த நகரத்தின் நடுவிலேயே துறவிகள் தங்கி, மக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று குருதேவர் நம்மை இங்கே கொண்டு வந்து வைத்துள்ளார். என்னே அவரது கருணை!” என்றார்.

சகோதர உணர்வு: அருணாசலப் பிரதேசத்தில் நான் இருந்த சமயம் டில்லியிலிருந்து ஒரு பெரிய ராணுவ அதிகாரி அங்கு வந்தார். அங்கு நம் மிஷனின் பள்ளியைப் பார்வையிட விரும்பினார். பள்ளியின் பிரார்த்தனையில் அவர் பங்கேற்றபின் மாணவர்களிடம் பேசினார்.

‘எனது அன்புக்குரிய தம்பிகளே..’ என்று தமது உரையைத் தொடங்கினார். அந்த மாணவர்கள் பின் தங்கியவர்கள் என்று கருதப்படும் மலைவாசிகள். இவரோ ராணுவ அதிகாரி. தங்களைத் ‘தம்பிகளே’ என அழைக்கிறாரே என்று  அவர்களுக்கு வியப்பு.

‘நான் உங்களைத் தம்பிகளே என அழைத்தது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அது உண்மை. நானும் ராமகிருஷ்ண மடத்துப் பள்ளியில் படித்தவன் என்பதால்தான் அவ்வாறு கூறினேன்’ என்று அவர் கூறினார்.

உடனே மாணவர்கள் கை தட்டித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது போன்ற சகோதர உணர்வு எங்கும் பரவ வேண்டும்.

சத்சங்கத்தில் ஈடுபடவும் இறையருள் வேண்டும்

அப்போது நான் சிரபுஞ்சியில் (மேகாலயா) இருந்தேன். அங்கு ஒரு பெரிய ராணுவ அதிகாரி வந்தார். அவர் ஒரு பக்தர். அவர் என்னிடம், ‘சுவாமி, நான் ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கி சத்சங்கத்தில் இருக்க வேண்டும்’ என்றார். நானும் சம்மதித்தேன். அவர் தனக்குக் கீழ் உள்ளவர்களிடம், ‘மிக அவசரமாக ஏதாவது இருந்தால் மட்டுமே என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்’ என்று கூறியிருந்தார்.

முதல் நாள் காலை, மதிய உணவு வரை அவர் இருந்தார். அடுத்த நாள், ‘சுவாமி, சத்சங்கத்தில் என்னை இருக்கவிடாமல் போன் வந்து கொண்டேயிருக்கிறது. மேலதிகாரிகள் அழைப்புக்கள் என்னை இங்கு இருக்கவிடவில்லை. நான் வருகிறேன்’ என்று கூறிப் புறப்பட்டுவிட்டார். பாவம், அவருக்கு சத்சங்கம் வாய்க்கவில்லை.

ஆனால் நமக்கோ அத்தகைய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஸ்ரீராமகிருஷ்ணர் ‘உலகியல் நோய்க்கு ஆன்மிகமே மருந்து’ என்பார்.

இத்தகைய மாநாடுகள் அந்தச் சுவையை உண்டாக்கும். இதை உணர்ந்து இந்த ஆன்மிகச் சூழலை வீட்டிலும், சமுதாயத்திலும் கொண்டுவர முயற்சிப்போமாக.

One response to “சத்சங்கங்களின் அவசியம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s