ஸ்ரீராமகிருஷ்ண சாந்நித்தியம்

ஸ்ரீராமகிருஷ்ண சாந்நித்தியம்

‘உணர்வின் சுருக்கெழுத்தே இசை’ என்று கூறிய கர்நாடக இசைப் பேரரசியான எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மையார் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை பெங்களூர் சென்றிருந்தார்.

ஸ்ரீராமகிருஷ்ண பக்தரான ராமச்சந்திரன் என்பவரின் வீட்டிற்கு அன்று எம்.எஸ். அழைக்கப்பட்டிருந்தார். பூஜையறைக்குச் சென்ற எம்.எஸ். மெய்மறந்து பாட ஆரம்பித்தார். நீண்ட நேரம் பாடிய பின் அவர், இங்கு ஒரு பேரமைதியை உணர்ந்தேன். வேறு நினைவே இல்லை…” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.

அடுத்த ஆண்டு மீண்டும் எம்.எஸ். அதே அன்பரின் வீட்டிற்குச் சென்றார். பூஜையறையில் ஓரிரு பாடல்கள் மட்டுமே பாடிவிட்டு எழுந்துவிட்டார்.

இந்த வருடம் நீண்ட நேரம் பாடவில்லையே என எல்லோருக்கும் வியப்பு. அவரையே கேட்டனர். இம்முறை இங்கு ஏதோ ஒன்று குறைகிறது” என்றார். எம்.எஸ்.அம்மையாருக்கு அந்தக்‘குறை’ என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

ராமச்சந்திரனின் பெற்றோர் சுவாமி பிரம்மானந்தரிடம் தீட்சை பெற்றவர்கள். சுவாமிகளிடமிருந்து ஸ்ரீராமகிருஷ்ணருடைய திருமேனியின் சில புனிதப் பொருள்களைப் (relics) பெற்று அவற்றைப் பூஜையறையில் வைத்திருந்தனர்.
சென்ற ஆண்டு எம்.எஸ். வந்து சென்ற பின் அப்புனிதப் பொருள்களை ஸ்ரீராமகிருஷ்ண மடங்களுக்கு வழங்கிவிட்டனர். இப்போது அப்புனிதப் பொருள்கள் அங்கில்லை என்பதே எம்.எஸ் அம்மா உணர்ந்த அந்தக் ‘குறை’!

அதுதான் குருதேவரின் Divine presence- சாந்நித்தியம்-தெய்விக இருப்பு ஆகும்.

ஒரு முறை காசிப்பூரில் ஸ்ரீராமகிருஷ்ணர் நோயுற்றுப் படுத்த படுக்கையாக இருந்தார். அப்போது நோயின் காரணமாக ஸ்ரீராமகிருஷ்ணரால் அதிகம் பேச முடியாத, ஏன், நடக்கவும் முடியாத நிலை.

சுவாமி நிரஞ்ஜனானந்தர் பேரீச்சம் பழம் பறிக்கத் தோட்டத்திற்குச் சென்றார்.
அப்போது ஸ்ரீராமகிருஷ்ணர் திடீரென்று அறையை விட்டு இறங்கித் தோட்டத்திற்கு விரைந்தார். அதனைக் கண்ட அன்னை ஸ்ரீசாரதா தேவி ‘திரும்பிக்கூடப் படுக்க முடியாத இவர் எங்கு ஓடுகிறார்?’ என்று திகைத்தார்.
ஒரு சில நிமிடங்களில் திரும்பி வந்து அவர் படுக்கையில் படுப்பதையும் அன்னை பார்த்தார்.

குருதேவரிடம் அன்னை இது பற்றிக் கேட்டபோது, ‘ஓ அதுவா! அங்கு ஒரு கருநாகம் இருந்தது. நிரஞ்ஜன் அங்கு போகுமுன் அந்தப் பாம்பிடம், ‘இங்கிருந்து போய்விடு’ என்று கூறிவிட்டு வந்தேன்’ என்றார்.
பலவீனமான நிலையிலும் சீடர்களைக் காப்பதில் அக்காருண்யசீலருக்குத்தான் என்ன ஒரு பரிவு!

மகாசமாதிக்குப் பிறகும்… : ஸ்ரீராமகிருஷ்ணரின் மகாசமாதிக்குப் பின், சுவாமி பிரம்மானந்தரிடம் அவரது சீடர் ஒருவர், குருதேவர் இன்றும் இருக்கிறாரா, என்ன?” என்று கேட்டார்.
உடனே சுவாமிகள் சற்றுக் கடுமையாக, குருதேவர் மட்டும் இல்லையேல் நாங்கள் எல்லாம் இங்கு ஏன் உள்ளோம்?” என்று கேட்டார்.

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் வேதாந்தப் பிரச்சாரம் செய்தபோது பல கிறிஸ்தவர்கள் அவரது பேச்சாலும் தூய வாழ்க்கையாலும் ஈர்க்கப்பட்டார்கள்.
அதனால் பொறாமை கொண்ட கிறிஸ்தவ மிஷனரிகளைச் சேர்ந்த சிலர் அவரைக் கொல்ல நினைத்தனர். விருந்து ஒன்றில் அவர்கள் அளித்த பழச்சாற்றை சுவாமிஜி குடிக்க முயன்றபோது, அங்கு குருதேவர் தோன்றி, நரேன், குடிக்காதே. இதில் விஷம் உள்ளது” என்று எச்சரித்து சுவாமிஜியின் உயிரைக் காப்பாற்றினார்.

குருதேவரின் உபதேசங்களை உயிரைத் தந்து உலகிற்கு உணர்த்துபவர்களுக்கு அவரது சாந்நித்தியம் கிட்டுகிறது!

சுவாமி திரிகுணாதீதானந்தரைக் கரையேற்றுதல்: கைலாயத்தில் மானசரோவர் பகுதியில் ஒரு நாள் இரவு. சீறிப் பாயும் ஒரு காட்டாற்றை சுவாமி திரிகுணாதீதானந்தர் கடக்க வேண்டியிருந்தது. நிலவொளியில் ஆங்காங்கிருந்த பாறைகளின் மீது தாவித் தாவி அவர் அந்த அபாயகரமான ஆற்றைக் கடந்து கொண்டிருந்தார்.
திடீரென்று சந்திரனை மேகம் மறைத்தது. கும்மிருட்டு. ஓர் அடி தவறினாலும் ஆற்று வெள்ளம் அவரை அடித்துச் சென்றுவிடும். சுவாமிகள் ஸ்ரீராமகிருஷ்ண நாமத்தை ஓதினார்.

அப்போது ‘என் பின்னே வா’ என்று ஒரு குரல் கேட்டது. குரல் வழிகாட்டிய திசையில் சுவாமிகள் நடந்தார். அவரை அறியாமலேயே அவரது கால்கள் அக்கரையைத் தொட்டன.
ஸ்ரீராமகிருஷ்ணரின் நாமத்தை ஓதியதுமே அவரால் குருதேவரின் சாந்நித்தியத்தை உணர முடிந்தது!

சேவையில் சாந்நித்தியம்: இது ஸ்ரீராமகிருஷ்ணரின் மகாசமாதிக்குப் பின் நடந்த சம்பவம்! பேலூர் மடத்து வளாகத்தைச் சுத்தம் செய்வது சுவாமி அபூர்வானந்தரின் பொறுப்பு. அன்று ஒரு நாள் வேறு ஏதோ வேலையால் அவர் பெருக்க முடியவில்லை.
அன்று மாலை சுவாமி சிவானந்தர் அவரை அழைத்து, ‘இன்று நீ ஏன் பெருக்கவில்லை? குருதேவர் இன்று குப்பையின் மேல் கால் வைக்காமல் காலை எட்டி வைத்துச் சென்றார். இனி குருதேவரின் சேவையில் கவனமாக இரு’ என்றார்.

குருதேவரின் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அவர் என்றும் சமீபத்திலேயே உள்ளார்.

தியானித்தால் சாந்நித்தியம் கூடும்!: ஸ்ரீராமகிருஷ்ணரின் ‘அமுதமொழிகள்’ என்ற ஆன்மிகப் பொக்கிஷத்தை எழுதியவர் ‘ம’. அவர் குருதேவரைத் தரிசிக்கச் சென்றபோதெல்லாம் அங்கு வந்திருந்தவர்கள் மற்றும் அங்கு நடந்தவை பற்றியும் குறித்து வைத்துக்கொண்டார்.

சில காலத்திற்குப் பிறகு அந்தக் குறிப்புகளின் உதவியுடன் தியானித்தார். அப்போது அவரது மனக்கண்முன் ஸ்ரீராமகிருஷ்ணரின் சாந்நித்தியம் தோன்றும்; முன்பு நடந்தவை எல்லாம் விரியும். அதை அப்படியே எழுதி வைப்பார்.
அதுதான் ‘அமுதமொழிகள்’ ஆனது.
ஆக, பக்தியுடன் தியானிப்பவர்களுக்குத் தெரிவதுதான் ஸ்ரீராமகிருஷ்ண சாந்நித்தியம்.

குருதேவரை மேற்கூறிய மகான்கள் நேரில் தரிசித்தவர்கள். அதனால் அவரது சாந்நித்தியம் அவர்களுக்குச் சாத்தியமானது எனலாம்.

ஆனால் குருதேவரைத் தரிசிக்காதவர்களும் அவரது சாந்நித்தியத்தைப் பெற்றுள்ளார்களே!

குருதேவர் தலையசைத்தார்: பெங்களூர் ராமகிருஷ்ண ஆசிரமத்தில் சுவாமி யதீஸ்வரானந்தர் தினமும் காலையில் கோவிலில் குருதேவரின் திருவுருவப் படத்தைத் தரிசிக்கச் செல்வார்.

அன்று வணங்கும்போது குருதேவர் முன்பு அவர் ஏதோ முணுமுணுத்தார். உடன் வந்த சீடர் அடங்கா ஆவலுடன், சுவாமிகளே, நீங்கள் குருதேவரின் படத்தின் முன் யாரிடம் பேசினீர்கள்…?” என்று கேட்டார்.
முதலில் கூற மறுத்த சுவாமிகள் பின், இன்று எனக்குத் தாங்க முடியாத முதுகுவலி. அதனால் குருதேவரிடம், ‘குருமகராஜ், என்னை மன்னியுங்கள். உங்களை என்னால் இன்று விழுந்து வணங்க முடியவில்லை’ என்றேன். அதற்கு குருதேவர் ‘பரவாயில்லை’ என தலையசைத்தார். எனக்கு மிகவும் ஆனந்தமாகிவிட்டது” என்றார்.

நம்மாலும் சாந்நித்தியத்தை உணர முடியுமா?: ஸ்ரீராமகிருஷ்ணரின் சாந்நித்தியம் அவர் உயிருடன் வாழ்ந்த காலத்தில் மட்டும்தான் இருந்ததா? அதை இன்றும் நம்மால் உணர முடியுமா?

இறைவனின் தெய்விக இருப்பை உணராததே நம் எல்லாப் பிரச்னைகளின் ஊற்றுக்கண் ஆகும். இருப்பு இருந்தால் சஞ்சலம் இல்லை.
இறைவனின் சாந்நித்தியத்தை நம்முள் நிலைநிறுத்த என்ன பயிற்சி மேற்கொள்வது? சாந்நித்தியத்தை உணர எவற்றை அப்பியாசம் செய்வது? நான்கு முக்கிய விஷயங்களைக் கவனத்தில் கொண்டால் இறைசாந்நித்தியத்தை உணரலாம்.

1. வேண்டாததை நீக்கு:
மைக்கேல் ஏஞ்சலோ ஒரு சிறந்த சிற்பி. அவரது சிற்பங்களில் உயிரோட்டம் மிளிரும்.
ஒருமுறை அவர் பளிங்குக்கல் விற்கும் கடை வாசலில், அழுக்கான கல் ஒன்று கிடப்பதைப் பார்த்தார். மைக்கேல் அதை வாங்க விரும்பினார்.

‘பல காலமாக விற்காத இக்கல்லையா நீங்கள் வாங்க வேண்டும்?’ என்று பரிதாபமாகக் கேட்டார் கடைக்காரர். ‘ஆம்! இதுதான் வேண்டும்’ என்று கூறி அதே கல்லை வாங்கிச் சென்றார் சிற்பி.
சில மாதங்கள் கழித்து மைக்கேல் ஏஞ்சலோ கடைக்காரரை அழைத்துச் சென்று தாம் செதுக்கிய ஒரு சிலையைக் காட்டினார்.

Gurudevar_Sanithyam

அது அன்னை மேரியின் மடியில் இருக்கும் ஏசுவின் சிலை. அற்புதமான அந்தப் படைப்பைக் கண்டு கடைக்காரர் வியந்தார். எங்கு கிடைத்தது இந்த அருமையான கல்?” என்றார் கடைக்காரர்.
உங்கள் கடையில்தான்” என்றார் மைக்கேல். கடைக்காரர் விழித்தார். மைக்கேல் கூறினார்:
நான் இந்தக் கல்லைப் பார்த்தபோது, மேரியும் ஏசுநாதரும் என்னிடம், ‘நாங்கள் இங்கு அடைபட்டுக் கிடக்கிறோம். எங்களை வெளியில் கொண்டு வா?’ என்று கேட்டார்கள். நான் கல்லின் வேண்டாத பகுதிகளை நீக்கினேன். அவர்கள் இருவரும் வெளியே வந்துதித்தார்கள்” என்றார்.

ஸ்ரீராமகிருஷ்ணரின் சாந்நித்தியம் நமக்கு ஏன் கிடைக்கவில்லை? நம் அகத்தில் அஹங்காரம் எனும் வேண்டாத அழுக்கு இருப்பதால் ஆண்டவனின் சாந்நித்தியம் நமக்குக் கிடைக்கவில்லை. ஆண்டவனை நோக்கிச் செல்லச் செல்ல அஹங்காரம் குறைந்து, அவன் சாந்நித்தியம் நிறையும்.

2.திட நம்பிக்கை கொள்

உத்தவர் ஸ்ரீகிருஷ்ணருக்கு மந்திரியும் தோழரும் ஆவார். கிருஷ்ணரைத் தம் உயிராகவே உணர்ந்தவர். சிறுவனாக இருந்தபோது அவரது தாய் கிருஷ்ணரைப் பற்றி அவருக்குச் சொல்வாராம்.

உத்தவர் தாயிடம், ‘அம்மா, நான் இப்போது குளிக்கிறேன்; கிருஷ்ணனும் இப்போது குளித்துக் கொண்டு இருப்பானா? நான் சாப்பிடுகிறேன்; கிருஷ்ணனும் இப்போது சாப்பிடுவான் அல்லவா?’ என்று கேட்பாராம்.

இவ்வாறு உத்தவர் தான் செய்யும் ஒவ்வொரு செயலையும் கிருஷ்ணருடன் ஈடுபடுத்தியே செய்தார். அதன் மூலம் அவர் மனோரீதியாக கிருஷ்ண தியானத்திலேயே திளைத்தார்.

‘கடவுள் என்னை எப்போதும் காக்கிறார்; அவரது கண்காணிப்பிலே நான் உள்ளேன்’ என்ற திட நம்பிக்கையைப் பக்தன் கொண்டிருந்தால் இறைவனின் சாந்நித்தியத்தை உணர முடியும்.

3.ஸ்ரீராமகிருஷ்ணரின் முன்பு அமர்ந்துகொள்!
‘ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்’ என்ற நூலில் குருதேவர் எப்படி வாழ்ந்தார், யாரைச் சந்தித்தார், என்னென்ன பேசினார், பக்தர்களுக்கு எவ்வாறு ஆறுதல் தந்தார் போன்ற விவரங்கள் விரிவாக உள்ளன.
அந்தப் புனித நூலை எப்படிப் படிக்க வேண்டும் என்று சுவாமி வீரேஸ்வரானந்தர் ஒரு வழி கூறுகிறார்:
‘அமுதமொழிகளில் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் பல பக்தர்கள் வந்து அமர்ந்தனர் என அவர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்பெயர்களுடன் உன் பெயரையும் சேர்த்துக்கொண்டு தொடர்ந்து படி.
‘சில நாட்களிலேயே, அப்படிப் படிக்கும்போது ஸ்ரீராமகிருஷ்ணருடன் நீ எப்போதுமே இருப்பது போன்ற பாவனை இயல்பாகிவிடும். அவர் கூறும் அறிவுரையில் உனக்கு வேண்டியதும் கிடைக்கும்’.
சுவாமி வீரேஸ்வரானந்தர் கூறிய இந்தப் பயிற்சியைச் செய்து இன்றும் ஸ்ரீராமகிருஷ்ணருடன் தெய்விக உறவு கொண்டுள்ளவர்கள் ஏராளம்.

4. ஸ்ரீராமகிருஷ்ணருடன் பேச முடியும்; அவர் பேசிக் கேட்கவும் முடியும்:
20 வருடத்திற்குமுன், எலினார் ஸ்டார்க் என்ற பக்தையும் அவரது கணவரும் அமெரிக்காவிலிருந்து தக்ஷிணேஸ்வரம் வந்தனர்.
இருவரும் ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகளைப் பலமுறை படித்தவர்கள். அதில் வரும் ஒவ்வொரு சம்பவத்தையும், கற்பனையில் கண்டு அதிலேயே லயித்திருந்தவர்கள்.
நிறைய எதிர்பார்ப்புகளுடன் தக்ஷிணேஸ்வரம் வந்தால்…, அவர்கள் மனக்கண்ணில் கண்டுகளித்த தக்ஷிணேஸ்வரம் இது அல்லவே!
சே, என்ன இது! உடையைப் பிடித்திழுக்கும் பிச்சைக்காரன். கோவிலிலோ அழுக்கும், துர்நாற்றமும். புனித கங்கையிலோ மக்களின் வெட்டிப்பேச்சு. தேவியின் சந்நிதியிலோ, ‘காசு கொண்டா’ என்று கேட்கும் பண்டா (பூஜாரி)!

அங்கு கண்ட ஒவ்வொன்றும் எலினாரின் எதிர்பார்ப்பை வேரோடு பிடுங்கி எறிந்தது. ‘ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்ந்த புனித இடத்திலா இப்படி!!’ என நினைத்துக் கண்ணீர் மல்க, நேராக ஸ்ரீராமகிருஷ்ணரின் அறைக்குச் சென்று கதறி அழுதார்.
நீண்ட நேர அழுகைக்குப் பின், அவரது அகத்தில் ஏதோ மலர்ந்தது. ஸ்ரீராமகிருஷ்ணரின் அன்பான குரல் அவருக்கு மட்டும் ஒலித்தது:
‘ஏனம்மா அழுகிறாய்?’

‘பகவானே, உங்களைத் தேடித்தானே இங்கு வந்தேன். ஆனால், இங்கு எல்லாமே மோசமாக இருக்கிறதே! நீங்கள் வாழ்ந்த தலத்தில் இப்படியா…?’ என்றார் கண்ணீருடன்.

அதற்கு குருதேவர், ‘நான் இங்கு இல்லையா என்ன? புறத்தில் நீ காண்பதைப் பொருட்படுத்தாதே. என்னைக் காண, அகத்தில் தேடு; தென்படுவேன்’ என்று கூறியருளி எலினாருக்குத் தமது சாந்நித்தியத்தைக் காட்டினார்.
எலினாரின் அகத்தில் பேரமைதி வந்துதித்தது.

இந்த அனுபவத்திற்குப் பின், எலினாரின் உள்ளத்தில் நிலவியதெல்லாம் அன்பு, அமைதி, ஆனந்தம் மட்டுமே. இந்த மூன்றும்தானே ஸ்ரீராமகிருஷ்ண சாந்நித்தியம் எனப்படுவது!

அந்த சாந்நித்தியத்தில் திளைக்கும் ஒவ்வொரு
வரும் ‘குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…’ என்று ஆனந்தமாக இருப்பார்கள்.

One response to “ஸ்ரீராமகிருஷ்ண சாந்நித்தியம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s