இறைவா, நீ என் கண்ணிலேயே உள்ளாய்!

இறைவா, நீ என் கண்ணிலேயே உள்ளாய்!

ஓ கடவுளே! என் கண்ணால் உன்னைக் காண முடியாவிட்டாலும் நீ என் கண்ணிலேயே உள்ளாய்.
நீ என் இதயத்துள்ளே ஒளிந்திருந்தும் என் இதயத்துக்கு உன்னைத் தெரியவில்லையே, என்ன விந்தை!” என்று நவீன் பாடினான்.

இறைவா! ஆபத்திலிருந்தும் துயரத்திலிருந்தும் உன்னைத் தவிர வேறு யார் எங்களைக் காப்பாற்றுவார்? இந்த இருண்ட உலகில் எங்களுக்கு உதவுபவர் உன்னையன்றி வேறு யார்…?” என்று நான் உருகிப் பாடினேன்.

அப்போது, ‘இந்த இருண்ட உலகில் உதவுபவர் வேறு யார்? ஆஹா! நீ பாடியது மிகவும் சரி. மீண்டும் ஒருமுறை அந்தப் பாட்டைப் பாடு’ என்று கூறியபடி பஞ்சவடியிலிருந்து ஒருவர் விரைந்து வந்தார்.

இறைநாமம் கேட்டதும் அப்படி ஓடி வந்து எங்களுக்குக் காட்சியளித்தவர் யார் தெரியுமா?
‘தேவரும் மூவரும் பணியக் காத்திருக்கும் பரம்பொருள் எவரோ அவரே நீங்கள்’ என கிரீஷ்பாபுவால் யார் துதிக்கப்பட்டாரோ, அவர். அந்த மகான் இளம் சிறுவர்களாகிய எங்கள் முன், கேட்காமல் கிடைத்த பொக்கிஷமாய் அன்புடன் அருகில் வந்து பார்த்து எங்களைப் பாராட்டினார்.

Iraiva

ஆனால் நாங்கள் இருவரும் பெற்ற பேற்றைப் பற்றிச் சிறிதும் உணரவில்லை.
அப்போது எனக்கு ஆறு வயது. நவீனுக்கும் அதே வயதுதான். கணக்கில் மிகுந்த பிணக்கு இருந்ததால் அதை ஒரேயடியாகக் கை கழுவிவிட்டு ஓவியப்பள்ளியில் சேர்ந்திருந்தேன். நாங்கள் இருவரும் ஒரு நாள் வகுப்புக்கு மட்டம் போட்டுவிட்டு தக்ஷிணேஸ்வரக் கோயிலுக்கு வந்தோம்.

அப்போது கோயில் மூடியிருந்தது. திறக்கும்வரை பொழுதுபோக்காகப் பாடினோம். அன்று தான் அம்மகானின் தரிசனம் எங்களுக்குக் கிட்டியது.

அவரது மகிமையை உணராமல் வெளித்தோற்றத்தைக் கண்டு, ‘பாவம் ஏதோ பைத்தியம். கோயில் பிரசாதம் சாப்பிட வந்துள்ளார்’ என்று அறியாத சிறுவர்களாகிய நாங்கள் நினைத்தோம்.

நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று பரிவுடன் கேட்டார் அவர். கூறினோம்.
உங்கள் வீடு எங்கே உள்ளது?” என்று நாங்கள் கேட்டோம்.
ஓ, அது மிகவும் தூரத்தில் உள்ளது. நான் இங்குதான் வசிக்கிறேன்” என்றார். அவரைப் பற்றி நாங்கள் என்ன நினைத்தாலும் அவரது பேச்சும் செயலும் எங்கள் மனங்களை இனம் தெரியாத முறையில் ஈர்த்தன. அவருடனேயே இருந்தோம்.
கோயில் திறந்ததும் அன்னை பவதாரிணியைத் தரிசனம் செய்வித்து அன்னையின் பாதத்திலிருந்து பூக்களையும் தீர்த்தத்தையும் எங்களுக்கு அளித்தார்.

“வாருங்கள்” என அழைத்ததும் எஜமானனுக்கு அடிபணியும் நாய்க்குட்டிகள் போல அவரைப் பின் தொடர்ந்தோம்.
வெள்ளரி, பப்பாளி மற்றும் இனிப்புகளைத் தந்து, இது அன்னையின் பிரசாதம், சாப்பிடுங்கள்” என்றார். மேற்கு வராந்தாவிற்கு அழைத்துச் சென்று கையில் நீர் வார்த்தார்.

நீ மிக நன்றாகப் பாடினாய். இப்போது வீட்டிற்குப் போ. இன்னொருமுறை வா” என்றார்.
நாங்கள் வீட்டிற்குச் சென்றோம். ‘இவர் யாராக இருக்கக்கூடும் என்ற கேள்வி என் மனதில் மீண்டும் மீண்டும் எழுந்தது. அதிசய மனிதர் அல்லவா இவர். இவரா பைத்தியம்…?’

இரவு முழுவதும் அவரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். தூங்கவேயில்லை.
விடிந்ததும் தக்ஷிணேஸ்வரத்திற்கு ஓடி நேராக அவரது அறைக்கே சென்றேன். அவர் படுக்கையில் அமர்ந்திருந்தார். கண்ணீர் பெருகியோட, அவரது பாததூளிகளைத் தலையில் ஏற்றேன்.

அவர் என்னை எழுப்பி, என் கையைப் பிடித்தபடி, உன் பெயர் என்னப்பா?” என்றார்.
“நாராயண சந்திரகோஷ்” என்றேன்.

உடனே முகம் மலர்ந்து, நாராயண்! மிகவும் நல்லது! நேற்று பாடினாயே, ‘இறைவா, உன்னைத் தவிர ஆபத்திலிருந்தும், துயரத்திலிருந்தும் எங்களைக் காப்பாற்றுபவர் வேறு யார்?’ என்ற வரிகளை மறக்கவே மறக்காதே!… நேரம் கிடைத்த போதெல்லாம் இங்கு வா” என்றார்.
அதன் பிறகு அடிக்கடி போவேன். எப்போது போனாலும் பழமும், இனிப்பும் தருவார்.
அவர்தான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் என்பதைக் கோயில் குமாஸ்தா பீதாம்பரிடமிருந்து பின்னொரு நாள் தெரிந்துகொண்டேன்.

ஓவியப் பள்ளி சென்றாலும் மனம் என்னவோ காளி கோயிலையே சுற்றிச் சுற்றி வந்தது. ஒவ்வொரு வெள்ளியும் அங்கு சென்று அவரைப் பார்த்துவிட்டு இரவுதான் வீடு திரும்புவேன்.
ஒரு மாலை நேரம். பலத்த மழை பெய்தது. தம் அறையில் இருந்த குருதேவர் பீதாம்பரிடம் இப்படி மழை பெய்யும்
போது காமார்புகூரில் நான் பொரி சாப்பிடுவேன். எனக்குப் பொரி கொண்டு வருகிறாயா? என்று கேட்டார்.
ஒரு கூடையில் பொரி வந்தது. அதை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டார்.

நாராயண்! இந்தா பிரசாதம் சாப்பிடு” என என்னிடம் கொடுத்தார். சுவாமி, நீங்கள் சாப்பிட்ட பிறகுதானே நான் சாப்பிடணும்” என்றேன்.
உடனே சிறிது பொரியைத் தம் வாயிலிட்டுக் கொண்டு, இப்போது இதைச் சாப்பிடு” என்று என் கை நிறையப் பொரியை வைத்தார்.
ஆஹா, நினைவை விட்டு நீங்காத நாள் அது!!

ஒரு வருடம் சென்றது. ஓவியப் பயிற்சி முடிந்து இயற்கைக் காட்சிகளை வரையும் ஓவியனாக நேஷனல் தியேட்டரில் சேர்ந்தேன். பிறகு நான் நாடக நடிகன் ஆனேன்.

நேரம் கிடைத்தபோதெல்லாம் தக்ஷிணேஸ்வரம் செல்வேன். கிரீஷ்பாபுவிடம்கூட எனக்கு நடிப்பு சொல்லித் தருமாறு குருதேவர் சிபாரிசு செய்தார்.
கோடைக்காலத்தில் தக்ஷிணேஸ்வரத்தில் ஓர் இரவு ‘ம’வுடன் மற்ற இருவர் இருந்தனர்.
நாராயணா, இப்போது தியேட்டரில் நடிக்கிறாய். நீ பாடு. நாங்கள் கேட்கிறோம்” என்றார். நான் நெளிவதைக் கண்டு, வெட்கப்படாதே பாடு!” என்றார் குருதேவர்.

கடவுளே, நீ எங்கு இருக்கிறாய்? நான் ஓர் அபலை, மாறிவரும் இவ்வுலகில் எனக்கு வீடு ஏதுமில்லை” என்று பாடினேன்.
குருதேவர் என் தலையை மெல்ல வருடி, ஏன் அபலை என்றும் தாழ்ந்தவன் என்றும் கூறுகிறாய்? கடவுள் உன் அருகிலேயே இருக்கிறார்” என்றார்.

அவரது பரிவான ஸ்பரிசம் ‘கடவுள் என் அருகிலேயே உள்ளார்’ என்பதைப் புரிய வைத்தது.
பல வருடங்களுக்குப் பின் ‘குருதேவருக்கு இவ்வளவு நெருக்கமாக இருந்தும் அவர் யார் என்று சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவரை இழந்துவிட்டேனே, என்னே என் துர்பாக்கியம்” என இன்று வருந்துகிறேன்!
காரணமுமின்றி அன்பையும் அருளையும் வாரி வழங்கக் காத்திருக்கும் இறைவனின் அவதாரம் அல்லவா அவர்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s