உங்களை தேவர்கள் ஆக்கியவரின் மகன் நான்!

உங்களை தேவர்கள் ஆக்கியவரின் மகன் நான்!
-சுவாமி சுபோதானந்தர்

குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரை தட்சிணேசுவரத்தில் சுபோதும் க்ஷிரோதும் 1885-இல் தரிசித்தனர்.
சுபோத் கதவு அருகிலேயே தயங்கி நின்றான். அவனுக்கு வயது 17.
இருவரும் எங்கிருந்து வருகிறீர்கள்?” குருதேவர் கேட்டார்.
கல்கத்தாவிலிருந்து” – க்ஷிரோத்.
உன்னுடன் வந்தவன் ஏன் அங்கேயே நிற்கிறான்? அருகில் வரச் சொல்”.
சுபோத் அருகில் சென்றான்.

நீ சங்கர்கோஷின் குடும்பத்தைச் சேர்ந்தவனா?” என்று குருதேவர் சுபோதிடம் கேட்டார்.
ஆம் சுவாமி! உங்களுக்கு எப்படித் தெரியும்?”

நான் ஜாமாபுகூரில் இருந்த காலத்தில் உங்கள் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். தான்தானியாவிலுள்ள காளி கோவிலுக்கும் செல்வேன். அதெல்லாம் நீ பிறப்பதற்கு முன்பு. நீ எப்படியும் இங்கு வருவாய் என்று தெரியும். யார் யார் ஆன்மிகசித்தி அடையப் போகிறார்களோ, அவர்களை அன்னை இங்கு அனுப்புகிறாள். நீ இந்த இடத்தைச் சேர்ந்தவன்” என்றார் குருதேவர்.

சுவாமி, நான் இந்த இடத்தைச் சேர்ந்தவன் என்றால், என்னை ஏன் முன்பே அழைக்கவில்லை?” – சுபோத்.
மகனே, எதற்கும் தக்க காலம் வர வேண்டுமல்லவா!”- குருதேவர்.

பிறகு அவர் சுபோதின் கைகளைப் பிடித்தவாறே சில நிமிடங்கள் கண் மூடியிருந்தார். பின், நீ உன் லட்சியத்தை அடைவாய்; அன்னை சொல்கிறாள். வா, என் அருகில் கட்டிலில் அமர்ந்து கொள்” என்றார்.

இல்லை சுவாமி; நான் பள்ளி உடையிலேயே வந்துள்ளேன்; அவை சுத்தமாயில்லை; மேலும் வழியில் எத்தனையோ பேரைத் தொட்டிருப்பேன்; கால்கள் புழுதியாக வேறு உள்ளன” என்றான் சுபோத்.
குருதேவரோ சுபோதை வற்புறுத்தித் தம் கட்டிலில் அமரவைத்து, நீ என்னைச் சேர்ந்தவன். ஆடைகள் சுத்தமாக இல்லாவிட்டால் என்ன?” என்றார்.

பின் ராம்லாலைக் கூப்பிட்டுக் கீழே ஒரு விரிப்பை விரிக்கச் சொல்லி இருவரையும் அமரச் சொன்னார்.
குருதேவரின் அன்பு சுபோதின் தயக்கத்தைப் போக்கிவிட்டது. கல்கத்தாவிலிருந்து எப்படி வந்தீர்கள்?” என்றார் குருதேவர்.
நடந்தே வந்தோம், சுவாமி”.
அம்மாடி! அவ்வளவு தூரம் நடந்து வந்தீர்களா? என்னைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது?”
உங்கள் உபதேசங்கள் சிலவற்றைப் படித்தேன்; அற்புதம்; அவை என்னைக் கவர்ந்தன; நீங்கள் எவ்வளவு பெரியவர்! உங்களைப் பலரும் புகழ்கிறார்கள். அதனால்தான் உங்களைத் தரிசிக்க வந்தோம்” என்றான் சுபோத்.

உடனே குருதேவரின் மனநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அந்த இளைஞர்களை அசர வைத்த அடக்கத்துடன், ஆ! நான் புழுவைவிடக் கீழானவன். பெயர், புகழ்! வெட்கக்கேடு! நிஜமாகவே நான் புழுவைவிட அற்பமானவன்” என்றார் அவர்.

MahanNaan

சிறிது நேரம் கழித்து குருதேவர் சுபோதிடம், தேவி தனது அருளைப் பெற்றவர்களையே இங்கு அனுப்புகிறாள். நீ செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இங்கு வந்து கொண்டிரு. அந்த இரு நாட்களில் உன் பகுதியைச் சேர்ந்த பலர் இங்கு வருவார்கள்; நீயும் அவர்களோடு சேர்ந்து வா” என்றார்.

அதற்கு சுபோத், இல்லை சுவாமி, நான் இங்கு வருவதை என் உறவினர்கள் அறிந்தால் பிரச்னைதான். நீங்கள் என்னிடம் என்ன கூற விரும்புகிறீர்களோ, அதை இப்போதே கூறுங்கள்” என்றான்.

இல்லை குழந்தாய்! நான் ஒன்றை ஒரு முறை கூறிவிட்டால் அதைத் திரும்பப் பெற முடியாது. ஓரிடத்திற்கு இன்ன நாளில் போவேன் என்று கூறி
விட்டால், மழையோ, புயலோ நான் போயே தீருவேன்; என் விருப்பம் இல்லாவிட்டாலும் அன்னை என்னைப் போக வைப்பாள். அதனால் உன்னை நான் வரும்படி கூறிவிட்டதால் நீ செவ்வாய், சனிக்கிழமைகளில் இங்கு வந்துதான் ஆக வேண்டும்”.
‘சரி’ என்ற சுபோத், வந்து வெகுநேரமாகிவிட்டதால் கிளம்ப அனுமதி கேட்டான். ஏதாவது சாப்பிட்டுவிட்டுப் போங்கள்” என்றார் குருதேவர்.

வேண்டாம் சுவாமி”.

இல்லை இல்லை; சிறிது இனிப்பு சாப்பிட்டு நீர் குடித்துவிட்டுத்தான் போக வேண்டும்” என்று வற்புறுத்திய குருதேவர், லாட்டுவை அழைத்து இருவருக்கும் இனிப்பும் நீரும் அளிக்கச் செய்தார்.

உண்டதும், உங்கள் வீடு வெகுதொலைவில் உள்ளது; இந்தச் சிறுவயதில் அவ்வளவு தூரம் நடப்பது சரியல்ல. படகிலோ, வண்டியிலோ போங்கள்; நான் பணம் தருகிறேன்” என்றார் குருதேவர்.

வேண்டாம் சுவாமி, எங்களுக்கு நீச்சல் தெரியாது; அதனால் படகில் செல்லமாட்டோம்”
சரி வண்டியிலேயே போங்கள்”
வேண்டாம் சுவாமி, நாங்கள் நடக்கிறோம்”
அத்தனை தூரம் திரும்பவும் நடந்தால் கால்கள் வலிக்குமே, மகனே!”

சுவாமி, இந்த வயதில் நடக்காமல் பின் எப்போது நடப்பது? மேலும் நீங்கள் ஒரு சாது; உங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கும்?” – சுபோத்.

ஸ்ரீராமகிருஷ்ணர் சிரித்தபடி தம்மைச் சுட்டிக்காட்டி, இந்த இடத்துக்கும் சிலர் பணம் தருவார்கள்; நீ கவலைப்படாதே. தயங்காமல் சிறிது பணம் பெற்றுக்கொண்டு வண்டியிலேயே போ” என்றார்.

சுபோத் மறுத்துவிட்டதால் குருதேவர் க்ஷிரோதிடம், நீயாவது பெற்றுக்கொள்” என்றார்.
ஆனால் சுபோத் நண்பனைத் தடுத்து,வாங்கிக் கொள்ளாதே; நாம் நடந்தே போவோம்” என்றான்.

குருதேவர் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை. சரி செவ்வாயோ, சனியோ வா!” என்று விடை கொடுத்தார். இருவரும் அவரை வீழ்ந்து வணங்கி பாததூளியை ஏற்றுக்கொண்டு புறப்பட்டார்கள்.

சுபோத் பிற்காலத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் துறவறச் சீடராகி சுவாமி சுபோதானந்தர் ஆனார்.
ஸ்ரீராமகிருஷ்ணரின் மறைவிற்குப் பின் சுவாமி சுபோதானந்தர் ஒரு நாள் காலை சரத்சந்திர சக்கரவர்த்தியுடன் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சூரியோதயம் ஆயிற்று.
பார்! எத்தனை அழகான சூரியோதயம்!” என்றார் சுபோதானந்தர்.
ஆம் சுவாமி; அற்புதமாய் உள்ளது” என்றார் சரத்.
இதெல்லாம் ஒன்றுமேயில்லை. குருதேவர் என்னைத் தொட்டபோது நான் பல சூரியோதயங்களைக் கண்டேன்! எண்ணற்ற சூரியமண்டலங்கள்; கிரகங்கள், நட்சத்திரங்களைக் கடந்து சொர்க்கம் போய்ச் சேர்ந்தேன். அங்கே மந்தாகினி நதி பாய்ந்து கொண்டிருந்தது. அதிலிருந்து சிறிது நீர் எடுத்து என் தலையில் தெளித்துக் கொண்டேன்.

அங்கே பலவித தெய்விக வடிவங்களைக் கண்டேன். அவர்கள் பேசிய மொழி எனக்கு அரைகுறையாகத்தான் புரிந்தது. அவர்களது மேனிகள் முத்தாக ஒளிர்ந்தன. என்னிடம் அவர்கள், ‘மனிதனான நீ எப்படி இங்கு வந்தாய்?’ என்று கேட்டனர்.
அவர்களிடம் நான், ‘யாருடைய கருணையால் நீங்கள் தேவர்களாக விளங்குகிறீர்களோ, அவரது மகன் நான்’ என்றேன்.
அது கேட்டு அவர்கள் மகிழ்ந்தனர். நான் மீண்டும் உலகுக்குத் திரும்பினாலும் என் ஸ்தூல உடலுக்குள் மீண்டும் நுழையவே விருப்பமில்லை.

குருதேவர்,உள்ளே நுழைந்துகொள்” என்றார்.

சுவாமி, இந்த உடல் நாற்றமடிக்கிறது; நுழையவே மனமில்லை” என்றேன்.
குருதேவர் என் ஆன்மாவை என் உடலின் மண்டை உச்சியின் வழியே உள்ளே செலுத்தினார்!

நான் சிறுவயதில் பயந்தவனாக இருந்தேன். குருதேவர் என்னைத் தொட்டவுடன் என் பயமெல்லாம் பறந்துவிட்டது” என்று கூறி முடித்தார் சுவாமிகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s