இறைவனை வசியம் செய்

இறைவனை வசியம் செய்
– சுவாமி தத்பிரபானந்தர்

குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒருவரைத் தம் வசப்படுத்த திருவுள்ளம் கொண்டாரானால் அவரிடமிருந்து தப்பிக்க யாராலும் முடியாது.
ஒரு முறை வசியம் செய்வதைத் தொழிலாகக் கொண்ட மாய மந்திரக் கும்பல் ஒன்று குருதேவரிடம் வந்தது. அக்குழுவின் தலைவர் குருதேவரை வசியம் செய்ய வந்திருப்பதாகக் கூறினார். குருதேவரும் சம்மதித்து அவர்கள் முன்னே அமர்ந்தார். அவர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து, கைகளை ஆட்டிப் பல மந்திரங்களை உச்சரித்தார்கள்.

குருதேவர் ஒரு குழந்தையைப் போல சிரித்துக் கொண்டு, …ம் செய்யுங்கள், நன்கு செய்யுங்கள்” என்று கூறிக் கொண்டிருந்தார்.
அரை மணிநேரம் அவர்கள் கைகளைக் காற்றில் அலையவிட்டதுதான் மிச்சம். குருதேவருக்கு ஒன்றும் ஆகவில்லை.
பிறகு குருதேவரிடம் அவர்கள், ஐயா, நீங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர். அதனால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை, எங்களை மன்னித்து விடுங்கள்” என்று கூறிச் சென்றுவிட்டனர்.

அந்தக் கும்பலிலே, ஒரு சிறுவன் – பெயர் நிரஞ்ஜன். ஆவிகளுடனான தொடர்புகளுக்கு ஊடகமாக இருப்பவன். அவனைக் கண்டதும் குருதேவர் மகிழ்ந்தார்.
அவனிடம் குருதேவர், நீ தூய உள்ளம் படைத்தவன், உனக்கு இத்தகைய கீழ்த்தரமான வேலை வேண்டாம். அடிக்கடி என்னிடம் வந்து போ” என்றார்.

மற்றொரு முறை குருதேவர், நான் உன்னுள் மிகப் பெரிய ஆவியைச் செலுத்திவிட்டேன். அது தான் உன்னை இங்கு கட்டிப் போட்டுவிட்டது. இனி நீ நினைத்தாலும் இங்கிருந்து எங்கும் போக முடியாது” என்றார். நிரஞ்ஜன் பிற்காலத்தில் சுவாமி நிரஞ்ஜனானந்தர் ஆனார்.

மேலை- கீழைநாட்டுத் தத்துவங்களையும், தர்க்க சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்தவர் நரேன் (சுவாமி விவேகானந்தர்).
குருதேவர் நரேந்திரருக்கு ஸ்பரிசத்தின் மூலம் உயர்ந்த ஆன்மிக அனுபவத்தை நல்கினார். முதலில் பயந்த நரேந்திரர் அவரிடமிருந்து தப்ப நினைத்தார். நரேந்திரர் உறுதியான மனம் படைத்தவர். ஆயினும் முடிவில் சகலமும் ஒடுங்கி குருதேவரிடம் அடைக்கலமானார்.

இறைவனாக நம்மை வசியப்படுத்திக் கொள்வது அவனது கருணை.

ஆனால் இறைவனை நம்முடையவனாக வசீகரித்துக் கொள்ள முடியுமா? முடியும். அதற்கு மூன்று விஷயங்கள் தேவை. அவை:
நம்பிக்கை, அன்பு, தைலதாரை (எண்ணெய் ஒழுக்கு) போன்ற இறைசிந்தனை.

அழுது அடம் பிடித்தால் அம்மா எங்கிருந்தாலும் ஓடிவந்து தனது குழந்தையின் குறையைத் தீர்த்து வைப்பாள். அந்தக் குழந்தை அழுது அடம் பிடிப்பதற்குப் பின்னால் இந்த மூன்று விஷயங்களும் உள்ளன.
இவை மூன்றும் எளிதில் பக்தனை ஆண்டவனுடன் இணைத்துவிடும். இவற்றிற்கு உதாரணமாக குருதேவரின் சில சீடர்களைப் பற்றி இங்கு காண்போம்.
Iraivanai_vasiyam_sei

கோபாலேர்மா என்ற அகோரமணிதேவி சிறுவயதிலேயே விதவையானவர். எப்போதும் கோபால மந்திரத்தைத் ஜபித்துக் கொண்டிருப்பார். தினமும் ஒருவேளைதான் உணவு. படுப்பதற்கோ ஒரு கருங்கல் பலகை. சாதாரண வீடு.
அகோரமணி தேவி எப்போதும் இறைவனைத் தியானித்து பாவ நிலையில் கோபாலனுடனேயே வாழ்ந்து வந்ததால் கோபாலனின் தாய் – ‘கோபாலேர்மா’ என்று பக்தர்களால் அழைக்கப்பட்டார்.

ஒரு நாள் பாலகோபாலனுக்கு உணவு படைக்க இலையை விரித்தார். காற்று பலமாக வீசிக் கொண்டிருந்ததால் இலை பறந்தது. அகோரமணி தேவி கஷ்டப்பட்டு அதைப் பிடிக்க முயன்றார். அப்போது எங்கிருந்தோ வந்த சிறுவன் ஒருவன் இலையைப் பிடித்து அவருக்கு உதவி செய்தான்.
பாலகோபாலனுக்கு நைவேத்தியம் நிறைவேறியது. இடையில் வந்து இலையைப் பிடித்து உதவியவனைப் பற்றி பூஜையை முடித்த பிறகுதான் அகோரமணிக்கு நினைவு வந்தது.

அவர் இங்கும் அங்கும் தேடிப் பார்த்தார். அவனைக் காணவில்லை.
பிறகுதான், ‘வந்தது பாலகோபாலனே’ என்பதை அவர் உணர்ந்தார். அவனுக்காகவே உயிர் தரித்து, அவனைப் பூஜித்துக் கொண்டிருக்கையில் அவனே வந்து அதற்கு உதவிவிட்டுச் சென்றதை உணராமல் போனோமே என வருந்தி அழுது ஜபம் செய்ய ஆரம்பித்தார்.

அகோரமணிக்கு கோபாலனின் காட்சி தொடர்ச்சியாகக் கிடைத்தது. அதோடு நாள்தோறும் அவருடன் கோபாலன்
விளையாடவும் ஆரம்பித்தான்.
அகோரமணி அடுப்புக்குச் சுள்ளி பொறுக்கும்போதும், துணி துவைக்கும்போதும், சமைக்கும்போதும் உடனிருந்து அது வேண்டும், இது வேண்டும் என அடம்பிடிப்பான். அகோரமணிதேவி அவனுக்கு உணவு ஊட்டுவார். அவருடன் அவனும் படுத்து உறங்குவான்.

அகோரமணியின் கருங்கல் படுக்கையில் படுத்ததும், படுக்கை உடம்பைக் குத்துகிறது. இதில் படுத்தால் தலை அடிபடுகிறது” என்று சிணுங்குவான்.
அந்த ஏழைத் தாய் அழுது வருந்தி, இன்று மட்டும் படுத்துக் கொள். விடிந்த பிறகு வீட்டுக்கார அம்மாவிடம் சென்று நல்ல தலையணையாக வாங்கி வருகிறேன்” என்று ஆறுதல் கூறுவார்.

சில நாட்கள் அகோரமணி தலைவிரிகோலமாக குருதேவரிடம் ஓடிச் செல்வார். அவரையே கோபாலனாகக் கண்டு உணவு ஊட்டுவார். கோபாலன் பலமுறை ஸ்ரீராமகிருஷ்ணரின் உடலில் தோன்றிப் பின் மறைவதையும் கண்டுள்ளார்.

அகோரமணிதேவி ஒருமுறை பூரிஜெகந்நாதர் தேர்த்திரு
விழாவில் கலந்து கொண்டபோது ஸ்ரீகிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனமே கிடைத்துப் பரவசமடைந்தார். அங்கிருந்தவர்கள் அனைவருமே அவருக்கு கிருஷ்ணராகக் காட்சி தந்தனர். உடனே ஆடிப் பாடி அங்கு அமர்க்களமே செய்துவிட்டார்.

ஒரு நாள் நகபத்தில் அமர்ந்து அவர் ஜபம் செய்து கொண்டிருப்பதை ஸ்ரீராமகிருஷ்ணர் கண்டு, அம்மா, இன்னும் நீ எதற்காக ஜபம் செய்கிறாய்? நீதான் (ஆன்மிகத்தில்) எல்லாவற்றையும் அடைந்துவிட்டாயே!” என்று கேட்டார்.
கோபாலா, நான் அனைத்தும் அடைந்துவிட்டேனா? இனி நான் ஜபிக்க வேண்டாமா?” என்று கேட்டார் கோபாலேர்மா.
குருதேவர், ஆம், இனி உனக்கு முக்தி மட்டுமே பாக்கி” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

அன்பும் நம்பிக்கையும் கலந்த இத்தகைய உள்ளத்துக்கு இறைவனுடன் ஒன்றாகும் பாக்கியம் இயல்பானது.
மற்றொரு பக்தர் ரசிக்லால். அவர் தட்சிணேஸ்வரத்தில் துப்புரவுத் தொழிலாளி. குருதேவரிடம் உபதேசம் கேட்டவ
ரில்லை. நெருங்கிப் பழகும் வாய்ப்பும் பெற்றவரில்லை.
குருதேவர் சவுக்குத் தோப்பு மற்றும் பஞ்சவடிக்குப் போகும்போதும் அவர் செல்லும் பாதையைச் சுத்தப்படுத்துவார். குருதேவர் வரும்போது தூரத்தில் பக்தியுடன் மறைவாக நின்று வணங்கிக் கொண்டிருப்பார். அவர் சென்றதும் அவர் நடந்து சென்ற மண்ணைத் தொட்டு வணங்குவார்.

ஒரு நாள் குருதேவர் அவரைப் பார்த்து,இங்கே வா” என அழைத்தார். கண்ணீருடன் வந்தவனிடம், உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

தடாலென குருதேவரின் கால்களில் விழுந்து, ஐயனே, என் உயிர் பிரியும்போது தாங்கள் வந்து எனக்கு வழிகாட்டினால் போதும்” என்று கண்ணீருடன் விண்ணப்பித்தார்.

குருதேவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்று அருளினார்.
குருதேவரின் மகாசமாதிக்குப் பல வருடங்களுக்குப் பின் ரசிக்லால் தன்னுடைய கடைசி நிமிடத்தில் குருதேவர் வந்து தன் முன் நிற்பதைக் கண்டார்.

குருதேவர் தன்னை தனது அந்திமக் காலத்தில் அழைத்துச் செல்ல வந்திருப்பதை ரசிக்லால் உணர்ந்தார். மலர்ந்த முகத்துடன் ‘குருதேவா’ என்று கூறியவாறு அவரது உயிர் பிரிந்ததை அருகில் இருந்தவர்கள் அத்தனை பேரும் கண்டனர்!

காளிபாதகோஷ் என்ற பக்தர் பெரும் குடிகாரனாக இருந்தவர். கிரீஷ்சந்திர கோஷின் நண்பர். அவருடன் அடிக்கடி வந்து குருதேவரைச் சந்தித்து அவரால் ஈர்க்கப்பட்டவர். குருதேவரால் மட்டுமே தன்னைக் காப்பாற்ற முடியும் என உறுதியாக நம்பினார்.

ஒரு நாள் குருதேவரைக் காண கொல்கத்தாவிலிருந்து வந்தார். இவர் உள்ளே நுழைவதைக் கண்ட குருதேவர் தான் கொல்கத்தா செல்வதாகக் கூறினார்.
காளிபாதர் தானும் உடன் வருவதாகக் கூறினார். படகுக்கு ஏற்பாடு செய்துவிட்டு வந்து குருதேவரை அழைத்துச் சென்றார். அவர்களுடன் சுவாமி அத்புதானந்தரும் சென்றார்.
கரை புரண்டோடும் கங்கையின் நடுவில் படகு சென்று கொண்டிருந்தபோது படகோட்டிக்கு காளிபாதர் சைகை செய்தார். படகோட்டி படகை நடு ஆற்றில் நிறுத்திவிட்டார். திடீரென்று குருதேவரின் காலைப் பிடித்துக் கொண்டு காளி
பாதர் கண்ணீருடன் கதற ஆரம்பித்தார்:
ஐயனே, நான் ஒரு பாவி. என்னை உங்களால் மட்டுமே இப்பிறவியிலிருந்து காப்பாற்ற முடியும். நீங்கள் மட்டுமே எனக்கு நற்கதி அளிக்க முடியும். அதற்கு நீங்கள் உறுதி அளித்தால்தான் நான் உங்கள் காலை விடுவேன்.”

ஸ்ரீராமகிருஷ்ணர் இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காததால், ஓ! என்னப்பா இது?” என்று திகைப்புடன் கூறினார்.
பிறகு, இறைவனின் நாமத்தைச் சொல், முக்திக்கு வழி பிறக்கும்” என்றார் அவர்.
அதற்கு காளிபாதர் ,ஐயனே, நானோ ஒழுக்கங் கெட்டவன், குடிகாரனும்கூட. இறைநாமத்தைச் சொல்வதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை. ஒழுக்கமும் நன்னடத்தையும் சிறிதும் இல்லாத என்னைப் போன்ற முரடனை உங்களால் மட்டுமே காப்பாற்ற இயலும்” என்று முறையிட்டார்.

சரி, நீ சிரமப்பட வேண்டாம், உனது நாக்கை நீட்டு. அதில் நான் மந்திரத்தை எழுதுகிறேன். முயற்சியின்றி உன் நாவே மந்திரத்தை எப்போதும் உச்சரித்துக் கொண்டிருக்கும்” என்றார்.

காளிபாதர் அதற்கும் மறுத்துவிட்டார். குருதேவர், வேறு என்னதான் நான் செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
காளிபாதர், எங்கும் இருள் சூழ்ந்து என் உயிர் பிரியும் நேரத்தில் நீங்கள் இடது கையில் லாந்தர் விளக்கு ஏந்திக்கொண்டு வந்து வலது கையால் என் கையைப் பற்றி அழைத்துச் செல்ல வேண்டும்” என்றார்.

குருதேவரும், ஆகட்டும்” என்றார்.

காளிபாதரின் இறுதிக் காலத்தில் அவர் புன்முறுவலுடன், ‘இதோ, குருதேவர் வந்துவிட்டார்’ என்று உற்சாகத்தோடு கூறிக் கொண்டிருந்தார். வலது கையை உயர்த்தியவாறே கண்களை மூடினார். அவரது குடும்பத்தினர், அவர் ஏன் கையை உயர்த்தியவாறு கண்ணை மூடினார் என்று தெரியாமல் விழித்தனர்.

அதைப் பார்த்த சுவாமி அத்புதானந்தர், அப்போது இந்த நிகழ்ச்சியைக் கூறி குருதேவர் காளிபாதரின் கையைப் பிடித்து அழைத்துச் செல்வதாகக் கூறினார். இவ்வாறு நம்பிக்கை, அன்பு, இறைசிந்தனை இவற்றின் மூலம் இறைவனை நிச்சயமாக எல்லோராலும் வசியம் செய்ய இயலும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s