அமிர்தமே கிடைத்தாலும்…

அமிர்தமே கிடைத்தாலும்…

(மாவீரன் அலெக்சாண்டரையே பணிய வைத்தது ஒரு காகம். நீங்கள் நம்பவில்லையா? இதைப் படியுங்கள்.)
அமிர்தம் பருகினால் அமரத்துவம் பெறலாம் என மாவீரன் அலெக்சாண்டர் கேள்விப்பட்டார். உடனே அதைத் தேடிப் புறப்பட்டார்.
Amirtham_sep07r
அலெக்சாண்டரின் குரு அவரிடம் அமிர்தம் கிடைக்கும் நீரூற்றைப் பற்றிக் கூறியிருந்தார். அந்த ஊற்றும் நீர்வீழ்ச்சியும் ஒரு மலையின் குகையினுள் இருந்தன.

அலெக்சாண்டர் அந்தக் குகையை அடைந்தார். தனது படைவீரர்களைக் குகையின் வெளியே நிற்க வைத்தார். தான் மட்டும் தனியாக, குகையின் உள்ளே அமிர்தம் பொழியும் நீர்வீழ்ச்சி நோக்கி மெல்ல நடந்து சென்றார்.

அலெக்சாண்டரின் வாழ்நாளின் மிகப் பெரிய ஆசை அன்று நிறைவேறப் போகிறது என்ற மனநிறைவால் அவருக்கு உற்சாகமும் மகிழ்ச்சியும் பொங்கின.

அவரது இதயம் படபடவென அடித்துக்கொண்டிருந்த ஒலி அவருக்கே கேட்டது. அவர் எதிரில் வெள்ளித் தகடுபோல் பெருகிக் கொண்டிருந்த அமிர்த நீரோடையை அவர் கண்டார்.
சிறிதும் தாமதிக்காமல் அவர் குனிந்து இரு கைகளாலும் அமிர்தத்தை அள்ளி எடுத்தார். அமிர்தம் கையில் பட்டதும் அவரது உடல் புல்லரித்தது.
அவரது இதயத்துடிப்பு மேலும் அதிகரித்தது. கைகளால் அள்ளி அவர் அமிர்தத்தைக் கிண்ணத்தில் நிறைத்தார். கிண்ணத்தை வாய்வரை எடுத்துச் சென்றார்.

இன்னும் ஒரு கணத்தில் அமிர்தத்தைக் குடிக்கும் நிலையில், “எச்சரிக்கை!” என்று ஒரு குரல் ஒலித்தது. திடுக்கிட்ட அலெக்சாண்டர் குரல் வந்த திசையில் திரும்பிப் பார்த்தார். அந்த இருட்டில் ஒரு காகம்!

“சாம்ராட் அலெக்சாண்டரே, எச்சரிக்கை! இந்த அமிர்தத்தைக் குடிக்க அவசரப்படாதீர்கள். நான் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள். நீங்கள் என்னைச் சாதாரண காகம் என எண்ணாதீர்கள். நான் காகங்களின் அரசன். நானும் உங்களைப் போல் இந்த அமிர்தத்தைத் தேடி இங்கே வந்தவன். அமிர்தத்தையும் பருகினேன். ஆனால் அதைப் பருகிய பிறகு நான் இப்போது மிகுந்த சங்கடத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறேன்”.

காகம் கூறியது அலெக்சாண்டருக்குப் பிடிக்கவில்லை.
காகம் மீண்டும் கூறியது: “உங்களுக்கு இதைப் பருக விருப்பம் இருந்தால், நீங்கள் பருகலாம். ஆனால் நான் கூறுவதை முழுவதும் கேட்ட பின் அதைச் செய்யுங்கள்.”

“அமிர்தம் குடித்து எல்லா இன்பங்களையும் அனுபவிக்க விரும்பும் என்னைத் தடுக்காதே. அதோடு நான் சாகாநிலை பெற வேண்டும்” என்றார் அலெக்சாண்டர் அவசரமாக.

காகம் மெல்ல, “இந்த அமிர்தத்தை நான் பருகியது உண்மைதான். வாழ்வில் எதையெல்லாம் பெற எண்ணினேனோ, அதையெல்லாம் பெற்றேன். எல்லா நாடுகளையும் சுற்றிப் பார்த்துக் களைத்துவிட்டேன். இனிய கீதங்கள் யாவையும் கேட்டுவிட்டேன். இனிய பாட்டுக்கள் அனைத்தையும் நானே பாடிவிட்டேன். ருசியான உணவுகள் எல்லாவற்றையும் உண்டு விட்டேன். கேளிக்கை, கும்மாளம் என எதையும் விட்டுவைக்கவில்லை.

“இனிமேல் செய்ய ஒன்றும் மீதமில்லை. இப்போது இந்த வாழ்க்கை எனக்கு ஒரு சுமையாக ஆகிவிட்டதால் நான் இறக்க விரும்புகிறேன்.

ம், ஆனால் இறக்க முடியவில்லை.

“மலை மேலிருந்து குதித்தேன். ஆனால் நான் சாகவில்லை. நீரில் மூழ்கியும் நெருப்பில் குதித்தும் வாளால் என் தலையை வெட்டியும் இறக்க முயன்றேன். ஆனால் சாக முடியவே இல்லை.

“இவையெல்லாம், அந்த அமிர்தம் பருகியதால் கிடைத்த பயன். இறக்காமல் இருப்பதால் சுகமாக இருக்கலாம் என நான் நினைத்தேன். ஆனால் இப்போது இந்த இக்கட்டில் மாட்டிக் கொண்டு தாங்க முடியாத வேதனைப்படுகிறேன்.

“நீங்கள் இந்த நீரைப் பருக விரும்பினால் பருகுங்கள்,
ஆனால் உங்களிடம் ஒரு வேண்டுகோள். நீங்கள் இங்கிருந்து சென்ற பின் உங்களுக்கு இறப்பதற்கு ஏதாவது வழி தெரிந்தால் அதைத் தயவுசெய்து எனக்கும் தெரிவியுங்கள்” என்றது.

காகம் சோகத்துடன் கூறி முடித்ததும் குகையில் மயான அமைதி நிலவியது. அலெக்சாண்டரின் கைகளிலிருந்து அமிர்தம் ஒழுகி நீருடன் கலந்தது. அருவியின் நீரில் மீண்டும் கைகளை நனைக்க அவருக்குத் துணிவு ஏற்படவில்லை. அலெக்சாண்டர் அமிர்தத்தைப் பருகாமலேயே குகையை விட்டு வெளியே ஓடிவிட்டார்.

வாழ்வது எவ்வளவு முக்கியமோ, சாவதும் அவ்வாறே! “பிறவாமை வேண்டும், அப்படிப் பிறந்தால் உன்னை மறவாமை வேண்டும்” என்று தானே நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள்.

நீண்ட காலம் வாழ்வதல்ல சாதனை, நமது வாழ்க்கை பிறருக்கு நல்லவிதத்தில் எந்த அளவிற்குப் பயன்படுகிறது என்பதைப் பொறுத்தே வாழ்க்கையின் தரம் கூடுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s