மகன்களை மகான்களாக மாற்றிய மாதாக்கள்

மகன்களை மகான்களாக மாற்றிய மாதாக்கள்
– சுவாமி விமூர்த்தானந்தர்

ma1

‘அம்மா’ என உச்சரித்ததும் பரவச நிலை அடைவார் ஸ்ரீராமகிருஷ்ணர். அந்த வார்த்தைக்கல்ல, அம்மா என்ற ஸ்தானத்திற்கு அவ்வளவு மகிமை.

‘நீயும் வளர்ந்து கொண்டே பிறரையும் வளர வை’ என்பது சுவாமி விவேகானந்தரின் சீரிய சிந்தனை.

தன்னுள் ஒரு சிசுவை வளர்த்துக் கொண்டே ஒரு தாய் தானும் வளர்ந்து தாய்மை எனும் உயர்நிலையை அடைகிறாள். தாயாவது பெரிதல்ல; தாய்மை அடைவதே உயர்வு.

அந்த நிலையை அடைந்து அன்பு, அறிவு, அடக்கம், வீரம், ஆன்மிகம், தியாகம் போன்றவற்றில் தங்களது பங்களிப்பாகத் தங்கள் பிள்ளைப் பொக்கிஷங்களைப் புவிக்குத் தந்த தாய்மார்கள் ஏராளம்.

அதிலும் குறிப்பாக, தங்கள் மகன்களை மகான்களாக்க முயன்ற, அதற்காகப் பிரார்த்தித்த, பாடுபட்ட அன்னையர்கள் அநேகம் பேர்.

அவர்களை நினைப்பதே ஒரு தவம்.

மதாலசா: உபநிடதத்தில் வரும் மதாலசா என்ற தாய், தனக்குக் குழந்தை பிறந்ததும், அதன் காதில் ஓதி, இந்த உலகம் நிலையற்றது மகனே. சாஸ்வதமற்ற இந்த உலகை விட்டு நீ தெய்வ பதத்தை அடை” என்று கூறியதும் அவரது குழந்தைகள் உலக வாழ்க்கையை நீத்து தெய்வப் பதத்தை அடைந்தன.

வங்காளத்தை வைகுண்டமாக மாற்றியவரின் தாய்!: சசிதேவி, வசதியான வங்காளக் குடும்பத்தில் பிறந்தவர். தொடர்ந்து எட்டுப் பெண் குழந்தைகளைப் பெற்று அவர்களைப் பறிகொடுத்தவர்.

அத்வைத ஆச்சார்யரிடம் சசிதேவி தீட்சை பெற்று ஆன்மிகத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.
அவரது விஸ்வரூபன் என்ற மூத்த மகன் இளம் வயதிலேயே துறவியாகிவிட்டார்.

பின் சசிதேவிக்கு நிமாயி என்ற மகன் பிறந்தான்.
எட்டு குழந்தைகளை இழந்தது… மூத்த மகன் சந்நியாசி ஆனது…
இந்த இரண்டும் அத்தம்பதிகளுக்குப் பெரும் அதிர்ச்சி அளித்தது. அந்த அதிர்ச்சியால் கணவன் இறந்தேவிட்டார்.
என்றாலும் சசிதேவி, தீரத்துடன் நிமாயியை வளர்த்துத் திருமணமும் செய்து வைத்தார்.

ஆனால் 24-ஆம் வயதில் நிமாயும் சந்நியாசம் ஏற்கத் தாயை அணுகினார். இந்நிலையில், தன் மகன் சந்நியாசியாவதை எந்தத் தாய்தான் விரும்புவாள்?
ஆனால் சசிதேவி என்ற மாதா அதற்கு மௌனமாக அனுமதி அளித்தார்.
இறைவன் திருவுளத்திற்குப் பரிபூரணமாகத் தன்னை உட்படுத்திக் கொண்டு, தனது இளம் மருமகளுடன் காலத்தை ஆனந்தமாகக் கழித்தாள்.

அந்த அன்னையின் தியாகத்தால், பக்தியைப் பரப்பி வங்காளத்தையே வைகுண்டமாக மாற்றிய ஸ்ரீசைதன்யர்தான் அந்த மகன்.

ஓர் அணாவிற்குப் புகையிலை தா! : பெரும் பணக்காரரான ஜமீன்தார் ஒருவர் வயதான ஒரு தாயிடம், நான் உன் மகனிடம் பல முறை என் சொத்துக்களை எழுதி வைத்துவிடுகிறேன் என்கிறேன். ஆனால் அவர் எதையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. நீயாவது உனக்கு வேண்டியதை ஏற்றுக்கொள்” என்றார்.

கேட்டதோ பெரும் நிதி படைத்தவர்; கேட்காமல் இருந்ததோ தவநிதி படைத்தவரின் தாய்!
அந்தத் தாய் புன்னகையுடன் பலமுறை மறுத்து வந்தார். ஜமீன்தார் வற்புறுத்தினார்.

ஆனால் அந்தத் தாய் அமைதியாக, மகனே, எனக்கு ஒன்றும் வேண்டாம். ஓர் அணாவிற்குப் புகையிலை வாங்கித் தா, அது போதும்” என்றார்.

சொத்துக்களை ஏற்க மறுத்த அந்தத் தாயின் தியாகத்தைப் பார்த்த அந்த ஜமீன்தார் கண்கலங்கி, நீங்கள் இப்படிப்பட்ட அம்மாவாக இருப்பதால்தான் தாயே உங்கள் மணி வயிற்றில் தியாகசீலரான ஸ்ரீராமகிருஷ்ணர் பிறந்திருக்கிறார்” என்று கூறி வீழ்ந்து வணங்கினார்.

ஸ்ரீராமகிருஷ்ணரின் அன்னையான சந்திரமணி தேவிதான் அந்தத் தாய்.

தேவியே, என் வலக்கரம் உனக்கே!: சசிபூஷணின் தாயார் பாவசுந்தரி தேவி. அவரது இரண்டாவது மகளும், கடைசி மகனும் ஒரே சமயத்தில் நோய்வாய்ப்பட்டனர். சிறந்த வைத்தியம் பார்த்தும் நோய் குணமாக வில்லை.

முடிவில் காளிதேவியிடம் பாவசுந்தரி, தேவி! என் குழந்தைகளை நீதான் காப்பாற்ற வேண்டும். அதற்குக் காணிக்கையாக இனி என் வலக்கரத்தை உன் சேவைக்காகவே அர்ப்பணிக்கிறேன்” என்றார்.

அன்று முதல் அவர் தம் வலது கரத்தை காளிதேவியின் பணிக்காகவே பயன்படுத்தினார். தேவிக்குப்
பூஜை செய்வது, மலர் பறிப்பது, சந்தனம் அரைப்பது போன்றவற்றிற்காக மட்டுமே வலக்கையைப் பயன்படுத்தினார். இடக்கரத்தால் மற்ற காரியங்களைச் செய்தார்.

பாவசுந்தரியின் மூத்தமகன், சசி துறவியாகி ஸ்ரீராமகிருஷ்ணரின் மிகச் சிறந்த சேவகரானார்; இறைத்தூதரும் ஆனார்.

இறைவனுக்காகவும் சகமனிதர்களுக்காகவும் ஓய்வின்றிப் பல காலம் பாடுபட்ட சுவாமிகள் கடைசிக் காலத்தில் நோய்வாய்ப்பட்டார்.

எல்லாவற்றையும் துறந்த சசி மகராஜ் தம் தாயை மட்டும் துறக்கவில்லை. நோய் தந்த வேதனையைத் தீர்த்துக் கொள்ளத் தாயை வரவழைத்தார்.

தாயிடம், அம்மா! உன் வலக் கரத்தால் என் தலை மீது கை வைத்து ஆசி வழங்கு!” என்றார்.

அன்னையும் அவ்வாறே ஆசீர்வதித்தார்.

அந்தத் துறவிதான் தென்னிந்தியாவில் ஸ்ரீராமகிருஷ்ண மடங்களுக்கு வித்திட்ட வித்தகர் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் எனப்பட்ட சசி மகராஜ்.

சிவனின் பிள்ளை: மகாபுருஷர் என சுவாமி விவேகானந்தரால் போற்றப்பட்ட ஒருவரின் தாய் எப்படி இருந்திருப்பார்?

வங்காளத்தில் பிறந்த வாமசுந்தரி அன்பும் பக்தியும் மிக்கவர். கிராமத்துப் பெண்ணான அவர் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்.

ஒரு நாள் சிவபெருமான் வாமசுந்தரியின் கனவில் தோன்றி, ‘வாமசுந்தரி, வாஞ்சையுடன் கூடிய உனது பக்தியால் மகிழ்ந்தேன். ஆன்மிகச் செல்வன் ஒருவனைப் பெற்றெடுப்பாய்’ என்று கூறி ஆசீர்வதித்தார். அப்படிப் பிறந்தவர்தான் தாரக்.

தாரக் சிறுவனாக இருந்தபோது, அவருடன் விளையாடப் பல குழந்தைகள் வருவர். வாமசுந்தரி எல்லாக் குழந்தைகளுக்கும் சமைத்துப் பரிமாறுவார்.
மற்றவர்களுடன் சேர்ந்தே தாரக்கும் வளர்ந்தார். அவருக்கென எந்த தனி கவனமும் தாய் தந்ததில்லை.
யாரோ ஒருத்தி வாமசுந்தரியிடம், ஏனம்மா, உன் பிள்ளையிடம் சிறிது அதிக கவனம் செலுத்தக் கூடாதா?” என்று கேட்டார்.

அதற்கு அந்தத் தாய், சிவபெருமானின் குழந்தையான அவனை அவரே பார்த்துக் கொள்வார்” என்றார்.

ஊரார் வீட்டுப் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் அல்லவா!

தாரக் தானே அல்ல, சிவனே என வளர்ந்தான். அவரே பின் சுவாமி சிவானந்தர் ஆனார்.

தாய் கேட்ட இரண்டு வரங்கள்: 1861, டிசம்பர் 10-ல் தாயார் மாதங்கினி தேவிக்கு பாபுராம் என்ற மகன் பிறந்தான்.தாயின் புனித வாழ்வு மகனுக்கு முன் மாதிரி ஆனது.

பாபுராம் விடுமுறை நாட்களில் தனது கிராமமான ஆண்ட்பூர்க்கு செல்வான். அப்போது தன் தாய் அறையில் கதவை உள்ளே தாழிட்டுக்கொண்டு தியானத்தில் மூழ்கிவிடுவதைப் பார்ப்பான்.

இரவும் பகலும் தாய் ஜபிப்பதைப் பார்த்து மகனும் அவ்வாறு இருக்க வேண்டும் என விரும்புவான்.
பாபுராம் தன் தாயாரிடமிருந்து தெய்வ பக்தி, சாதுசேவை, பக்தர் சேவை, ஆன்மிகச் சாதனையில் தீவிர நாட்டம் போன்ற எல்லா நற்பண்புகளையும் தனதாக்கிக் கொண்டான்.

தாயும் தனயனும் குருதேவரை அடிக்கடி தரிசித்தனர். குருதேவர் மாதங்கினியிடம் அன்பாகப் பேசுவார்.

ஸ்ரீராமகிருஷ்ணருக்கு பாபுராம் போல் தூய்மையான ஒரு சேவகர் மிக அவசியமாக வேண்டியிருந்ததால் அவரே மாதங்கினியிடம், பாபுராமை எனக்குத் தருவாயா?” என்று கேட்டார்.

குருதேவரைத் தம் இஷ்டதெய்வமாகக் கண்ட மாதங்கினி மகனை மனப்பூர்வமாக அவரது பணிக்கு அர்ப்பணித்தார்.

அப்போது அந்த அன்னை கண்ணீருடன் குருதேவரிடம், டாகூர், எனக்கு இரு வரங்கள் வேண்டும். ஒன்று, இறைவனிடம் எனக்கு ஸ்திரமான பக்தி வேண்டும்.
இரண்டாவது, எனக்கு முன்பாக என் குழந்தைகள் யாரும் இறந்துவிடக் கூடாது” என்றார்.

குருதேவர் இரண்டு வரங்களையும் தந்தருளினார்.
பிற்காலத்தில் பாபுராம் தம் தாயை மதாலசா என்று கூறுவதுண்டு. தாயின் அருளுடன் துறவியான அந்த மகனே சுவாமி பிரேமானந்தர்.

நான் துறவியானால் என்ன செய்வாய்?: சுவாமி விரஜானந்தர் துறவு ஏற்ற பின்னும் ‘எனக்கு என் தாய் மீது பெரும் ஈடுபாடு உண்டு’ என்பார்.
மகன் தம் அன்னையிடம், நான் துறவறம் மேற்கொள்ள நீ அனுமதிப்பாயா?” என்று கேட்டார்.
அதற்கு நிஷாத்காளி, உன் ஆன்மிக முன்னேற்றத்துக்கு நீ எது செய்தாலும் நான் ஏன் தடையாக இருப்பேன்? சென்று வா மகனே!” என்றார்.

தனயன் துறவறம் ஏற்கச் சென்றபோது இனிப்பு வழங்கி வழியனுப்பி வைத்தார் அத்தாய்!

கணவர் இறந்தபின் பிருந்தாவனத்தில் துறவிபோல வாழ்ந்து வந்தார் அவர்.

எனக்கு இரு கொம்புகளை வளரச் செய்தாலும்…: சுவாமி பிரேமேஷானந்தரின் தாய் அனைவரையும் தன் குழந்தையாக பாவித்தார். அன்பு, தூய்மை, துறவு மனப்பான்மை மிகுந்தவர்.

பழங்கால வழக்கங்களை நன்கு கடைப்பிடித்தாலும், மாறிவரும் உலகியலைப் புரிந்துகொண்டு நடந்தார். அவரது வீடு பல சீர்திருத்த நடவடிக்கைகளின் கேந்திரம் ஆயிற்று.

ஆரம்பத்தில் செல்வச் செழிப்பு, கடைசிக் காலத்தில் ஏழ்மை இரண்டையும் ஒன்றாகவே ஏற்று ‘இது கடவுள் நமது செயல்களுக்கு அளித்த பரிசு’ என்பார்.

பிரேமேஷானந்தர் தமது தாய் பற்றிக் கூறுவார்:
என் தாய் சொல்வார்: எனக்குக் கடவுள் தலையில் இரண்டு கொம்புகளை வளரச் செய்தாலும் நான் அதை என் முன்வினைப்பயன் எனக் கருதி அமைதியாக ஏற்பேன். சுக துக்கம் இரண்டையுமே சமமாகக் கருதுவேன்.”

தாயார் நீண்ட நேரம் தியானம் செய்வார். நீர்கூட அருந்தாமல் சிவபூஜை செய்வார்.

விரதங்கள் பல செய்த அத்தாயின் மகன் சுவாமி பிரேமேஷானந்தர் பிற்காலத்தில் 50-க்கும் மேலான சந்நியாசி, சந்நியாசினிகள் ஸ்ரீராமகிருஷ்ண மற்றும் ஸ்ரீசாரதா மடத்தில் சேர்வதற்குக் காரணமாக இருந்தார்.

இருவரில் ஒருவரை ஏற்றுக் கொள்ளுங்கள்! : சுவாமி பிரம்மானந்தரிடம் தீட்சை பெற்றவர் பாருக்குட்டி. அவருக்கு நல்முத்துக்கள் போன்ற இரண்டு குழந்தைகள்.

ஒரு நாள் பாருக்குட்டி மிகுந்த பக்தியுடன் தமது குருவிடம், சுவாமிகளே, என் இரண்டு குழந்தைகளுள் ஒருவனையாவது தங்களது சேவைக்காக ஏற்றுத் துறவியாக்கிக் கொள்ளுங்கள்” என்றார் கண்ணீருடன்.

சுவாமிகளும் தலையசைத்தார்.
அப்படி அன்னையால் துறவியானவர்தான் சுவாமி தபஸ்யானந்தர். ராமகிருஷ்ண மடம் – மிஷனின் துணைப் பொதுத் தலைவராக இருந்த சுவாமிகள் மிகச் சிறந்த ஆன்மிக நூல்களை சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

பெயருக்கேற்ப அவர் தவசீலராகவே விளங்கினார்.

சரஸ்வதியின் ஸ்தானத்தை அழுக்காக்காதே: லட்சுமிகுட்டி மிகுந்த தெய்வ பக்தியுள்ளவர்;
மகன் சங்கரனை வழி நடத்துவதில் பெரும் அக்கறை கொண்டவர். சிறுவனான அவன் ஒருவன் மீது கல்லெறிந்து, அவனுக்குக் காயம்பட்டுவிட்டது.

செய்தியறிந்து தாய் வருத்தத்துடன் இருந்தார்.
நீ செய்த தவறுக்கு உனக்குப் பத்துப் பிரம்படிகள் தரப்படும்” என்றார் அன்னை.

தவறு என்னவென்று விசாரித்தறிந்த மகன், தானே கையை நீட்டித் தண்டனையைப் பெற்றுக் கொண்டான்.

ஒரு முறை தன் தாயுடன் செல்லும்போது சங்கரன் வேறு ஒரு சிறுவனைத் தீய வார்த்தைகளால் திட்டினான்.

தாய் உடனே அவனிடம், மகனே, நாக்கு சரஸ்வதியின் இருப்பிடம். சரஸ்வதி அறிவு வழங்குபவள். யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் வேண்டாத வார்த்தைகளைக் கூறி சரஸ்வதியின் வாசஸ்தலத்தை அழுக்காக்கி விடாதே. உனது நாக்கிலிருந்து உத்தமமான வார்த்தைகள்தான் வர வேண்டும், மகனே!” என்றார்.

‘என் அன்னையின் அந்த அறிவுரைதான் காலம் முழுவதும் என்னை வழி நடத்தி வருகிறது’ என்றார் சங்கரன் என்ற சுவாமி ரங்கநாதானந்தர்.

சுவாமிகள் நமது பாரத கலாச்சாரத்தின் பிரதிநிதியாக உலகின் பல நாடுகளுக்கும் சென்று வந்தார்.

நமது பாரம்பரியப் பெருமையையும் ஆன்மிகத்தையும் உலக மக்கள் அனைவருக்கும் போதித்தார்.

அந்த மேன்மையான பணிக்கு வித்திட்டது லட்சுமி
குட்டி என்ற அவருடைய அன்னைதான்.

இப்படி எண்ணற்ற தாய்மார்கள் தங்கள் பிள்ளைச் செல்வங்களைப் பாருக்கு வழங்கி நிறைநிலை கண்டுள்ளார்கள். இன்றும் அது போன்ற தாய்மார்கள் இருக்கவே செய்கிறார்கள். அத்துணைத் தாய்மார்களின் பாதாரவிந்தங்களையும் பணிந்து போற்றுவோம். *

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s