ராணி மதாலசா

ராணி மதாலசா

DivineMother

ராணி மதாலசா வேத காலத்து உத்தம அன்னையர்களுள் ஒருவர். அவரைப் பற்றி மார்க்கண்டேய புராணம் நல்ல செய்திகளைத் தருகிறது.

உலகாயத கண்ணோட்டத்தில் பார்க்கும்போது ராணி மதாலசாவின் செய்கை வியப்பைத் தருகிறது.

ஆனால் தன் பிள்ளைகளுக்கு மிக உயர்ந்த பதவியான மரணமற்ற நிலையான முக்தியைப் பெற்றுத்
தருவதில் மிக முனைப்பாக இருந்தாள் மதாலசா.

மதாலசா, பிரம்மஞானியாக விளங்கிய ஓர் அரசனின் மகள். ஆன்மிகத் தேடலில் ஈடுபட்ட பல மகான்களும் ஞானிகளும் அவனது அரசவைக்கு வருவது வழக்கம்.

அவர்களின் உரையாடல்களைக் கேட்டு வளர்ந்தவள் மதாலசா. அதனால் அவள் இயல்பாகவே ஒரு ஞானி ஆனாள்.

தன்னை விரும்பி மணக்க வந்த அரசன் ரிதத்வஜனிடம், நமக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளை என் விருப்பப்படிதான் வளர்ப்பேன்” என்று ஒரு நிபந்தனை விதித்தாள். அவனும் ஒப்புக் கொண்டான்.

முதல் மகன் பிறந்ததும் அரசன் அவனுக்கு விக்ராந்தா என்று பெயரிட்டான்.

இரண்டாம் மகனுக்கு அரசன் சுபாஹு என்றும், மூன்றாம் மகனுக்கு சத்ருமர்தன் என்றும் பெயரிட்டான்.

ஒவ்வொரு முறையும் மதாலசா சிரித்தாள்.
அரசனிடம் இட்ட நிபந்தனையின்படி, மதாலசா தன் குழந்தைகளைத் தன் விருப்பப்படி ஞான மார்க்கத்தில் வளர்த்தாள்.

தொட்டிலில் தாலாட்டும் காலம் முதலே அவர்களுக்கு ஞானபோதனையை ஆரம்பித்துவிட்டாள்.
மதாலசா பாடிய தாலாட்டு இதுதான்.

கிம் நாம ரோதசி சிசோ? ந ச தேஸி காமஹா
கிம் நாம ரோதசி சிசோ? ந ச தேஸி லோபஹா
கிம் நாம ரோதசி சிசோ? ந ச தேஸி மோஹஹா
ஞானாம்ருதம் சமரசம் ககனோ தமோசி சுத்தோசி
புத்தோசி நிரஞ்சனோசி பிரபஞ்ச மாயா பரிவர்ஜிதோசி ॥

மகனே! ஏன் அழுகிறாய்? நீ ஆத்மன். உனக்கு ஆசைகள் கிடையாது. ஆசை இருந்தால்தானே துக்கம் வரும்?
உனக்குத்தான் ஆசையோ, காமமோ கிடையாதே. அழாதே!

உனக்குப் பேராசையும் கிடையாது. ஏனென்றால் நீ ஆத்மன். ஆத்மாவுக்கு ஆசையோ, பேராசையோ, மோகமோ இல்லை. அதனால் உனக்கு ஏமாற்றமே கிடையாது. அழாதே!

ஆத்மஞானம் உள்ள ஞானிகள் அழுவதில்லை. மகிழ்ச்சியோ, துக்கமோ, கஷ்டமோ ஆத்மாவுக்குக் கிடையாது. நீ ஆத்மா. நீ ஒரு சுத்த ஆத்மா. புனித ஆத்மா. அப்பழுக்கற்றவன். இந்தப் பிரபஞ்சம் ஒரு மாயை என்று உணர்ந்தவன். அதனால் அழாதே!”
என்ற போதனையை இரவும் பகலும் குழந்தைப் பிராயத்தில் இருந்தே ஊட்டி வளர்த்தாள் மதாலசா.

முதல் மூன்று குழந்தைகளும் தாய்ப்பாலோடும், தாலாட்டோடும் தாய் புகட்டிய ஞான போதனையால் பிரபஞ்சம் ஒரு மாயை என்று உணர்ந்து நாட்டையும் சுகத்தையும் துறந்து தாயின் ஆசியோடு காட்டுக்குச் சென்றனர், தவம் செய்ய!

நான்காவது மகன் பிறந்தபோது அரசன், மதாலசா! முதல் மூன்று குழந்தைகளுக்கும் நான் பெயர் வைத்த
போது நீ நகைத்தாய். இவனுக்கு நீயே பெயர் வை” என்றான்.

மதாலசா அக்குழந்தைக்கு அலர்க்கா என்று பெயர் வைத்தாள். அதைக் கேட்டு, பொருத்தமற்ற பெயர் என்று அரசன் வெகுண்டான். அலர்க்கா என்றால் பைத்தியம் பிடித்த நாய் என்று பொருள்.

மதாலசா கேட்டாள், அரசே, நீங்கள் சூட்டிய பெயர்கள் மட்டும் பொருத்தமானவையா? முதல் மகனுக்கு விக்ராந்தா என்று பெயர் வைத்தீர்கள். விக்ராந்தா என்றால் அங்கும் இங்கும் அலைபவன் என்று பொருள். ஆத்மா வருவதும் இல்லை போவதுமில்லை. இந்தப் பெயர் சுத்த சச்சிதானந்தமான அந்தச் சிசுவுக்கு எப்படிப் பொருந்தும்?

அடுத்தவனுக்கு சுபாஹு என்று பெயரிட்டீர்கள். சுபாஹு என்றால் விசாலமான வலுவான கைகள் உடையவன்.
ஆத்மாவுக்கு ஓர் உருவமே இல்லாதபோது கைகள் எங்கிருந்து வரும்?

மூன்றாவது மகனுக்கு சத்ருமர்தனன் என்று பெயர் வைத்தீர்கள். ஆத்மாவுக்குப் பகைவனும் நண்பனும் கிடையாது. அப்படி இருக்க நீங்கள் வைத்த பெயர்கள் பொருத்தமில்லாத பெயர்கள்தானே? அதே போல் இந்த மகனுக்கு அலர்க்கா என்றே இருக்கட்டும்” என்றாள்.

மீண்டும் அரசன், போகட்டும் மதாலசா! இவனையையாவது ப்ரவ்ருத்தி மார்க்கத்தில் வளர்த்திடு. என் நாட்டை ஆள ஒரு வாரிசு தேவை. முதல் மூவரும் உன் போதனையால் நாட்டைத் துறந்து காட்டுக்குச் சென்று விட்டனர். இவனையாவது நாடாளத் தயாராக்கு. இவனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு, நாம் இருவரும் வானப்பிரஸ்தம் போகலாம்” என்றான்.

மதாலசாவும் ஒப்புக் கொண்டு அலர்க்காவை உலக விவகாரங்களைச் சமாளிக்கும் விதமாகப் பல வழிகளிலும் தேர்ந்தவனாக வளர்த்தாள். அரசநெறி முறைகளையும் போர்முறைகளையும் கற்றுத் தந்தாள்.

எப்படி நல்ல அரசனாக நாட்டை ஆள வேண்டும், பகைவர்களை ஒழித்து மக்களைக் காப்பது போன்ற கருத்துகளைக் கொண்ட தாலாட்டுப் பாடல்களைப் பாடித் தூங்கச் செய்தாள்.

அலர்க்கா ஒரு சிறந்த இளவரசனாக வளர்ந்தான். நாட்டை அவனிடம் ஒப்படைத்துவிட்டு வனத்துக்குச் சென்றபோது மதாலசா ஒரு மோதிரத்தை அவனிடம் கொடுத்தாள்.

மகனே! உனக்குக் கவலையோ, துக்கமோ ஏற்பட்டு சோர்ந்து போகும்போது இந்த மோதிரத்தைத் திறந்து பார்” என்று கூறிச் சென்றாள் அந்தத் தாய்.

நன்கு அரசாண்டு வந்த அலர்க்காவிற்கும் ஒரு நாள் வாழ்வில் சோர்வு கண்டது.

தாய் கூறியது நினைவுக்கு வந்தது. மோதிரத்தைத் திறந்தான். அதில் என்ன எழுதி இருந்தது?

முதல் மூன்று குழந்தைகளுக்கும் போதித்த அதே ஞான உபதேசம்தான்.
‘சுத்தோசி, புத்தோசி, நிரஞ்சனோசி, பிரபஞ்ச
மாயா பரிவர்ஜிதோசி’.
இதைப் படித்ததும், அலர்க்காவுக்கும் வைராக்கியம் ஏற்பட்டு அவனும் தவம் செய்யச் சென்று
விட்டான்.

உண்மையான தாயின் வளர்ப்பு என்றால் இப்படி தானிருக்க வேண்டும் என்பதற்கு மதாலசாவின் வரலாறு ஓர் எடுத்துக்காட்டு.

நம் பாரத நாட்டின் சநாதன தர்மத்தையும் வேத நெறிகளையும் கட்டிக் காப்பதில் அன்னையரின் பங்கு அளப்பரியது. ஒரு தாய் தன் குழந்தைகளை எப்படி வளர்க்கிறாள் என்பதில் தான் அக்குழந்தைகளின் எதிர்காலமே அடங்கி இருக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s