சோர்வைத் தள்ளிப் போடு!

சோர்வைத் தள்ளிப் போடு!
– வில்லியம் ஜேம்ஸ்

ijamesw001p1

ijamesw001p1

1906, ஏப்ரல் 18 காலை.
அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரம் பூகம்பத்தாலும் தீயாலும் விழுங்கப்பட்டுக் கொண்டிருந்த நேரம். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தனர்.

அந்த நகரில் நுழைந்த ஒரு புகை வண்டியில் ஒருவர் மட்டும் கூர்ந்த விழிகளுடன் பயணித்து வந்தார். அந்த எரியும் நகரில் அசாதாரண துணிச்சலுடன் நுழைந்தவர் வாட்டசாட்டமான வாலிபரா? இல்லவே இல்லை. பலவீனமான இதயத்துடன் போராடி வரும் 64 வயது இளைஞர் அவர்!

தீப்பிழம்புகளுக்கும், சரிந்து விழும் கட்டிடங்களுக்குமிடையில் கையில் குறிப்பேட்டுடன் அங்குமிங்கும் ஓடினார். பீதிமிக்க நகரவாசிகளிடம் கேள்வி கேட்கக்கூடிய எண்ணம், துணிச்சல் அவருக்கு எங்கிருந்துதான் வந்ததோ?

நிலநடுக்கம் ஏற்பட்டதும் நீங்கள் என்ன உணர்ந்தீர்கள்?

உங்கள் இதயம் வேகமாகத் துடித்ததா? இவ்வாறு மக்களைக் கேட்டு ஆராய்ந்த அந்த அறிஞர் யார்? பேராசிரியர் வில்லியம் ஜேம்ஸ் என்ற அதிசயப் பிறவிதான் அவர்.

மனதின் பதிவுகளை, அனுபவச் சுவடுகளை அலசிப் பார்க்க வேண்டும் என்ற ஆவலே வில்லியம் ஜேம்ஸ் என்ற சாதாரண ஆசிரியரை, தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவராக உயர்த்தியது. அனுபவம் சார்ந்த மனவியலின் தந்தை என்ற புகழுடன் ஒரு புதுமையான தத்துவவாதி என்றும் அவர் போற்றப்பட்டார்.

ஜேம்ஸின் போதனையின் உட்கரு, ஆளுமையின் இதயநாதம், பரீட்சித்துப் பார்! துருவிக் கண்டுபிடி! மாறு, மாற்று! வளர்ந்து கொண்டே இரு! என்பதுதான்.

ஏதாவது புதுமை செய், புத்தகம் எழுது, கடலைத் தாண்டு, புதிய வேலையை மேற்கொள், திசையை மாற்று என்றெல்லாம் கூறி சுயசார்பு, புதுமை படைக்கும் திறன் ஆகியவற்றைத் தன் நண்பர்களிடம் வலியுறுத்தினார் ஜேம்ஸ்.

ஜேம்ஸ் எழுதிய தத்துவ நூல் படிப்பதற்கு நாவல் போலிருக்கும். அவரது முதல் பெரும் வெளியீடான மனோ
தத்துவக் கோட்பாடுகள் என்ற நூலை அச்சிட்டு வந்தவர் அச்சு கோர்க்கும் முன்பே அதைப் பலமுறை படித்து ரசித்தாராம்.

உடல்நிலை இடம் தராத நிலையிலும் பொருளாதாரச் சுமை அழுத்தியபோதும் ஜேம்ஸ் தன்னை மறந்து கருத்துகளைச் சொல்லிக் கொண்டே போவார்.

செயல்களால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள்!
ஜேம்ஸின் ஒரு கண்டுபிடிப்பை நீங்கள் எளிதில் செய்து பார்க்கலாம். கண்ணாடி முன் நில்லுங்கள். உங்கள் கைகளை இரு மடங்கு இறுக்கி, கோபத்தில் கத்தி நீங்கள் யாரை அறவே வெறுக்கிறீர்களோ, அவரை மனக்கண் முன் நிறுத்தவும். உங்களுக்குள் கோபம் கொப்பளிக்கும்.

ஜேம்ஸ் கண்டுபிடித்த தத்துவம், ஓர் உணர்ச்சி உடல் வழியாக வெளிப்படும்போது உடல் அந்த உணர்ச்சியைத் தூண்டிவிடும். ஓரளவு மனோரீதியான காரணமும் இதற்கு உண்டு என்பது புரியும்.

நீங்கள் முஷ்டிகளை இறுக்கும்போது உங்கள் கைகளிலிருந்து மூளைக்குத் தாமாகவே சமிக்ஞைகள் சென்று நிலைமை மிக இறுக்கமாக உள்ளது. ஆபத்துக்குத் தயாராகிக் கொள் என்று கூறுகின்றன.

இதுபோல் சிரிக்கும்போதும் அழும்போதும் உங்கள் முகத்தின் தசைகளிலிருந்து மகிழ்ச்சியான அல்லது துயர் மிக்க சமிக்ஞைகள் மூளைக்குக் கிடைக்கின்றன.
ஆகவே நீங்கள் என்ன செய்கிறீர்களோ, அதுவே நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பதைக் காட்டும்.

சில மன நிலைகளுக்கும் உடல் செயல்பாடுகளுக்கும் தன்னிச்சையாக ஏற்படும் விளைவுகளைக் கொண்டு நாம் நமக்குள் விரும்பும் மனநிலைகளின் மூலம் செயல்பாடுகளை மாற்ற முடியும்.

IMGP0026

மகிழ்ச்சியாக இருப்பதை உணர, மகிழ்ச்சியாக அமருங்கள்; நாலாபக்கமும் சந்தோஷமாகப் பார்வையை வீசுங்கள் என்பார் வில்லியம் ஜேம்ஸ்.

அதுபோல் தைரியமாக இருப்பதை உணர, தைரியமாக இருப்பதாக நடந்து கொண்டு பாருங்கள் என்பார்.

களைப்புப் புள்ளியைப் பின்னுக்குத் தள்ளுங்கள்!
பலர் தினமும் களைப்படைகிறோமே, அதற்குக் காரணம் நாம் செலவழித்த சக்தியின் அளவால் அல்ல. மாறாக, நாம் ஒரு பணியில் அல்லது ஒரு செயலை முடித்ததும் களைப்படையும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். இவ்வாறு நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட வரையறையைக் களைப்புப் புள்ளி என்கிறார் ஜேம்ஸ்.

உண்மையான களைப்புப் புள்ளி நாம் சாதாரணமாகக் களைப்படையும் புள்ளிக்கு மேலேதான் இருக்கும்.

பொதுவாக, நாம் களைப்படைவதாக நினைப்பதையும், கூறுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளோம்.
அலுவலகம் 5 மணிக்கு மூடப்படுகிறது என்றால் நாம் தினமும் தள்ளாடி நடந்து பெரிதாகக் களைப்படைந்து விட்டதாகப் பிறரிடம் கூறிக் கொள்வோம். இதுவே நம்மைக் களைப்படையச் செய்கிறது.

பொதுவாக, மனிதர்கள் தங்களிடமுள்ள சக்தியில் மிகச் சிறிய பகுதியை மட்டுமே பயன்படுத்துவர். பெரும்பாலோர் நினைத்தால் தாங்கள் களைப்படைவதாக நினைக்கும் களைப்புப் புள்ளியைப் பின்னுக்குத் தள்ளி, புதிய களைப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

களைப்படையும் நேரம் வந்துவிட்டது என்று உணர்வதற்கு முன் ஒவ்வொரு நாளும் கூடுதலாக உழைத்தால் களைப்பு தெரியாமல் அதிக நேரம் உழைக்க முடியும்.

இரண்டாவது, மூன்றாவது, நான்காவது காற்றலை
ஒருவன் ஆழ்ந்த களைப்பின் ஊடே தொடர்ந்து வேலை செய்யும்போது ஒரு புத்துணர்வு பொங்கி வரும். அதை இரண்டாவது காற்றலை என்று வில்லியம் ஜேம்ஸ் குறிப்பிட்டு, அதன் மூலம் களைப்புப் புள்ளிகளைப் பற்றி அவர் தமது முடிவுக்கு வந்தார்.

அந்தக் காற்று ஒரு தடவைக்கு மேலும் எழும் என்று கூறி அதை மூன்றாவது காற்றலை, நான்காவது காற்றலை என்று குறிப்பிடுகிறார்.

அத்தகைய அலைகளின்போது நாம் சாதிக்கும் சாதனை சாதாரணமாகச் சொற்ப நேரத்தில் செய்வதைவிட மிகவும் சிறப்பாக இருக்கும். அத்தகைய தருணங்களில் நாம் மெய்மறந்து முழுமையைக் காண்கிறோம். இதே முறையில்
தான் ஜேம்ஸ் தடையின்றிப் பல மணி நேரம் எழுதினார்.

இரண்டு மூன்று நாட்கள் எவ்விதக் குறுக்கீடும் இல்லாமல் உள்ள நேரங்களில்தான் ஜேம்ஸ் எழுதும் பணியை மேற்கொள்வார். கதவைத் தாளிட்டுக் கொண்டு களைப்பை வெற்றி கொண்டு அவர் எழுதி எழுதிக் குவிப்பார்.

குறுக்கீடு வந்தால் மீண்டும் உற்சாகம் பெற நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியிருப்பதால் தடையின்றி எழுதும் இப்பழக்கமே அவருக்குக் கை கொடுத்தது.

வேலை சக்தி ஊட்டுகிறது!
எந்த முயற்சியிலும் நீங்கள் கடினமாக உழைத்தால் புது உற்சாக ஊற்றுகள் பெருக்கெடுக்கும். வாழ்வின் பல தொடர்பில்லாத பிரச்னைகளைக்கூட அவை தீர்த்து வைக்கும். வேலையோ, விளையாட்டோ, எதிலும் ஆழ்ந்த முயற்சியானது உங்களுக்குத் தேவைப்படும் உபரியான ஆற்றல்களை உருவாக்கித் தரும்.

அதற்கு மாறாக, ஓய்வு என்ற பெயரில் சற்றுத் தளர்ச்சியடைந்து விட்டாலும் மீண்டும் புத்துணர்வு பெற்றுப் பழையபடி பணிக்குத் திரும்புவது மிகவும் கடினமாகிறது.
இதை அனுபவத்தில் ஜேம்ஸ் உணர்ந்தார். அவர் தமது குறிப்பேட்டில் தான் ஒரே சமயத்தில் மாற்றி மாற்றி புவியியல், எலக்ட்ரோ டைனமிக்ஸ், பிரெஞ்சுப் புரட்சி, சம்ஸ்கிருதம் ஆகியவற்றைப் படித்ததாகக் குறிப்பிட்டார்.

உங்கள் குணத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்!
ஒவ்வோர் உடல்துடிப்பும், வெளி உலகுடன் ஆன தொடர்பும் மூளையிலுள்ள 10,000 மில்லியன் செல்களில் ஒரு நிரந்தரமான சுவட்டைப் பதிக்கிறது என்ற தத்துவத்தை முதலில் சுட்டிக்காட்டிய மனோதத்துவ விஞ்ஞானிகளில் வில்லியம் ஜேம்ஸ் முக்கியமானவர்.

இப்பதிவுகள் மூளையில் நிரந்தரமாகப் படுவதாலும், தொடர்ந்து குவிந்து வருவதாலும், அவற்றின் மொத்த உருவே நமது ஆளுமையாகவும், குணாதிசயமாகவும் உருவெடுக்கின்றன. இதைக் காட்டி, இந்த ஆற்றலைத் தொடர்ந்து நாம் பெருக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

மூளையிலுள்ள செல்களில் மின்அலைகள் பாய்ந்து நடக்கும் நிகழ்ச்சிகளையெல்லாம் அவை பதிவு செய்து கொள்கின்றன. எந்த அளவு ஒரு செயலைத் தொடர்ந்து செய்கிறோமோ, அந்த அளவு பதிவுகள் அதிகமாகவும், பரவலாகவும் ஏற்படுகின்றன. ஆகவே, நம் மூளையில் நற்பதிவுகளை ஏற்படுத்திக் கொள்வது ஒரு நல்ல காப்பீடு.
Remove-the-tag
கூரிய நோக்கு, ஆற்றல் மிக்க மனோபலம், தன்னை மறந்த நிலை ஆகிய நற்பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்ட ஒருவன், தன்னைச் சுற்றிப் பிறர் காற்றில் பதர்போல் திரியும் போது, தான் மட்டும் மலைபோல் மிக உறுதியாக நிற்கிறான்.

கெட்ட பழக்கத்தை முறிப்பது எப்படி?
ஜேம்ஸின் சிந்தனைகளில், தீய பழக்கத்தை வெல்வதற்கான அவரது அறிவுரை முக்கியமானது. திடீரென இடையில் ஒரு பழக்கத்தை நிறுத்திவிடவும். அதைப் பற்றி எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டும். அதில் விதிவிலக்கோ, சாக்கு போக்கோ கூடாது.

புதிய பழக்கத்தைத் திடீரென ஏற்படுத்திக் கொள்வதே மிகச் சிறந்த வழி என்பதை அறிஞர் யாரும் ஒப்புக் கொள்வர். ஆனால் அது முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டியது மிக அவசியம். எந்தப் பழக்கத்தையும் பட்டினி போட்டால் அது மடிந்துவிடும் என்பார் ஜேம்ஸ்.

நமது நல்ல பழக்கங்கள் வலுப்பட வலுப்பட, நமது செயல்பாடும் செம்மைப்படும். இதற்காகவே ஜேம்ஸ் நாம் நமது பழக்கங்களைத் தொடர்ந்து மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என உணர்ந்தார். அப்போதுதான் அவற்றை எந்த இடத்தில் மாற்ற முடியும், எங்கு மேலும் திறனுள்ளவையாக ஆக்க முடியும் என்பதை அறியலாம்.

தினமும் கடினமானதைச் செய்யுங்கள்!
நம் கவனத்தைப் பல திசைகளில் மேயவிட்டுவிட்டால் அது எப்போதும் அவ்வாறு அலைந்து திரியும். இதற்காகவே நாம் நமக்குள் முயற்சிக்கும் திறனை, தினம் பயிற்சி செய்வதன் மூலம் உயிரோட்டமுள்ளதாக வைத்திருக்க வேண்டும்.

சாதாரண விஷயங்களில்கூட வீரத்தையும் தியாகத்தையும் காட்டுங்கள். ஒவ்வொரு நாளும் ஒன்றுமே செய்யாமல் இருப்பதை விடுத்துக் காரணமிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு செயலைச் செய்து வந்தால் தேவைப்படும்போது அச்செயலைச் செய்ய வேண்டிய தருணம் வரும்போது எவ்விதப் பயிற்சியுமின்றி அனாயாசமாகச் செய்ய முடியும்.

குறுகிய காலத்தில் நல்ல மனத்தூண்டல்களை உரிய செயல்களாக மாற்றிக் கொள்வதை ஜேம்ஸ் வலியுறுத்துகிறார். ஒரு தீர்மானம் அல்லது ஒரு நல்ல எண்ண அலை பளிச்சிடும் போது அதைச் செயல்படுத்தாமல் ஆவியாகும்படி விட்டு விட்டால் ஒரு வாய்ப்பை நழுவ விடுவது போலாகும்.

கொஞ்சம் கவலையும் தேவைதான்!
ஒரு துளி கவலை நமக்குத் தேவைதான். செயலற்றுக் கிடக்கும் மூளையின் அணுக்களை அது தட்டி எழுப்புகிறது. அந்தக் கவலைதான் கவனத்தை உச்சநிலைக்குக் கொண்டு சென்று, செயல்திறனைப் பெருக்கும், மூளையில் நாம் இட்டு எழுப்பும் பல கருத்துகள் மூலம் கற்பதை எளிதாக்கும்.

இறுக்கம் என்றதும் மனதைச் சுருக்கிக் கொள்ளாத ஜேம்ஸ், அந்த இறுக்கம் தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் கவலையுடன் ஒட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுமாறு கூறுகிறார்.

ஒவ்வொரு பத்திரிகையையும் வெளிக்கொண்டு வரும் போது பகலில் நரம்புத் தளர்ச்சியாலும் இரவில் தூக்கமின்மையாலும் அவதிப்படுவதாக ஒரு பத்திரிகை அதிபர் கூறியபோது, வில்லியம் ஜேம்ஸ் இந்த அறிவுரையை வலியுறுத்தினார்:

ஒரு செப்படி வித்தைக்காரரைப் பாருங்கள். காற்றில் பத்து பன்னிரண்டு பொருள்களை மேலே எறிந்து ஒவ்வொன்றையும் கணத்தில் கவனமாகப் பிடித்து மீண்டும் எறியும்போது அவர் எவ்வளவு லாவகமாகப் பிடித்து, இயல்பாகவும் இருக்கிறார். அவர் மனதில் சிறிது கவலை வந்தாலும் அவரால் இந்த வித்தையைச் செய்ய முடியாது.

இதுபோல பல காரியங்களைச் செய்யும்போது நாமும் சற்றும் இறுக்கமோ, கவலைவோ இன்றி லாவகமாகச் செய்ய வேண்டும்.

மாணவன் தனது ஆர்வத்தைத் தணித்துக் கொள்வதற்காகக் கற்கும்போது அவனது அனாயாச ஈடுபாட்டின் மூலம் வெற்றிகரமாகக் கல்வி கிட்டுகிறது என்ற நவீனக் கல்வியாளர்களின் கருத்தில் வில்லியம் ஜேம்ஸ் முழுமையான இணக்கம் காட்டவில்லை.

கல்வியின் ஒவ்வொரு படியும் ருசிகரமாக இருக்கும் என்று கருதுவதில் அர்த்தமில்லை. தனது தேவையற்ற பயத்தைக் கண்டு மாணவன் வெட்கப்பட வேண்டும். அவனது போர்க்குணமும் பெருமையும் விழித்தெழ வேண்டும். கஷ்டமான இடங்களில் உள்ளூரக் கோபம் கொண்டு அவன் காலை முன் வைக்க வேண்டும். ஒழுக்க நெறியில் இது முக்கிய திறனாகும். அத்தகைய சூழலில் அவன் பெறும் வெற்றி அவனது ஒழுக்கப் பாதையில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்கிறார் வில்லியம் ஜேம்ஸ்.

வில்லியம் ஜேம்ஸ், விவேகானந்தரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். அவர் தமது நூல் The Varieties of Religious Experience-ல் சுவாமிஜியின் கருத்துகளை அதிக அளவு மேற்கோள் காட்டியுள்ளார்.
– Newsweek பத்திரிகையின் எழுத்தாளர் Ann Louise Bardach

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s