நம்பிக்கை தியானம்

நம்பிக்கை தியானம்
Source: Sri Ramakrishna Vijayam

“நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை. உங்களிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை. இதுவே மகிமையின் ரகசியம்” என்றார் சுவாமி விவேகானந்தர்.
Dy4_5
எதில் நம்பிக்கை வைக்கிறோமோ, அதுவாகவே நாம் மாறுகிறோம். ஆனால் எதை நிரந்தரமாக நம்புவது என்பதை நன்கு புரிந்துகொள்ளவே இந்த தியானம்.

இதை உணர்ந்திட கண்களை மெல்ல மூடுங்கள். மனதைக் கவனமாகப் பின்னோக்கிச் செலுத்துங்கள்.

சுகம் நமக்குத் தரும் என்று சிறுவயதில் நாம் எத்தனையோ பொருள்களை நம்பியிருந்தோம்! விளையாட்டுப் பொருள்களே இன்பம் தரும் என நம்பினோம்.

விரும்பியது உண்டால்தான் உண்டு ஆனந்தம் என்று நம்பினோம். சுகம் அடைந்தோம். இப்படி பலப் பல சுகங்களை அனுபவித்தோம். ஆனால் நிறைவானதா நம் நெஞ்சம்?

நாட்கள் நகர, நகர பொருள்கள் தரும் இன்பம் குறைவே என்று கண்டோம். பொருள்கள் மீதே நம் கவனம் போகும்போது நாமே ஒரு பொருளாக – ஜடப்பொருளாக மாற ஆரம்பித்தோமே!
சுவாமி விவேகானந்தர் எச்சரித்தது நினைவிற்கு வருகிறது:
“நாமாக, நமது மனதைப் பொருள்களின் மீது வைக்க வேண்டுமே தவிர, அப்பொருள்கள் நம் மனதைத் தம் பக்கம் இழுக்கக் கூடாது.”

பக்தர்களே, ஒரு தாளில் – எதுவெல்லாம் உங்களைக் கவர்ந்திழுத்து நிம்மதியைக் கெடுக்கிறதோ, அது பணமோ, பொருளோ எதுவானாலும் – அவற்றை ஒவ்வொன்றாக எழுதுங்கள்.

இப்படிச் சிந்தித்தால் உங்களுக்குள் சத்புத்தி ஸ்புரிக்கும். எந்த அளவிற்குப் பொருளுக்கு மதிப்பு தருவது என்பது புரிய ஆரம்பிக்கும்.

பொருளையும் பணத்தையும் முறையாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். அதன் பின்னே அலையாதிருந்து அவற்றுக்குரிய மரியாதையைத் தர வேண்டியதை உணர ஆரம்பித்தோம்.

இப்போது கை குவித்துக் கடவுளுக்கு நன்றி கூறுங்கள்:
(உரக்கக் கூறுங்கள்) “இறைவா, பொருள்களோ, பணமோ எனக்கு வேண்டிய மன அமைதியை வழங்க முடிவதில்லை. பொருள் பற்றுள்ள தீவிர மனநிலையிலிருந்து என்னை மீட்டு, என் மனம் உன்னிடத்தில் நிலைத்திட அருள்வாய்.”

இப்போது மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். பொருள் மற்றும் பணத்தின் பிடியிலிருந்து உங்கள் மனம் விடுபட்டதாக பாவனை செய்யுங்கள். அது உண்மையாகும்.

பிறகு மனதைப் பின்னோக்கித் திருப்புங்கள்.

தாய் தந்தை மீது நம்பிக்கை
சிறுவயதில் அன்னை, தந்தை, ஆசிரியர், உறவினர் என்று எத்தனையோ பேர் நமக்கு நம்பிக்கை தந்தார்கள். அவர்கள் இல்லாமல் நம் வாழ்வே இருண்டுவிடும் போலிருந்தது. அன்று அவை யாவும் உண்மையே.

முதலில் தாயையே நம்பித் தவழ்ந்தோம். சற்று வளர்ந்ததும் நம்மிடம் நம் தாயே, மகனே, நீ தனித்து நில், அப்போதுதான் முழுமையாக வளர்வாய் என்று உணர்த்தினாள்.

அதைக் கேட்கவே சிரமமாக இருந்தது. என்றாலும் நம் தாய் விரும்பியது நம் வளர்ச்சியையே. இதைப் புரிந்து கொண்டபோது புது நம்பிக்கை பிறந்தது.

தந்தையும் ஒரு நாள், மகனே, மகளே, நீ பக்குவமாக வளர்வதற்கு, கண்ணைத் திறந்து பார். எண்ணற்ற நம்பிக்கை நாயகர்கள் இருக்கிறார்கள், அவர்களைத் தேடிப் பிடி என அவரும் நம்மைத் தூண்டினார்.

நமது ஆசிரியரும், நீ உனக்குள் நம்ப வேண்டியதை இன்னும் நம்பவில்லையே என நம்மிடம் கேட்டார். ஏதோ புரிய ஆரம்பித்தது.

நண்பர்கள் மீதான நம்பிக்கை
பின் நண்பர்களை, தோழிகளை நம்பினோம். நலம்தான் பெற்றோம். ஆனால் காலப்போக்கில் அவர்களது தோள்களில் சாய்வதற்கு வேறு பலரும் வந்தனர். அல்லது பத்தோடு பதினொன்று என்று நாம் ஆனோம்.

அதனால் நாம் தனித்து விடப்பட்டதாக நம்பினோம். திடீரென வாலிப உற்சாகத்தை நம்ப ஆரம்பித்தோம். சிரித்தவர்களை எல்லாம் சிநேகம் பிடித்தோம்.

இந்திரியங்களுக்கு இன்பம் சேர்ப்பவர்கள் என்றும் ஆனந்தம் தருவார்கள் என்று நம்பினோம்!

வாலிப வேகத்தில் மாதா, பிதா, ஆசிரியர் இவர்கள் எல்லாம் முக்கியமற்றவர்களாகப் போவதாக எண்ணினோம்.
வாலிப சேஷ்டைகளில் சில காலம் சிக்கியதாகவும் நம்பினோம். பிறகு உடலும் உள்ளமும் வேகம் தளர்ந்தபோது பாதையில் தடுமாறியதாக நம்பினோம்.

எத்தனை எத்தனை ஏமாற்றங்கள் என்றெல்லாம் புலம்பினோம்.
பிறர் பின்னே அலைந்து அலைந்து, அவர்களுக்கு ஏற்றபடி வேடமிட்டு, நம் முகமூடியை மாற்றி மாற்றி, நம் சொந்த முகத்தையே மறந்துபோனோமே.

பொய்யாகச் சிரித்து, சுகமாக இருப்பதாக நம்பினோம்; பிறரையும் நம்ப வைத்தோம்.

பக்தர்களே, இப்போது மேற்கூறிய தாளில், யாரெல்லாம் உங்கள் மனதைச் சிதறடிக்கிறார்களோ, யாரெல்லாம் உங்களை வசை பாடினார்களோ, யாருடைய அன்பிற்காக உங்கள் மனம் ஏங்குகிறதோ அவர்களின் பெயர்களை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு ஒரு கணம் மௌனமாக இறைவனை வேண்டுங்கள்:
“ஆண்டவா, யாரெல்லாம் என் மனதைக் காயப்படுத்தினார்களோ, அவர்களை நீங்கள் மன்னித்துவிடுங்கள். அவர்கள் எனக்கு ஏற்படுத்திய காயங்களை என் மனதிலிருந்து நீக்கிவிடுங்கள். அதுபோல், தெரிந்தோ, தெரியாமலோ என்னால் பிறருக்கு ஏற்பட்ட மனக் கசப்புகளைப் பிறரும் மறந்திடுமாறு அருள் புரியுங்கள்.”

“இனி யாரையும் நான் வெறுக்கவில்லை. நான் யாரையும் வீணாகச் சார்ந்திருக்கவும் விரும்பவில்லை. யாரையும் வீணே நம்பி நான் ஏமாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். என்னையும் வீணாக நம்பி யாரும் ஏமாறாதிருக்க அருளுங்கள்.”
இந்தப் பிரார்த்தனையை நெஞ்சம் உருகிச் சொல்லும்போது உங்கள் நெஞ்சில் நிம்மதி பிறக்கிறது.

நம் நிஜ சொரூபத்தின் மீதான நம்பிக்கை
வாழ்க்கையில் நிரந்தரமாக நாம் யாரை நம்புவது? என்ற நீண்ட தேடலின்போது, ஜகத்குருவான சுவாமி விவேகானந்தரிடமிருந்து ஒரு திவ்யவாணி நமது காதுகளில் விழுந்தது:
“உன்னை நீ நம்பு; நீ எதையும் சாதிக்க முடியும்; எல்லா ஆற்றல்களும் உனக்குள் இருக்கின்றன.”

“சரி” என நம்பத் தொடங்கினோம், நம்மை நாமே.

நம் படிப்பை, நம் திறமைகளை, நம் நல்ல குணங்களை, நம் சேவையுள்ளத்தை – என்றெல்லாம் ஒவ்வொன்றாக நம்பினோம். அதன் பலனாய், வெற்றி வந்தால் அதைத் தொடர் வெற்றியாக்கினோம். தோல்வி வந்தாலோ, அதிலிருந்து புதுப் புதுப் பாடம் கற்றோம்.

வெற்றி – தோல்வி மாறி மாறி வந்தாலும் தன்னம்பிக்கையில் திளைத்தோம்.
Dy4_3
தன்னம்பிக்கையால் மக்கள் நம்மை மதிக்க ஆரம்பித்தார்கள். நாமும் மக்களை சரியான முறையில் நம்ப ஆரம்பிப்போம்.
சுவாமி விவேகானந்தரை விடாமல் வாசித்தோம். அவரது அருளால் சிந்தனையில் ஒரு புது நம்பிக்கை உதித்தது.

“நீ தெய்விகமானவன். அதுவே உன் சொரூபம்” என்றார் அவர்.

நமக்குள் உள்ள தெய்விகத்தை அடைவதற்குச் சுய முன்னேற்றம் ஒரு படிக்கட்டு என்று புரிந்து கொண்டோம்.

அதோடு, என் சுய முன்னேற்றமே என் தெய்விக சொரூப வளர்ச்சியாகிவிடுமா? என்ற சிந்தனையும் உதித்தது நம்முள்.

ஒருவரது நிஜ சொரூபத்தை தியானிப்பதே மெய்யான பக்தி என்றார் பகவத்பாதர் ஸ்ரீசங்கரர். அதன்படி நாம் நமது தெய்வத் தன்மையை நம்ப ஆரம்பித்தோம்.

திடமான தெய்வ நம்பிக்கை நம்முள் எழுந்தது. நாம் பக்தர்கள் ஆனோம். இறைநாமத்தை நம்பிக்கையுடன் ஜபித்தோம், நெஞ்சம் தித்தித்தது.

தியானித்தோம், தெய்வ சிந்தனை திடமானது. பகவத் சேவை புரிந்தோம். பாரமெல்லாம் நம் மனதிலிருந்து நீங்கின.

அகத்தில் அமைதி தோன்றியது. செய்யும் வினைகள் யாவும் நல்வினைகளாயின. உலகிற்கு நீங்கள் ஒரு வரம் என உத்தமர்களின் ஆசிகள் நம்மிடம் சேர ஆரம்பித்தன.

இறைவனுக்கு நம் மீதான நம்பிக்கை
திடீரென ஒரு நாள் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதக் குரல் நம் அகத்துள் ஒலிக்கிறதே!
“எத்தனை காலம்தான் சர்க்கரையைச் சுவைப்பது? நீயே சர்க்கரையாக மாறுவது எப்போது?” என்று!

Dy4_4
உனக்குள் பார். வெள்ளிச் சுரங்கமும் பின் தங்கச் சுரங்கமும் அதன் பிறகு வைரச் சுரங்கமும் உள்ளது தேங்கி நிற்காதே, தொடர்ந்து முன்னேறு என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

இதன் மூலம் நான் பக்தன்; நான் தெய்வத்தை நம்புபவன் என்ற வளர்ச்சியே முழு வளர்ச்சியாகி விடுவதில்லை என்பதைப் புரிந்து கொள்கிறோம்.

‘வ்யஷேம தேவஹிதம் யதாயு: – தேவர்களுக்கு நன்மை செய்யும்படி நாம் வாழ வேண்டும் என்கிறதல்லவா உபநிஷதம்?

நீங்கள் பகவானை நம்புவதில் பெருமை உண்டு.

அந்தப் பெருமை சாஸ்வதமாக வேண்டுமானால் பகவான் உங்களை நம்ப வேண்டும். பகவான் உங்களை நம்பி, தெய்விகக் காரியங்களைச் செய்வதற்கு அருள வேண்டும்.

பக்த பிரஹலாதனின் பக்தியை மெச்சி, ஸ்ரீநரசிம்ம பெருமாள் “நானாக வளர்க நீ” – “என்னைப் போல் நீயும் ஆகிவிடு” என்றாரே, அதுபோல் ஆசி நமக்கும் கிடைக்கும் என்று இன்று முதல் நம்புவோம்.

கண்களை மூடி ஆழ்ந்த உணர்வுடன் இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்:
ஸ்ரீராமகிருஷ்ண தேவனே, நரசிம்ம பகவானாகத் தாங்கள் அவதரித்து பக்த பிரகலாதனுக்கு உரைத்தபடி, எங்களிடமும் கூறுங்கள்.

தாங்கள் எங்களது முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டதை எங்களுக்கு எப்படியாவது புரிய வையுங்கள். தாங்கள் நிச்சயம் எங்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறோம். இது எங்கள் நம்பிக்கை மட்டுமல்ல;

“நீங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்” என்பதை நம்புங்கள் என்று சுவாமிஜியும் கூறினாரே, அவரது அந்த அருளுரையை நம்புகிறோம். அந்த நம்பிக்கையை எங்கள் நெஞ்சங்களில் நிறைத்திடுங்கள் தெய்வமே!

பக்தர்களே, இப்போது எழுந்து நின்று எல்லாப் பக்கங்களிலும் உங்கள் வாழ்க்கைக்கான நம்பிக்கைகள், உங்கள் அகத்திலும், புறத்திலும் இருப்பதாக நம்புங்கள்.

தியானத்தில் பெற்ற இந்த நம்பிக்கை ஆனந்தத்தை உங்களது எல்லாக் காரியத்திலும் கொண்டு வாருங்கள்.
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s