யோகா

யோகா
– சுவாமி விமூர்த்தானந்தர்

அவனுக்கு அடித்தது யோகம் என்று ஒருவரைப் பற்றிப் பலர் கதை பேசுவார்கள்.
யோகம் கைகூடி வருகிறது என்பர்.
இங்கு யோகம் என்பது அதிர்ஷ்டம் என்ற பொருளில் சொல்லப்படுகிறது.

சித்தயோகம், அமிர்தயோகம், மரணயோகம் என்று காலண்டரில் கண்டிருப்பீர்கள்.
இவை தவிர, இன்றைய நவீன உலகில் லாப்பிங் யோகா, ஸ்லீப்பிங் யோகா என்று யோகங்கள் வளர்ந்துகொண்டே போகின்றன.
இவ்வாறு நம் அன்றாட வாழ்வில் யோகம் என்ற சொல் பல்வேறு காலங்களில், பல்வேறு முறைகளில் பயன்பட்டு வருகின்றது.

பொதுவாக யோகம் என்று நம்பப்படுவது ஆசனங்கள் மட்டுமே. யோகாசனங்கள் என்பது யோகம் என்ற உயர்ந்த வாழ்க்கைத் தத்துவத்தின் ஒரு கூறு, அவ்வளவே. அதாவது உடலையும் மனதையும் யோகத்திற்காக ஆயத்தப்படுத்தும் ஆரம்ப நிலைகள்.

வெறும் கை, கால்களை மடக்கி, முறுக்கேற்றி வைப்பதோ அல்லது விறைத்து உட்கார்ந்து மூச்சை ஆழமாக விடுவதோ மட்டும் யோகமல்ல என்பார் ஆதிசங்கரர்.

ஆசனங்கள் மட்டுமே யோகமா?
ஒரு முறை தென்கச்சி சுவாமிநாதன் ஓர் ஆசனப் பயிற்சி முகாமிற்குச் சென்று உரையாற்ற வேண்டியிருந்தது. முதலில் அங்கிருந்த மாணவர்கள் பலவித ஆசனங்களைச் செய்து காட்டினர்.

கை உயர்த்திச் சில ஆசனம், ஒற்றைக்காலில் நின்று மற்றொரு ஆசனம் என்று பலவற்றைச் செய்து காண்பித்தார்கள் மாணவ-மாணவிகள்.
எல்லாவற்றையும் கவனித்த தென்கச்சி சுவாமிநாதன் முத்தாய்ப்பாக அவர்களிடம் ஒன்றைக் கூறினார்.
அன்பர்களே, ஆசனங்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. உங்களுக்கு நான் என்ன அறிவுரை சொல்லப் போகிறேன் என்றுதான் நினைத்தேன். ஆனால், நீங்கள் செய்த ஆசனங்களை எல்லாம் பார்த்த பிறகு இவை எல்லாம் நானும் தினமும் செய்து வருகிறேனே என்பது புரிந்தது……

கூட்டம் வியப்பாகக் கேட்டது.
பிறகு தென்கச்சி சுவாமிநாதன் தனக்கே உரிய நகைச்சுவையுடன், ஆம் நம்புங்கள், காலையில் ஆபீஸ் போகும் அவசரத்தில், கூட்டத்தில் மாநகர பஸ்சில் நான் தொங்கிக் கொண்டே, ஒரு கால் மட்டுமே ஊன்றுவதற்கு இடம் கிடைத்து, பிறர் தள்ளினாலும் நிமிர்ந்து நிற்கும் நான்கூட ஆசனம் செய்கிறேன்…
சுற்றிப் பலரும் என்னை அழுத்தும்போதும் நான் என் சுவாசத்தைக் கவனிக்க முடிவதைப் பார்த்தால் நானும் பிராணாயாமம் செய்கிறேன்… என்று முடித்தார்.
கூட்டம் சிரித்தது. கூடவே ஆசனங்கள் மட்டுமே யோகம் அல்ல என்பதை எவ்வளவு அழகாகக் கூறிவிட்டார் பாருங்கள்!

யோகம் என்ற பதம் பல்வேறு பொருள்களைக் கொண்டது; ஆழமாகச் செல்லச் செல்ல, அநேக அர்த்தங்களைத் தரத்தக்கது-ஆன்மாவைப் போல.

நான்கு யோகங்கள்
பொதுவாக, எதையும் ஆராய்பவன், எளிதில் உணர்ச்சி வசப்படுபவன், எதையும் மனதால் பார்ப்பவன், செயல்புரிபவன் என்று நான்கு வகை மனிதர்கள் உள்ளனர். அவர்களுக்குத் தக்கபடி யோகங்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
காரியங்களைக் கனகச்சிதமாகச் சுயநலமின்றி பொது நலத்திற்காகச் செய்தால் அது கர்மயோகம்.
yoga-kitefest-india
யோக: கர்மஸு கௌசலம் யோகம் என்பது செயல்களில் நேர்த்தி என்கிறது பகவத் கீதை.

ஊருக்கு உழைத்திடல் யோகம் என்று கீதை உரைத்ததை மக்களுக்கு உறைக்குமாறு எடுத்துரைத்தார் மகாகவி பாரதி.
யோக: சித்த வ்ருத்தி நிரோத: – யோகமானது சித்தத்தில் தோன்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது என்கிறது பதஞ்சலி யோக சூத்திரம்.

யோகஸ்ய ப்ரதமம் த்வாரம் வாங்நிரோத:- வாக்கைக் கட்டுப்படுத்துவது யோகத்தின் முதல் நிலை என்கிறார் ஆதிசங்கரர் தமது விவேக சூடாமணியில்.

நமது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் ஒரு சேரத் திரட்டி, ஓர் இஷ்டதெய்வத்திடம் குவித்து, அவருக்காகவே நம் ஐம்புலன்களின் காரியங்களைத் திருப்புவதே பக்தி யோகம்.

நாம் நமது உடல் ரீதியான, மனரீதியான, புத்தி ரீதியான வாழ்க்கையை மட்டும், அவை தரும் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் பற்றிக்கொண்டு மட்டும் வாழ்ந்தால் போதுமா?
அதற்கு மேல் அல்லது அதன் அடியாழத்தில் உள்ள ஞானப்பெட்டகமாக உள்ள நம் உண்மை நிலையை – சைதன்ய நிலையை அறிய வைப்பது ஞான யோகம்.

அந்த உண்மை நிலையை உடல் தவம், மனத்தவம் செய்து மூச்சுக் காற்றான பிராணனை அடக்கி அதன் மூலம் ஆன்மாதான் நாம் என்பதை உணர்த்துவது ராஜ யோகம்.

இணைவதே யோகம்
யோகம் என்ற பதம் யுஜ் என்ற வேர்ச் சொல்லிலிருந்து வருவது. யுஜ் என்றால் இணைவது என்று பொருள்.
இணைய வேண்டியவற்றுடன் இயைபாக இணைந்தால் இன்பம் உண்டு என்பது யாருக்குத்தான் தெரியாது.
ஆனால் மனிதன் எவற்றோடு இணைய வேண்
டும் என்பதில்தான் அடிப்படை ஆன்மிகம் உள்ளது.

இன்றைய மனிதன் பிளவுண்டு, சிதறுண்டு, ஒற்றுமையின்றி வேறுபட்டு இருக்கிறான்.
யாரும் இருக்க வேண்டிய இடத்தில், இருக்க வேண்டிய விதத்தில் இருந்தால் எல்லாம் சௌக்கியமே என்று கருடன் பாம்பைப் பார்த்துச் சொன்னது மிகச் சரியானது.

மனிதன் பிளவுபட்டிருப்பது லௌகீக வாழ்க்கை வாழும்போது தெரிந்து கொள்வதைவிட, அவன் ஆன்மீக வாழ்க்கை ஆரம்பித்துச் செயல்படும்போது சுலபமாகப் புரிய ஆரம்பிக்கிறது.

மனிதனின் இந்தப் பிரச்னையை பட்டினத்தார் தமது வார்த்தைகளில் துல்லியமாகக் கூறுகிறார் :
கையொன்று செய்ய விழிஒன்று
நாடக் கருத்து ஒன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாஒன்று
பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவி ஒன்று
கேட்க விரும்பும் யான்
செய்கின்ற பூசை எவ்வாறுகொள்
வாய்வினை தீர்த்தவனே.

மனிதன் பிரிந்து கிடக்கிறான், மீண்டும் அவன் ஒன்றுபட வேண்டும். யாருடன்? எதனுடன்?
மனிதன் முதலில் தனக்குத் தானே இணக்கமாக இருக்க வேண்டும். அவனது அறிவு ஒன்று கூறும்போது மனது வேறொன்றைச் செய்ய வைக்கும்போதுதான் அவன் தவறுகளைச் செய்கிறான். தான் செய்வதுதான் சரியென்று வாதாடுகிறான்.
அப்போது அப்படிப்பட்ட மனிதன் தானே தனக்கு எதிரியாக, ஆன்மிக வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருக்கிறான். தானே தனக்கு நண்பன், தானே தனக்கு எதிரி என்று கீதை கூறுவது இதைத்தான்.

அடுத்து, மனிதன் இணக்கமாக மற்ற மனிதர்களிடமும் இயற்கையுடனும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இதை மறக்கும்போது அவன் தனித்து விடப்படுகிறான்.
வாழ்க்கையில் எந்த உயர் நோக்கமும் இல்லாதவனாக, தனக்குத் தானே ஒரு சுமையாக இருந்து மறைகிறான். சுயநலவாதியாகிப் பூமிக்குப் பாரமாகிறான். பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற கருத்தில்லாமல் சீரழிகிறான்.

“நன்மை செய்; நல்லவனாக இரு. இதுவே சமய வாழ்வின் சாரம்” என்பார் சுவாமி விவேகானந்தர். இப்படி வாழ்வதற்குத்தான் கர்மயோகம் பயில்வது மிக அவசியமாகிறது.

இணக்கமே யோகம்
மனிதன் தனக்குள் இணக்கம், பிறருடன் இணக்கமாக இருத்தல் அவசியம். இதற்கடுத்தாற்போல் மிக முக்கியமாக, அவன் இறைவனோடு அதாவது இறைத்தன்மைகளுடன் இணக்கமாக இருக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்கிறான்.

அப்போது அவனுக்குள் தான் எங்கிருந்து வந்தோமோ, யாரிடமிருந்து வந்தோமோ அவருக்கு உகந்தவராக இருக்க வேண்டியதுதான் தன் முழு வாழ்க்கையின் லட்சியம் என்பதை உணர ஆரம்பிக்கிறான். அப்போது அவனுக்கு 100 சதவிகித ஆன்மிக வாழ்க்கை ஆரம்பமாகிறது.

சகுணக் கடவுளை ஏற்றுக் கொள்பவர்கள் தாங்கள் பகவானிடமிருந்து பிரிந்திருப்பதை உணர்வார்கள். பக்தன், பக்தியோகத்தின் மூலமாகவோ, கர்மயோகத்தின் மூலமாகவோ பகவானிடம் மீண்டும் சேர்வதையே தனது ஆன்மிகச் சாதனையாகச் செய்கிறான்.

செய்ய வேண்டிய பொதுநலம் கொண்ட செயல்கள், கடமைகள் இவற்றின் மூலம் ஒருவன் தனது தெய்வ நிலையைத் திரும்ப அடையும் மார்க்கம்தான் கர்மயோகம்.

தனது இஷ்டதெய்வத்திடம் தனது பக்தியையும் அன்பையும் நிஷ்டையையும் செலுத்தி, ஒருவன் தனது தெய்வ நிலையைத் திரும்பப் பெறுவது பக்தி யோகம்.

தெய்விகக் குழந்தைகள் நாம்
இந்து சமய சாஸ்திரங்களின் சாரமாக சுவாமி விவேகானந்தர், மனிதனைப் பற்றிய அறிவியல் ரீதியான, உளவியல் ஏற்றுக் கொள்ளும் நடைமுறை சாத்தியமுள்ள அடிப்படை ஆன்மிக உண்மைகளைச் சில வாக்கியங்களிலேயே கூறுகிறார்:
“ஒவ்வோர் ஆன்மாவும் உள்ளடங்கிய தெய்வீகம் நிறைந்தது. புற மற்றும் அக இயற்கையை அடக்குவதன் மூலம் இந்த அக தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே நோக்கம். செயல் அல்லது வழிபாடு அல்லது பிராணனைக் கட்டுப்படுத்துதல் அல்லது தத்துவ ஆராய்ச்சி-இவற்றுள் ஒன்றாலோ, பலவற்றாலோ எல்லாவற்றாலுமோ இதனைச் செய்து சுதந்திரனாக இரு.” இதுவே மதத்தின் முழு உண்மை. கொள்கைகளும் கோட்பாடுகளும், சடங்குகளும் சாஸ்திரங்களும், கோயில்களும் உருவங்களும் இரண்டாம் நிலையிலுள்ள விளக்கங்களே.

சகுணக் கடவுளை ஏற்காத, நிர்க்குண பிரம்மனையோ, இயற்கையையோ பரம்பொருளாக ஏற்றுக் கொண்டவர்களும் தாங்கள் மீண்டும் தங்கள் மூலத்தை அடையத் துடிப்பார்கள்.
அவர்களுக்கான யோகங்களாக ஞான யோகமும், ராஜயோகமும் விளங்குகின்றன.

மனத்தை அடக்கி அதன் மூலம் ஒருவன் தனது உண்மையான நிலையை உணர்வது ராஜயோகம்.
ஞான யோகத்தின் மூலம் எது நிரந்தர உண்மையானது, எது தோன்றி உண்மைபோல் காட்டுவது என்பதைத் தனது விவேகத்தால் கண்டு ஆராய்ந்து நித்தியமான பரம்பொருளை அறிவாராய்ச்சியால் உணர்ந்து தெளிவு பெற முடியும்.
மேற்கூறியவை மனிதனின் மூலமான பிரபஞ்சத்தின் ஒரே மையமான இறைவனை அல்லது பரம்பொருளை நோக்கிச் செல்லும் வெவ்வேறு பாதைகள்.

இவற்றில் பக்தன் அல்லது ஆன்மிகச் சாதகன் தனக்கேற்ற மார்க்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது தகுதியான குருவருளால்தான் எந்த யோகத்திற்கு ஏற்றவர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
yoga1
யோகத்தின் பல நிலைகள்
ராஜயோகத்தில், பதஞ்ஜலி முனிவர் அஷ்டாங்க யோகம் என்பதை விவரிக்கிறார். அவை:

யமம்: அகிம்சை, சத்தியம், திருடாமை, தானம் ஏற்காமை மற்றும் பிரம்மசரியம் என்ற யமத்தின் அங்கங்கள். இவை மனதை அதாவது சித்தத்தைத் தூய்மையாக்கும்.

நியமம் : தவம், கல்வி, சந்தோஷம், திருப்தி, தூய்மை, பூஜை ஆகிய நியமத்தின் அங்கங்கள்.

ஆசனம்: உடலைத் தகுதியுடன் வைத்திருப்பது.

பிராணாயாமம் : உடம்பிலுள்ள உயிர்ச்சக்திகளை அடக்கி நெறிப்படுத்துவது. மூச்சுப் பயிற்சி என்பது இதன் ஓர் அங்கம்.
பிராணாயாமத்தில் மூச்சுப் பயிற்சி, அநேக ஆசனங்கள் செய்து உடலை அதிக காலம் நேர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கு ஹட யோகம் என்று பெயர்.

பிரத்யாஹாரம்: இந்திரியங்கள் புறப்பொருட்களுடன் தொடர்பு கொண்டு புறநாட்டம் கொள்வதை மனதின் சங்கல்பத்தால் கட்டுப்படுத்துவது.

தாரணை: மனதை இதயக் கமலத்தில் அல்லது சஹஸ்ராரத்தில் நிறுத்துவது.

தியானம்: மனதை ஓரிடத்தில் நிலைப்படுத்தி, மனதில் மற்ற எல்லா அலைகளையும் அடக்கி, ஓர் அலை மட்டும் தீச்சுடர் போல் அசையாமல் இருக்கும் நிலை.

சமாதி: மனம் முழுவதும் ஒரே அலையாக, ஒரே வடிவமாக ஆவது சமாதி.

யோகம் என்பது இவ்வளவு உயர்ந்த, ஆழமான விஷயம் என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
யோகத்தில் மூன்று முக்கிய நிலைகளும் பலன்களும் உள்ளன. அவை :
1. எனக்குள் நான் இணக்கத்துடன் இருப்பது ஆனந்தமான நிலை.
2. நான் பிறருடனும் இயற்கையுடனும் இணக்கத்துடன் விளங்குவது நாம் ஆனந்தத்தைப் பெருக்கிக் கொள்ளும் நிலை.
3. தெய்வத்துடனும், தெய்விகக் குணங்களுடனும் இணங்கி இருப்பதே நம் உண்மையான நிலை.

இவற்றை மனதில் கொண்டு அகில உலக யோகா தினத்தைக் கொண்டாட ஆசனங்கள், சூரிய நமஸ்காரம், மூச்சுப் பயிற்சிகளை ஆரம்பிப்போம்.

யோகீஸ்வரர்களான ஈஸ்வரனும் கிருஷ்ண பரமாத்மாவும் யோகத்தில் நம்மை நிலைபெறச் செய்ய அருளட்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s