நல்லவர்களுக்கே அதிக துன்பம் வருவது ஏன்?

நல்லவர்களுக்கே அதிக துன்பம் வருவது ஏன்?

SV_joipur

இன்று நேற்று வந்த கேள்வி அல்ல இது: சீனாவில் பூகம்பம். 1,00,000 பேர் பலி. அப்பாவிகள் பலர் உடல் உறுப்புக்களை இழந்து, வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படும்படி செய்துவிட்டது சில நொடிகளே நடுங்கிய நம் பூமி.
புயலால் மியான்மரிலும் லட்சம் பேர் உயிரிழந்தனர். தப்பித்தவர்கள் வீடிழந்து, பொருளிழந்து, உறவிழந்து பெரும் துயரில் வாடுகின்றனர். அப்படி இறந்துபோக அந்த அப்பாவிகள் செய்த குற்றம் தான் என்ன?

தனிமனித வாழ்விலும், குடும்பங்களிலும் பதற வைக்கும் விபத்துகள் ஏராளம். நல்லவர், தர்மநெறி பிறழாத வாழ்க்கை நடத்துபவர் திடீரென தீராத நோயில் படுத்துவிடுகிறார். குடும்பமே நிலைகுலைந்துவிடுகிறது. ஏன் இப்படி நடக்கிறது?

நாணயஸ்தர் என்று பெயரெடுத்த வியாபாரி ஏமாற்றப்பட்டு திடீரென்று ஏழையாகிறார். கடன் சுமையால் அவமானப்பட்டுத் தற்கொலையே செய்து கொள்கிறார். செய்யாத குற்றங்களுக்குப் பழிச்சொல் ஏற்றுத் தண்டனைக்கு உள்ளாகும் நல்லவர் பலர்.

மகன் வெளிநாடு சென்று படிப்பதற்காகச் சொத்துக்களை விற்று அனுப்பிய பெற்றோர் முதிய வயதில் வெறுமையிலும் தனிமையிலும்!

கர்ப்பத்திலேயே குறையுள்ள குழந்தைகளைப் பெற்ற நல்ல பெற்றோரின் எண்ணிக்கையை எண்ணிவிட முடியுமா?
குழந்தையைப் பார்த்துப் பார்த்து வளர்த்து, வாலிபத்தில் அவனை விபத்தில் பறி கொடுத்து, முதுமைக் காலத்தில் நடைப்பிணமாகத் தவிக்கும் பெற்றோரின் மனக்கஷ்டங்கள்தாம் எத்தனை!

மக்களுக்குப் பயன்படும் தரமான சினிமா எடுத்த படத் தயாரிப்பாளர் கடன் தொல்லையில் மாட்டிக் கொள்கிறார்!
லஞ்சம் வாங்காத நேர்மையான அரசு அதிகாரிக்கோ பிழைக்கத் தெரியாதவர் என்று பட்டம்! அவரது நேர்மைக்குத்தான் மேல் மட்டத்திலும் கீழ் மட்டத்திலும் எத்தனை விதமான தொல்லைகள்!

இப்படி நல்லவர்களுக்கு வரும் துன்பங்களைப் பட்டியலிட முடியாது. ‘போதுமடா சாமி’ என்று தலையில் கைவைத்து மூலையில் உட்கார வைக்கக்கூடிய தருணங்கள் பலரது வாழ்விலும் பலப் பல.

தனிமனிதனின் துன்பங்கள் மூன்று வகை: ஒருவருக்குத் துன்பங்கள் வந்ததாலேயே அவர் நல்லவர் என்று சொல்லிவிட முடியாது.
நல்லவர்கள் என்று நாம் இங்கு குறிப்பிடுவது பிறருக்குத் தீங்கு செய்யாமல், தர்மத்தோடு வாழ்ந்து கொண்டு ஆன்மிகத்தில் முன்னேற நினைக்கும் சாதகர்களையும் பக்தர்களையும்தான்.

முதல்வகைத் துன்பம்: நம் ஆசைகளாலும் பழக்க தோஷத்தாலும் உந்தப்பட்டுச் செய்யும் செயல்களால் துன்பத்திற்கு உள்ளாவது. குடி, போதைப் பழக்கம், தீயோர் நட்பு, அது தரும் அவலம் முதலியவை.

இரண்டாம் வகைத் துன்பம்: நாமாகவே நமது கவனக்குறைவால், அலட்சியப் போக்கால் இழுத்துவிட்டுக் கொள்வது.

உடற்பயிற்சியின்மை, உணவுக் கட்டுப்பாடின்மை, அளவுக்கு மீறிய உழைப்பு அல்லது உழைப்பின்மை என்பது போன்ற கவனக்குறைவுகளாலும் நோய்களும் துன்பங்களும் வர வாய்ப்பு உள்ளன.

சாதாரண மக்களுக்குத் துன்பம் வந்தால் அவர்கள் மது, மாது என்று பல வழிகளில் சென்று துயரை மறக்க முயல்கின்றனர்.
பலர் தங்களது மனவேதனை நீங்குவதற்கு மனநல நிபுணர்களை நாடுகின்றனர். அவர்களிடம் தங்கள் மனக் குறைகளைக் கொட்டி விடுகின்றனர்.

ஆனால் சில நாட்களிலேயே மீண்டும் அவர்களுக்குப் பிரச்னை வந்துவிடும். ஏன்? அடிப்படைக் காரணத்தை அறிந்து தங்களுள் அதைச் சரிசெய்து கொள்ளாததால்தான். கவலையாலும் துன்பத்தாலும் சிதறுண்டு இருக்கும் மனதை திரட்டி மனநல நிபுணரிடம் நாம் கொட்டியதும் நம் மனம் தாற்காலிகமாக லேசாகிவிடுகிறது.
ஆனால் நீடித்த நிம்மதியைப் பெற முடிவதில்லை.

அப்படிப்பட்டவர்கள் ஒவ்வொரு துன்பத்தின் போதும் ஒவ்வொரு குருவைத் தேடி ஆசிரமங்களிலோ, பாவ மன்னிப்பிற்காக சர்ச்சிலோ ஏறி இறங்கி அலைகின்றனர்.

குறைகளைக் கூறி அழுவதில் சிலருக்கு ஆனந்தம். மனநல மருத்துவரிடம் மனதில் இருப்பதைக் கொட்டுவதை ஏன் இறைவனிடம் செய்யக் கூடாது?

மூன்றாவது வகைத் துன்பம்: இவை நாமாக வரவழைத்துக் கொள்ளும் துன்பமல்ல. தாமாக, தடுக்க இயலாத விதிவசத்தால் வருபவை. முற்பிறவிகளிலோ, இப்பிறவியில் எப்போதோ நாம்அறிந்தோ, அறியாமலோ செய்த தீய செயல்களால் வருபவையே இந்தத் துன்பங்கள் என்பது இந்து மதத்தின் பலமான நம்பிக்கை.

ஆணிமாண்டவ்ய தவமுனி ஏன் கழுவில் ஏற்றப்பட்டார்? ருக்மாங்கதன் ஏன் குஷ்டரோகி ஆனார்?

பார்வையற்ற திருதராஷ்டிரன், தான் குருடனாக அரசாள்வதற்குக் காரணம் என்ன என்று கண்ணனைக் கேட்டான்.
பல ஜன்மங்களுக்கு முன்பு செய்த கொடுமை, நீண்ட காலம் கழித்துப் புண்ணியங்கள் குறைந்த நிலையில், அவனைக் குருடனாக்கியதை திருதராஷ்டிரன் கண்ணன் மூலம் அறிந்தான்.

விது மகராஜ் ராமகிருஷ்ண மடத்துத் துறவி. உடல் நலமில்லை என்றால் அவரிடம் மருந்து கேட்பார்கள். அவர் ஹோமியோபதியில் பட்டம் பெறவில்லை. இருந்தாலும் புத்தகத்தின் உதவியுடன் மருந்தைத் தீர்மானிப்பார்; அன்னை ஸ்ரீசாரதாதேவியின் புகைப்படத்தின் கீழ் மருந்தை வைத்துப் பிரார்த்தித்து நோயாளிக்குத் தருவார். நோயாளி உடனே குணமடைவார்.

தெய்வ நம்பிக்கை எனும் பலத்தால் பலருக்கு உதவிய விது மகராஜ்…, தமது 40 -வது வயதிலேயே புற்றுநோயால் இறந்தார்.

இப்படியான துன்பங்களைக் காணும்போது ‘நல்லவர்களுக்கு ஏன் அதிக துன்பம் வருகிறது?’ என்ற கேள்வி நமக்குள் பிறக்கிறது. இக்கேள்வி இன்று நேற்று எழுந்த கேள்வி அல்ல.

முன்வினைப் பயன்கள் : இந்தக் கேள்விக்குத் தக்க பதிலாகத்தான் இந்து மதத்தின் கர்மா கொள்கை நம்பிக்கை ஊட்டுவதாக அமைகிறது. இறைவனின் இத்தகைய புரிந்துகொள்ள இயலாத மாயா விளையாட்டின் தன்மையை விளக்க, ஸ்ரீராமகிருஷ்ணர் கூறும் சம்பவம் இதோ:

குருக்ஷேத்திரப் போர். கௌரவ – பாண்டவப் படைகளில் இருபுறமும் பெரும் உயிர்ச் சேதம், பேரிழப்பு. பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடக்கிறார். கண்ணீர் தாரை தாரையாகப் பெருகுகிறது. அம்புப் படுக்கை தரும் வலிதான் கண்ணீருக்கான காரணம் என்று சிலர் நினைத்தனர்.
யார் கேட்டும் பீஷ்மரிடமிருந்து பதிலில்லை. முடிவில் ஸ்ரீகிருஷ்ணரிடம் மனம் திறந்த பீஷ்மர்,
கிருஷ்ணா! நல்லவர்களாகிய பாண்டவர்களுடன் நீயே இருந்தும் அவர்களது வாழ்க்கை ஆரம்ப முதல் வனவாசம், நாடு இழந்தது என்று எத்தனை துன்பங்கள். இது ஏன்? உனது செயல்கள் ஒன்றையும் நான் புரிந்து
கொள்ள முடியவில்லையே” என அழுதார்.

கர்மா கொள்கை : கர்மா என்பது செயல் மற்றும் செயலின் விளைவுகளான பாவம் மற்றும் புண்ணியம் ஆகிய இரண்டையும் குறிக்கும்.

சுகமாயிருக்கும்போது ஏற்கனவே செய்த நல்ல செயல்களின் பயனை அடைகிறோம். கஷ்டப்படும்போது ஏற்கனவே செய்த தீய செயல்களின் கடுமையான பலன்களை அனுபவிக்கிறோம்.

‘பிரம்மாவின் ஆயுளான பத்து லட்சம் கல்பகாலம் உயிர் வாழ்ந்தாலும் தீராத பாவத்தை ஒருவன், இந்த உலகில் அரை க்ஷண நேரத்தில் செய்து விடுகிறான்’ என்று கூரத்தாழ்வான் ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில் (61) கூறுகிறார்.

மனிதன் எவ்வளவு எளிதில் தீவினைகளைச் செய்துவிடுகிறான் என்பதை இது காட்டுகிறது. மனிதனது இந்தச் சுபாவத்தால் அளவற்ற பாவங்களும் புண்ணியங்களும் சேர்ந்த கலவை அவனது கணக்கில் எப்போதும் உள்ளது.

அன்னை ஸ்ரீசாரதாதேவியிடம் ஒருத்தி, ‘அம்மா, வினைப்பயனின் பிடியிலிருந்து மனிதன் எப்படித் தப்புவது? இதற்கு மன்னிப்பே கிடையாதா?’ என்று கேட்டார்.
அதற்கு அன்னை, ‘மகளே, மன்னிப்பு இல்லாவிட்டால் நீ வாழ முடியுமா? எண்ணற்ற பிறவிகளில் ஏற்பட்ட வினைப்பயனை உன்னால் பார்க்க முடியுமா? அது மட்டும் முடிந்திருந்தால் நீ இப்படிப் பேச மாட்டாய்.

அர்ஜுனனாலேயே அவனது முற்பிறவிகளை அறிய முடியவில்லை. சாதாரண மனிதனைப் பற்றிச் சொல்ல என்ன உள்ளது?” என்றார்.

மூன்றுவித கர்மங்கள்: நமது சாஸ்திரங்கள் இந்தக் கர்ம மூட்டையை மூன்றாகப் பிரிக்கின்றன.
சஞ்சிதம் – நெடுங்காலமாகப் பற்பல முற்பிறவிகளில் செய்து சேர்த்து வைத்த கர்ம வினை.
பிராரப்தம் – சஞ்சித கர்மாக்களின் ஒரு பகுதியால் ஏற்கனவே பலன் தர ஆரம்பித்து – பிராரம்பித்து- இப்பிறவியில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்ப துன்பங்கள். பிராரப்த கர்மா எய்துவிட்ட அம்பு போன்றது. இலக்கைக் குத்திவிட்டுத்
தான் அது நிற்கும் என்பர் பெரியோர்.
ஆகாமி- தற்போது நாம் செய்யும் காரியங்களின் பலனாகப் புதிதாகச் சேரும் கர்மவினைகள்.

இப்படிக் கர்மவினைகள் பிரிக்கப்பட்டிருந்தாலும், இறைவனின் மாயா விளையாட்டில் எந்த வகை வினைகளுக்கு எத்தகைய பலன் எந்தப் பிறவியில் எப்போது கிடைக்கும் என்பது யாராலும் புரிந்து கொள்ள முடியாதது.
இதை ஸ்ரீராமகிருஷ்ணர், மாயையில் பல குழப்பங்கள் உள்ளன. ஒன்றையும் புரிந்துகொள்ள முடியவில்லை… இதனால் இது, இதற்குப் பிறகு இது என்று தீர்மானிக்க முடியாது” என்கிறார்.

துன்பங்கள் சுவாமி விவேகானந்தரையும் துரத்தின: சுத்தமான தங்கம் தீயில் புடம் போடப்படுவதுபோல, நல்ல உள்ளம் துன்பத் தீயில் புடம் போடப்படுகிறது. நெருப்பில் இட்ட தங்கம்தான் சுடர்விடும். துன்பத்தில் புடமிடப்பட்ட மனிதன் தான் இறைவனுக்கு ஏற்றவனாகிறான்.

சிறு பிராயம் முதல் சுவாமி விவேகானந்தருக்கு ஒரு கஷ்டமும் இருந்ததில்லை. ஆனால் இறைமார்க்கத்தில் செல்லத் தொடங்கியவுடன் வந்ததெல்லாம் வறுமையும் துன்பமும்தான். அவரது தந்தை திடீரென்று காலமானார். பங்காளிகளும், உறவினர்களும் உபத்திரவமாகி, சுவாமிஜியின் குடும்பத்தினர் மீதே வழக்குத் தொடர்ந்தனர்.
தினமும் 50 பேருக்கு உணவளித்த சுவாமிஜியின் அன்னை தன் சொந்தக் குழந்தைகளுக்கே ஒரு வேளை உணவளிக்கச் சிரமப்பட்டார்.

பல திறமைகள் மிக்க பட்டதாரியான சுவாமிஜி வேலை கிடைக்காமல் ஆறு மாதம் கஷ்டப்பட்டார்!

சுவாமி விவேகானந்தர் பிற்காலத்தில் ஒரு முறை ….through hell to heaven is always the way (C.W.252:3)-‘நரகத்தின் வாயிலாகச் சொர்க்கத்துக்குச் செல்வதே எப்போதும் வழி’ என்றார்.

சுவாமிஜி சொர்க்கம் என்று குறிப்பிடுவது கட உபநிஷதம் கூறும் ‘சொர்க்கத்தில் பயமும் மரணமும் இல்லை…’ என்ற நிலையைத்தான்.

‘நரகம் வழியே’ என்று துன்பத்தை ஏற்றுக் கொண்டு, புரிந்து கொண்டு அதைக் கடப்பதைத்தான் சுவாமிஜி கூறுகிறார். அதனால் அவர் எந்தக் கஷ்டத்திற்கும் அடிபணியாமல் அவற்றைச் சந்தித்தார்; பின் அவற்றைக் கடந்தும் போனார். அப்படிக் கடக்கும்போது துன்பங்களே அவரைத் தூக்கிவிட்டன என்பதெல்லாம் அவரது வரலாறு காட்டும்.

அதன் மூலம், கஷ்டங்களை அனுபவிக்கும் போதும் நல்லவர்கள் உயர் குணங்களைக் கடைப்பிடிக்க முடியும் என்பதையும் சுவாமிஜி உலகுக்கு எடுத்துக் காட்டினார்.
வினைப்பயன்களை ராமரும் கிருஷ்ணரும்கூட ஏற்றனர்! :

இறைவனே மனிதனாக அவதரித்தாலும் கர்மபலன்களை அனுபவித்தே வாழ்ந்து காட்டுகிறார்கள்.
பாலனாய் இருந்த போது ராமர் ஒரு சிறு கல்லை எடுத்து எறிய, அது கூனியின் முதுகில் பட்டுவிட்டது. அதனால் கூனி ராமரைப் பழிவாங்க நினைத்தாள். ராமர் துன்பம் அனுபவித்தார்.
கிருஷ்ணரும் வினைப்பயனை ஏற்றார். பாரதப் போர் முடிந்து, நூறு புதல்வர்களையும் இழந்து, துக்கத் தீயில் தகித்துக் கொண்டிருந்தாள் காந்தாரி.

துக்கத்தின் எல்லையிலிருந்த அவள், கண்ணா! நீ நினைத்திருந்தால் என் குடும்பம் முற்றிலுமாக அழிந்து போவதைத் தடுத்திருக்க முடியும். நீ அதைச் செய்யவில்லை. அதனால் உன் உறவினர்களும் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டு அழிவார்கள். உன்னால் அதைத் தடுக்க முடியாமல் உன் குலமே அழியும். நீயும் நியாயமில்லாத முறையில் மடிவாய்” என்று சபித்தாள்.

கிருஷ்ணர் இச்சாபத்தையே தனது அவதாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வாய்ப்பாக ஏற்றுக் கொண்டார்.

ஸ்ரீராமகிருஷ்ணருக்கு ஹலதாரி அண்ணன் முறை. ராதாகாந்தர் கோயிலில் அர்ச்சகராக இருந்தார்.
அவர் சாதனைகள் பல செய்து சித்திகளைப் பெற முயன்றார். அவர் செய்த அனுமதிக்கப்படாத சாதனைகளை குருதேவர் ஒருமுறை கண்டித்தபோது, என்னைவிடச் சிறியவனான நீ என்னைப் பற்றியா அவதூறு பேசுகிறாய்? நீ ரத்த வாந்தியெடுப்பாய்” என்று சபித்தார். சில நாட்களுக்குப் பிறகு குருதேவர் ரத்த வாந்தி எடுத்தார்.

ஆனால் அந்தச் சாபம் ஒரு நன்மையையே செய்தது. அதன் மூலம் அவர் உடலில் சில காரணங்களால் ஏற்பட்டிருந்த அசுத்த ரத்தம் வெளியேறியது. அவதாரபுருஷர்களுக்கே இப்படித் துன்பம் வந்து அதை அவர்கள் அனுபவிக்கவும் செய்தார்கள்.

அவதாரபுருஷர்கள் பக்தர்களின் துன்பங்களைக் களைந்த விதம் : இறைவனும் அவதாரபுருஷர்களும் தம்மைச் சரணடைந்தவர்களின் பாவத்தை ஏற்றுக் கொண்டு அருள்கிறார்கள்.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கிரீஷ் சந்திரகோஷின் பாவங்களை ஏற்று அவரை ஆன்மிகத்தின் மேல்
நிலைக்குக் கொண்டு சென்றார். குருதேவரிடம் கிரீஷ் வக்காலத்து கொடுத்துவிட்டு கர்மவினைகளிலிருந்து விடுபட்டார்.
ஸ்ரீராமகிருஷ்ணரை, ‘கபாலமோசனர்’ – தலையெழுத்தையே மாற்றி எழுதக்கூடியவர் என்று சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகிறார். இது ஒரு பக்கம்.

வ்ருஷபர்வா: மற்றொரு பக்கம், இறைவன் பக்தனுக்குத் துன்பங்களைத் தந்து அவனது பிராரப்தத்தை விரைவில் கழித்துக் கட்டுகிறார். ‘வ்ருஷபர்வா’ என்பது பகவானின் நாமங்களில் ஒன்று.

கரும்பை அதன் கணுக்கள் சிறுசிறு பகுதிகளாகப் பிரிக்கின்றன. அதுபோல, பகவானும் கர்ம பலன்களை நாம் அனுபவிக்க ஏற்றபடி சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துத் தருகிறானாம். பர்வ = கணு.
பர்வ = காலப்பகுதி என்பது அடுத்த பொருள். ‘தர்மத்தால் கிட்டிய சுகத்தை வாழ்வின் பல பகுதிகளில் அனுபவிக்கச் செய்பவர். ஒரே சமயத்தில் வினைப்பயன் அனைத்தையும் அனுபவிக்காதபடி காலவரையறை அமைத்துத் தருபவர்.’
இப்படிப் பிரித்து கர்மவினை வழங்குவது பக்தனுக்கு ஏற்படக்கூடிய, அளவுக்கு மீறிய சுக துக்கங்களைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

ஒருவனது நல்வினைப் பயனாக அவன் 20 ஆண்டுகள் மட்டும் நாட்டின் அரசனாக இருக்க வேண்டுமென்று வைத்துக்கொள்வோம். அதற்குப் பின் அவன் என்ன ஆவான்?
யாரிடமாவது சென்று கையேந்திப் பிழைப்பான். ஆனால் பகவான் அப்பலனைப் பிரித்து அவனது குடும்பமே புகழோடு, பரம்பரை பரம்பரையாக நன்றாக இருக்கும்படி செய்வானாம்.

20 ஆண்டுகள் மட்டுமே அரசனாக இருக்க வேண்டியவனுக்கு, அவன் தலைமுறைக்கே நற்பெயர், நல்வாழ்வு என்று தொடர்ந்து கிட்டும்படி கடவுள் செய்கிறார்.

பகவான் இந்த விஷயத்தில் தாயைவிடப் பரிவு காட்டுபவன். தாய் தன் பிள்ளையின் உடல்நிலைக்குத் தக்கப்படி உணவு தருவதுபோல இறைவனும் செய்கிறான்.

மோசமான வினைப்பயனின் காரணமாக ஒரே சமயத்தில் நூறு பங்கு துயரம் வர இருந்தால் அதை அனுபவிக்கக்கூடிய அளவில் பிரித்துத் தருபவனே வ்ருஷபர்வராகிய இறைவன் ஆவார். (ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் வைத்ய சி.வெ.ராதாகிருஷ்ண சாஸ்திரியின் உரை.)

இறைவனைச் சார்ந்து இல்லாதவருக்கு இறைவனின் சட்டங்கள் மட்டுமே பேசும். ‘க்ஷிபாமி, ந க்ஷமாமி’- ‘உன் தவறுகள் இவை, அதற்கான பலன்கள் இவை, அனுபவி’ என்று சட்டப்படி எல்லாம் நடக்கும்.

ஆனால் இறைவனைச் சார்ந்திருக்கும்போது அவர் கர்மவினைகளைப் பிரித்துப் பிரித்துத் தருவதோடல்லாமல் அதன் பயன்களை அனுபவிக்கும் போது ஏற்படும் துன்பங்களைத் தாங்கும் சக்தியையும் தருவான்.
பகவானின் துவார பாலகர்கள் ஜய விஜயர்கள். கடமையில் தவறு செய்து பகவானைப் பிரிந்திருக்கும் சாபத்துக்கு உள்ளானவர்கள். ஆனாலும் விஷ்ணுவின் கைங்கர்யத்திலிருந்து நழுவிவிடும் துயரத்தைப் பொறுக்க இயலாமல் தங்கள் தவறுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டனர்.

விஷ்ணுவும் இரண்டு விதமாகச் சாபத்தை அனுபவிக்க முடியும் என்றார். ஒன்று, விஷ்ணுவிற்கு விரோத செயல்களே செய்யும் மூன்று அசுரப் பிறவிகள் எடுப்பது. மற்றது, சாதாரண செயல்கள் புரிந்து பல ஜன்மங்கள் எடுப்பது.

ஜய, விஜயர்கள் சீக்கிரமே பகவானின் சேவைக்குத் திரும்பச் செய்யும் மூன்று அசுரப் பிறவிகளான ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன்; ராவணன், கும்பகர்ணன்; தந்தவக்த்ரன், சிசுபாலன் என்பதைத் தேர்ந்தெடுத்தனர்.
அந்த அசுரர்களும் துயரமில்லாமலா இருந்தார்கள்? மகன் பிரகலாதனையே கொல்லச் சொன்னது ஹிரண்யகசிபுவுக்குத் துன்பம் இல்லையா? இந்திரஜித்தை இழந்ததும் ராவணனுக்குத் துன்பம்தானே.

எப்போதும் பயம், நிம்மதியின்மை, விரோத மனப்பாங்கு என இந்த அசுரர்களும் பல துன்பங்களைத் தாண்டித்தான் ‘நரகம் வாயிலாகச் சொர்க்கம்’ என்ற முறையில் இறைவனைத் திரும்பவும் அடைந்தனர்.
(நல்லவர்களின் துன்பங்கள் குறையுமா? அடுத்த கட்டுரையில் இதைப் பற்றிக் கற்போம்.)

2 responses to “நல்லவர்களுக்கே அதிக துன்பம் வருவது ஏன்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s