இயற்கையோடு இயைந்திருந்து சுனாமி விளைவுகளைச் சமாளித்த சாதனை!

இயற்கையோடு இயைந்திருந்து சுனாமி விளைவுகளைச் சமாளித்த சாதனை!

“…அந்தச் சக்தி, அந்தச் சுதந்திர தாகம், அந்தத் தன்னம்பிக்கை, அந்த அசையாத உறுதி, அந்தச் செயல்திறன், அந்த லட்சியத்தின் ஒற்றுமை, அந்த முன்னேற்றத்தில் ஆசை இவை நமக்கு வேண்டும்.தொடர்ந்து பின்னோக்கிப் பார்ப்பதைச் சற்று விட்டுவிட்டு, முன்னோக்கி நெடுந்தூரம் செல்லும் பரந்த பார்வை வேண்டும்.”

சுவாமி விவேகானந்தரின் இந்த வைர மொழிகளுக்கு, மீண்டும் ஒருமுறை ஆழ்ந்த அர்த்தம் கண்டனர் சில நம்பிக்கை மனிதர்கள். விடாமுயற்சியும் கடும் உழைப்பும் கைகோர்க்கும்போது ‘மலைபோல வந்த இடர் பனிபோல விலகிடும்’ என்ற வெற்றிச் செய்திக்கு ஓர் உதாரணம் இதோ:

2004-டிசம்பர் 26.அந்தக் கறுப்பு தினத்தை எளிதில் யாரும் மறந்திட முடியாது.சுனாமியால் பல ஆயிரக்கணக்கானவர்கள் ஒரு சில நிமிடத்தில் உற்றார் – உறவினர், வாழ்க்கை ஆதாரங்கள் எல்லாவற்றையும் பறிகொடுத்து, நம்பிக்கையிழந்து சின்னாபின்னமாயினர்.

உலகில் இன்னமும் உயிர்ப்புத் தன்மையோடு விளங்குகிற மனிதநேயம் – உடனடியாக, மீனவர்களின் துக்கங்களை ‘மீட்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகள்’ என்ற கைக்குட்டைகளால் துடைத்து மீண்டும் அங்கே ஒரு புதுவாழ்வு துளிர்க்க வழிவகை செய்தது.

தமிழ்நாட்டில் அதிக அளவில் உருக்குலைந்தது நாகை மாவட்டம்தான்.அங்கு கடல் புறத்து வேளாளப் பெருமக்களின் கண்களிலிருந்து வழிந்து கொண்டிருந்த ரத்தக் கண்ணீரை நம்மில் அதிகம் பேர் அறியவில்லை.

குளங்கள் வெட்டி, கைகளாலேயே நான்கு மணி நேரம் நீர் பாய்ச்சி வியர்வையை விளைச்சலாக மாற்றி வந்த இந்தச் சிறு, குறு விவசாயிகளின் முதுகெலும்பையும் நம்பிக்கையையும் முறித்துப் போட்டிருந்தது சுனாமி.
இந்த நிலங்களோடு சுனாமி தொடுத்த போர் இவர்கள் முன்பின் பார்த்திராதது.விளைநிலங்களில் கடல்சேற்றைக் கொட்டி, உப்பு நீரால் மூழ்கடித்து இனி இவை எதற்கும் உதவாத கரம்பு நிலங்களாகி விடுமோ என்ற பேரச்சத்தை விளைவித்தது.

அன்போடு வளர்த்த பச்சை மரங்கள் பாழ்விறகாய்க் கருகின.விதை முகூர்த்தம் செய்து நாற்று நட்டு, பால் பிடித்திருந்த நெல்மணிகள், பத்து நாட்களில் நாங்கள் வீடு வந்து சேர்வோம் என்று தலையசைத்துச் சொல்லியிருக்க, கைக்கெட்டியது வாய்க்கெட்டாது பேச்சுமூச்சற்றுப் போயின.

உணவு போனது; மாடுகளுக்கு வைக்கோல் போனது; விதைப்புக்கு விதை நெல்லும் இல்லாமல் போனது.குடும்பத்தில் ஒன்றாக இருந்து வந்த ஆடு மாடுகளும் அலையில் மூழ்கின.

உப்புநீர் தேங்கியதால் 0.65 டிஎஸ்எம்-1 என்ற அளவில் நிலங்
களிலிருந்த உவர்த்தன்மை 23 டிஎஸ்எம்-1 வரை உயர்ந்து, நட்ட விதை முளைக்காமல் போனது. நீர் ஆதாரங்களான சிறு குட்டைகள் உப்பாகிப் போயின. வயல்கள் உப்பளங்களாயின.

சில விளைநிலங்களில் கடல்சேறு மூன்றடி உயரம் வரை மூடி மேல் மண்ணை மூச்சற்று முடக்கியிருந்தது. மலையாய்க் குவிந்திருந்த சேற்றைப் பார்த்துப் பார்த்துச் சிலர் மன நோயாளிகளாகவே மாறிவிட்டனர்.
பாதிக்கப்பட்ட விளைநிலங்களைப் பார்வையிட்ட பல அறிஞர்களும், வேளாண் நிபுணர்களும் ‘குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகளாவது ஆகும் – இந்த நிலங்கள் பழையபடி விளைவதற்கு’ என்றார்கள்.பிழைப்புக்கு வழி தெரியாமல் விவசாயிகள் திகைத்தார்கள்.


கிராம மக்களின் தன்மானம்

தமிழ்நாடு இயற்கை உழவர் இயக்கம் தமிழ் நாடெங்கும் ‘இயற்கை வழி வேளாண்மை’ என்ற கருத்தைப் பரப்பியும், பயிற்றுவித்தும் வரும் ஓர் உழவர் கூட்டமைப்பு. சுனாமியால் சொல்லொணாத பாதிப்புகள் ஏற்பட்டிருந்த போதும் இயற்கையோடு இயைந்து செயல்பட்டால், எந்த இடர்பாடும் இருந்த இடம் தெரியாமல் ஓட்டம் பிடிக்கும் என்று நம்புகிறது இந்த அமைப்பு.
Motivation_6
ஏற்கனவே நாகையின் பல இடங்களில் சீரமைப்புப் பணிகளை நடத்தி, இயற்கையன்னையின் அரவணைப்
பால் உவர் நிலங்களை உயிர்ப்பிக்க உதவியிருந்தது.
சுனாமியால் சிதைந்த கிராமங்களுக்கு ஆரம்ப நாட்களில் உணவுப் பொட்டலங்களைத் தன்னார்வ அமைப்புகள் வழங்கின. அப்போது ஒரு குறிப்பிட்ட கிராம மக்கள் அவற்றைப் பெற்றுக் கொள்ளத் தயங்கினார்கள் என்ற செய்தி இந்த இயக்கத்தை எட்டியது.

பிறருக்கு உணவு படைப்பதில் பெருமைப்படும் வேளாளர்கள், தங்கள் உணவுக்காகக் கையேந்துவதற்கு, அவர்களின் சுயமரியாதை அனுமதிக்கவில்லை. பேரழிவிற்குப் பிறகும் நெஞ்சுரத்தோடு திகழ்ந்த அந்தக் கிராமம்தான் பொய்கைகள் சூழ்ந்த, மணல் குன்றுகள் காவல் தெய்வமாய் அமைந்த தெற்குப் பொய்கைநல்லூர்.

இயற்கையன்னை நிச்சயம் காக்கிறாள்!
கவலைக் கலவைக்குள் அமிழ்ந்திருந்த மக்களைச் சந்தித்த உழவர் இயக்கத்தினர் சேதங்களை மதிப்பிட்டனர்.சூழ்ந்திருக்கும் இயற்கைச் சக்திகளின் இணக்கத்தோடு ஆறே மாதங்களில் இந்த நிலங்களைப் புனரமைக்க முடியும் என்ற நம்பிக்கை மலர்ந்தது.

சில நாடுகள் ஆதிக்க வெறியுடன் அணு ஆயுதப் பரிசோதனை என்ற பெயரால் இயற்கையன்னையைச் சீண்டியதால்தான் சுனாமியே வந்தது என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.
அதே அன்னையுடன் அன்புடனும் மரியாதையுடனும் இயைந்து வாழும்போது அந்த அன்னை நம்மை அரவணைக்கிறாள் என்பது நம் முன்னோர் காட்டிய வழி.
Motivation_5
ஜெர்மனியின் தன்னார்வ சேவை அமைப்பான ஏ.எஸ்.பி. இந்தப் பணிகளில் தன்னையும் இணைத்துக்கொள்ள முன் வந்தது. கெட்டிப்பட்டுப் போயிருந்த உவர் நிலங்களில், சட்டிக் கலப்பைகளால் உழுததால் மண் பொலபொலப்பானது. நுண்ணுயிரிகள் மடிந்து மயான பூமியாய் மாறிப் போன நிலங்களை மீண்டும் உயிர்ப்பிக்கப் பலவிதமான நுண்ணுயிரிக் கரைசல்களைத் தயாரித்துத் தந்தனர் உழவர் இயக்கத்தினர்.

தக்கைப் பூண்டு செய்த விந்தை
கொடிய உப்புத்தன்மையையும், வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய போராளி விதைகளான தக்கைப் பூண்டு விதைகள் விவசாயிகளிடம் வழங்கப்பட்டன. சுனாமியால் பாதித்த நிலங்களில் ஒரு சில வாரங்களிலேயே உயிர் பிடித்து எழுந்த தக்கைப் பூண்டுத் துளிர்கள் புதிய நம்பிக்கையின் பசுமைச் சின்னமாய் பார்க்குமிடமெல்லாம் பரவசமாய் நிறைந்தன.நைட்ரஜன் சத்தை நிலத்தில் சேர்த்து மண்வளம் கூட்டின.

மண் மகள் மீது பசுமைப் போர்வை போர்த்தி, உப்பு மேல் மண்ணிற்குப் பயணிப்பதைத் தடை செய்தன. சூழ்ந்திருக்கும் கழிவுகளையெல்லாம், உழவர்களின் கருப்புத் தங்கமாம் மண்புழு எருவாக மாற்றும் வித்தை ஒவ்வோர் உழவர் வீட்டிற்கும் தரப்பட்டது.
தக்கைப் பூண்டுடன் கலப்புப் பயிராகக் காய்கறிகள் பயிரிடப்பட்டன.அதில் நல்ல விளைச்சலைப் பார்த்த ஒவ்வொருவருக்கும் புது உற்சாகம் பிறந்தது. வேலை துவங்கிய மூன்றே மாதங்களுக்குள் மீண்டும் ஒரு பச்சை அறுவடை சாத்தியமானதில் வியப்படைந்த மற்ற விவசாயிகளும் களத்தில் இறங்கினர்.

தூர்தர்ஷன், பிபிசி, வாய்ஸ் ஆப் அமெரிக்கா, ஜெர்மன் தொலைக்காட்சி, யுனெஸ்கோ எனப் பல ஊடகங்கள் மூலம் இச்செய்திகளை அறிந்து கொண்டு டெக்ஸாஸ், மிக்சிகன், கலிபோர்னியா ஆகிய பல்கலைக் கழகங்களிலிருந்து மாணவர்கள் வந்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.

ஒரு சிறு கிராமத்தில் நிகழ்ந்த இந்த நம்பிக்கை முயற்சி குடியரசுத்தலைவர் திரு. அப்துல் கலாம் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் கவனத்தையும் ஈர்க்க, அவர்கள் நேரிடையாக கிராமத்திற்கு வருகை தந்து இந்த முயற்சிகளை வாழ்த்திச் சென்றனர்.

இந்தக் கிராமங்களில் நடைபெற்ற வேலைகளைப் பற்றிக் கேள்வியுற்ற இந்தோனேசியத் தன்னார்வ அமைப்புகள், அங்கேயும் இந்தப் பிரச்னைகள் தீவிரமாய் இருப்பதால் அதற்குத் தீர்வு பற்றி வடிவமைக்க அழைப்பு விடுத்தன.

இதேபோல் மண் உவர்த்தன்மையை நீக்கி இன்னும் ஒரு படி மேல் சென்று வெற்றி கண்ட கிராமம் திருநகரி. இந்த ஆண்டு விவசாயம் செய்வது சாத்தியமேயில்லை என்ற சூழ்நிலையில் தமிழ்நாடு இயற்கை உழவர் இயக்கத்தைப் பற்றிக் கேள்விப்பட்டார்கள்.நம்பிக்கை இழக்காதிருந்த சில விவசாயிகள் வழிகாட்டும்படி அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள்.

திருநகரி கிராம வேளாள மக்களுக்கும் உதவ அமைப்பு உடனடியாக முன்வந்தது. இந்தப் பெருங்காரியத்திற்குத் தேவைப்படும் நிதி வழங்க OXFAM(GB) என்ற சர்வதேசத் தன்னார்வ சேவை அமைப்பு முழு ஈடுபாட்டோடு ஒத்துக் கொண்டது.
முதல் வேலையாகப் பாதிக்கப்பட்ட நிலங்களில் மண் பரிசோதனை நடத்தப்பட்டு பாதிப்பின் தன்மை, தீவிரம் கண்டறியப்பட்டது. அடுத்து, ஊர் மொத்தத்தையும் ஒன்றாய்க் கூட்டி ஒரு செயல்திட்டத்தை வகுப்பது.இது உண்மையில் சுலபமாக இல்லை.

சுனாமிக்குப் பின் 6, 7 மாதங்களில் அவர்கள் பல விதங்களில் முயற்சி செய்தும் போட்ட விதை முளைக்கவில்லை. இதனால் ஆர்வம் குறைந்து அமர்ந்திருந்த மக்கள், ‘இந்த ஆண்டு பிழைப்பு தேடி வெளியூர்களுக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை’ என்ற விரக்தியில் உறைந்திருந்தார்கள்.

மாற்றம் காண விரும்பிப் பாடுபட்டு வந்த அமைப்பினர் முதலில் வெற்றிகரமாக வேலைகள் நடந்தேறிய பல இடங்களுக்கும் விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்துச் சென்றனர். அவர்கள் புதுச் செயல்முறைகளையும் பலன்களையும் கண்டு உற்சாகமடைந்து, ஊர் திரும்பி வந்து அவற்றைத் தங்கள் மக்களோடு பகிர்ந்து கொண்டனர்.

பருவ மழையும் பயிர் செய்யும் காலமும் வேகமாய் நெருங்கிக் கொண்டிருந்தன. வேலைகளை முன்னெடுத்துச் செல்லப் பல தரப்பினரும் அடங்கிய மக்கள் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.

இறுகிப் போயிருந்த நிலங்களில் சட்டிக் கலப்பை ஆழ்உழவும், காவிரி நீர் தேங்கியிருந்த இடங்களில் சக்கர உழவும் செய்யப்பட்டது. டிராக்டர் உரிமையாளர்கள் கடின உழவுக்காக அதிகப் பணம் கேட்டபோது இக்குழு அவர்களை அழைத்துப் பேசி நடந்து கொண்டிருக்கும் சமூகப்பணியில் அவர்களையும் ஈடுபடுத்துவதில் வெற்றி கண்டது.

ஊர் கூடித் தேர் இழுக்கும் மிகப் பெரிய வேலை தங்கள் ஊரில் நடைபெற்று வருவதைக் கேள்வியுற்ற, இடம் பெயர்ந்து போயிருந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் கிராமத்திற்குத் திரும்பினர்; முழு முனைப்புடன் வேலைகளில் ஈடுபட்டனர்.

விவசாயக் கூலிப் பெண்கள் மண் புழு எரு தயாரிக்கக் கற்றுக் கொண்டார்கள். உப்பு நீர் வடிவதற்கு வாரிகள் வெட்டப்பட்டன.பாழ்பட்ட நிலத்தை விரைவில் சீரமைக்க அங்கு கடினத் தன்மையுடைய பனைமரத் தண்டுகள், மரக்கிளைகள் புதைக்கப்பட்டன.

கிராமத்தின் மையமாய், காவல் தெய்வமாய் விளங்கும் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டு அருள்பாலிக்கும் கல்யாண ரங்கநாதர் ஆலயத்தில் இறைவழிபாட்டோடு உழுத வயல்களில் நாற்றுகள் நடப்பட்டன.

வியக்கும்படி நெற்கதிர்கள் நன்றாய்ச் செழித்து வளர்ந்தன. நம்பிக்கை இழந்த விவசாயிகள் மனதிலும் நம்பிக்கை நெல்மணிகள் துளிர்த்தன. அவர்களும் நாற்றுகளைப் பக்கத்து கிராமங்களில் இருந்து வாங்கி வந்து பயிரிடத் தொடங்கினர்.
இயற்கை உழவர் இயக்கம் நடத்திய பயிற்சி வகுப்புகளில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்தி, வெளி இடுபொருள் ஏது
மில்லாமல் நஞ்சு கலக்காத, நல்ல உணவை உற்பத்தி செய்யும் முறையைக் கற்றுக் கொண்டார்கள். கற்றறிந்த செய்முறைகளை உடனே நிலங்களில் பரிசோதித்துப் பார்த்தனர்.
Motivation_1
எல்லாம் நன்றாய்ப் போய்க் கொண்டிருக்கிறது.இன்னும் சில நாட்களில் நெல்மணிகள் உருவாகத் தொடங்கிவிடும் என எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.அப்போது, துரதிர்ஷ்டவசமாக, பெருமழை கொட்டி வெள்ளம் சூழ்ந்தது.மூழ்கிப் போன நெல் வயல்கள் பார்ப்பவர்களிடத்தில் கண்ணீரை வரவழைத்தது.

நமது பாரம்பரியம் கை கொடுத்தது!
தமிழ்நாடு இயற்கை உழவர் இயக்க உறுப்பினர்கள் நிலங்கள் களித்தன்மை அடைந்திருப்பதையும், வேர்கள் மூச்சுவிட முடியாமல் திணறி, பயிர் உணவின்றி மஞ்சள் பிடித்து வாடுவதையும் பார்த்தனர்.பழைய அனுபவத்தைக் கொண்டு தலைவழியாகக் உணவு தந்து பார்க்கலாம் என முடிவு செய்தனர்.

நமது பாரம்பரியப் பெருமை வாய்ந்த ‘விருட்ச ஆயுர்வேத’ நூலில் கூறப்பட்டுள்ள ‘குணபசலத்தை’த் (குணபம் = இறந்த மிருகங்களின் உடல் + ஜலம் = நீர்) தயாரித்து நெல்வயல்களில் பயிர்மீது தெளித்துப் பார்க்கலாம் என்ற உத்தியை விவசாயிகளோடு அவர்கள் பகிர்ந்து கொண்டனர். இறுதி முயற்சியாக இதையும் செய்து பார்க்கலாமே என விவசாயிகள் நம்பிக்கையோடு மீண்டும் எழுந்தார்கள்.

தமிழ்நாடு உழவர் இயக்கம், ‘கட்டாயம் நல்ல விளைச்சல் வரும். அறுவடைத் திருநாளை, சூரியக் கடவுளுக்குப் பொங்கலிட்டு நன்றி கூறிக் கொண்டாடுவோம்; நல்ல அறுவடையை நமக்குத் தரும்படி இயற்கையை வேண்டுவோம்’ என்று பார்த்த ஒவ்வொருவரிடமும் கூறி, வேலைகள் தொடர ஊக்குவித்தது.

வீணாகிப் போன மீன் கழிவுகள், கோமியம், நாட்டு வெல்லம் சேர்ந்த ‘பயிர் வளர்ச்சி ஊக்கி’, படுத்துக் கிடந்தப் பயிர்களையெல்லாம் மீண்டும் தலைநிமிரச் செய்தது.கிராமம் மறுபடியும் இயங்க ஆரம்பித்தது.

நம்பிக்கையை இழந்திருந்த மக்கள் மூட்டை மூட்டையாக அறுவடையான நெல்லையும் நிலக்கடலையையும் கண்டதும் சொல்லொண்ணாத மகிழ்ச்சி அடைந்தனர்.

பிப்ரவரி 10 – 2006 கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஒரு பேரிடருக்குப் பின்னரும் புது வாழ்வு நிச்சயம் சாத்தியம்; இயற்கை எப்போதும் கைநீட்டி உதவக் காத்திருக்கிறது. முயற்சியும், கடும் உழைப்பும் கை கோர்க்கும்போது சாம்பலிலிருந்து மீண்டு எழும் பீனிக்ஸ் பறவைகள்போல் தாங்களும் இன்று தடைகளைத் தாண்டி நம்பிக்கை வெளியில் நிற்கிறோம் என்ற உணர்ச்சிப் பூரிப்பில் கிராமம் மிதந்தது.

‘ரசாயனப் பொருள்களைச் சேர்த்து வைப்பதே நம் கடமை, படிகமாதல் இறைவனின் நியதிகளின்மூலம் நிகழும். மக்களிடம் கருத்துகளை நாம் விதைப்போம்; மற்றவற்றை அவர்களே செய்து கொள்வார்கள்’ என்ற சுவாமி விவேகானந்தரின் வாக்கிற்கிணங்க குழு உணர்வோடு புத்தரிசிப் பொங்கலிட்டு, பிரார்த்தனை, ஆட்டம், பாட்டு என்று அமர்க்களமாக வெற்றித் திருவிழாவாகக் கிராமத்தினர் கொண்டாடினார்.

சுனாமி பேரிடரிலிருந்து மீண்டு எழுந்துள்ள இந்த நம்பிக்கை உழவர்கள் பாரம்பரிய விதைகளோடு, செயற்கை வெளி இடுபொருள் அற்ற, வேளாண்மை ஒரு தொழிலாக இன்றி வாழ்வியலாக இருந்த நமது பொற்காலத்தை நோக்கி இன்று மீண்டும் ஒரு பயணத்தைத் துவக்கியிருக்கிறார்கள். அவர்களது அந்த முயற்சி வெற்றி பெற நாமும் பிரார்த்திப்போம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s