வேதகாலத்துப் பெண்கல்வி

வேதகாலத்துப் பெண்கல்வி
Veda_kalathu_dec11_1
பெண் கல்வி பற்றி வேத சாஸ்திரத்தில் வெளிப்படையாகப் பேச்சில்லை. ஆடவர்க்கு இருந்ததுபோல மகளிர்க்கும் தனியாகப் பாடசாலைகள் இருந்தனவா என்பதையும் நாம் அறியவில்லை.

எனினும் பெண் கல்வி உயர் நிலையில் இருந்தது என்பதை ஊகிக்கலாம். த்ரைவர்ணிகர்கள் எனப்படும் பிராம்மண, க்ஷத்திரிய, வைசியர்களைச் சார்ந்த மாதர் வேதம் கற்றும் அதைப் போதித்தும் வந்தனர்.

மந்திரங்களை ஞானதிருஷ்டியால் கண்ட மாதரும், வேதம் போதிக்கும் மாதரும், கற்கும் மாணவியரும், தவமாதரும், பிரம்மசாரிணிகளும், பிரம்மவாதினிகளும் ஆன பல மாதர்களின் பெயர்கள் வேதத்திலே திகழ்கின்றன.

ஸம்ஹிதையில் பெண் ரிஷிகளின் பெயர்கள் உள்ளன. ரிக் வேதத்திலும் ரிஷிக்குரிய இலக்கணம் வாய்ந்த பெண்களின் நாமங்கள் பல உள்ளன. லோபாமுத்ரா, அபாலா முதலானோர் பிரம்மவாதினிகளாகவும் பேசப்பட்டனர். ரிக் வேதத்தின் உரையாடல் பகுதியில் ஊர்வசி, யமி, இந்திராணி எனும் பெயர்கள் உள்ளன.

பெண்களுக்குரிய சமயக் கடமைகள்
ரிக் வேத ஸம்ஹிதைக் காலம் முதல் சூத்திரங்கள் இயற்றப்பட்ட காலம் வரை முதல் மூன்று வர்ணங்களைச் சார்ந்த மாதர் சில சமயக் கடமைகளை ஆற்றி வந்தது நன்கு புலனாகின்றது. அவர்களுக்கு உபநயனம் செய்வதுண்டு.

காயத்ரி மந்திரத்தை அவர்கள் ஓதி வந்தனர் என்று யம எனும் ஒரு ஸ்மிருதிகாரர் குறிப்பிடுகிறார்.

இன்னொரு ஸ்மிருதிகாரர் கூறுகிறார்:
மாதரில் இரு வகையினர் – பிரம்மவாதினிகள், ஸத்யோவதுக்கள் எனப்படுவர். இவர்களில் பிரம்மவாதினிகள் உபநயனச் சடங்குக்கு உரியவர்கள். அவர்களுக்கு பாஷணம், பாராயணம், சொந்த இல்லங்களில் பிக்ஷை – இந்த மூன்றும் ஏற்பட்டிருந்தன. ஸத்யோவதுக்கள்
உபநயனத்திற்குப் பின் மணம் புரிவிக்கப்பட்டனர்.

இதிலிருந்து முதல் மூன்று வர்ணப் பெண்கள் இரு பிறப்பாளர் என்ற பெயருக்கு இணங்கப் பூணூல் அணிந்து வந்தனர் என்பது வெளிப்படை.

ஸ்மிருதிகாரர் கூறிய இரு வகை மாதரில் பிரம்மவாதினியர் மணம் புரிந்து கொள்ளாது, நைஷ்டிக பிரம்மசாரிணிகளாக விரதம் பூண்டு வந்தனர்.

ஸத்யோவதுக்கள் உபகுர்வாண (கல்வி கற்றபின் இல்லறத்தில் ஈடுபடும்) பிரம்மசாரிகளைப் போன்றவர்கள். மாணவியர் குரு குலவாசம் செய்து கல்வி பெற்ற பின், மணம் புரிந்து கொண்டனர்.
மணமகன் பூணூல் அணிந்த மணமகளின் கரம் பற்றி மந்திரம் உரைக்க வேண்டும் என்று கிருஹ்ய சூத்திரத்தின் ஆசிரியர் கோபிலர் எழுதுகிறார்.

மஹாபாரதத்தில் வன பர்வத்தில் கூறியபடி, குந்திதேவிக்கு ஓர் அந்தணர் பூணூல் அணிவித்து, மந்திரோபதேசமும் செய்தார். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த (காதம்பரி எழுதிய) பாணபட்டர் பூணூலை அணிந்திருந்த ஒரு கன்னியைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

வேத காலத்தில் ஆண்களைப் போல பெண்களும் உபநயனம் முடிக்கப் பெற்று வேதம் கற்றனர் என்பதைப் பல புகழ்பெற்ற நூலாசிரியர்கள் ஆதரிக்கின்றனர். மனு தமது சாஸ்திரத்தைத் தொகுக்கும் முன்னரே அந்த வழக்கம் ஏறக்குறைய மறைந்துவிட்டது.

எனினும் மனு அப்பழக்கத்தை நன்கு அறிந்திருந்தார் என்பதே ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

“பதி” என்ற சொல்லோடு “ந” என்ற விகுதியைச் சேர்த்துப் பத்தினி என்ற சொல் யாகம் செய்யும்போது கணவனுக்குத் துணையிருப்பவள் என்று பொருள்படும் என்று பாணினி கூறுவார்.

மனைவியின்றி யாகம் செய்யக் கூடாது என்பது விதி. சீதையைப் பிரிந்தபோது ஸ்ரீராமர் ராஜசூய யாகம் செய்தபோது, அதற்குத் தகுதி பெறுவதற்காக சீதை வடிவில் ஒரு தங்கப் பதுமையை அமைத்துக் கொண்டார்.

“மனைவியே யாகத்தில் பாதியாவாள்” என்று ஸதபத பிராம்மணம் (V.2-1-8) கூறுகிறது. ஒவ்வொரு யாகத்திலும் பத்தினி ஸமயாஜ என்னும் கிரியை நடக்கும்போது, யாகம் செய்வோனின் மனைவி பலிபீடத்திற்கு அருகே அமர்ந்து வேத மந்திரங்களைக் கூற வேண்டும். பிரம்மசாரி சமர்ப்பிக்கும் ஹவிசைத் தேவர்கள் ஏற்பதில்லை (V.1-6-10) என்றும் கூறப்பட்டுள்ளது.

திருமணத்தில் மணமகள் சில வேத மந்திரங்களை உரைக்க வேண்டும் என்ற விதியுள்ளது; அவற்றை புரோகிதரோ, மணமகனோ, மணமகளின் தந்தையோ கூறுவது சற்றும் பொருத்தமற்றதாம்.
வேதத்தில் இன்னின்ன பகுதியைக் கற்றவர் இன்னின்ன பெயர் பெறுவர் என்று பாணினி இலக்கண அமைப்பிலிருந்தும், பெண்கள் முற்காலத்தில் வேதம் கற்றனர் என்பது விளங்குகிறது.

குருவும் பண்டிதரும் ஆன மாதர்
மாணவியரான பெண்கள் மட்டுமன்றி, கல்வி கற்பித்து வந்த மாதரும் வேத காலத்தில் வாழ்ந்தனர்.

ஆசார்ய, உபாத்யாய என்ற பதங்கள் கற்பிக்கும் மாதரையும், ஆசார்யாணி, உபாத்யாயி ஆகிய பதங்கள் கற்பிப்போரின் மனைவியரைக் குறிப்பதாகவும் பாணினி கூறுகிறார்.

பாணினியின் இந்த விதிகளை பதஞ்சலி தமது மஹாபாஷ்யத்தில் விளக்கும்போது, பண்டைய பாரதத்தில் ஆசார்ய, உபாத்யாய என்ற பட்டங்களைப் பெற்று விளங்கிய சில மாதர்களை உதாரணம் காட்டுகிறார்.

வேறு சில பட்டங்களைப் பற்றிப் பேசும்போதும், ஆபீசலி எனும் இலக்கணப் பண்டிதரின் பாடசாலையில் கற்றுப் பின்னர் கற்பித்து வந்த பெண்ணாசிரியை ஆபிசலா, டமேதி போன்ற பண்டிதைகளிடம் கற்ற மாணவியர் டமேதா:, டமேத்யாஸி சாத்ரா: என்றும் பட்டங்களைப் பெற்றனர் என்கிறார்.

காசகிருஷ்ணர் எனும் வியாகரண பண்டிதர் நிறுவிய இலக்கணப் பாடசாலையில் பாடம் கற்பித்து வந்த ஒரு பண்டிதை காசகிருஷ்ண பிராம்மணி எனும் பெயரோடு திகழ்ந்ததை காசாவிருத்தி எனும் பாஷ்ய ஆசிரியர் எழுதி வைத்துள்ளார்.

சம்ஹிதை, பிராம்மணம், உபநிடதம் எனும் பகுதிகளில் ஞான பண்டிதைகளின் பெயர்கள் பல காணப்படுகின்றன. அவர்களுக்குள் தலைமையானவர் கார்க்கி; ஜனகரது அரண்மனையில் கூடிய ஞானப் பேரவைகளில் வாதாடியவர்.
யாக்ஞவல்கியர் பல முனிவர்களை வாதத்தில் தோல்வியுறச் செய்தபோது, கார்க்கி, அவரைத் தம்மோடு வாதம் புரியுமாறு அறை கூவினார். அந்த வாதப்போரை பிருஹதாரண்யக உபநிடதம் குறித்துள்ளது.

வாதம் புரிந்த இருவரில் எவரும் வெற்றி காண முடியாதவாறு இருவரும் சமமாக விளங்கினர்.
அதே உபநிஷத்தில் (II-4) யாக்ஞவல்கியருக்கும், அவரது பத்தினியான மைத்ரேயிக்கும் நிகழ்ந்த ஞான உரையாடலில் பல பகுதிகள் பெருமை வாய்ந்தவை.

யாக்ஞவல்கியர் துறவு மேற்கொண்டபோது, தம் இரு மனைவியர்க்கும் தம் உடைமைகளைக் கொடுத்திட உத்தேசித்தார். அப்போது ஞானச்சார்பு தலையெடுத்திருந்த மனைவியான மைத்ரேயி, உலகச் சார்பு ஊறியிருந்த மற்றொருத்தியைப் போலன்றி, கணவரிடம், நிரம்பிய செல்வம் இருந்தாலும் அது அமர நிலையைத் தருமோ? என வினவினாள்.

கணவரோ, செல்வம் அமர நிலையைத் தராது என்று மறுமொழி இயம்பினார். அதைக் கேட்டதும் மைத்ரேயி, அமர நிலையைத் தராத ஒன்றால் எனக்கு ஆவதென்ன? என்றார்.

கௌசீதகி பிராம்மணத்தில் பத்யாஸ்வஸ்தி எனும் ஓர் ஆரிய நங்கை வாக், அதாவது ஸரஸ்வதீ எனும் பட்டம் பெறுவதற்காகக் கல்வி கற்க வட இந்தியா செல்வதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனால் பெண்களுக்கும் குருகுலக் கல்வியை அளிக்க வட இந்தியாவில் ஒரு பாடசாலை வேத காலத்திலேயே இருந்ததாக ஊகிக்க முடிகின்றது.

கந்தர்வனது ஆவேசம் பெற்றிருந்த ஒரு கல்வி கற்ற குமாரியைப் பற்றி ஐதரேய பிராம்மணத்தில் பேச்சு வருகின்றது. (V.25-4) அக்னிஹோத்திரம் எனும் நித்திய கர்மம் இரண்டு நாளைக்கு நீடிப்பதாகக் கொள்வதா, ஒரே நாளொடு முடிந்து விடுவதாகக் கொள்வதா என்ற வழக்கு புரோகிதருக்குள் ஒரு சமயம் எழுந்தது.

அக்னிஹோத்ரம் காலையிலும் மாலையிலும் பிராம்மணரால் இயற்றப்பட வேண்டும் என்பது விதி. ஒரே நாளில் காலையிலும் மாலையிலும் இயற்றப்படும் அக்னிஹோத்ரம் அதே நாளில் முடிந்துவிடுகிறது என்பது சிலரது கருத்து.

மாலையிலிருந்து தொடங்குமாயின் மறுநாள் காலையில் நிகழ்வதையும் சேர்த்து இரண்டு நாட்கள் நீடிக்கிறது என்பது மற்றொரு கருத்து.

இந்த வழக்கைத் தீர்மானிக்க அவளை அணுகிய போது அந்த நங்கை இரண்டாம் கருத்தையே ஆதரித்தார்.
கல்வியறிவுள்ள மகன்களைப் பெறுவதற்கு உபாயம் கூறுவது போல், பிருஹதாரண்யக உபநிடதம் புலமை மிக்க புதல்வியரைப் பெறுதற்கும் ஒரு சடங்கைச் செய்யும்படி விதிக்கிறது:

நீண்ட ஆயுளும் கல்வியும் வாய்ந்த ஒரு புதல்வியைப் பெற விரும்புபவன், எள்ளையும் அரிசியையும் சமைத்து, வெண்ணெயோடு கலந்து, தன் மனைவிக்கு ஊட்ட வேண்டும்.
அந்நாளில் பெண் கல்வியில் எத்துணை சிரத்தையிருந்தது என்பது இதிலிருந்து புலனாகிறது.

பெண்கள் பிரம்மவாதினிகளாயும் தவம் செய்பவராயும் வாழும் லட்சியம் வேத காலத்துக்குப் பின் இதிகாச காலத்திலும் பின்பற்றப்பட்டு வந்தது என்பது நமக்கு விளங்குகிறது.
பிக்ஷுணி ஸுலபா ஜனக மன்னருக்குச் செய்யும் ஞானப் பிரசங்கம் மஹாபாரதத்தில் உள்ளது.

ஞானப் பிரசங்கமும் திரௌபதியின் அரசியல் பிரசங்கமும் அதில் காணப்படுகின்றன.

ஸ்ரீராமச்சந்திரரை ஆர்வத்தோடு காணும் சபரி சித்த தாபசி (கற்றறிந்த தவ மூதாட்டி) எனப்படுகிறாள்.
சிகித்வஜன் எனும் அரசனாகிய கணவரைத் திருத்துவதற்காக அரசி சூடாலை ஊட்டிய ஞானோபதேசமும் புகழ்தற்குரியது. இது ஞானவாசிஷ்டம் எனும் நூலில் உள்ளது.

பிரம்மவாதினிகள் பலர் பண்டிதைகளாயும் தவசீலர்களாயும் திகழ்ந்தனர். பலர் நைஷ்டிகப் பிரம்மசரிய விரதத்தைப் பின்பற்றி, புலவர்களோடு வாதமும், அவர்கள் முன் பிரசங்கமும் செய்து வந்தனர்.

கலைகளிலும் தொழில்களிலும் பயிற்சி
வேதகாலத்தில் பெண்கள் நடனத்தையும் வாய்ப்பாட்டையும் இசைக் கருவிப் பயிற்சியையும் போதித்து வந்தனர்.
முற்காலத்தில் சாம வேதப் புரோகிதர்களின் மனைவிகள் யாக காலங்களில் சாமகானம் பண்ணுவது வழக்கமாயிருந்தது. பிற்காலத்தில் கணவர்களே அந்தப் பணியைச் செய்தனர். இந்த உண்மை ஸதபத பிராம்மணத்தாலும், தைத்ரிய ஸம்ஹிதையாலும் மைத்ராயனி ஸம்ஹிதையாலும் வலியுறுத்தப்படுகிறது.
பின்னல், தையல், நெசவு, துணியில் பூ வேலை, சாயமிடுதல், கூடை முடைதல், பாய் பின்னுதல் போன்ற வேறு குடிசைத் தொழில்களும் அக்காலப் பெண்களால் பழகப்பட்டன.

வீரப் பெண்மணிகள்
ரிக் வேதத்தில் வீரப் பெண்மணிகள் போர்க்களம் புகுந்து சண்டை செய்தனர். மாமுசி அரசனின் மனைவி தன் கணவனின் ஆணைக்கு ஏற்ப போர் புரிந்தாள் என்று காணப்படுகிறது. அசுவினி தேவதைகளின் மீது பாடப்
படும் ஒரு தோத்திரப் பாடலில் விச்பலா என்பவளின் வீரம் குறிக்கப்பட்டுள்ளது.

போரிலே தொடையில் அவள் காயம் எய்தியதால், அவளது காலை வெட்டிவிட்டு ஓர் இரும்புக்கால் அமைக்கப்பட்டது.
இந்த ரிக்வேதப் பாடலிலிருந்து மாதர் போர் புரிவதிலும் பயிற்சி பெற்றனர் என்பதும், அக் காலத்திலே ரண சிகிச்சை மேன்மையான நிலைபெற்று விளங்கியது என்பதும் பெறப்படுகின்றன.
வேத காலத்திற்குப் பின்னும் ஒரு வீரமகள் சந்திரகுப்த மன்னரின் அரண்மனைக்குக் காவலாகப் போர்க்கோலம் புனைந்து நின்றாள் என்பது கூறப்பட்டுள்ளது.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பதஞ்சலி தமது மஹாபாஷ்யத்தில், ஈட்டியைத் தாங்கி வரும் மாதரை சாத்திகி என்ற பதம் குறிக்கும் என்பதை எழுதியுள்ளார்.
ஆக, மாதர் கல்வி பல துறைகளிலும் – அறிவு, நீதி, ஞானம், அழகு, உடல் வலு எனும் பலவகைப்பட்ட துறைகளிலும் – வேத காலத்தில் சிறப்புப் பெற்று ஒளிர்ந்தது என்பது பெறப்படுகிறது.

அதற்குப் பிற்பட்ட காலத்தில்தான் மாதரின் நிலை குலைந்து, தர்ம சூத்திரங்கள், மனு தர்மம் முதலான நூல்கள் எழுந்த காலத்தில் முற்றும் ஆண்களின் பாதுகாப்புக்கு உட்பட்டு வாழும் நிலைக்கு இறங்கியது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s