எழுச்சி பெற இளைஞர்களே வருக!

எழுச்சி பெற இளைஞர்களே வருக!
– மேதகு ஏ. பி. ஜே. அப்துல் கலாம்

மதுரை, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு ஏ. பி. ஜே. அப்துல் கலாம் ஆற்றிய உரையிலிருந்து…

நண்பர்களே, இன்றைக்கு உங்களைப் பார்க்கும் போது, உங்கள் அயராத சேவைகளைப் பற்றி எண்ணும்போது நான் ஸ்ரீராமகிருஷ்ணரது வாழ்வை நினைத்துப் பார்க்கிறேன்.

ABDUL_KALAM

மேற்கு வங்கத்தில் பிறந்து, ஆன்மிக ஒளி பெற்று, அறிவுத் தாகம் மிக்க இளைஞர்களை உருவாக்கி, அவர்களுள் முதன்மைச் சீடராக சுவாமி விவேகானந்தரைத் தேர்ந்தெடுத்தார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

அந்த வழியில் நம் இளைஞர்களை நாடு முழுவதும் சென்று பக்குவப்படுத்தி, பயன்படுத்தி அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் இன்றைக்கு ஸ்ரீராமகிருஷ்ண மடம் ஈடுபட்டு வருவதைப் பார்க்கும்போது, இப்பணி எவ்வளவு மகத்தானது என்பதை எண்ணிப் பார்க்கிறேன்.

சுவாமி விவேகானந்தர் கூறியது நினைவுக்கு வருகிறது: எல்லா ஆற்றலும் உன்னுள்ளே உள்ளன. உன்னால் எதையும், எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பதில் நம்பிக்கை வை. தற்காலத்தில் நம்மில் பலர் தாங்கள் வெறும் மூடர்கள் என்று எண்ணுவதுபோல உன்னை நீ எண்ணாதே. எழுந்து நில், உனது தெய்விகத்தை வெளிப்படுத்து.
என்ன ஒரு சிறந்த கருத்து!

உன்னிடம் உள்ள திறமையை எண்ணிப் பார். எழுந்து நின்று உன் ஞானத்தை வெளிப்படுத்து. அதன் மகத்துவத்தை நீ உணர்ந்த அடுத்த கணமே உலகம் உன்னிடம் வசப்படும்.

மன எழுச்சி மிக்க 54 கோடி இளைஞர்கள் இந்தியாவின் மிகப் பெரிய சொத்து. நாட்டின் சவால்களைச் சமாளிக்க நமது இளைய தலைமுறை எழுச்சியுற வேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவியரின் ஆராய்ச்சி மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்த்தால் அது மாணவர்களின் படைப்புத் திறனையும் ஆக்கபூர்வமான உற்பத்தித் திறனையும் வளர்க்கும்.

இத்திறமை பெற்றவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் தாமாகவே கற்கும் திறனை அடைவர். ஆனால் நாட்டில் 90% பேர் படிப்பின் பல்வேறு நிலைகளில் கற்க இயலாமல் பிற பணிகளுக்குச் செல்லும் சூழ்நிலைகளுக்கு ஆளாகின்றனர்.

பல்வேறு கவனச்சிதறல்கள், வறுமை, படிப்பிற்கேற்ற வேலையும், வேலைக்கேற்ற படிப்பும், சிறப்புப் பயிற்சியும் இல்லாத சூழல், உலக மயமாக்கலால் ஏற்படும் சமுதாய, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், மாறி வரும் குடும்பச் சூழல், அந்நியக் கலாச்சாரத்தின் தாக்கம் ஆகியவை நம் இளைஞர்களை மாற்றும் நிலை இன்று நாட்டில் நிலவுகிறது.

இத்தனையையும் தாண்டி நம் நாடு, நம் பாரம்பரியம், நமது வளம், நம் நாட்டிற்கேற்ற வளர்ச்சி முறை, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வு, முன்னோர் நமக்கு விட்டுச் சென்ற மரபுகள் –
இவற்றை அடிப்படையாகக் கொண்டு, இக்காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் நம்மை நாம் அறிவுப்பூர்வமாக மாற்றி அமைத்துக் கொண்டு நம் பாரம்பரியத்தை இழக்காமல், மக்களை அறிவார்ந்த சமுதாய மறுமலர்ச்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

ஒருமுறை நான் இந்தியப் பாராளுமன்றத்தில் இயற்றிப் பாடிய கவிதை தற்போது என் நினைவுக்கு வருகின்றது.
அதன் தலைப்பு லட்சியம்.
நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன்,
எங்கிருக்கிறது லட்சிய சிகரம், என் இறைவா?
நான் தோண்டிக்கொண்டே இருக்கிறேன்,
எங்கிருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா?
நான் பெருங்கடலில் நீந்திக் கொண்டிருக்கிறேன்,
எங்கிருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா?

இறைவா, இறைவா, நூறு கோடி மக்கள் லட்சிய சிகரத்தையும் அறிவுப் புதையலையும், இன்பத்தையும் அமைதியையும் உழைத்து அடைய அருள்வாய்.

இந்தக் கவிதையின் கருத்து என்ன? நாம் வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டிருக்கிறோம். பணி செய்கிறோம். இவற்றைச் செய்யும்போது நமக்கு வாழ்வில் ஒரு லட்சியம் வேண்டும். இது பற்றி திருவள்ளுவர் கூறுகிறார்:
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

நம் எண்ணம் உயர்வாக இருந்தால், அரும்பெரும் லட்சியங்கள் தோன்றும். பெரும் லட்சியம் இருந்தால் அருமையான எண்ணம் வரும்; எண்ணம் உயர்ந்தால் நம் பணிகள் யாவும் உயர்வாக இருக்கும்.

அறிவுப் புதையல் எங்கு இருக்கிறது? அமைதிக் கடல் எங்கிருக்கிறது? என்ற தேடல் என்னுள்ளே எழுந்தது. அந்தத் தாகம் வற்றாமல் இன்றும் இருக்கிறது. அதற்கு விடை தேடிக் கொண்டிருக்கிறேன். அந்தத் தேடலில் நான் காண்பது என்ன?

வள்ளுவர் காட்டும் வளமான நாடு
குறள் நமக்கு ஒன்றை நினைவூட்டுகிறது.

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற் கிவ்வைந்து.

ஒரு நாடு வளமான நாடாக வேண்டுமானால், அந்த நாட்டில் நோயின்மை, செல்வச் செழிப்பு, நல்ல விளைச்சல், அமைதி, சுமுகமான சமுதாயச் சூழ்நிலை, வலிமையான பாதுகாப்பு ஆகியவை நிலவ வேண்டும்.

என்ன அருமையாக ஒரு வளமான நாட்டைப் படம் பிடித்துக் காட்டுகிறார் வள்ளுவர்! நாம் எல்லோரும் உழைத்துத்தான் நம் நாட்டை வளமான நாடாக மாற்ற வேண்டும்.

சுமுகமான, வேறுபாடற்ற, ஓர் அறிவார்ந்த, அமைதியான, மகிழ்ச்சியான சமுதாயத்தை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்ற தேடலின் ஒரு பகுதியாக, நான் 2003-ஆம் ஆண்டு அருணாசலப் பிரதேசத்தில் 3500 மீ. உயரத்தில் அமைந்துள்ள தவாங் என்ற இடத்திற்குச் சென்றேன்.
அங்கு புத்த பிட்சுக்களைச் சந்தித்தேன். கடுங்குளிரில், வாழ்வதற்கே மிகவும் சிரமப்படக்கூடிய சூழ்நிலை. அந்த இடத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வதைக் கண்டேன்.
அந்த நிலையில் அங்கு எப்படி அமைதியும் மகிழ்ச்சியும் நிலவுகிறது என்ற கேள்வி என்னுள் எழுந்தது. இது எப்படி சாத்தியமாகும் என்று தலைமை பிட்சுவிடம் கேட்டேன்.

அதற்கு அவர், உலகில், பல்வேறு பிரச்னைகள் நம்பிக்கையின்மை, சுயநலம், சமூகப் பொருளாதார வேறுபாடு, கோபம், வெறுப்பு ஆகியவற்றின் காரணமாக வன்முறைகள் நிகழ்கின்றன.
இப்படிப்பட்ட நிலையில், புத்த தவ ஸ்தலம் எதைப் பரப்புகிறது என்றால், நாம் ஒவ்வொருவரும் நான், எனது என்பதை நம்மிடமிருந்து அகற்றினால், நம்மிடம் உள்ள தற்பெருமை மறையும்.

தற்பெருமை மறைந்தால், மனிதர்களுக்கு இடையேயான வெறுப்பு அகலும்; வெறுப்பு அகன்றால் வன்முறை எண்ணங்கள் நம்மை விட்டு அகலும்; வன்முறை எண்ணங்கள் நம்மை விட்டு மறைந்தால், அமைதி நம் மனதைத் தழுவும் என்றார். நல்ல விளக்கம்!

ஆனால் எப்படி நான், எனது என்ற எண்ணத்தை நம் மனதிலிருந்து அகற்ற முடியும்? எவ்வளவு கஷ்டமான விஷயம்! இதற்கான பக்குவமான கல்விமுறையை எப்படி நாம் கொண்டு வருவது என்பதே நம்மிடையே உள்ள சவால்.
அந்தச் சவாலை எப்படிச் சமாளிப்பது, அமைதியை எப்படி அடைவது என்ற கேள்விக்கு விடை தேடிய என் பயணம் தொடர்ந்தது.

நான் பல்கேரியா சென்றேன். அங்கு தேவாலயத்திற்குச் சென்றேன். தவாங்கில் கிடைத்த செய்தியின் தொடர்ச்சியாக, அங்கு உள்ள பாதிரியாரிடம் மன்னிப்பு என்பது எப்படி ஒரு வாழ்க்கையைப் பக்குவப்படுத்தும் என்பதைப் பற்றி அருமையான விளக்கம் பெற்றேன்.

பிறகு விவேகானந்தர் பிறந்த தலத்திற்குச் சென்றேன். எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டபோது அங்கு எனக்குக் கிடைத்த பதில் கொடை – வழங்கும் குணம். கொடையும் இத்தனை குணங்களுடன் கூட இருந்தால் நாட்டில் அமைதிக்கு அது வித்திடும் என்பதாகும்.

இந்தத் தகவலோடு அஜ்மீர் ஷரீப் சென்றேன், அங்கு தொழுகைக்குச் சென்றேன். அங்கிருந்த சூஃபி சாதுவிடம் இதே கேள்வியைக் கேட்டேன்.
அதற்கு அவர், இறைவனின் படைப்பில் தேவதையும் உண்டு. சாத்தானும் உண்டு. நல்ல எண்ணங்கள், நல்ல செயல்களுக்கு வித்திடும் என்றார்.

நல்ல செயல்களைப் பற்றி எண்ணும்போது, காந்திஜி வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி என் நினைவுக்கு வருகிறது. காந்திஜியின் 9-வது வயதில் அவரது தாயார், அவருக்கு ஓர் அறிவுரையை வழங்கினார்:

மகனே, துன்பத்தில் துவளும், யாராவது ஒருவரின் வாழ்வில் நீ ஏதேனும் ஒரு மாற்றத்தை உருவாக்கி அவரைத் துன்பத்தில் இருந்து மீட்டெடுத்து முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றால், நீ பிறந்ததின் பலன் உன்னை முற்றிலும் வந்தடையும். கடவுள் எப்போதும் உனக்கு அருள்வார்.

இப்படி இளம் மனதில் விதைக்கும் விதை நல்ல பலனைத் தரும் என்பதற்கு நம்மில் பல உதாரணங்கள் உள்ளன. எனவே நாம் நம் இளைஞர்களைப் பக்குவப்படுத்தினால்தான் வளமான இந்தியாவை 2020-க்குள் உருவாக்க முடியும்.

இளைஞர்களும் வளர்ந்த இந்தியாவும்
இந்தியா 2020-இல் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்றால், பொருளாதார வளமிக்க நாட்டில், 100 கோடி மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதே நமது லட்சியம். வேலை இல்லை என்ற நிலைமை மாறி, சரியான வேலை, நல்ல கல்வி, நல்ல பயிற்சி, சரியான இளைஞர்கள் நம் நாட்டிற்குத் தேவை. இதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகி வருகின்றன.
இப்படிப்பட்ட இந்தியாவைப் படைக்க எழுச்சி மிக்க வர்கள் இன்றியமையாத தேவை. அப்படிப்பட்ட இளைஞர்களை உருவாக்குவதே ராமகிருஷ்ண மிஷனின் லட்சியம்.

சுவாமி விவேகானந்தர் எப்படிப்பட்ட கனவு இளைஞனை உருவாக்க நினைத்தாரோ, அப்படிப்பட்ட இளைஞர்களை நாம் உருவாக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் வருங்காலத்தைப் பற்றி பயமே இல்லாமல் வாழ வேண்டும்.

என் முன்னால் பல காட்சிகள் தோன்றுகின்றன. ஒரு காட்சியில் 20 வயதிற்குள்ளே இருக்கும் எல்லா இளைஞர்களையும் பார்க்கிறேன். அவர்களுடைய மலர்ந்த முகங்களைப் பார்க்கிறேன். அவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வியால், கல்விப்பயனால், ஆசிரியர்களுக்கு நல்ல மாணவர்களாக, பெற்றோர்களுக்கு நல்ல குழந்தைகளாக, நாட்டிற்கு நல்ல குடிமகன்களாக அவர்கள் திகழ வேண்டும்.

இளைய சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக மாற்றுவது ஒரு பெரிய பணி. அறிவார்ந்த சமுதாயத்தின் ஆரம்பம் என்ன? அதை அடைவதற்கான அறிவின் இலக்கணம் என்ன?

அறிவின் இலக்கணம் என்றால் என்ன?
இதற்கான ஒரு சமன்பாட்டைக் கூறுகிறேன்.
கற்பனை சக்தி + மனத்தூய்மை + மன உறுதி = அறிவு
கற்றல் கற்பனையை வளர்க்கும். கற்பனை சக்தி சிந்திக்கும் திறனைத் தூண்டும். சிந்தனை அறிவை வளர்க்கிறது. அறிவு ஒருவனை மகானாக்குகிறது.

கற்பனை சக்தி உருவாவதற்குக் குடும்ப – பள்ளிச் சூழ்நிலைகள்தான் மிக முக்கிய காரணங்கள் எவ்வாறு?
நம் உள்ளத்தில் தூய்மை வேண்டும். எண்ணத்திலே தூய்மை இருந்தால், நடத்தையில் அழகு மிளிரும். நடத்தையில் அழகு மிளிர்ந்தால், குடும்பத்தில் சாந்தி நிலவும். குடும்பத்தில் அமைதி இருந்தால், நாட்டில் சீர்முறை உயரும். நாட்டில் சீர்முறை இருந்தால், உலகில் அமைதி நிலவும்.

மூன்றே மூன்று பேர்களிடம் இருந்துதான் மனத் தூய்மையைக் கற்க முடியும். அவர்கள் யார்?
தாய், தந்தை மற்றும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்தான்.

இளைஞர்களே! புதிய எண்ணங்களை உருவாக்கும் உள்ளத்து உறுதி இன்று என்னிடம் மலர்ந்துள்ளது. எனக்கென்று ஒரு புதிய பாதையை உருவாக்கி அதில் பயணம் செய்வேன். முடியாது என எல்லோரும் கூறுவதை, என்னால் முடியும் என்று கூறும் மன உறுதி என்னிடம் உருவாகிவிட்டது.
புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளைச் செய்ய முடியும் என்ற உறுதியான உள்ளம், என்னிடம் என்றென்றைக்கும் கொந்தளிக்கிறது. மனவுறுதி இளைஞர்களின் அஸ்திவாரம்.

இந்த நாட்டின் இளைய சமுதாயத்தின் உறுப்பினரான நான் என் கடின உழைப்பாலும், உள்ளத்து உறுதியாலும் தோல்வியைத் தோல்வியடையச் செய்து, வெற்றி பெற்று என் நாட்டை வளமான நாடாக்குவேன் என உறுதி கொள்ளுங்கள்.

நண்பர்களே, உள்ளத்து உறுதி வேண்டும் என்று கூறினேன். அது எப்படி வரும்? யார் மூலம் வரும்?
நல்லவர்கள், நல்ல ஆசிரியர்கள், நல்ல நூல்கள் இவை மனதைத் திடப்படுத்தும். நாம் எதையும் செய்யலாம், செய்து வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையை மனவுறுதி தரும்.

2020-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற லட்சியத்தை நாம் அடைய வேண்டுமானால், 54 கோடி இளைஞர்களின் பங்களிப்புடன்தான் அது சாத்தியமாகும்.
எல்லாத் துறைகளிலும் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல அறிவார்ந்தவர்களை நாம் தயார்ப்படுத்த வேண்டும். இளைஞர்களைச் செம்மைப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் உங்களது முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள். ஜெய்ஹிந்த்.

2 responses to “எழுச்சி பெற இளைஞர்களே வருக!

  1. Thank you very much for sharing. What an inspiring and philosophical speech !!! I see Kalam Sir as another form of Swamiji.

    நம் உள்ளத்தில் தூய்மை வேண்டும். எண்ணத்திலே தூய்மை இருந்தால், நடத்தையில் அழகு மிளிரும். நடத்தையில் அழகு மிளிர்ந்தால், குடும்பத்தில் சாந்தி நிலவும். குடும்பத்தில் அமைதி இருந்தால், நாட்டில் சீர்முறை உயரும். நாட்டில் சீர்முறை இருந்தால், உலகில் அமைதி நிலவும்.

  2. What an inspiring and a philosphical speech !!! I feel as if Swamiji is talking to us in the form of Kalam Sir.

    நம் உள்ளத்தில் தூய்மை வேண்டும். எண்ணத்திலே தூய்மை இருந்தால், நடத்தையில் அழகு மிளிரும். நடத்தையில் அழகு மிளிர்ந்தால், குடும்பத்தில் சாந்தி நிலவும். குடும்பத்தில் அமைதி இருந்தால், நாட்டில் சீர்முறை உயரும். நாட்டில் சீர்முறை இருந்தால், உலகில் அமைதி நிலவும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s