ஸ்ரீராமகிருஷ்ணருடன் நம்மை இணைப்பவர்

ஸ்ரீராமகிருஷ்ணருடன் நம்மை இணைப்பவர்

Sasimhj

‘அம்மா நீயே அடைக்கலம்’ என்று அன்னை ஸ்ரீசாரதாதேவியிடம் ஒருத்தி சரணடைந்தாள். சிறுவயதில் அவள் நடத்தை தவறி, பின் திருந்தி ஸ்ரீராமகிருஷ்ணரிடம் வர ஆரம்பித்தாள். முதலில் தகுதி கருதி அவளை அவர் ஆதரிக்கவில்லை. ஆனால் அன்னையோ,பக்குவமாகப் பேசி குருதேவரின் அருளை அவளுக்குப் பெற்றுத் தந்தார்.

இப்படிப் பரம கருணை உள்ள பகவானையும், கர்மவசத்தால் பாதாளத்தில் சிக்கிவிட்ட ஜீவனையும் சேர்த்து வைப்பது புருஷகாரத்தன்மை எனப்படும். பெருமாளையும் பக்தனையும் சேர்த்து வைக்கும் இந்தக் காரியத்தைப் பிராட்டி செய்கிறாள் என்று வைணவம் போற்றுகிறது.

பிள்ளை லோகாச்சார்யர் என்ற வைணவ அடியார், பிராட்டியிடமும் அருளாளர்களிடமும் இருக்கும் மூன்று பண்புகளைத் தமது ‘ஸ்ரீவசன பூஷணம்’ என்ற நூலில் கூறுகிறார். அச்சூத்திரம் இது: ‘புருஷகாரமாம்
போது கிருபையும் பாரதந்திரியமும் அநன்யார்ஹத்வமும் வேண்டும்.’

அதாவது, ‘புருஷகாரத் தன்மையுள்ள இடத்தில், பிறர் துக்கம் கண்டு பொறுக்க முடியாத கருணையும், இறைவனுக்கே பக்தன் வசப்பட்டுள்ள நிலையான பாரதந்திரியமும், இறைவனைத் தவிர வேறு எவருக்கும், எதற்கும் அடிமையாகாமல் உள்ள நிலையான அநன்யார்ஹத்வமும் ஆகிய மூன்றும் இருக்கும்’ என்பது இதன் பொருள்.

பிராட்டியின் கரிசனம் இல்லை எனில் பெருமாளின் தரிசனமில்லை. தேவியின் அருள்பெற்ற ஆசார்யர்களும் புருஷகாரப் பணியைச் செய்துள்ளார்கள். அவர்கள் பகவானின் பிரதிநிதியாக இருந்து, அவருக்கு உகந்த பக்தர்களை உருவாக்கி, அவரது அருளைப் பெற்றுத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஓர் ஆசார்யர்தான் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் (சசி மகராஜ்). ராமகிருஷ்ண ஆனந்தமே சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் சொத்து. தென்னகத்தில் இன்று நாம் குருதேவர், அன்னை, சுவாமிஜி ஆகியோரைப் பூஜிக்கவும் அவர்களைப் பற்றிப் பேசவும் படிக்கவும் எழுதவும் சிந்திக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தவர் சசி மகராஜ்தான்.

இன்று ஸ்ரீராமகிருஷ்ணர்-சுவாமிஜி பெயரில் நாம் சேவையாற்றி ராமகிருஷ்ண ஆனந்தத்தை அனுபவிக்கிறோம்; அதன் மூலம் அவரை அணுகுகிறோம். சசி மகராஜ் காட்டிய ஆன்மிக வழியில் செல்லும்போது அவரடைந்த ராமகிருஷ்ண ஆனந்தத்தை நாமும் அடைய முடியும். இப்படி பகவானையும் நம்மையும் இணைத்து வைக்கும் பாலம்தான் சுவாமிகள்.

ஸ்ரீராமகிருஷ்ணரின் தென்னகத் தூதராக சுவாமி விவேகானந்தரால் வங்கத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட சசி மகராஜிடம் கிருபை, பாரதந்திரியம், அநன்யார்ஹத்வம் ஆகிய ஆச்சார்ய பண்புகளும் விளங்கின.

கிருபை: இறைவனிடம் நம்மைக் கொண்டு சேர்க்கும் புருஷகாரத் தன்மையில் முதல் அம்சம் கிருபை – அதாவது மக்களிடத்திலும் உயிர்களிடத்திலுமான கருணை. இது அவரிடம் மிளிர்ந்தது. கடவுளைத் தரிசிப்பதற்கு முன் ‘கடவுள் உள்ளார், உனக்காகக் காத்திருக்கிறார்’ என ஜீவனிடம் கூறி ஆசுவாசப்படுத்தும் நிலை போன்றது இது.

ஒரு நாள் ஸ்ரீராமகிருஷ்ணரைத் தரிசிக்க சசிமகராஜ் தக்ஷிணேஷ்வரம் சென்றிருந்தார். அப்போது குருதேவர் அங்கில்லை. அதே சமயம் காளி என்ற இளைஞரும் குருதேவரைத் தரிசிக்க ஆவலுடன் காத்திருந்தார். அவர்
நீண்ட நேரமாகியும் வராததால் காளி துக்கமுற்றார்.

அச்சமயத்தில் சசி மகராஜ் காளியிடம் அன்பாக, ‘சாப்பிட்டாயா?’ என்று கேட்டு, அவர் சாப்பிடுவதற்கு ஏற்பாடு செய்தார். குருதேவரைப் பற்றிப் பல விஷயங்களைக் கூறினார். குருதேவரைக் காண முடியவில்லையே என்ற காளியின் ஏக்கம் தீரும் விதமாக சசிமகராஜ் நடந்து கொண்டது அவருக்கு ஆறுதல் தந்தது.

தமது குருவிற்கோ, இஷ்டதெய்வத்திற்கோ, ஒருவன் உகந்தவனாக இருந்தால் அவனுக்கு வேண்டிய அனைத்தையும் அன்பால் செய்யக்கூடிய ஆசார்யப் பண்பு ஆரம்ப காலத்திலேயே சசி மகராஜுக்கு வாய்த்திருந்தது.
பின்னாளில் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் சென்னையில் சேவையாற்றியபோது இந்த கிருபை மேலும் விரிவடைந்தது.

மடத்திற்காக நன்கொடை திரட்ட ஒருவரது வீட்டிற்குச் சென்ற போது ‘நாளை வாருங்கள்’ என்றார் வீட்டுக்காரர். மறுநாளும் அதே பல்லவிதான். இப்படிச் சில நாட்கள் இழுத்தடித்துவிட்டுக் கடைசியில் ஒன்றும் தராமல் அனுப்பிவிட்டார் அந்த மனிதர்.

இதனால் சசிமகராஜுடன் சென்றவர் கோபப்பட்டார். உடனே சசிமகராஜ், பக்தரின் கோபத்தைத் தணித்து, தோளில் கைபோட்டு, பரவாயில்லை. நாம் கோபப்பட்டால் அது அவருக்கு நல்லதல்ல” என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

சசிமகராஜின் வாழ்க்கை முழுவதும் பார்த்தோமானால், பீறிட்டெழும் கருணையையே காணலாம்.
ஓர் அறிஞர் அவரிடம் வந்தால், அவருக்கு அன்போடு அறிவைப் புகட்டுவார். குருதேவரை அவர் பூஜித்தது, பக்தர்கள் மீதான கருணையாலும்தான். ஒரு பாமரர் அவரிடம் சென்றால் சிறிதாவது பிரசாதம் வழங்கியே அவரை அனுப்புவார்.

அறிஞருக்கு அறிவுரை; பக்தருக்காகப் பிரார்த்தனை; பாமரருக்குப் பிரசாதம். இது அவரது நியதி.

பாரதந்திரியம்: மக்கள் பொன், பொருள், செல்வம், பேர், புகழ் என்று ஏதோ ஒன்றிற்கு வசப்பட்டிருக்கிறார்கள். ஆனால் மகான்களோ இறைவனுக்கு மட்டுமே-தங்கள் திறமைகளுக்குக்கூட அல்ல- வசப்பட்டிருப்பார்கள்.

வனவாசத்தில் ஒரு நாள் ஸ்ரீராமர், லக்ஷ்மணா, வனத்தில் நீரும் நிழலும் உள்ள இடத்தில் பர்ணசாலை ஒன்று அமைத்திடு” என்றார். லக்ஷ்மணன் எந்த மனநிலையில் செயல்படுகிறார் என்பதைச் சோதித்துப் பார்த்தார் ஸ்ரீராமர்.
லக்ஷ்மணன் உடனே கைகூப்பி, பிரபோ, நீங்கள் பார்த்து இங்கே பர்ணசாலை அமைத்துவிடு என்றால், நான் அப்படியே செய்கிறேன். உங்களது விருப்பப்படியே எனது செயல் அமைய வேண்டும். என்னை என் இஷ்டப்படி விட்டுவிடாதீர்கள்” என மன்றாடினார்.

‘என்று ராமர் என்னை என் போக்கில் போக விட்டுவிடுவாரோ, அன்றே அவர் என்னைக் கைவிட்டுவிட்டார் என்று அர்த்தம்’ என லக்ஷ்மணர் நினைத்தார். அவருக்கு எல்லாமே ஸ்ரீராமரின் விருப்பப்படிதான் நடக்க வேண்டும். -வால்மீகி ராமாயணம். ஆரண்.15:6.

இதுவே பாரதந்திரியம் எனப்படும். லக்ஷ்மணருக்கு ஸ்வாதந்திரியம் (தானாகச் செயல்படுவது) கிடையாது.

லக்ஷ்மணர் போல் ராமகிருஷ்ணானந்தரும் சிறிய காரியமோ, பெரிய காரியமோ குருதேவரது சித்தம் எப்படி என்பதைத்தான் பார்த்தார்.

அதனால்தான் சுவாமிஜி ‘சென்னைக்குச் செல், ராமகிருஷ்ண ஆனந்தத்தைப் பெருக்கு’ என அனுப்பியதும் உடனே புறப்பட்டார். ஒரு கேள்விகூடக் கேட்கவில்லை.

சசி மகராஜுக்குத் தமிழ் தெரியாது. சென்னையின் தட்பவெட்ப நிலை வங்காளத்திலிருந்து மாறுபட்டது. தெரிந்தவர்கள் என இங்கு யாருமில்லை. உணவும் வேறுபட்டது. எல்லாமே புதிது. அப்படியிருந்தும் ஒரு வீரன் போருக்குப் புறப்படுவது போல் சென்னைக்கு வந்து மடத்தை ஆரம்பித்தார்.

ஒரு வருடம் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஜென்ம தினத்தில் அன்னதானம் நடக்கும் என சுவாமிகள் அறிவித்திருந்தார். ஆனால் அதற்கான பொருள்கள் எதுவுமில்லை. அன்பர் ஒருவர், ‘அன்னதானம் அறிவிப்பு செய்தாகிவிட்டது. ஆனால் இங்கு ஒன்றுமில்லையே, சுவாமி?” என்று கேட்டார்.

சுவாமிகள் அமைதியாக, அன்பரே, உங்களுக்கு அன்னபூரணியிடம் நம்பிக்கை போய்விட்டதா என்ன? அவளது பிள்ளைகளுக்கு அவள் உணவு அளிக்காமலா போவாள்! அவளை நம்பிக் கவலையற்று இருப்போம்” என்றார்.
ஆச்சரியம்! அன்று இரவே யாரோ சிலர் அன்னதானத்திற்கு வேண்டிய பொருள்களைக் கொண்டு வந்தனர். ஆயிரக்கணக்கில் மக்கள் உண்டு மகிழ்ந்தனர்.

காந்தமுள் எப்போதும் வடக்குத் திசை நோக்கியே இருப்பதுபோல், கஷ்டமோ, சுகமோ எது வந்தாலும், சுவாமிகளது மனம் இறைவனையே பற்றி நின்றது. அந்த நிலைதான் பாரதந்திரியம்.

‘பகவானே, நான் எனக்கு உரியவனல்ல. உனக்கே நான் அடிமை’. இது பாரதந்திரியம். ‘பகவானே, நான்

பிறருக்கு உரியவன் அல்லன். உனக்கே நான் அடிமை. உன் குழந்தை’ என்ற நிலையில் நிலைத்திருப்பது அநன்யார்ஹத்வம் எனப்படுகிறது.

அநன்யார்ஹத்வம்: வாழ்க்கையில் பிறரையோ, பிற சக்திகளையோ சார்ந்திருந்து, இறைவனை இழந்துவிடும் அவலநிலை வராமல் இருப்பது அநன்யார்ஹத்வம். இதை ஆண்டாள் தெளிவாக்கினார்:
‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
உன் தன்னோடு உற்றோமே ஆவோம்
உனக்கே நாம் ஆட்செய்வோம்.’

ஒருமுறை ஓர் அன்பர் – மடத்திற்கு மாதாமாதம் நன்கொடை தருபவர் – சசி மகராஜிடம் உரையாடிக் கொண்டிருந்தார். திடீரென அவர் ஆதிசங்கரர் பற்றிச் சிறிது குறைவாகப் பேசினார். ஒன்றைத் தூக்கி இன்னொன்றைத் தாழ்த்துவது குருதேவருக்கு ஏற்புடையதல்ல. அது சசி மகராஜுக்கும் பிடிக்காது.
சங்கரரின் அருமைகளை சுவாமிகள் கூறினார். அது அந்த அன்பருக்குப் பிடிக்கவில்லை. உடனே கோபமாகப் போய்விட்டார்.

அந்தச் சமயத்தில் இன்னொருவர் வந்து, சுவாமி, நீங்கள் அவரிடம் கோபமாகப் பேசியதால், அவர் மேற்கொண்டு நன்கொடை தருவதை நிறுத்திவிட்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்.

என்ன, இப்படிப்பட்டவர்களை நம்பியா இங்கு இறைவனது காரியம் நடக்கிறது?” என்று வேகமாகக் கேட்டார் சசி மகராஜ்.

‘நம் சக்தி போதாவிட்டால் பகவானைப் பிரார்த்திப்போமே! ஏன் பிறரிடம் கையேந்த வேண்டும்? வீரத்துடன் பிரார்த்தனை செய்; பிச்சையெடுக்கச் செல்லாதே’ என்பார் சுவாமிகள்.

மற்றோர் ஆண்டு குருதேவரின் ஜெயந்தி விழா. அந்த வருடமும் அன்னதான சேவைக்குப் பணம் வசூலாகவில்லை. அன்றிரவு அன்பர் ஒருவர் மடத்தில் தங்கியிருந்தார். அவர் தூங்கிக் கொண்டிருந்த
போது ஏதோ இரைச்சல் கேட்டு எழுந்தார்.

கூடத்தில் சுவாமிகள் முன்னும்பின்னுமாக நடந்து கொண்டிருந்தார். அடிக்கடி பெருமூச்சுவிட்டபடி, கூண்டில் அடைபட்ட சிங்கம் போல் அவர் நடந்து கொண்டிருப்பதைக் கண்ட அன்பருக்குச் சற்று பயமே உண்டாகிவிட்டது.

சுவாமிகள் ஓர் உயர்ந்த மனநிலையில் இருந்து கொண்டு, ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய உதவுமாறு இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்!

ஆழ்ந்த பிரார்த்தனைக்கு இறைவன் செவிசாய்க்காமல் இருப்பானா? மறுநாள், சுவாமிகள் எழுதி வெளியிட்டிருந்த நூலைப் படித்த மைசூர் இளவரசர் சுவாமிகளைப் பாராட்டிப் பெரியதொரு நன்கொடை அனுப்பி வைத்தார். அதைக் கொண்டு அன்னதானம் நடந்தது. ‘என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றைக் காணாவே…’ என்ற நிலை இது.

ஓர் உதாரணம்.
கடும் உழைப்பால் சுவாமிகளின் கடைசிக் காலத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
‘இனி கோதுமை சப்பாத்தி மட்டும் சாப்பிட வேண்டும்’ என மருத்துவர்கள் கூறினர்.

சசிமகராஜ் உடனே மறுத்து, குருதேவருக்குச் சப்பாத்தி நைவேத்தியம் செய்யும் வழக்கமில்லை. பகவானுக்குப் படைக்காததை நான் எப்படி புசிப்பது?” என்று கேட்டார்.
இறைவன் உண்ட எச்சிலில்தான் தன் வாழ்க்கை எஞ்சியுள்ளது என்பது அவரது திடநம்பிக்கை. அது அநன்யார்ஹத்வத்தின் வெளிப்பாடு.

இப்படி சசி மகராஜின் வாழ்க்கை நமக்குத் தரும் ஆழ்ந்த படிப்பினைகள் பல:
1. ஸ்ரீராமகிருஷ்ணர் எல்லையற்ற பரம்பொருள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை, 2. எளிய, தூய வாழ்க்கை, 3.இறைவனிடமும் மக்களிடமும் அன்பு, 4. எல்லோருக்கும் சுயநலமற்ற நல்ல சேவை, 5. சாஸ்திர ஞானம்.
இந்தப் பண்புகளை நாமும் நம்முள் எந்த அளவிற்கு வளர்த்துக் கொள்கிறோமோ, அந்த அளவிற்கு ராமகிருஷ்ணானந்தரின் அரவணைப்பிற்குப் பாத்திரர் ஆவோம். அந்த அரவணைப்பு குருதேவரின் அருளை அதிவேகத்தில் நமக்குப் பெற்றுத் தரும்.

அது ஸ்ரீராமகிருஷ்ணருடன் நம்மை இணைத்து வைக்கும் என்பது உண்மை. ராமகிருஷ்ணானந்தரின் சொத்தான ‘ராமகிருஷ்ண ஆனந்த’த்தை நாமும் பெற முடியும்.
(சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் ஜென்ம தினம் -12.8.2015)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s