ஸ்ரீராமகிருஷ்ணர் ராதையாகவே!

ஸ்ரீராமகிருஷ்ணர் ‘கலியுகத்தில் இறைவனை அடைய பக்தி மார்க்கமே சிறந்தது’ என்பார்.

நாரதர் தமது பக்தி சூத்திரங்களின் மூலம் பக்தி செய்வதில் ஒன்பது வழிகளைக் காட்டுகிறார். இறைவனுக்குத் தாயாக, சேயாக, நண்பனாக என்று பல விதங்களில் பக்தன் தன்னை பாவித்துக் கொள்கிறான். ராக பக்தி எனப்படும் மதுர பாவத்தில் பக்தன் இறைவனைத் தன் நாயகனாகவோ, நாயகியாகவோ எண்ணிக் கொள்கிறான்.

ஸ்ரீராமகிருஷ்ணர் தம்மை ராதையாகவே கண்டு, கிருஷ்ணனைத் தன் நாயகனாக பாவித்து பக்தி செலுத்தினார். ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடரான சுவாமி சாரதானந்தர் எழுதுகிறார்:
Hare Krishna mahamantra
‘மதுர பாவனையில் குருதேவர் ஆன்மிகச் சாதனை செய்தபோது, அவருக்குப் பெண்களைப் போல ஆடை, நகைகள் அணிந்துகொள்ள ஆவல் மேலிட்டது. அதை அறிந்த மதுர்பாபு, அவருக்காக மிகவும் அழகிய விலையுயர்ந்த காசிப் பட்டுப்புடவை போன்ற ஆடைகளைத் தருவித்தார். குருதேவரின் தோற்றத்தை மேலும் பெண் போல் ஆக்குவதற்குத் தேவையான சுருள்சுருளான முடிகொண்ட சவுரியையும், தங்க நகைகளையும் மதுர்பாபு வாங்கித் தந்தார்.

‘இந்த ஆடை அணிகலன்களை அணிந்து கொண்ட ஸ்ரீராமகிருஷ்ணருக்கு, அவருக்குள் இருந்த பெண் தன்மை வெளிப்பட்டதில் ஆச்சரியம் இல்லை. ஆனாலும் ஒரு பெண்ணின் மனோபாவத்தில் மூழ்கிவிட்ட அவரது நடை, உடை, பாவனை, பேச்சு, பார்வை, எண்ணம் எல்லாமே பூரணமாகப் பெண் தன்மை அடைந்துவிடும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை!’

ஹிருதயர் கூறினார்: ‘தட்சிணேஸ்வரத்தில், குருதேவர் அதிகாலையிலேயே ஒரு கூடையை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்குப் போய்ப் பூக்களைக் கொய்து வருவார். அவர் அதற்காகக் கிளம்பும்போது, பெண்களைப் போல இடது காலை முதலில் எடுத்து வைத்தே கிளம்புவார்.
‘பூப்பறிக்கும்போது குருதேவரைப் பார்த்தால் ராதையே பூப்பறிப்பது போல எனக்குத் தோன்றும்” என்று பைரவி பிராம்மணி சொல்வதுண்டு.

‘பறித்த பூக்களைக் கொண்டு அவர் அழகிய மாலைகளைத் தொடுப்பார்; அவற்றை ராதாகாந்தர் விக்கிரகத்துக்கு அணிவிப்பார்.

‘சில நேரங்களில், மாலைகளை அன்னை பவதாரிணியின் சிலைக்கு அணிவித்து உளம் உருகப் பிரார்த்திப்பார். கோகுலத்து கோபியர்கள் கிருஷ்ணரையே தமது ஆன்மிகக் கணவனாகத் தந்தருளுமாறு எப்படி அன்னை காத்யாயினியைப் பிரார்த்தித்தார்களோ, அதுபோல் குருதேவரும் லோகமாதாவைப் பிரார்த்தித்தார்’.

சுவாமி சாரதானந்தர் மேலும் எழுதுகிறார்:
‘ராதையின் அருள் இல்லாமல் கிருஷ்ணரின் தரிசனத்தைப் பெறுவது இயலாது என்பதை அறிந்திருந்த குருதேவர், ஒரே முனைப்பாக ராதையை வழிபட ஆரம்பித்தார். ராதையின் அழகிய திருவுருவையே நினைந்து ஆழ்ந்த தியானத்தில் மூழ்கும் குருதேவர், தீவிர வேட்கையுடன் இடைவிடாத பிரார்த்தனையிலும் ஈடுபட்டார்.

‘இந்தத் தீவிர தவத்தின் பலனாக, விரைவிலேயே அவருக்கு ராதையினது தரிசனம் கிட்டியது.
‘குருதேவரது திருமேனியில் எப்படி பல்வேறு தெய்வ வடிவங்கள் உட்புகுந்து கலந்தனவோ, அதேபோல் ராதையின் திருவுருவமும் அவருக்குள் கலந்தது.

‘இது பற்றி குருதேவர், ஸ்ரீகிருஷ்ணரின் மீது தான் கொண்ட தீவிர காதலால், எல்லாவற்றையுமே கிருஷ்ணருக்காகத் துறந்துவிட்ட ராதையின் இனிமை பொங்கும், பரிசுத்தமான, தெய்விகமான, ஒப்பற்ற அழகை என்னால் விளக்கவே முடியாது. நாகலிங்கப் பூவின் மகரந்தக் கோசத்தில் துலங்கும் பொன்னொளி நிறமே ராதையின் நிறம்” என்று கூறுகிறார்.

‘இந்தக் காட்சியைப் பெற்றபின் சில காலம் ஸ்ரீராமகிருஷ்ணர், ‘தாமே ராதை’ என்ற உணர்வில் திளைத்திருந்தார். ராதையின் திருவுருவம் மற்றும் ராதையின் குணாதிசயங்கள் பற்றியே அவர் ஆழ்ந்து தியானம் செய்து வந்ததால்தான் இவ்வாறு நிகழ்ந்தது. இந்த பாவத்தில் அவர் தம் சுபாவமான, சுய இருப்பையே இழந்துவிட்டார் எனலாம்’.

கங்கா மாதா : பிருந்தாவனத்தில் இருந்த கங்கா மாதாவும் குருதேவரிடத்தில் ராதையைக் கண்டார். சுவாமி சாரதானந்தர் கூறுகிறார்:
‘கங்கா மாதா என்ற ஒரு பக்தை பிருந்தாவனத்தில் வாழ்ந்து வந்தார். அவரை ராதையின் அந்தரங்கத் தோழியான லலிதாவின் மறுபிறவியாகவே எல்லோரும் கருதினர். தெய்விக அன்பை உலகத்துக்குப் போதிக்கவே அவர் மறுபிறவி எடுத்து வந்ததாக நினைத்தார்கள்.

‘ஸ்ரீராமகிருஷ்ணரை ராதையின் மறு அவதாரமாகவே கண்ட கங்கா மாதா, குருதேவரை ‘துலாலி’ (பிரியமான தோழி) என்றே அழைத்ததாகக் குறிப்பிட்டார். சாதனை ஏதும் இதற்காகச் செய்யாமலேயே தனது துலாலியைக் காணும் பேறு பெற்றுவிட்டதாகக் கருதிய கங்கா மாதா, தனது வாழ்நாள் முழுவதும் தாம் செய்த பக்திக்கும் சேவைக்கும் பலன் கிட்டியதாக உணர்ந்தார்.’

சுரேஷ் சந்திர தத்தர்: ‘ஒருமுறை கிருஷ்ணருக்கான டோல் பண்டிகையின்போது, குருதேவர் தட்சிணேசுவரத்து ஸ்ரீராதாகாந்தர் கோவிலுக்குள் சென்றார். அப்போது குருதேவர், ராதையின் உணர்வில் இருந்தார். அவர் விளையாட்டாக கிருஷ்ணரது விக்கிரகத்தின் மீது வண்ணப் பொடிகளைத் தூவியபடி,
‘வண்ணங்கள் கொண்டு உன்னோடு இடும் இந்தச் சண்டையில் வெல்லப்போவது நீயா, நானா பார்க்கலாம் கண்ணா!’ என்று பாடினார். இந்தக் காட்சியை அன்று கண்டவர்கள் பரவசம் உற்றனர்.

ராதாகிருஷ்ண சங்கம உருவில் குருதேவர்
சுவாமி சாரதானந்தர் எழுதுகிறார்:
‘குருதேவரின் சீடர்கள் எல்லோருமே சற்றுக் குறைவாகவோ, மிகையாகவோ ஆண், பெண் தன்மைகள் இணைந்தே அவரிடமிருந்து வெளிப்படுவதைக் கண்டிருக்கின்றனர்.
‘குருதேவரின் இத்தகைய தன்மையை அனுபவத்தில் கண்டுணர்ந்த கிரீஷ்கோஷ் அவரிடமே ஒருமுறை தைரியமாக, சுவாமி, நீங்கள் ஆணா, பெண்ணா?” என்று கேட்டார்.

குருதேவர் புன்னகையுடன், எனக்குத் தெரியாது” என்றார்!
கடவுளைக் காதலனாகக் கண்டு மதுரபாவ சாதனையை மேற்கொண்டபோது, குருதேவர் ஒரு பெண் போன்றே ஆடை அணிந்தார்.

அது பற்றி ஹிருதயர் கூறினார்: ‘பிற பெண்கள் குருதேவரைச் சூழ்ந்து இருக்கும்போது அவருக்கு மிகவும் நெருக்கமான உறவுக்காரர்களால்கூட, அவரை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக இருந்தது!’

‘அந்தக் காலகட்டத்தில், ஒரு சமயம் மதுர்பாபு என்னைத் தமது ஜான்பஜார் வீட்டில் பெண்கள் தங்கும் பகுதிக்கு அழைத்துப் போய், அங்கிருக்கும் பெண்களுக்கு நடுவே உன் மாமா யார் என்று கொஞ்சம் காட்டேன்…” என்றார்.
‘பல காலமாக அவர் கூடவே இருந்து, அவரைத் தொட்டு சேவை செய்து வந்த எனக்கே அவரைச் சட்டென அடையாளம் காட்ட முடியவில்லை!’

மகேந்திர தத்தர் எழுதுகிறார்: ‘ஒரு சமயம் சில நாடக நடிகைகள் குருதேவரை தரிசிக்க தட்சிணேசுவரம் வந்தார்கள். சீதை, சாவித்திரி போன்ற கதாபாத்திரங்களை குருதேவருக்கு அவர்கள் நடித்துக் காட்டி மகிழ்வித்தார்கள்.

குருதேவரும் அவர்களை மகிழ்விக்க, ராதைக்கும் கிருஷ்ணருக்கும் இடையே தூது போகும் ஒரு பெண் பாடுவதான கீர்த்தனையைப் பாடி நடித்துக் காண்பித்தார்.
அந்தப் பாடகிகளின் அங்க சேஷ்டைகளை எல்லாம் – அவர்கள் எப்படித் தங்கள் பெரிய மூக்குத்திகளைச் சரிசெய்து கொள்வார்கள், வெற்றிலை பாக்குப் போட்டு எப்படித் துப்புவார்கள், எப்படி கைகள், கழுத்து தலை ஆகியவற்றை அசைப்பார்கள் – இவற்றையெல்லாம் தத்ரூபமாக நடித்துக் காட்டினார் குருதேவர்.

அதைக் கண்ட அந்த நடிகைகள் மிகவும் வியந்து, இவர் ஒரு சாதுவாக இருந்தும் எப்படித்தான் பெண்களுக்கே உரித்தான இந்த நடையுடை பாவனைகளையெல்லாம் அறிந்து கொண்டாரோ!” என்று வியந்தனர்!

பின்னொரு சமயம், குருதேவர் தமது பக்தர்களிடம் புருஷன் -பிரகிருதி பற்றிய அனுபவங்களை விளக்கினார்: ஓ! எத்தகைய மனோ நிலைகளை எல்லாம் அனுபவித்திருக்கிறேன்! சில நாட்கள் சிவன் – துர்க்கை பாவத்திலும், சில தினங்கள் ராதா-கிருஷ்ண பாவத்திலும், வேறொரு சமயம் ராமர்- சீதை பாவத்திலும் இருந்திருக்கிறேன். நான் ராதை என்கிற உணர்வில், கிருஷ்ணருக்காக அழுதேன்; என்னை சீதையாகக் கருதி, ராமருக்காக ஏங்கி அழுதேன்….”

இரவு பகலாக, சீதை-ராமர் மீது தியானம் செய்வேன்; அப்போது எனக்குத் தொடர்ந்து சீதா-ராமரின் காட்சி கிடைக்கும். பிற்பாடு ராதா-கிருஷ்ண உணர்வில் மூழ்கித் திளைப்பேன். இரு வேறு லட்சியங்களின் சங்கமம் அது – அதாவது பிரகிருதி – புருஷன்.”

சுவாமி அபேதானந்தர் கூறுகிறார்: அதுல் சந்திரகோஷ், ராதா-கிருஷ்ண சங்கம ரூபத்தை ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கண்டார். அந்த நிகழ்வை அட்சய குமார் தமது நூலான ‘ராமகிருஷ்ண புந்தி’யில் விவரித்திருக்கிறார். இதைப் பற்றி தமது சுயசரிதையில் சுவாமி அபேதானந்தர் கூறுகிறார்:
கிரீஷ் கோஷின் சகோதரரான அதுல், குருதேவரிடம் பக்தி பூண்டவர். ஒரு நோயாளியின் நாடி பிடித்துப் பார்த்தே நோயாளியின் நிலைமையை அவரால் கண்டுவிட முடியும். அதன் காரணமாக, குருதேவர் அதுலைச் சில சமயம் அழைப்பதுண்டு.

‘ஒரு சமயம், அதுல் பாக்பஜாரிலிருந்து குருதேவரைப் பார்க்க இரவு 10 மணி வாக்கில் காசிப்பூர் தோட்ட மாளிகைக்கு வந்தார். கதவு பூட்டியிருந்தது.
‘அதைத் தட்டினார், யாரும் கவனிக்கவில்லை. நீண்ட நேரம் தட்டிய பிறகு, மூத்த கோபால் வந்து வெளி வாயிற்கதவைத் திறந்துவிட்டார். அதுல் உள்ளே வந்து, குருதேவரைக் காண்பதற்காக மாடிக்குச் சென்றார். குருதேவர் கட்டிலில் படுத்திருக்க, சசி அவருக்கு விசிறிக் கொண்டிருந்தார். லாட்டு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அதுலைக் கண்டதும் சசி விசிறியை அவரிடம் தந்துவிட்டு, ஓய்வெடுக்கக் கீழே சென்றார். கட்டிலில் போர்த்திப் படுத்திருந்த குருதேவருக்கு அதுல் விசிற ஆரம்பித்தார். சற்று நேரத்தில், அவருக்கு ஓர் அற்புதக் காட்சி கிட்டியது.

அவர் குருதேவரின் வலது பாதி உடம்பில் கிருஷ்ணரையும் இடதுபாதியில் ராதையையும் கண்டார். குருதேவரிடம் ராதா – கிருஷ்ண சங்கம உருவைக் கண்ட அதுலுக்குத் தாம் கண்டது ஒருவேளை பிரமையாக இருக்குமோ என்று தோன்றியது. அச்சமயம், சரத் குருதேவருக்குச் சேவை செய்ய அறையில் நுழைந்தார்.

குருதேவர் அதுலைப் பார்த்து, வா! எத்தனை நேரமாக நீ இங்கே இருந்தாய்? நீ இப்போது கீழேபோய் ஓய்வெடுத்துக்கொள். சரத் என்னுடன் இருப்பான்” என்றார்.
அதுல் வியப்புடன் கீழே இறங்கிச் சென்றார். ராதா-கிருஷ்ணரை ஓருருவாக குருதேவரிடம் தான் கண்ட காட்சியை அவர் ஒரு போதும் மறக்கவில்லை.

மூலம்: How to live with God” – Swami Chetanananda..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s