கார்ட்டூனிஸ்ட் மதி

‘உன் குறிக்கோள் என்ன?’ என இப்போதெல்லாம் பிறந்த பிள்ளையிடம்கூடக் கேட்டுவிடுகிறோம்!
இதே கேள்வியை நான்காவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த எனது மகனிடம் ஒருவர் கேட்டார்.
சிறிது நேரம் யோசித்த அவன், ‘இப்போதைக்கு ஒரு ‘ஆம்பிஷனும்’ இல்லை அங்கிள்’ என்று கூறி
விட்டு ஓடிவிட்டான். கேட்டவருக்கு அதிர்ச்சி!

என்ன சார், உங்க பையன் இப்படி பதில் சொல்றான்? நீங்களாவது ஆம்பிஷன் எதையாவது சொல்லிக் கொடுக்க வேண்டாமா?” அவரது இந்தக் கேள்வி எனக்கும் அதிர்ச்சியைத் தந்தது.

அவனது பதிலில் தவறு ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, சார்! நீங்கள்தான் இன்னும் ஏழெட்டு ஆண்டுகள் கழித்துக் கேட்க வேண்டியதை இப்போதே கேட்டுவிட்டீர்கள்.

இப்போதைக்கு நன்றாகப் படிக்கட்டும், விளையாடட்டும். +2 முடித்தவுடன் மேற்படிப்பு எது என அவனே முடிவு செய்யட்டும். அதுதான் அவனுக்கு நல்லது. ஒரு வேளை அவனைவிட எனக்குப் புத்தி கம்மியாக இருந்தால் எனக்கு வழிகாட்ட என்ன தகுதி உள்ளது?” என்றேன் நான்.

இதே கேள்வியை நான் நான்காவது படித்தபோது என்னிடம் கேட்டிருந்தால் அவர் இன்னும் அதிர்ந்து போயிருப்பார். ஏனெனில் அப்போது என் லட்சியம் பஸ் டிரைவர் ஆவது.

கல்லூரிப் பருவத்து லட்சியமோ கப்பற்படை காப்டனாக வேண்டும் என்பது!

ஆனால், இந்த இரண்டும் கைகூடாமல் இறுதியில் கார்ட்டூனிஸ்ட் ஆகிவிட்டேன். இந்தத் துறைக்கு வந்து இருபது ஆண்டுகளும் ஓடிவிட்டன…!

என் அனுபவத்தில் ‘எல்லாமே என் திட்டப்படியல்ல, இறைவனது திட்டப்படியே நடக்கிறது!’ என்பது நன்கு புரிகிறது.

அதுவும் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவது போல், ஒரு சில சமயங்களில் தாய்ப் பூனையின் வாயில் அகப்பட்ட அதன் குட்டிபோல்தான் உணர்கிறேன்!

இது ஒரு பெரிய உதாரணம்தான்! ஆனாலும் இதற்கு ஆதாரமாக, கண்களில் நீரை வரவழைத்த, என் வாழ்வில் நடந்த, இரண்டு நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் எம்.எஸ்சி., நிலத்தியல் முதலாண்டு படித்துக் கொண்டிருந்த நேரம். கல்லூரிகளுக்கு இடையேயான கலைப்போட்டிகள் ஆரம்பிக்கும் சமயம். ஓவியப் பிரிவுகளில் எனது பெயரைப் பதிவு செய்திருந்தேன்.

Mathi1

அந்த ஆண்டு என் இயற்பியல் துறைப் பேராசிரியர் திரு. முனீஸ்வரன் அவர்கள் எங்களுடன் ஒருங்கிணைப்பாளராக வந்தார். அவர் என்னிடம் கேட்காமலேயே அரசியல் கேலிச்சித்திரம் வரைவதற்கான போட்டிக்கு என் பெயரைக் கொடுத்து விட்டார்!

எனக்கோ இது மகிழ்ச்சியைத் தருவதற்குப் பதிலாக அதிர்ச்சியைத்தான் தந்தது. ஏனெனில் எனக்கும் அரசியல் கார்ட்டூன்களுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை.

எனவே அவரிடம் போய் வாதம் செய்தேன். ஆனால் அவரோ, ‘ஓவியம் வரையும் அடிப்படைத் திறமை உனக்கு இருப்பதால் உன்னால் இதில் கலந்துகொள்ள முடியும். என் மீது மரியாதை இருந்தால் நீ இதைச் செய்’ என்றார். மறுபேச்சு பேசவில்லை நான்.

போட்டி நாள் அன்று எப்படியாவது இப்போட்டிக்கு ‘டிமிக்கி’ தந்துவிட வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால், பிற போட்டிகளில் கலந்துகொள்ள வந்த மாணவர்கள் கார்ட்டூன் போட்டி நடக்கும் அறைக்குள் என்னைப் பிடித்துத் தள்ளி
விட்டனர்!

அதிர்ச்சி தரும் வகையில் மண்டல அளவில் நடந்த அப்போட்டியில் தங்கப் பதக்கம் கிடைத்தது!
அடுத்து, மதுரை காமராசர் பல்கலைக் கழக அளவில் நடந்த கார்ட்டூன் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றேன்!
போட்டி நடுவர்களில் ஒருவர் போட்டி முடிந்ததும் என்னிடம், நீங்க என்ன ஆக வேண்டும் என்ற கனவு காண்கிறீர்கள்?” என்று கேட்டார்.

இப்போதைக்கு எனக்கு எந்தக் கனவும் இல்லை என்று சிறிது நேர யோசனைக்குப் பின்பு, எனது மகன் சொன்னதைப் போலவே சொன்னேன்!

அவர் பேனா ஒன்றை எடுத்து எனக்குப் பரிசாகத் தந்துவிட்டு, ‘உங்களுக்குள் ஒரு சிறந்த காட்டூனிஸ்ட் இருக்கிறார். சென்னையில் ஏதாவது ஒரு பத்திரிகையில் கார்ட்டூனிஸ்ட்டாகச் சேர முயலுங்கள்’ என்றார்!

இந்த நிகழ்ச்சி நடந்த மூன்றாவது மாதத்தில் நான் சென்னையில் ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் சேர்ந்தேன். பிறகு படிப்படியாகப் பல்வேறு பத்திரிகைகளில் பணிபுரிந்து, அனுபவம் பெற்று கடந்த 14 ஆண்டுகளாகத் தினமணியில் பணிபுரிந்து வருகிறேன்!

இன்று எண்ணிப் பார்த்தாலும் நடந்தது எல்லாம் உண்மையா என்று என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொள்வேன்!
இவ்வாறு பேராசிரியர் முனீஸ்வரன், மற்ற போட்டிகளில் கலந்து கொள்ள வந்த சக மாணவர்கள், போட்டி நடுவராக வந்தவர் – இவர்கள் எல்லாம் யார்?

இறைவன்தானே! அவனது அருள்தானே!
அடுத்த நிகழ்வு! சமீபத்தில் என் கார்ட்டூன்களின் தொகுப்பான ‘மதி கார்ட்டூன்ஸ்’ புத்தக வெளியீட்டு விழா திருநெல்வேலியில் நடந்தது.

நிகழ்ச்சி தொடங்கும் முன் எனது கண்ணில் பட்டார் அவர்!
பார்த்ததும் ஏதோ இனம் புரியாத ஒரு சந்தோஷம்! யார் இவர்? நம்மோடு நெருக்கமானவராகத் தெரிகிறாரே? என்று குழப்பம்!

ஓரிரு நிமிடங்கள் ஆயிற்று. ஆ! கண்டுபிடித்துவிட்டேன்! என்னை வசீகரித்த, என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய என் கணித ஆசிரியர் பீட்டர் ஃபெலிக்ஸ்தான்! பார்த்து சரியாக 25 ஆண்டுகள் ஆகிவிட்டன!

மிகுந்த சந்தோஷத்துடன் ஓடிச் சென்று அவரைப் பிடித்துக்கொண்டு, சார், நான்தான் மதி, உங்க மாணவன்” என்றேன். அரவணைத்துக் கொண்டார் அவர்!

உன்னைப் பார்த்து உன்னிடம் சேர வேண்டிய ஒன்றைக் கொடுக்கவே இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்” என என்னிடம் ஒரு கவரை நீட்டினார். 25 ஆண்டுகளுக்குப் பின் அப்படி என்ன இருக்கும் என்று சிறிது கலக்கத்துடன் பிரித்தேன்!

வாயடைத்தது! கண்கள் கலங்கின! இருதயத்தில் அந்த ஆசிரியரின் அன்பு ஏற்படுத்திய இனம் புரியாத ஓர் அழுத்தம்!
அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது, பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் 10-வது படித்துக் கொண்டிருந்தபோது நான் விளையாட்டாக வரைந்த ஒரு கார்ட்டூன்! அதுவும் தலைமை ஆசிரியராக இருந்த ஃபாதர் ஜோசப் ஃபெலிக்ஸ் அவர்களைக் கிண்டல் செய்த கார்ட்டூன்!

அப்போது அப்பாதிரியார் பிலிஃப்பைன்ஸ் தலைநகரம் மணிலாவுக்குச் சென்றிருந்தார். எங்களுக்கு அந்நாளில் வெளிநாடு என்றாலே பெரிய விஷயம். அதனால் நண்பர்களுக்குள் ஒரு விவாதம்.

‘இவர் திடீர்னு எதுக்கு மணிலா போறாரு?’ நான் கேட்டதற்கு, ‘அதுவா, நம்ம ஸ்கூல் நூற்றாண்டு கண்டுவிட்டது. இத இன்னும் நல்லா டெவலப் பண்ண நிதி வேண்டாமா? அதுக்குத்தான் போறாரோ என்னவோ?’ என நண்பன் ஒருவன் கூறினான்!

பொதுவாகப் பொருளாதார நெருக்கடி, பற்றாக்குறை என்றாலே இன்றும் உலகம் தழுவிய கார்ட்டூனிஸ்டுகள் கையில் எடுப்பது பிச்சைப்பாத்திரத்தைத் தான்! என் மூளையிலும் அந்த ஐடியாதான்.

Mathi_cartoon

ஃபாதர் மணிலா ஏர்போர்ட்டிலிருந்து இறங்கி ஒரு திருவோட்டுடன் செல்வது போல விளையாட்டாக அன்று என் நோட்டில் கார்ட்டூன் வரைந்தேன்! நான் கிழித்துப் போட மறந்த அந்த கார்ட்டூனைப் பத்திரமாக எனது நோட்டுப் புத்தகத்திலிருந்து கிழித்து ஆசிரியர் பீட்டர் ஃபெலிக்ஸ் அவர்களிடம் கொடுத்துவிட்டான் எனது இன்னொரு நண்பன்!

பீட்டர் ஃபெலிக்ஸ், நல்ல கணித ஆசிரியர் மட்டுமல்ல, மாணவர்களிடம் மிக நகைச்சுவை உணர்வுடனும், அன்புடனும் பழகுபவர் என்பதும் அதற்குக் காரணமாக இருக்கலாம். தனது நண்பனுக்கு இதனால் எந்த ஆபத்தும் நேராது என்றும் அவன் நினைத்திருக்கலாம்.

ஆனாலும் நான் மாட்டிக்கொண்டேன்.
அந்த நாள் முதல் நான் 12-ம் வகுப்பு முடியும் நாள்வரை பீட்டர் ஃபெலிக்ஸ் அவர்களைப் பார்க்கும் நேரமெல்லாம் அவர் தன் சட்டைப் பையில் இருக்கும் ஏதாவது ஒரு தாளை வெளியே எடுத்து, டேய், கார்ட்டூனா போட்ற? ஃபாதர் கிட்ட கொடுத்திடவா? ஜாக்கிரதை. இந்த மாதிரி குறும்பெல்லாம் இனி பண்ணாதே, ஒழுங்காகப் படி!” என்று கண்டித்துவிட்டுச் சிரித்தபடி நகர்ந்துவிடுவார். அவர் மிக அன்பான ஆசிரியர், அது மாதிரி மாட்டிவிட மாட்டார் என்று எனது உள்ளுணர்வு சொன்னாலும் மாணவப்பருவத்துக்கே உரிய பயம் எனக்கு இருக்கவே செய்தது!

இப்போது, 25 ஆண்டுகளுக்குப் பின் அந்த கார்ட்டூனை மீண்டும் பார்க்கும் ஓர் ஆச்சரிய அனுபவம்!
மீண்டும் ஆசிரியர் பீட்டர் ஃபெலிக்ஸ் அவர்களின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டேன்! நன்றி வார்த்தைகளாக வராமல், என் கண்களில் இருந்து கண்ணீராக வந்தது!
விழா மேடையில் அந்த வெள்ளி விழா கண்ட கார்ட்டூனைக் காண்பித்தேன்! பீட்டர்ஃபெலிக்ஸ் அவர்களையும் அறிமுகப்படுத்தினேன்!

தனது மாணவர்கள் மீது எப்பேர்ப்பட்ட அன்பும் தன் தொழிலின் மீது எப்பேர்ப்பட்ட பக்தியும் கொண்டிருந்தால் இப்படி ஓர் ஆசிரியர் தனது மாணவன் ஒருவன் வரைந்த கார்ட்டூனை 25 ஆண்டுகள் பத்திரப்படுத்தி வைத்திருப்பார்!

இறைவனின் சக்தி அல்லவா அவர்களின் பின்னணியிலிருந்து இயக்கியிருக்க முடியும்! இத்தகைய ஆசிரியர்கள் கிடைத்தது எங்களது பொற்காலம் என்று மேடையில் பெருமிதத்துடன் கூறினேன்!

விழா நிகழ்ச்சி, விழா நெகிழ்ச்சியானது! பலர் கண்களில் கண்ணீர்த்துளிகள்!
அன்றைய ஹீரோ நான் அல்ல; ஆசிரியர் பீட்டர் ஃபெலிக்ஸ்தான் என்று அனைவரும் உணர்ந்தோம்!

மேடையில் பேராசிரியர் முனீஸ்வரன் அவர்களையும் அறிமுகப்படுத்தி நன்றி கூறினேன்!

இறைசக்தி எப்படியெல்லாம் இத்தகைய ஆசிரியர்கள் மூலம் என் வாழ்க்கையைத் தீர்மானித்திருக்கிறது!

இந்த நிகழ்வுகளுக்குப் பிறகும் நாம் ஏதோ சாதித்துவிட்டோம் என்ற அகங்காரம் நமக்கிருந்தால் நம்மை
விட முட்டாள்கள் யார் இருக்க முடியும் என்றே நினைக்கத் தோன்றுகிறது!

‘எல்லோரும் தோலால் மூடப்பட்ட இறைவனாகவே எனது கண்களுக்குத் தெரிகின்றனர்’ என்று தனது பக்தர்களிடம் குருதேவர் அடிக்கடி கூறுவார்.

அப்படிப் பார்க்கும் சக்தியும் கண்களும் எனக்கில்லை! நான் ஒரு சாதாரண பக்தன், அவ்வளவே!

ஆனால் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவது எவ்வளவு பெரிய உண்மை என இந்த ஆசிரியர்கள் மூலம் உணர்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s