அன்னையைச் சரண் புகுந்தால்…

அன்னையைச் சரண் புகுந்தால்…

பரபரப்பான அந்நகரில் அமைதிப் பூங்காவாக அந்த ஸ்ரீராமகிருஷ்ண ஆசிரமம்.

பிரியாவும் நானும் ஞாயிற்றுக் கிழமைகளில் அங்குதான் இருப்போம். அங்கு எங்களுக்குக் கிடைக்கும் அக அமைதிக்காக மட்டுமல்ல, புற அமைதிக்காகவும்
தான்.

அங்குள்ள விருட்சங்கள் அமைதியின் விளக்கங்கள்.

அந்த வேப்ப மரத்தின் கீழ் ஒரு சிமெண்ட் தூண். அதன் மீது ஒரு வழிகாட்டிப் பலகை, அம்புக்குறியுடன். அதன் பின்னே ஒரு தகரப்பெட்டி. அதில் ஒரு துளை.

அன்று கீரி ஒன்று அதைக் குடைந்துப் பெரிதாக்கிக் கொண்டிருந்தது. இன்னொரு கீரி அதனருகில்.
பெட்டியினுள் கீரிக்கு வேண்டிய இரை ஏதும் இருக்குமோ?” என்று பிரியா கேட்டாள்.

உள்ளே ஏதோ கூடு கட்டியிருக்கும் போலிருக்கு பிரியா” என்றேன்.
அதற்குள் ஆ, என்ன இது, இரண்டு காக்கைகள் வேகமாகப் பறந்து வந்து ‘கா கா’ என்று கத்தியபடி கீரிகளைக் கொத்தச் சென்றன.

இறக்கைகளைப் பலமாக அடித்து அடித்து, கூர் மூக்கை நீட்டி நீட்டி – இரண்டும் கீரிகளை விரட்டின.
பெட்டியினுள் இருப்பதை எடுக்கவிடாமல் செய்யும் காக்கைகளுடன் சண்டையிடக் கீரிகளுக்கு இட வசதியில்லை. அதனால் அவை முறைத்துப் பார்த்தன. கூரான பற்களைக் காட்டின. ‘எங்கிட்டே வச்சுக்காதே’ என்று கீரிகள் கூற நினைத்திருக்கும்.

காகங்கள் இறக்கையடித்துக் கொத்தவரும்போது கீரிகள் பயப்படத்தான் செய்தன.
முடிவில் ‘ம்ஹும், இவை நம்மை மேலே விடாது’ என்று எண்ணிக் கீரிகள் கீழே குதித்துவிட்டன.

நான் என் கேமிராவை ‘ஜூம்’ செய்து பார்த்தேன். அடடா, பெட்டிக்குள் அழகான, ஆனால் பயந்திருந்த அணிற்குஞ்சுகள்!
கீரிகள் இந்தக் குஞ்சுகளைத்தான் தின்ன வந்தன. ஆனால் அந்தக் குஞ்சுகளைக் காக்கப் போராடிய காகங்களுக்குக்கூட இவை ‘குல்பி ஐஸ்கிரீம்’ போல்தானே! பின் ஏன் அந்தக் காகங்கள் அதைக் காத்தன?” என்று பிரியாவிடம் கேட்டேன்.

இல்லை ரமேஷ், ஏதோ ஒரு முக்கியமான விஷயமாகத்தான் காகம் கீரியைத் துரத்தியிருக்கிறது”
யோசித்தோம். கணத்தில் விடை கிடைத்தது.
ஓர் அணில் அந்தப் பெட்டியில் குஞ்சு ஈன்றுள்ளது. கண்ணை உயர்த்திப் பார்த்தேன்.
அதோ, துரத்திய காகம் தன் கூட்டில் அமர்ந்துள்ளது” என பிரியா கூவினாள். அவள் சில கணங்கள் காகங்களுக்கு நன்றி கூறி கைகூப்பி நின்றாள்.

ரமேஷ், கீரியைக் காகம் துரத்தியது அணில் குஞ்சுகளைக் காப்பாற்ற மட்டுமல்ல…”

பின்னே?”

இன்று அணிற்குஞ்சுகளைச் சுவைத்துவிட்டால், அதற்கு அடுத்த இலக்கு மரத்திலுள்ள தன் குஞ்சுகள்
தான் என்று காகம் நினைத்திருக்கலாம்.”

வெரிகுட் பிரியா”

கீழே மேய வேண்டிய கீரிகளை மேலே விடுவது ஆபத்து என நினைத்தே காகம் துரத்தியிருக்கிறது”

பிரியா அதைக் கூறும்போது அங்கு வந்த தாய் அணில் பெட்டியிலிருந்து எங்களைப் பார்த்தது.
அது ‘கீச், கீச்’ என்று கத்தியது. எங்களுக்குக் ‘கத்துக்கோ, கத்துக்கோ’ என்று கூறுவது போலிருந்தது. இதனிடமிருந்து என்ன கற்றுக் கொள்வது?

‘மனிதர்களே, சக உயிர்களுடன் நாங்கள் ஒருவருக்கொருவர் அனுசரணையாக உள்ளோம். ஆனால்

நீங்கள்…? என அணில் கேட்கிறது’ என்றேன் நான்.

இருக்கலாம், யார் கண்டது?” பிரியா சிரித்தாள்.

அதன் பிறகு பல ஞாயிற்றுக்கிழமைகள் ஆசிரமத்திற்குச் சென்று வந்தோம்.

அந்த வேப்ப மரம், சிமெண்ட் தூண் மீதுள்ள பெட்டியை எப்போது பார்த்தாலும் ‘கத்துக்கோ, கத்துக்கோ’ என்று எனக்கே கூறத் தோன்றும்.

நாட்கள் வாரங்களாகி, மாதங்களாகி ஓடின.
அன்று யு.எஸ். பயணத்தை முடித்துவிட்டு நான், பிரியாவுடன் ஆசிரமம் சென்றேன்.

என்ன ஆயிற்றோ, அந்த இடைப்பட்ட காலத்தில் சிமெண்ட் தூண் இடிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அந்த ஆசிரமத்தின் கோவிலிலுள்ள அன்னை ஸ்ரீசாரதா தேவியைத் தரிசிக்கச் செல்லும்போதெல்லாம் அதே அணிலின் ‘கத்துக்கோ’ கேட்கும்.

அன்று சனிக்கிழமை. ஆசிரமத்தில் அன்னை ஸ்ரீசாரதா தேவியைப் பற்றிய சொற்பொழிவு நடந்தது. போய் அமர்ந்தோம்.
‘மனிதர்களுக்கு மட்டுமல்ல, பிற பிராணிகளுக்கும் அவர் அன்னைதான்’ என்று ஒரு சுவாமிகள் சாரமான சொற்பொழிவாற்றினார்.

சொற்பொழிவு முடிந்ததும் சுவாமிகளிடம் பேசினோம். எங்கள் காகம் – அணில் அனுபவத்தை பிரியாவும் நானும் உற்சாகமாகச் சொன்னோம்.

அந்த அனுபவம் அவரை அசத்தவில்லை. இதெல்லாம் இங்கு சகஜம் என்பது போல் சுவாமி, ‘வாருங்கள்’ என அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.

அணிலின் அடுத்த அத்தியாயம் அங்கு தெரிந்தது. அது அத்தியாயம் அல்ல, ஓர் அகப் பரிணாம வளர்ச்சி என்பது பிறகுதான் புரிந்தது.

அவரது அறையில் பத்தடி உயரத்திற்கு மேல் ஒரு படம். படத்திற்கு ஒளி வேண்டி ஒரு ட்யூப்லைட். வெளிச்சம் மேலே மட்டும் போக வேண்டி மூன்று பக்கம் அடைக்கப்பட்ட மரப் பெட்டி.

அதிலென்ன குப்பை சாமி?” என்று கேட்டேன்.
சுவாமி கூற ஆரம்பித்ததும் எனக்குள் ‘கத்துக்கோ’ என்ற குரல் கேட்க ஆரம்பித்ததே!

ஆம், ஓர் அணில் அங்கு கூடு கட்டியுள்ளது. ஒரு முறை குப்பையென்று எண்ணி சுவாமிகள் அதை அகற்றினாராம்.
ஆனால் மீண்டும் அந்த அணில் கூட்டைக் கட்டிக் குஞ்சும் ஈன்றது.

மேலே ஏறி எட்டிப் பார்த்தோம். கீரியோ, பூனையோ ஏற முடியாத இடத்தில் அணிற்குஞ்சுகள். பின் சுவாமிகள் கூறியதுதான் எங்களை வியக்க வைத்தது.

அலுவலகத்தில் ஆட்களும் வெளிச்சமும் இருக்கும் போதே அந்த அணில் சுவற்றின் மீதேறி வருகிறது.
வாயைத் திறந்தால் வால் நிமிரும் இனம் அது.

ஆனால்…, அது எப்படி இவ்வளவு அமைதியாக உள்ளது. பசித்தாலும் குஞ்சுகள் குரல் கொடுப்பதில்லையாம். எப்படி?

ஏதோ உன்னதமான பாதுகாப்பில் தாயும் சேய்களும் தஞ்சம் புகுந்துள்ளன. அது என்னவாக இருக்கும்?

உற்று நோக்கினோம். உண்மை அங்கு ஓங்கி ஒலித்தது. ஓ, அதுதான் காரணமோ!
ma-bw_sq
அப்பெட்டியின் மேலே அன்னை ஸ்ரீசாரதா தேவியின் திருவுருவப் படம்.

அன்னையைச் சரணடைந்தால் அகிலமே காக்கப்படும்போது அணிலுக்கென்ன!

பிரியாவின் கண்கள் கசிந்தன. என் நெஞ்சும் என்னவோ செய்தது.

‘அன்று கீரிகளிடம் அவதிப்பட்ட அதே அணில் தான் – பாதுகாப்பான இடம் எது என்பதைப் புரிந்து
கொண்டு – இன்று அன்னையிடம் அடைக்கலம் புகுந்துள்ளது’ என்று என் ஆழ்மனம் சொல்லியது!
(அன்னையின் காலடியில் அணிற்குஞ்சுகள் தஞ்சம் புகுந்தது ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் அலுவலகத்தில் நடந்த உண்மைச் சம்பவம்.
ஜனவரி 1. ஸ்ரீராமகிருஷ்ணர் கல்பதருவாக மாறி பக்தர்களுக்கு அருள்புரிந்த தினம்.
2010-ஆம் ஆண்டு அந்தத் தேதியில் தாய் அணில் தனது வளர்ந்த குஞ்சுகளை வெளியுலகிற்குக் கொண்டு வந்து ‘பிள்ளைகளே, இனி நீங்கள் உலகில் சமர்த்தாக வாழுங்கள்’ என்று கூறுவதுபோல் கூட்டிலிருந்து வந்ததையும் காண முடிந்தது.)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s