நம்மால் முடிந்தது; இனியும் முடியும்!

நம்மால் முடிந்தது; இனியும் முடியும்!
டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை

சரித்திரத்தின் ஏடுகளைப் புரட்டி வளர்ச்சி என்பதைப் பார்த்தால், 19-ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவுக்கானது;
20-ஆம் நூற்றாண்டு அமெரிக்காவிற்கானது; 21-ஆம் நூற்றாண்டு ஆசியாவுக்கு உரியது எனலாம்.
tech1
அதில் பெரும் பங்கு வகிக்கும் திறமை படைத்தவை இந்தியாவும், சீனாவும்தான். இது பகல் கனவல்ல; நனவாகப் போகிற உண்மை.

இது சரியான தருணம். இந்தியா இப்போதே விழித்தெழ வேண்டும். தன் இலக்கை நோக்கிய பாதையில் பீடு நடைபோட வேண்டும். அதற்கு நாம் நம்மைத் தகுதி உடையவர்களாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோமா?
நம் பலம் என்ன? நம் இலக்கு என்ன?

21-ஆம் நூற்றாண்டு இந்தியா, இளைஞர்களுக்கு நம்பிக்கை தருவதாகவும், பிற நாட்டினருக்குக் கல்வி கற்கவும், வாணிபம் செய்யவும், முதலீடு செய்யவும், சுற்றிப் பார்க்கவும் ஏற்ற ஒரு நாடாக விளங்கும்.

நாம் அறிவியலிலும், தொழில்நுட்பத் துறையிலும் முன்னேற்றம் அடைந்தால்தான் அது சாத்தியம். சில துறைகளில் நாம் மிகச் சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளோம். அந்த வெற்றியை அனைத்துத் துறைகளிலும் நம்மால் சாதிக்க இயலுமா? நிச்சயமாக முடியும். எப்படி? நமக்கு முதலில் தேவை நமது மனப்பான்மையில் மாற்றம்.
அடுத்து, திறமையை வளர்த்துக் கொள்வது, பலங்களைப் பெருக்கிக் கொள்வது, இலக்கை நோக்கிய பாதையில் குவிந்த மனதுடன் இளைஞர்களைப் பயணிக்கச் செய்வது!
நம்மால் நிச்சயம் முடியும் என்ற மனப்பான்மை இருந்தால் அடுத்து வரும் தலைமுறையினர் மூலமாக இந்தியா புதிய சிகரங்களைத் தொட முடியும்.

அண்மையில், இந்தியாவில் குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் ஒரு துடிப்பு மிக்க இளைஞர் குழுவின் அங்கமாக இருந்து நாங்கள் சாதித்த சந்திரயான்1 திட்டம் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

இந்தியாவின் தலைமையில் பன்னாட்டுப் பங்கேற்பில் செயல்படுத்தப்பட்ட திட்டம் அது. நம் முயற்சியின் அடிப்
படையில் நம் மண்ணிலிருந்து சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் திட்டமாகவே அது முதலில் இருந்தது. சந்திரனிலுள்ள ரசாயனம் – கனிமங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள ஐந்து அறிவியல் ஆய்வுக் கருவிகளை மட்டும் எடுத்துச் செல்வதாகவே முதலில் சந்திரயான்1 திட்டமிடப்பட்டது.

சந்திரயான் 1 திட்டத்தின் வெற்றிக்கு உதவிட, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்புக்கு வெளியில் இருந்து ஒரே ஓர் ஆய்வுக் கருவியையும் சேர்த்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதை அறிந்து, அகில உலக அளவிலான 26 விண்வெளி அமைப்புகள் எங்களுடைய ஓர் ஆராய்ச்சிக் கருவியையாவது சந்திரயான் 1 திட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தன.

சந்திரயான்1 திட்ட அறிவியல் ஆலோசனைக் குழுவின் நிபுணர்கள் ஆழ்ந்த பரிசீலனைக்குப் பின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தகுதியின் அடிப்படையில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பல்கேரியா, ஜப்பான் ஆகிய ஆறு நாடுகளின் அறிவியல் உபகரணங்களை மட்டும் தேர்ந்தெடுத்தார்கள்.

ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட செலவுத் திட்டத்துக்குள்ளேயே அடங்கும்படியாக, அதே சமயம் கூடுதலாக ஆறு உபகரணங்களையும் சேர்த்து மொத்தம் 11 ஆராய்ச்சி உபகரணங்களை எடுத்துச் செல்லும்படியாக சந்திரயான் 1 கலம் விரிவுபடுத்தி உருவாக்கப்பட்டது.

உடனே, கூடுதலான உபகரணங்களை விண்வெளிக்கு எடுத்துச் செல்வதற்கு ஏற்றபடி திட்டத்திலும், விண்கல வடிவமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதே சமயத்தில் நம் விஞ்ஞானிகள் திட்டத்தில் பங்கேற்கும் அயல்நாட்டு விஞ்ஞானிகளுடன் கலந்தாலோசித்து, அவர்கள் அளிக்கும் உபகரணங்களின் எடையை எந்த அளவுக்குக் குறைக்க முடியுமோ, அந்த அளவுக்குக் குறைக்கச் செய்தனர்.
மின்சார, இயந்திர, செயல்முறை தொடர்பான விஷயங்கள் மிக நுட்பமாக வரையறுக்கப்பட்டன. ஒவ்வோர் உபகரணத்தின் செயல்பாடும் நன்கு பரிசோதிக்கப்பட்ட பிறகே விண்கலத்தில் பொருத்த அனுமதி வழங்கப்பட்டது.

ராக்கெட் புறப்படத் தயாராக இருந்த நேரத்தில், அப்போது ஸ்ரீஹரிகோட்டாவில் நிலவிய இடியுடன் கூடிய மழை கொண்ட வானிலையுடனும், நேரத்துடனும் நாங்கள் போட்டி போட வேண்டி இருந்தது.

இறுதியாக, நாங்கள் அனுப்பிய ஏவுகணை புறப்பட்டு, வான்வெளியில் அதற்கான பாதையைச் சென்றடைந்தது. நான் மகிழ்ச்சி பொங்க, எங்கள் குழந்தை சந்திரனை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று அறிவித்தேன்.
சந்திரயான் 1 திட்டத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள்.

இது எங்கள் அனைவரது வாழ்க்கையிலும் வாராது வந்த மாமணியான ஒரு வாய்ப்பு என்றே கருதினோம்.
சந்திரயான்1 திட்டக் குழுவினரது திட்டமிடுதலும், செயல்படுத்தும் திறனும் சற்றும் பிசகில்லாமல் விண்கலம் துருவ, சந்திர சுற்றுப் பாதையைச் சென்றடைய வழி செய்தது.

14 நவம்பர் 2008 அன்று சந்திரயான் 1 திட்ட விண்கலத்தில் இருந்து சந்திரனைப் பற்றி ஆராயும் ஓர் உபகரணம் பிரிந்து சென்று சந்திரனில் தரை இறங்கியபோது இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் இது இந்தியக் குழந்தைகளுக்கு எங்களது பரிசு என்று அறிவித்தது.

விண்வெளிக்கு ஏவப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்னைகளையும் நமது விஞ்ஞானக் குழுவினர் திறம்படச் சமாளித்தனர். இந்திய விண்வெளி சரித்திரத்திலேயே மிகச் சிறந்த, மிக நவீனமான ஒரு திட்டம் சந்திரயான்1 என்று நாம் பெருமையுடன் குறிப்பிடலாம்.

அகில உலக அளவிலான அறிவியல், தொழில்நுட்ப அமைப்புகள் அளித்த மூன்று விருதுகளை சந்திரயான்1 திட்டம் பெற்று உள்ளது என்பது நமக்குக் கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரம்.

எதிர்காலத்தில் இந்தியாவால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்கு ஒரு முன்னோடிதான் சந்திரயான்1. உலக அளவில் புகழ்பெற்ற பிற நாட்டு அறிவியல் நிபுணர்களுடன் எவ்வாறு ஒருங்கிணைந்து ஒரு திட்டத்துக்குத் தலைமை ஏற்று சிறப்பாகச் செயல்படுத்திக் காட்ட முடியும் என இந்தத் திட்டம் மூலம் இந்தியா உலகிற்குக் காட்டியுள்ளது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த பலவித பணிக் கலாச்சாரப் பின்னணி கொண்ட குழு அமெரிக்கக் கண்டத்தின் பகுதிகள், ஸ்வீடன், இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் என்ற பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து சேர்ந்தவர்களுடன் இணைந்து இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
குழுவில் இடம் பெற்ற எல்லா உறுப்பினர்களின் முயற்சியையும், செயல்திறனையும் ஒருங்கிணைத்துப் பொதுவான ஒரு லட்சியத்தை வரையறுக்கப்பட்ட நிதி மற்றும் காலக்கெடுவுக்குள் செய்து முடிக்க முடிந்தது.

இது சந்திரயான்1 திட்டக் குழு ஒரு மிகக் கடினமான சவாலை, மாபெரும் ஒரு வாய்ப்பாக ஏற்று சாதித்ததற்கு ஒரு நல்ல உதாரணம். இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் உள்ளேயும், வெளியேயும் சந்திரயான்1 குழு சரித்திரச் சாதனை படைக்கும் குழு என்ற நற்பெயரைப் பெற்றுள்ளது.

ஐந்தாண்டு காலம் அந்தக் குழுவினர் காட்டிய குழு உணர்வு எல்லோராலும் வியந்து பார்க்கப்படுகிறது. அரசு அமைப்பான இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் இப்படி ஒரு சாதனையைச் செய்து முடிக்க முடியுமென்றால், நம் அரசின் பிற துறைகளால் எதைத்தான் சாதிக்க முடியாது?

குழுவாக இணைந்து திட்டமிட்டு உழைத்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும். அது கல்வி, மருத்துவம், தொழில் துறை, வாணிபம், பத்திரிகைத் துறை, மின்னணு ஊடகம், விளையாட்டு, கலை, சேவைத் துறைகளில் மட்டுமில்லாமல் அரசியலில்கூட சாத்தியமே! மாபெரும் சாதனைகள் புரிவதற்கான தாரக மந்திரம் குழு உணர்வு.

ஒருவருக்கொருவர் தேவையானதை அளிப்பதும், பெறுவதும், அனுசரித்துப் போவதுமே குழு உணர்வின் குணாதிசயம். ஒரு குழுவின் தலைவர், தானே சிறந்த முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தனி நபரும் தான் தேர்ந்தெடுக்கும் துறையில் உன்னதமான நிலையினை அடைய அயராது உழைப்பதுடன், குழு உணர்வினையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நான் ஒன்றை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன். இன்று நம் நாட்டிலேயே இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் அயல்நாடுகளுக்கு வேலை தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
இங்கேயே தாங்கள் செய்யும் வேலையில் பிரகாசிப்பதுடன், அதைவிட முக்கியமாகத் தாய்நாட்டின் வளர்ச்சியிலும் அவர்கள் பங்களிக்க முடியும். நம் வாழ்வின் நோக்கம் வேலை செய்து சம்பாதிப்பது மட்டுமல்ல; உலகின், குறிப்பாக நம் நாட்டின் முன்னேற்றத்துக்குப் பாடுபடுவதும் நம் கடமை.

ஒருமித்த மனதுடன் பயன் மிக்கப் பாதையில் உழைத்தால் வெற்றி ஓர் உபபொருள் போலத் தானாகவே கைக்கு வந்து சேரும். சந்திரயான்1-ன் வெற்றிச் சரித்திரத்தை மற்ற துறைகளிலும் நம்மால் எப்படிச் சாதிக்க முடியும்?

முதலில் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும். அதை எப்படி ஏற்படுத்திக் கொள்வது?
அனைத்துக் குடிமக்களுக்கும் சீரான கல்வி, உடல் நலம், வேலை வாய்ப்பு, தகவல் தொடர்பு, பொது விநியோக முறை ஆகியவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலமாக அடிப்படைத் தேவைகளான உணவு, இருப்பிடம், சுகாதாரம் ஆகியவற்றை அளிக்க முடியும்.

முறையான பயிற்சியற்ற இந்தியருக்குத் திறமையை மேம்படுத்தும் வகையில் தக்க பயிற்சியளித்து, அவர்களுக்குத் தம் மேம்படுத்திய திறமையின் மூலமாக, சவால்களை எதிர்கொண்டு சாதிக்க ஏற்ற வாய்ப்புகளை அளித்தால், அவர்கள் தங்களது இலக்குகளை அடைந்து, அதில் பிரகாசிப்பது உறுதி.

மற்ற நாடுகளில் பின்பற்றப்படும் சில வழிமுறைகள் இந்தியாவுக்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கும். எனவே இந்தியர்கள் தங்கள் இலக்குகளை அடையும் பாதை இந்தியத் தன்மையுடன் கூடியதாக இருக்க வேண்டியது அவசியம். இதைத்தான் விண்வெளித் துறையில் நாங்கள் பின்பற்றினோம்.

உதாரணமாக, இந்தியாவிலுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளிகளில் தரமான கல்வி வழங்க வேண்டுமென்றால் எவ்வளவு வகுப்பறைகளும், தரமான ஆசிரியர்களும் தேவைப்படுவார்கள்?

இந்தச் சவாலைத் தொலைத்தொடர்புச் சாதனங்கள் மூலம் நாம் எதிர்கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டதே கல்வி செயற்கைக்கோள் -EDUSAT.
ஆனால் இதை முழுவதும் நம்மால் பயன்படுத்த முடியவில்லை. காரணம், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் இது பற்றிப் போதிய உற்சாகமின்மையும் விழிப்புணர்வின்மையும்தான்.

தொலைத் தொடர்புக் கல்வி மூலமாகத் தரமான கல்வியை நம்மால் இந்தியாவின் மூலை முடுக்குகள் அனைத்திற்கும் எடுத்துச் செல்ல முடியும். அதுபோலவே தொலைத் தொடர்பு மருத்துவம் மூலமாகத் தரமான மருத்துவ சேவையையும் நாட்டின் எந்த மூலையிலும் வசிக்கும் மக்களுக்கும் அளிக்க முடியும். இதனால் நகர்ப்புறங்களுக்கும், கிராமப் புறங்களுக்கும் இடையில் நிலவும் இடைவெளி குறையும்.

கல்வியிலும், மருத்துவச் சேவையிலும் தன்னிறைவு அடைவது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கத்தில் அயல்நாடுகளுக்கும் இந்தச் சேவைகளை வழங்கி நம்மால் அந்நிய செலாவணி ஈட்ட முடியும்.

இதை அரசு மட்டுமே செயல்படுத்த முனையாமல் தனியார் துறையின் பங்கேற்பினையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். இன்று தனியார்த் துறையில் தொடங்கப்பட்டுள்ள பல சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் கல்வியிலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும் தங்களுக்குள்ளே போட்டியிட்டுக் கொண்டு செயல்படுவதை நாட்டின் சில பகுதிகளில் காண்கிறோம்.

இது போலவே பல தனியார்த் துறை மருத்துவமனைகளும் வெற்றி பெற்றுள்ளன. நம் நாட்டில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல், மக்கள் மருத்துவம் பார்த்துக் கொள்ள அயல்நாடுகளுக்குச் செல்வது இன்று பழங்கதையாகிவிட்டது.

இன்னும் கூறப்போனால், நிலைமை தலைகீழாக மாறி, மருத்துவச் சுற்றுலா என்ற பெயரில் பிற நாட்டினர் சுற்றுலாப் பயணிகளாக இந்தியாவுக்கு வந்து சிகிச்சை பெற்றுத் திரும்புகிறார்கள். பல நாட்டு மக்களும் இந்தியாவுக்கு வந்து வாழ விரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இறுதியாக, நம் இளைய தலைமுறையினர் தனிமனிதர்களாக நேர்மையான வழியில் உன்னதம் என்ற இலக்கை நோக்கிச் செல்லும்போது, ஒரு குழுவாக மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றும் அனுபவத்தைப் பெற்று அதன் மகத்துவத்தை உணர்ந்து, தேச நிர்மாணப் பணியின் அங்கமாக விளங்க வேண்டும்.

One response to “நம்மால் முடிந்தது; இனியும் முடியும்!

  1. excellent very stimulating and motivating. should inspire all the ambitious straight forward youth who want to give their best to the country.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s