எண்ணங்கள்

(சென்னை தி.நகர், ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்தில் மாணவர்களுக்கான ஒரு கருத்தரங்கில், குருராஜ் கர்ஜகி ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி.)

நற்பண்புகள், மனித நேயம், சுயமரியாதை போன்றவை இன்றைய இளைஞர்களிடத்தில் குறைந்து வருவதாகத் தோன்றுகிறது.

சண்டைச் சச்சரவுகள் பெருகி ஒற்றுமை மனப்பான்மை குறைந்து வருகிறது.பல ஆசிரியர்கள் தங்கள் கடமைகளைப் புரிந்து கொள்ளாமல் செயல்படுகிறார்கள்.நமது கல்விமுறை மாணவர்களின் நற்பண்புகளை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

சர் சி.வி ராமனின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இது.
முதுநிலை விஞ்ஞானி பதவிக்காக எட்டு மாணவர்கள் அழைக்கப்பட்டார்கள். பௌதிகத் தேர்வு எழுதிய பிறகு அவர்களுள் நான்கு பேர் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டனர்.

தேர்வு பெறாத நான்கு பேர்களுக்குப் பயணத் தொகை கொடுத்து திருப்பி அனுப்புமாறு ராமன் தமது அதிகாரிகளிடம் கூறினார்.

மாலையில் வாசலில் ஒரு மாணவன் தயக்கத்துடன் நின்றிருப்பதை ராமன் கண்டார்.தேர்வு பெறாதவர்களில் அவரும் ஒருவர் என்பதைப் புரிந்து கொண்டார்.
அவரிடம்,உனக்கு ஏதாவது உதவி வேண்டுமா?” என்று கேட்டார் ராமன்.

அதற்கு அம்மாணவன், ஐயா, இன்று எனக்குப் பயணத் தொகை கொடுத்தார்கள். ஆனால் ஏழு ரூபாய் அதிகமாகக் கொடுத்துவிட்டனர்.அதை நான் திருப்பிக் கொடுக்க விரும்புகிறேன்” என்றான்.

ராமன் பணத்தை வாங்கிக் கொண்டு, என்னை நாளை வந்து பார் தம்பி” என்றார்.

மறுநாள் அந்த மாணவர் அவரைச் சந்தித்தபோது, நீ பௌதிகத் தேர்வில் தோல்வி அடைந்தாலும் ‘கேரக்டர் (நற் பண்புகள்) டெஸ்டில்’ தேறி விட் டாய். நாளை முதல் இங்கு விஞ்ஞானியாக நீ வேலையில் சேர லாம்” என்று கூறினார்.

அந்த மாணவர் கடுமையாக உழைத்து, பின்னாளில் மேலை நாடு சென்று சிறந்த விஞ்ஞானி எனப் பெயரெடுத்தார்.
ஒரு பத்திரிகையில் ‘என் வாழ்க்கைப் பாதையை மாற்றியமைத்த ஏழு ரூபாய்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையையும் அவர் எழுதினார்.

நற்பண்புகள் என்பது மனிதனை விலங்குகளிலிருந்தும் மற்ற ஜடப் பொருள்களிலிருந்தும் பிரித்துக் காட்டும் குணம் ஆகும்.அவை நமது மனோபலத்தையும் அதிகரிக்கும் சக்தியாகும்.
டாக்டர் ஒருவர் தமது நோயாளியிடம், நீங்கள் புகைப்பிடிப்பதை உடனே நிறுத்த வேண்டும்.இல்லாவிட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படும்” என்று கூறினார்.அந்த நோயாளி இறக்க விரும்பவில்லை.உடனே கஷ்டப்பட்டு தமது புகைக்கும் பழக்கத்தை நிறுத்திக் கொண்டார்.

நோயாளியிடம் ஏற்பட்ட முன்னேற்றத்தைப் பற்றிக் கூறுகையில் அந்த டாக்டர், அவரது கேரக்டரில் மாற்றம் ஏற்பட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ‘உயிர் வாழ வேண்டும்’, ‘புகைப்பிடிக்க வேண்டும்’ என்ற இரு ஆசைகளுக்கிடையில் எந்த ஆசை அதிகமாக இருந்ததோ அதுவே வெற்றி கண்டது” என்றார்.

சுவாமி விவேகானந்தர், எண்ணங்கள்தான் பண்புகளை உருவாக்கும்” என்கிறார்.
நல்ல எண்ணங்களை எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தால் நல்லவர்களாகிறோம்.தீய எண்ணங்களை மனம் அசை போட்டால் தீமைகள் நம்மில் நுழைகின்றன.

‘Watch your WATCH’ என்பார்கள். நாம் கண்காணிக்க வேண்டிய WATCH என்ற எழுத்துக்கள் குறிப்பது:
Words (வார்த்தைகள்)
Actions (செயல்கள்)
Thoughts (எண்ணங்கள்)
Character (நற்பண்புகள்)
Heart (இதயம்). முதல் நான்கும் நன்றாக இருந்தால் கடைசி எழுத்தான H என்பதைக் குறிக்கும் நம் இதயமும் நன்றாக இயங்கும்.


நல்ல எண்ணங்கள் இருந்தால் நமது வார்த்தைகளும், செயல்களும் நன்றாக அமையும்.

நமக்கு அனுபவப்பட்ட சூழ்நிலையில் வாழும்போதுதான் நல்ல குணங்களை நாம் வளர்த்துக் கொள்வது சுலபமாக முடிகிறது.

விஞ்ஞானப் பரிசோதனைச்சாலை ஒன்றில் ஒரு தவளையைக் கொதிக்கும் நீரில் போட்டார்கள். உடனே அது அந்த வெந்நீரிலிருந்து வெளியே குதித்துவிட்டது.

frog

ஆனால் வேறொரு முறை குளிர்ந்த நீரில் தவளையைப் போட்டு சிறிது சிறிதாக நீரைச் சூடேற்றினார்கள்.அது முதலில் வெது வெதுப்பான வெந்நீர் உடலுக்கு இதமாக இருப்பதாக நினைத்து தூங்கியது.பிறகு நீர் சூடாக ஆரம்பித்தபோது கூட வெளியே குதிக்க விரும்பாமல் அந்த நீரிலேயே சுகமாக இருந்தது.நீர் கொதிக்கத் தொடங்கியதும் அதிலேயே இறந்தது.

நல்ல எண்ணங்களை எப்போதும் நினைக்க நாம் பழகிக் கொள்ள வேண்டும். தீய எண்ணங்கள் நம்மைத் தூக்கியெறியும்போது, அவற்றை நாம் எதிர்க்க வேண்டும்.எப்படி?
அந்த முதல் தவளையைப் போல் வெந்நீரிலிருந்து வெளியே குதித்து ஓட வேண்டும்.

அவ்வாறு போராடினால் நம்மை அணுகும் சஞ்சலங்களை எதிர்க்கும் சக்தியையும் நாம் பெறுகிறோம்.இதுதான் செறிந்த பண்புள்ள மனிதனின் முதல் குணஅம்சமாகும்.

சுவாமி விவேகானந்தரிடம் ஒருமுறை ஓர் அழகான பெண்,‘ நான் உங்களைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்’ என்றாள். சுவாமிஜி அவளிடம் ஏன் என்று கேட்க,‘நான் உங்களைப் போல் உள்ள ஒரு மகனைப் பெற விரும்புகிறேன்’ என்றாள்.

சஞ்சலமே அறியாத சுவாமிஜி கைகளைக் கூப்பி, அதற்கு நீங்கள் அவ்வளவு நாட்கள் ஏன் காத்திருக்க வேண்டுமம்மா? இன்றே உங்களுக்கு ஒரு மகன் கிடைத்துவிட்டான்.என்னையே உங்கள் மகனாக நினைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

நல்ல கேரக்டர் பெற்ற மனிதன் தன்னம்பிக்கை உடையவனாகவும் இறைவனிடம் நம்பிக்கை உடையவனாகவும் இருப்பான் என்பது அவனது இரண்டாவது குணாம்சம்.

சற்றும் பயமே இல்லாமல், தைரியமாகச் செயல்படுவதும் அப்படிப்பட்ட மனிதனது தனித் தன்மையாகும்.
சுவாமிஜியைப் போன்று தைரியமும் மன உறுதியும் நமக்கும் வர வேண்டும்.

தாமஸ் ஆல்வா எடிசன் என்ற விஞ்ஞானி நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர். யாரோ அவரிடம் அவருடைய தோல்விகளைப் பற்றிக் கேட்ட போது அவர்,எனக்குத் தோல்விகளே ஏற்பட்டது கிடையாது. எனக்கு ஏற்பட்டதெல்லாம் வெற்றிப் பாதையில் சிறிய தடுமாற்றங்கள் (Temporary setbacks) மட்டும்தான்” என்று பதில் சொன்னார்.

இப்படிப்பட்ட கண்ணோட்டமும் சிந்தனையும்தான் வாழ்க்கையில் நமக்குத் தேவை.அவற்றுடன் ஒரு சரியான குறிக்கோளையும் நாம் இணைத்துவிட்டால் நமது வாழ்க்கை வெற்றிப் பாதையை நோக்கி வீறுநடைபோடுவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.

நமது பழக்கவழக்கங்கள் நம்மை ஆக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும்.
நேரம் தவறாமை என்பது பலருக்குப் பழக்கமில்லாத ஒன்று. நமது கைகளில் கடிகாரம் இருந்தாலும் அதை நாம் பார்ப்பதில்லை.

‘ஒரு மனிதனின் ஒழுங்கு, கடமை, ஈடுபாடு, நேர்மை ஆகியவற்றின் அளவுகோல்தான் நேரம் தவறாமை’ என்கிறார் ஓர் அறிஞர்.
நேரம் தவறாமல் யார் செயல்படுகிறார்களோ, அவர்களிடம் இந்த நான்கு குணங்களும் இருப்பதைக் காணலாம்.

நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதில் சுவாமி விவேகானந்தர்தான் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் தகுந்த வழிகாட்டி.

சாதாரண உடைகளை அணிந்துகொண்டு சுவாமி விவேகானந்தர் ஒருமுறை அயல் நாட்டுத் தெரு ஒன்றில் சென்றுகொண்டிருந்தார்.அவரது கசங்கிய உடையைப் பார்த்த ஒருவர், அவர் ஒரு பண்பாடில்லாதவர் என எண்ணி அவரது சட்டையைப் பிடித்திழுத்தார்.

சுவாமிஜியிடம் அவர், ‘நீ யார்?’ என்று கேட்டார்.உடனே சுத்தமான ஆங்கிலத்தில் சுவாமிஜி பதிலளித்ததில் அவர் வியப்புற்றார்.

உடனே அவர் சுதாரித்துக் கொண்டு, இவ்வளவு அருமையான ஆங்கிலம் நீங்கள் பேசுவீர் கள் என நான் எதிர்பார்க்கவில்லை” என்றார்.

அதற்கு சுவாமிஜி அமைதியாக, உங்கள் நாட்டில் யார் ‘ஜென்டில்மேன்’ என்பது அவர் அணிந்துள்ள உடையைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.ஆனால் எங்கள் இந்தியாவில் ஒருவனது‘கேரக்டர்’தான் அவனை ‘ஜென்டில் மேன்’ ஆக்குகிறது” என்று விளக்கினார்.
நற்பண்புகளை வளர்த்து நாமும் வாழ்வில் சாதனைகள் புரிய முயற்சி செய்வோம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s