கண்களுக்கான பிரம்மசரியம்

கண்களுக்கான பிரம்மசரியம்

சென்னையில் நடந்த அந்த நிகழ்ச்சியில், மேதகு முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் முக்கிய விருந்தினர். அன்று பலரும் அவரைப் பாராட்டினர்.
முடிவில் புகழ்பெற்ற ஒரு திரைப்பட இயக்குனர் கலாம் அவர்களைப் புகழ்ந்தபின், ….இவ்வளவு திறமையிருந்தும் இவர் ஒரு பேச்சிலர் (Bachelor – திருமணம் ஆகாதவர்)… என்றார் வேடிக்கையாக. கூட்டத்தில் கரவொலி.

அப்துல் கலாம் தம் உரையில், இயக்குனர் என்னை பேச்சிலர் என்றார். அன்பர்களே, ஒன்று கூறுகிறேன். நான் பேச்சிலர் அல்ல…. என்று ஒரு கணம் நிறுத்திய அவர், நான் பேச்சிலர் அல்ல, பிரம்மசாரி (celibate) என்றார் அழுத்தமாக!
kan brahmachariyam3
அதைப் போற்றும் வகையில் கூட்டத்தினர் பலத்த கரவொலி எழுப்பினர்.

கலாம் அவர்கள், நான் பிரம்மசாரி. என் உடல், மனம், புத்தி ஆகியவற்றை உயர்ந்த லட்சியத்திற்காக அர்ப்பணித்தவன். அந்த லட்சியத்தை அடைந்திட எனக்குத் திருமணம் அவசியம் எனத் தோன்றவில்லை என்று அமைதியாகத் தெளிவுபடுத்தினார். (கார்டூனிஸ்ட் மதி கூறிய தகவல்)

ஆம் இளைஞர்களே, பேச்சிலருக்கும் பிரம்மசாரிக்கும் மலையளவு வித்தியாசம் உள்ளது.

பிரம்மசரிய விரதம் மிக அவசியம்
பிரம்மசரியப் பருவம் என்றால் கற்கும் காலம், மாணவப் பருவம் என்று பொருள். உயிர்சக்தியையும், மனதின் சக்தியையும் திரட்டுவது பிரம்மசரியத்தின் சிறப்பு. இதுதான் ஆன்மிக பலம் ஆகிறது.
ஆனால் இன்று நடைமுறையில் பிரம்மசரியம் என்றாலே அதனை உடலோடு கூடிய வீர்ய லாபத்தையும், ஆண் – பெண் உறவோடு அல்லது திருமணத்தோடு மட்டுமே சம்பந்தப்படுத்திப் பேசுகிறார்கள்.

ஒருவர் எந்தத் துறையில் சிறந்து விளங்கினாலும், தனது உடல் மற்றும் மனதின் ஆற்றல்களைத் திரட்ட வேண்டியுள்ளது. உடலால் பிரம்மசரியம், மனதால் பிரம்மசரியம், சிந்தையால் பிரம்மசரியம் என்று பல நிலைகளைப் பக்தர்களுக்குக் கூறுவர்.

பிரம்மத்தை நோக்கி எவன் பயணிக்கிறானோ, அவனே பிரம்மசாரி என்கிறது சாஸ்திரம்.

அதற்கெல்லாம் ஆரம்பமாக, நம் தம்பி தங்கைகள் சிறந்தவர்களாக வளர, பிரம்மசரியம் பற்றி அடிப்படைக் கருத்துகளைப் புரிந்துகொள்வது அவசியம்.

முதலில் கண்ணின் முக்கியத்துவத்தைப் பார்ப்போம். கண் விஷயங்களில் அதிக கவனம் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கடவுளைக்கூட கண்ணா என்றே சான்றோர்கள் அழைத்தனர்.

சமுதாயம் எதிர்காலத்தில் செழித்து வளர பிரம்மசரிய விரதம் பற்றிப் பலரும் அக்கறை கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் இதைப் பற்றி நம் அருமை தம்பி தங்கைகளுக்குப் பயமுறுத்தும் வகையிலேயே பேசிவிடுகிறார்கள்; அல்லது பேசாமலேயே இருந்துவிடுகிறார்கள்.

அதனால் பிரம்மசரிய அனுஷ்டானம் என்பது ஒரு புதிராகவே போய் விடுகிறது. அதே சமயம் எதிலும் அக்கறையற்ற பலர் இதைப் பற்றி ஊதி ஊதிப் பெரிதாக்கி மலினப்படுத்தி விடுகிறார்கள்.

பொட்டு அளவுகூட புனிதமில்லாதவர்கள் எல்லாம் இந்தப் புதிரை அனாயாசமாக அவிழ்க்கத் தொடங்குவது கொடுமை. அதனால் இன்றைய இளைஞன் இந்தப் புதிரில்- இல்லை, மனோரீதியான புதரில் சிக்கித் தவிக்கிறான்.

பிரம்மசரியத்தின் முதல் படி கண்

இன்னும் சிலர் தங்களது மகனோ, மகளோ ஆடம்பரமாகவும், அவர்களைப் பார்ப்பவர்கள் அவர்களைச் சுற்றியே ஆடும் பம்பரங்களாகவும் மாறிவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதற்காகக் கவர்ச்சியான உடைகளை அணிய, பெற்றோர்களே பொறுப்பின்றி ஊக்குவிக்கிறார்கள் அல்லது கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.
அதனால் நல்ல குடும்பத்து இளைஞர்கள், யுவதிகள்
கூட நாகரீகமின்றி டைட்ஸிலும், ஸீ-த்ரூவிலும் சுற்றுகிறார்கள்.

சிறந்த ஃபேஷன் டிசைனர்கள், ஆடை அணிவது ஒருவரது கம்பீரத்தையும் மேன்மையையும் காட்டுவதாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.
ஆனால் இன்றைய ஆடைக் கலாச்சாரத்திலுள்ள ஆணோ, பெண்ணோ தன்னிடம் உடம்பைத் தவிர வேறு ஒன்றுமில்லை; நல்ல மனதோ, சிறந்த அறிவோ, பிறர் மீதான பொறுப்போ தங்களிடம் இருப்பதாகக் காட்டுவதில்லை.

இதனால் எத்தனையோ இளம் உள்ளங்கள் கெட்டுச் சீரழிகின்றன. ஓடிப்போவதும் கடத்திப்போவதும் என எத்தனை எத்தனை செய்திகள் பத்திரிகைகளில் வருகின்றன.

இளைஞர்களே! யுவதிகளே! எப்படி வேண்டுமானாலும் ஆடை அணியலாம் என்ற போலித் தனமான சுதந்திரத்திலிருந்து விடுதலை பெறுங்கள்.

அருமை மாணவ – மாணவிகளே, நீங்கள் தெருவில் நடக்கும்போது எத்தனை எத்தனை அராஜகமான, மோசமான, இளம் உள்ளங்களில் முட்டாள்தனமான ஹீரோ துதிகளையும் சஞ்சலங்களையும் விதைக்கும் வக்கிரமான போஸ்டர்களைப் பார்க்கிறீர்கள்.

இணையதளத்தில் ஒரு செய்தியைத் தேடும்போது, மனதைச் சிதறடிக்கும் வகையில் வரும் ஆபாசக் காட்சிகளை நீங்கள் பார்த்தே தொலைய வேண்டியுள்ளது!

பிள்ளைகளின் தொடர்ச்சியான தவறான இணையதள பழக்கத்தால் எத்தனையோ பெற்றோர்களின் அடிவயிற்றில் அக்னி கொதித்துக் கொண்டிருக்கிறது.

இதனால் ஏற்படக்கூடிய பெண்களின் ஹார்மோன் இம்பேலன்ஸைப் பெற்றோர் கவனிக்கத் தவறுகிறார்கள்; சோஷியல் ஹார்மனியும் இதனால் பாதிக்கப்படுவதை யார்
தான் கவனிக்கிறார்கள்? மக்களுக்கு நல்ல செய்திகளைத் தர இன்று யார் பொறுப்புகளை சுமக்க நினைக்கிறார்கள்?

உள்ளத்தின் கதவுகள்
கண்கள் நீண்ட நேரம் டி.வி. பார்த்த பின் பலருக்கு ஒன்றும் உருப்படியாகச் செய்யத் தோன்றுவதில்லையே, ஏன்? காரணம் வேறு ஒன்றுமில்லை, உங்கள் கண்களுக்குக் காண்பதற்கான பயிற்சி இல்லை.

வேதாந்தத்தின்படி, மனிதனுக்குள்ளேயே எல்லாம் உள்ளது. ஒரு சிறுவனிடம்கூட எல்லாம் உள்ளது. அதனை விழிப்புணர்த்த வேண்டும் – இதுவே ஆசிரியரின் வேலை. சொந்த அறிவை உபயோகித்துக் கை, கால், கண், செவி முதலியவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பதைச் சிறுவர்களுக்குக் கற்பித்தாலே போதும், எல்லாம் சரியாகிவிடும் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

இதன்படி, கண்களுக்கு எப்படிப் பயிற்சி தருவது என்பது பற்றிப் பார்ப்போம். நம் மாணவர்களுக்குத் தங்களது கண்களைச் சரியாகப் பயன்படுத்தக் கற்றுத் தந்தால், நாளை அவர்கள் சமுதாயத்தின் கண்மணிகளாக விளங்குவர்.
கண்களை மூன்று விதமாகப் பயன்படுத்தலாம்.

1. பராக்கு பார்த்தல், 2. பார்த்தல், 3. நோக்குதல்.

தம்பி, நீ வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தால், உன் அப்பாவோ, அம்மாவோ பராக்கு பாக்காம வாடா என்று சொல்கிறார்கள், அல்லவா?

பராஞ்சிகாணி வ்யத்ருணத் சுயம்பு தஸ்மாத் பராங்
பச்யதி – கண், காது போன்றவை வெளிமுகமாக செயல்படும்படித்தானே படைத்தவர் அமைத்தார் என்று கட உபநிஷதம் கூறும். ஒருவன் வெளிமுகமாகவே பார்த்துக் கொண்டிருந்தால், அவனால் எதையும் சரியாக, ஒழுங்காகப் பார்க்க முடியாது.

குதிரைக்குக் கடிவாளம் போடவில்லை என்றால், அதன் வலக்கண் வலது புறத்திலுள்ள பொருள்களையும், இடக்கண் வேறு எதையாவதையும் பார்க்கும். அப்படிப்பட்ட குதிரை மீது சவாரி செய்ய முடியுமா, சொல் தங்கையே?

தம்பியே, உனக்குப் பிடித்த பேட்ஸ்மேன் சச்சின் பேட்டைப் பிடிக்கும்போது நீ ஒன்றைக் கவனித்திருப்பாய். பௌலரின் நேர் பின்னே தூரத்தில் சைட் ஸ்கிரீன் சரியாக வைக்கப்படவில்லை என்றால் சச்சின் பேட் செய்ய மாட்டார்.
ஏனெனில், தனது கவனம் வந்து போகிறவர்களைப் பார்ப்பதில் இருக்கக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருக்கிறார். அதோடு, பௌண்டிரிகளும் சிக்ஸர்களும் அடிக்கும்போது யாரெல்லாம் கை தட்டுகிறார்கள் என்று அவர் பராக்கு பார்ப்பதும் கிடையாது.

தம்பியே, நீயும் உனது வாழ்வில் ஒரு சிறந்த செயல்வீரனாக மாறத்தான் இதைக் கூறுகிறேன்.
கிளியின் கண்ணைப் பார்க்காமல் மரத்தையும் கிளைகளையும் இலைகளையும் பிற சீடர்கள் பார்க்க, அர்ஜுனன் மட்டும் கிளியின் கண்ணைக் கண்டு அம்பு எய்திய வரலாறு உனக்கு நன்றாகத் தெரியும்.
Arjuna
கண்முன் வருவதை எல்லாம் ஒருவன் கண்டால், அவனால் சரியாகப் படிக்கவும் சிந்திக்கவும் முடியாது. ஏன்?
அவன் பார்ப்பதற்கும் அவனது மனதிற்கும் சம்பந்தமே இருக்காது. கண்ணும் மனதும் ஒரே நேர்க்கோட்டிற்கு வரும்போதுதான் ஒருவன் சிறந்த மாணவனாகப் படிப்பிலும், மற்றவற்றிலும் சிறந்து விளங்க முடியும்.

தெருவில் இலக்கில்லாமல் கண்டதை எல்லாம் பார்த்துக் கொண்டே ஒருவன் போனால் சிறிது நேரத்திலேயே அவன் சோர்வடைந்து விடுவான்; அவனது ஆற்றல்கள் யாவும் தேயும் என மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வாழ்க்கையில் மனிதன் உயர் நோக்கத்தை இழக்கும்போது அவன் எதையும் வேடிக்கை மட்டுமே பார்க்கிறான். எதையும் அவனால் ஆழ்ந்து நோக்க முடிவதில்லை. நோக்க முடியாததால் அவனது திறன்கள் வளர்வதுமில்லை.
இருக்கும் திறன்களும் தேயத் தொடங்குகின்றன.

துரியோதனனின் தாய் காந்தாரி. தன் கணவன் பார்வையற்றவர் என்பதால் தானும் உலகைப் பார்க்க விரும்பாமல் பட்டுத் துணியால் தன் கண்களைக் கட்டிக் கொண்டு பார்வைத்தவம் புரிந்தாள். பலன்?

பாரதப் போரில் துரியோதனன் தோற்றபோது அவனுக்கு உதவ யாருமில்லை. உடலாலும் உள்ளத்தாலும் அவன் மிகவும் களைத்துப் போயிருந்தான். அந்த நேரத்தில் தன் மகனது உடலைத் தமது தவக் கண்களால் நோக்கினாள்.
சேமித்து வைத்திருந்த தன் பார்வை சக்தியை மகனுக்கு வழங்கினாள். அவனும் புது பலம் பெற்றான்.

புலால் கண் வேண்டாம்!
மாணவச் செல்வங்களே! தெருவிலோ, டி.வி.யிலோ உங்கள் கண் முன்னே வரும் விஷயங்களைப் பார்க்காமல் இருக்க முடியாது.
(வேண்டாத காட்சியையோ, போஸ்டரையோ பார்க்க நேரும்போது மனதைக் கண்ணாடியாக வைத்துக் கொள்; கேமிராவாக மாற்றிக் கொள்ளாதே என்கிறார் ஒரு புத்திசாலி இளைஞர். கண்ணாடியில் உருவம் விழும். ஆனால் அதில் விழும் உருவத்தைத் தக்க வைத்துக் கொள்ளாது. கேமிரா அப்படி அல்ல.)

சமயத்தில் அவற்றைத் தவிர்க்கவும் முடிவதில்லை. ஆனாலும் ஒன்றை நீங்கள் நிச்சயம் செய்ய முடியும். நம் முன்னோர்களின் சிறந்த வரலாற்றைத் திரும்பிப் பார்க்க முடியும் அல்லவா!

ஓர் அழகிய குளம். அதில் சில இளம்பெண்கள் நீரையே ஆடையாகக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த வழியே ஓர் இளைஞர் தமது சிந்தனைகளில் மூழ்கியவாறு போய்க் கொண்டிருந்தார். அந்தப் பெண்களைப் பார்த்தும் அவரது மனம் சிறிதும் சலனப்படவில்லை. யார் அவர்?

பரீக்ஷித் மகாராஜாவிற்கு பாகவதம் போதித்த சுகப்பிரம்ம மகரிஷிதான் அந்த இளைஞர்.
பெண்களைப் போகப்பொருளாக, இன்ப நோக்கத்துடன் காணும் கண்களைப் புலால் கண்கள் என்றே ஓர் அருளாளர் கூறுகிறார். புலால் எனில் மாமிசம், சதை என்று பொருள். சதை சதையைத்தானே பார்க்கும்.

அந்தச் சாதாரண நிலையிலிருந்து உங்களது கண்களை, உங்களது கவனத்தை, நோக்கத்தை மேம்படுத்த வேண்டும்.
அமலனாதிபிரான் என்ற பாசுரத்தில் திருப்பாணாழ்வார், என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே என்று பாடுகிறார்.

பத்ரம் பச்யே மாக்ஷபிர் யஜத்ரா:…. – தேவர்களே, கண்களால் நாங்கள் நல்லவற்றைக் காண வேண்டும் என்று ஒரு வேத மந்திரம் உண்டு. அந்தப் பிரார்த்தனையைத் தினம் ஒரு
முறை கூறினாலும் நோக்கும் திறனில் நீங்கள் முன்னேறுவீர்கள். உங்களது வெற்றிகளை உலகம் ஆர்வத்துடன் நோக்கும்.

காசியில் சுவாமி விவேகானந்தர் சென்று கொண்டிருந்தார். ஓரிரு குரங்குகள் அப்போது அவரைப் பின் தொடர்ந்தன. அவற்றைப் பார்த்தபடி சென்று கொண்டிருந்தார் சுவாமிஜி.

திடீரென்று ஐந்தாறு குரங்குகள் சேர்ந்து கொண்டு அவரைத் துரத்தவே சுவாமிஜி ஓட ஆரம்பித்தார். அப்போது அங்கு வந்த ஒரு துறவி நில், தீமைகளை எதிர்த்து நில்! என்று முழங்கினார். உடனே சுவாமிஜி தைரியத்துடன் அக்குரங்குகளைத் திரும்பி கம்பீரமாக நோக்கினார்.
அவ்வளவுதான், குரங்குகள் ஓட்டம் பிடித்தன.

மாணவ மாணவிகளே, சுட்டெரிக்கும் உங்கள் பார்வையால் தீயவற்றைப் பொசுக்குங்கள். பாதகம் செய்பவரைக் கண்டால்-நாம் பயம் கொள்ளலாகாது பாப்பா என மகாகவி பாரதியார் பாடியதை நீங்கள் மனதில் கொள்ளுங்கள்.

இப்படிப்பட்ட பாரம்பரியத்தின் சந்ததியினர் நீங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நோக்க நோக்கக் களியாட்டம்!
மோசமானவற்றைப் பார்க்காதிருந்தால் மட்டும் போதுமா? இல்லை. சரியாக நோக்கக் கற்றுக் கொண்டால் ஒருவன் பார்ப்பதெல்லாம் அதிசயங்களும் ஆச்சரியங்களுமே.

கேரளாவில் ஒரு கடற்கரை. அங்கு ஒரு கயிறு வியாபாரி கயிற்றைத் திரித்து, கடல் நீரில் அமிழ்த்தி வைத்துக் காய வைப்பார். பின் அந்தக் கயிற்றை ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்வார்.

ஒருமுறை ஈரமான கயிற்றில் மணல் ஒட்டியிருக்கும்
போதே ஏற்றுமதி செய்துவிட்டார். இதனால் கயிறு வியாபாரி சற்று கூடுதல் பணம் பார்த்துவிட்டார். ஜெர்மன் தொழிற்சாலையினர் வியாபாரியைக் கண்டித்துக் கடிதம் எழுதினர்.

அத்தொழிற்சாலைக்கு ஒரு முறை விஞ்ஞானி ஒருவர் வந்தார். எல்லாவற்றையும் பார்த்து வந்த அவர் முடிவில் கேரளக் கயிற்றையும் மணலையும் உற்று நோக்கினார். அந்த மணலை ஆராய்ந்த அவர், அது சாதாரண மணலல்ல, அதில் அதிக விலை மதிப்புள்ள, அணுமின் உற்பத்திக்குப் பயன்படும் தோரியம் மிகுந்திருந்ததைக் கண்டார்.
உடனே ஜெர்மானியர்கள், இந்திய வியாபாரியே! இனி நீங்கள் கயிறு அனுப்பாவிட்டாலும் பரவாயில்லை, மணலை மட்டும் அனுப்ப மறந்துவிடாதீர்கள் என்றார்களாம்.

இதுபோல் எதைப் பார்த்தாலும் அதிலுள்ள உன்னதங்களைக் காண உங்களது கண்கள் பழகட்டும்.

கொல்கத்தாவில் பல விலைமகளிர் இருந்தனர். அவர்களுள் ஒருத்தி ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சென்றபோது, தாயே, லோகமாதா! இன்று நீ இந்த உருவில் வந்துள்ளாயா? என்று கைகூப்பி வணங்கினார் அவர்.

பெண்களைப் பிறர் போகப் பொருளாகப் பார்த்தனர்; ஸ்ரீராமகிருஷ்ணரோ பரம்பொருளாகவே பார்த்தார்.

கண் வளர்வாய் கண்ணே
எதையும் சரியாக நோக்கக் கற்றுக் கொண்டால் அந்த நோக்கு எந்த அளவிற்குச் செல்ல முடியும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

வேதியியலில் பென்ஸீனின் மூலக்கூற்றைக் கண்டு பிடித்தவர் கெகுலே. அவர் அந்த மூலக்கூற்றின் அமைப்பு எப்படியெல்லாம் இருக்கும் என்று ஆராய்ந்து வந்தார்.
ஒரு நாள் அவர் கனவு ஒன்று கண்டார். அதில் ஆறு குரங்குகள் கைகோர்த்துக்கொண்டு ஆடிக்கொண்டிருப்பதைக் கண்டார். ஒரு கட்டத்தில் அவை நின்ற அமைப்பு கெகுலேவின் ஆழ்மனதில் பதிந்துவிட்டது.
விழித்தவுடன் அந்த அமைப்பின் அடிப்படையில் ஆராய்ந்தார். அதுதான் பென்ஸீன் மூலக்கூற்றின் சரியான அமைப்பு என்பதை விரைவில் கண்டறிந்து வெற்றி பெற்றார்.

பார்த்தீர்களா, சரியாக நோக்கக் கற்றுக் கொண்டவர் கனவிலும் உயர்ந்தவற்றையே நோக்கினார். அதனால்தான் அம்மாக்கள் தங்கள் குழந்தைகள் கனவிலும் உன்னதமானவற்றைக் காண வேண்டும் என்பதற்காக, கண் வளர்வாய் கண்ணே என்று தாலாட்டித் தூங்க வைக்கிறார்கள்.

மாணவக் கண்மணிகளே, நீங்கள் நம் நாட்டின் கண்மணிகளாக வளர்வதற்கு இன்று முதல் உங்கள் கண்களுக்கு பிரம்மசரியப் பயிற்சி கொடுங்கள்!

ஒளி படைத்த கண்ணினாய் வா, வா, வா! என்று மகாகவி பாரதியார் அழைத்தது ஒளிரப் போகும் உங்களைப் போன்றவர்களைத்தான்!

Source: Eluzhi Peru Yuvanea

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s