மாதுர்யம் – அன்னை

தேவ தேவியர்களை இரு கண்ணோட்டங்களில் காணலாம். ஒன்று ஐஸ்வர்யம், மற்றொன்று மாதுர்யம்.

ஐஸ்வர்யம் என்பது மகிமை, சக்தி, பராக்கிரமம் ஆகிய தெய்விகப் பண்புகளையும், மாதுர்யம் என்பது அன்பு, கருணை, இனிமை ஆகிய மானிடப் பண்புகளையும் குறிக்கின்றன.

ஐஸ்வர்ய அம்சத்தைப் பாராட்டும் பக்தர்கள் தம் தேவதையின் தெய்விகத்தைப் போற்றுகின்றனர். சாமான்ய பக்தர்களோ, தெய்வத்தின் அன்பு, இனிமை போன்ற மனிதப் பண்புகள் மிக்க மாதுர்ய அம்சத்தைப் போற்றி அதில் திளைக்கின்றனர்.
Holy Mother
அன்னை ஸ்ரீசாரதா தேவியின் வாழ்விலும் இந்த இரு பண்புகள் ஒருங்கே அமையப் பெற்றுள்ளன. ஸ்ரீராமகிருஷ்ணர் அன்னையிடம் உள்ள தெய்விக சக்தி விழிப்புற்று எழ வேண்டி அன்னையை அவரது ஐஸ்வர்ய அம்சத்தில் ஷோடசியாக வழிபட்டார். ஆனால் அவரது பெரும்பாலான சீடர்களோ அவருடைய மாதுர்யப் பண்பில் தஞ்சமடைந்தனர்.

அன்னையோ தமது ஐஸ்வர்ய அம்சத்தை மறைத்தே வைத்துக் கொண்டு, அவர்கள் அனைவரையும் தாய்மைக்கே உரிய தனியன்பில் பிணைத்து அவர்களுக்கு நிலையான அமைதியையும் ஆனந்தத்தையும் வழங்கினார்.
யாரெல்லாம் அன்னையிடம் வந்தார்களோ, அனைவரும் அன்னையிடமிருந்து அளவற்ற அன்பும் மன நிறைவும் பெற்றனர். அன்னையை நாடி வந்த அனைவரும் தாங்கள் மட்டுமே அன்னையின் ஈடிணையற்ற அன்பிற்குப் பாத்திரமானவர்கள் என்று கருதினர்.

ஒரே மனநிலையோடு அனைவருக்கும் அன்னை அளித்த உணவே, அது மிகச் சாதாரண பொரியாயிருந்தாலும், அதுவே தங்கள் வாழ்வில் சுவைத்த ருசி மிகுந்த உணவென்று கூறினர். அதுவே அவர்களுக்கு அமுதமாக இருந்தது.

எவ்வாறு ஒரு சிறு பாறையும் பெரிய மலையும் பெருங்கடலில் முழுவதுமாக மூழ்கிவிடுமோ அதே
போல் அனைத்து வகையான மக்களும் எந்தவித ஏற்றத் தாழ்வுமின்றி அன்னையின் அன்புக் கடலில் மூழ்கித் திளைத்தனர். தூய அன்பு எதையும் எதிர்பார்க்காதது என்ற தமது உபதேசத்திற்குத் தாமே எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார் அன்னை.

ஸ்ரீசாரதாதேவி எல்லோருக்கும் அன்னை என்பது அவர் மீது அன்பு கொண்ட சீடர்கள் சிலர் சூட்டிய வெறும் புகழாரம் அல்ல. சுவாமி ஞானானந்தரின் வாழ்க்கையின் மூலம் அறியப் பெற்ற உண்மையை இங்கு பார்ப்போம்.

சுவாமி ஞானானந்தர் (ஞான் மகராஜ்) 1912-ல் தமது பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு மெட்ரிக்குலேஷன் பரீட்சைக்காக கொல்கத்தா செல்ல வேண்டியிருந்தது. அங்கு அவருக்குத் தெரிந்த ஒரே நண்பர் அன்னையின் சேவகரான ராஷ்பிஹாரி மகராஜ் (சுவாமி அரூபானந்தர்) மட்டுமே. அவரைத் தேடி
வந்த ஞான் உத்போதனில் அன்னையின் இல்லத்தில் அவரைக் கண்டார்.

ஞானை நலம் விசாரித்த பின் ராஷ்பிஹாரி மகராஜ் அவரை மாடிக்குச் சென்று அன்னையை வணங்கி வரச் சொன்னார். ஞான் அன்னையைப் பற்றி ஏதும் அறியாதவர். ஆதலால் அவரைப் பற்றி ஆர்வத்தோடு கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். அதனைத் தடுத்த ராஷ்பிஹாரி மகராஜ் முதலில் அவரை மாடிக்குச் சென்று வணங்கி வருமாறு கூறினார்.

ஆர்வம் ஏதுமின்றி மாடிக்குச் சென்றார் ஞான். அங்கு தலை முதல் பாதம் வரைப் போர்த்திக் கொண்டு, கால்களைத் தொங்கவிட்டபடி கட்டிலில் பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார். அவரது பாதங்கள் மட்டுமே தெரிந்தன. இக்காட்சியைக் கண்டு அவ்வளவாக ஈர்க்கப்படாதவராக, தன் நண்பரைத் திருப்தி செய்வதற்காக தூரத்திலிருந்தே வணங்கிவிட்டு உடனே அங்கிருந்து சென்றார் ஞான்.

சில நாட்கள் சென்றன. ஞானுக்கு உலக வாழ்வில் விருப்பம் இல்லை. அவர் தன் எதிர்காலத்தைப் பற்றி எதுவும் முடிவு செய்யாதிருந்தார். அப்படியிருக்கையில் பல இடங்களுக்குச் சென்று சாதுக்களைச் சந்திப்பதும் கோவில்களுக்குச் செல்வதுமாக இருந்தார். ஆனால் இவை யாவும் ஏனோ அவருக்கு மனநிறைவை அளிக்கவில்லை. வாழ்க்கை அவருக்குக் குறிக்கோளற்றதாகத் தோன்றியது.

உத்போதனில் நடந்த மேற்கூறிய நிகழ்ச்சிக்குப் பின் அவர் காசியில் சில காலம் சுற்றித் திரிந்தார். அங்கும் நிம்மதியடையாமல் கொல்கத்தா திரும்பினார்.

ஒரு முறை அவர் மறுபடியும் ராஷ்பிஹாரி மகராஜைக் காணச் சென்றார். அப்போது வேறு ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த ராஷ்பிஹாரி மகராஜ் காமார்புகூர், ஜெயராம்பாடி போன்ற ஊர்களைப் பற்றிக் கூறியது ஞானின் ஆர்வத்தைத் தூண்டியது.

அந்த நபர் சென்றபின் ராஷ்பிஹாரி மகராஜிடம் அந்த ஊர்களைப் பற்றி விசாரித்தார். நீயோ அங்குமிங்கும் சுற்றித் திரிய விரும்புகிறாய். நீ ஏன் இந்த கிராமங்களுக்கு நடந்து செல்லக் கூடாது? காமார்புகூர் சென்று என் நண்பன் என்று அறிமுகம் செய்துகொள். அவர்கள் உனக்கு உணவும் தங்க இடமும் தருவார்கள்” என்றார் ராஷ்பிஹாரி மகராஜ்.

காமார்புகூருக்கு நடந்து சென்ற ஞான் அங்கு சில நாட்கள் தங்கிவிட்டுப் பின் ஜெயராம்பாடி சென்றார். அங்கும் நோக்கம் ஏதுமின்றிச் சுற்றிக் கொண்டிருக்கையில் தன்னை ஒரு பெண்மணி உற்று நோக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் கையில் ஒரு துண்டும் நீர்க் கிண்ணமும் இருந்தன. அவர் மதிய ஓய்விற்குப் பின் முகம் கழுவியிருக்கலாம் என்று தோன்றியது.
தன்னையறியாமல் அவரிடம் ஈர்க்கப்பட்ட ஞான் அவர் முன் சென்று வணங்கினார். அந்த அம்மையாரோ ஞானை அன்புடன் விசாரித்தார். எப்படி இருக்கிறாய் மகனே? நீ எப்போது இங்கு வருவாய் என நினைத்துக் கொண்டிருந்தேன்” என்றார்.

ஞான் ஏதும் புரியாமல், நீங்கள் யார்? உங்களை இதுவரையிலும் நான் பார்த்ததில்லையே? நீங்கள் என்னை வேறு யாராகவோ நினைத்து விசாரிப்பதாகத் தெரிகிறது” என்றார்.

அதற்கு அப்பெண்மணி, இல்லை மகனே, நீ என்னை உத்போதனில் சந்தித்தது நினைவில்லையா?” என்று அன்போடு வினவினார்.

அதிர்ந்து போன ஞான், சுதாரித்துக் கொண்டு, அம்மா, அன்று நாம் சந்தித்தது ஒரு கண நேரம் தான். அப்போது
கூட நாம் உரையாடவில்லை. அப்படியிருக்கையில் என்னை இவ்வளவு தெளிவாக ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே?” என்று வியந்து கூறினார்.
புன்முறுவல் பூத்தார் அன்னை.

இந்நிகழ்ச்சியும் ஞானை அவ்வளவாகக் கவரவில்லை. குறிப்பிட்ட வேலை ஏதுமின்றி ஞான் ஜெயராம்பாடியில் சில நாட்கள் தங்கியிருந்தார். ஒரு நாள் அன்னை அவரிடம், ‘ஞான், நீ ஆமோதர் ஆற்றில் நீந்த விரும்புகிறாயா?’ என்று கேட்டார். ஞான் அதற்கு ஆர்வம் தெரிவித்தார்.
அன்னை அவரை மறுநாள் ஆமோதரில் குளித்து
விட்டு, வரும் வழியில் ஸ்ரீராமகிருஷ்ணரின் பூஜைக்காகச் சில மலர்களைப் பறித்து வருமாறு கூறினார்.

மறுநாள் ஞான் ஆமோதரில் குளித்தபின் மலர்களுடன் அன்னையிடம் சென்றார். அன்னை அப்போது பூஜை செய்து கொண்டிருந்தார். அவருக்கு அருகில் ஆசனம் ஒன்று விரிக்கப்பட்டிருந்தது.

ஞானைக் கண்ட அன்னை ஆசனத்தில் அமருமாறு சைகை செய்தார். அமர்ந்த ஞான் அன்னை செய்யும் பூஜையைக் கூர்ந்து கவனித்தார். பூஜை முடிந்த பிறகு அன்னை ஞானுக்குத் தீட்சையளித்து ஸ்ரீராமகிருஷ்ணரின் படத்தை வணங்குமாறு கூறினார்.

அப்போது அவர்களுக்கிடையே நடந்த உரையாடல் சுவாரசியமானது:

ஞான் (விவாதிக்கும் தொனியில்) : இவர் (ஸ்ரீராமகிருஷ்ணர்) யார்? நான் ஏன் இவரை வணங்க வேண்டும்? எனக்கு இவர் யாரென்றே தெரியாதே!

அன்னை (கம்பீரமாக): நான் கூறுகிறேன் வணங்கு. இவரை உனக்குத் தெரியாதா, என்ன? இவர்தான் உலகிற்கு, ஏன் இந்த பிரபஞ்சத்திற்கே குரு.

ஞான் : அவர் எப்படி எனக்கு குருவாக முடியும்? நீங்கள்தான் எனக்குத் தீட்சை அளித்தீர்கள். அதனால் நீங்களே என் குரு.

அன்னை : நான் ஒருவருக்கும் குரு அல்ல; நான் அனைவருக்கும் அன்னை. ஸ்ரீராமகிருஷ்ணர்தான் குரு.

ஞான் : நீங்கள் எப்படி என் அன்னையாக முடியும்? என் அன்னை என் வீட்டில் அல்லவா இருக்கிறார்?

அன்னை : நான் உன் அன்னையேதான். என்னை நன்றாகப் பார். நான் உனது அன்னையா, இல்லையா என்று அப்போது நன்றாகப் புரிந்து கொள்வாய்.

ஞான் அன்னையைக் கூர்ந்து பார்த்தார். என்ன ஆச்சரியம்! உடனே தம்மை ஈன்ற அன்னை ஸ்ரீசாரதா
தேவியின் இடத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார். ஒரு கணம் வெளி உலகை மறந்த ஞான் உடனே, ‘அம்மா, அம்மா’ என அலறினார். அன்னையின் முன் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்தார். அவரது விவாதங்கள் அன்றோடு முற்றுப் பெற்றன.

தூய அன்னை தம் குரு மட்டுமல்ல, தமது அன்னை மட்டுமல்ல, அனைவருக்கும் அன்னை, இந்த உலகிற்கே, ஏன் இந்த அண்டம் முழுவதற்குமே அன்னை என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து அவருக்கே இறுதி வரை சேவை புரிந்தார் சுவாமி ஞானானந்தர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s