அன்னையின்அன்புக்கு இணை ஏது?

அன்னையின்அன்புக்கு இணை ஏது?

குருதேவரை சுவாமி சாரதானந்தர் முதன்முதலில் சந்தித்தபோது அவர், நீ தியானத்தில் எத்தகைய தெய்விகக் காட்சிகளைக் காண விரும்புகிறாய்?” என்று கேட்டார்.
சுவாமி சாரதானந்தர், எல்லாவற்றிலும் ஆத்மாவைக் காண விருப்பம்” என்றார்.

அதற்கு குருதேவர், ஆன்மிகத்தில் இறுதிநிலை அதுதான்; அதை அடைய நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்!” என்றாராம்.

குருதேவர் இப்படிக் கூறியது ஏன்?
‘சம-திருஷ்டி’ – எல்லாவற்றையும் ஆத்மாவாகவே காண்பது (இறைமயமாகவே காண்பது) என்ற நிலை மிகக் கடுமையான ஆன்மிகச் சாதனைகளுக்குப் பிறகே எய்தக்கூடிய ஒன்றல்லவா?

ஆனால் அன்னை ஸ்ரீசாரதாதேவியோ இத்தகைய சம நோக்கை அன்றாட வாழ்விலும் காட்ட முடியும் என்பதைத் தமது தனித்தன்மையால் வாழ்ந்து காட்டினார். அவர் ஓர் ‘அசாதாரணமான’ சாதாரணப் பெண்மணியாகத் திகழ்ந்தார்!
வெளித்தோற்றத்தில் சமைப்பது, வீட்டைப் பெருக்குவது, அலங்கரிப்பது, காய்கறி நறுக்குவது, பக்தர்களைக் கவனிப்பது என்று எல்லா வேலைகளிலும் அவர் ஈடுபடுவார்.

ஒருமுறை ஒரு பக்தரின் குழந்தை, பாயில் மலஜலம் கழித்துவிட்டது. அன்னை அந்தப் பாயைக் கழுவ எடுத்துக் கொண்டு கிளம்பியபோது ஒரு பக்தர் தடுத்தார்.
உடனே ஸ்ரீசாரதாதேவி, ஒரு குழந்தையின் காரியத்தைத் தாயார் ஒருத்தி கவனித்துச் செய்யாமல் வேறு யார் செய்வதாம்?” என்றாராம்!

அன்னையைத் தரிசிக்க வந்து அவரோடு தங்கிய பின் கிளம்பும் பக்தைகள் யாராவது தமது புடைவையைக் கொடியில் உலர்த்திய பிறகு எடுத்துக் கொள்ள மறந்துவிடுவர். அன்னையே அதை எடுத்து மடித்து வைத்து அந்தப் பக்தைக்குக் கொடுத்து அனுப்பிவிடுவார்!

அன்னையின் கிராமமான ஜெயராம்பாடியில் பால் எளிதாகக் கிடைக்காது. ஆனால் தேநீர் குடிக்கும் வழக்கமுடைய நகரவாசிகளான பக்தர்கள் அவரைத் தரிசிக்க ஜெயராம்பாடி வந்தால், அன்னை அவர்களுக்காக வீடு வீடாகச் சென்று பால் வாங்கி வந்து தேநீர் தயாரித்துத் தருவார்.

இப்படி அவரது எல்லாக் காரியங்களிலும் ஒரு குடும்பப் பெண் போன்ற நடவடிக்கைகளே தென்பட்டாலும், அவர் மாபெரும் ஆன்மிகச் செல்வத்துக்குப் பாதுகாவலராகவும் திகழ்ந்தார்.

அவரை நாடிச் சென்றது பாமர பக்தர்கள் மட்டுமல்ல; ஸ்ரீராமகிருஷ்ண மடத்துத் துறவிகளும் ஆன்மிக உபதேசம் பெறவும், வழிகாட்டுதல் பெறவும் அவரை நாடினர்.

உதாரணமாக, சுவாமி விரஜானந்தர் தமது ஆன்மிகச் சாதனை காலத்தில் தீராத தலைவலியால் திண்டாடினார். முடிவில், அன்னையின் அறிவுரையை நாடினார். அன்னையும் அவரது தியான முறையில் ஒரு மாற்றம் செய்யுமாறு வழிகாட்டி, அவரது பிரச்னையைத் தீர்த்தார்.

அன்னையிடம் ‘சௌலப்யம்’ எனப்படும் காட்சிக்கு எளிமையும், ‘பரத்வம்’ எனப்படும் உடலுணர்வைத் தாண்டிய மெய்யுணர்வின் அற்புதமும் ஒருங்கே அமைந்திருந்தன.
ஒன்றுக்கொன்று முரண்பட்ட இவ்விரு நிலைகளின் கூட்டுறவு அன்னையிடம் அமைந்திருந்ததன் ரகசியம் என்ன?

அன்னையிடம் பொங்கிய தாய்மையின் அன்பு அளக்க முடியாதது; கட்டுப்பாடுகளுக்குள் அடங்காத ஒன்று. அந்த அன்பு குருதேவருக்கே சவால் விடுக்கும் சக்தியுடையது!

HM2

ஒரு முறை ஒழுக்கக்கேடுள்ள ஒருத்தி, குருதேவருக்காக அன்னை சமைத்த உணவைத் தன் கையால் பரிமாறுவதற்காக அவரிடம் எடுத்துச் சென்றாள்.

குருதேவருக்கு அது பிடிக்கவில்லை. நீ எப்படி இத்தகைய ஒரு பெண்ணிடம் எனக்கான உணவைக் கொடுத்து அனுப்பினாய்?” என்று அன்னையிடம் கடிந்து கொண்டார்.
அன்னை அமைதியாக, என்னை அம்மாவென்று கூப்பிட்டு என்னிடம் யாராவது எதையாவது வேண்டினால், என்னால் மறுக்க முடியாது!” என்றார்.

அதற்கு குருதேவர், போகட்டும், இனி மேலாவது இத்தகைய ஒழுக்கமில்லாதவர்களிடம் உணவு அனுப்பக் கூடாது என்பதைத் தீர்மானமாக வைத்துக் கொள்” என்றார்.
அன்னையோ சலனமின்றி, அப்படியெல்லாம் என்னால் உறுதிமொழி தர முடியாது!” என்றார்!

முரண்பாடு போலத் தோன்றும் அன்னையின் இக்குணாதிசயம், பிருஹதாரண்யக உபநிடதத்தில் யாக்ஞவல்கியருக்கும் அவரது மனைவி மைத்ரேயிக்கும் நடக்கும் ஓர் உரையாடலில் விளக்கம் பெறுகிறது. அன்பு செலுத்துவதன் நியதி என்ன என யாக்ஞவல்கியர் விளக்குகிறார்:
ந வா அரே புத்ராணாம் காமாய புத்ரா:
ப்ரியா பவந்த்யாத்மனஸ்து காமாய புத்ரா: ப்ரியா பவந்தி (4.5.6)
இதில் ‘ஆத்மனஸ்து காமாய’ என்பதை ‘தன்
பொருட்டே’ என்ற தவறான பொருள் கொண்டு சிலர் ‘புத்திரர்களின் பொருட்டன்று, ஒருவன் புத்திரர்கள் மேல் அன்பு கொள்வது; அந்த அன்பு தன் பொருட்டே ஆகும்’ என்று விளக்குவார்கள்.
அது தவறு. இது முற்றிலும் சுயநலமான கண்ணோட்டம் என்றல்லவா தோன்றுகிறது?
‘ஆத்மனஸ்து காமாய’ – ‘ஆத்மாவின் மேல் இருக்கும் விருப்பத்தால்’ என்பதே சரியான பொருள்.

பிரபஞ்சம் முழுவதும் பல்கிப் பரவியுள்ள ஆத்மா ஒன்றே; அந்த ஒரு பரமாத்மாவே, (கீதை 7-7 ) ‘ஒரு மாலையில் பல மணிகளின் ஊடே சென்று ஒன்றாய் இணைக்கும் நூல் போலே’ எல்லோருள்ளும் இருப்பது.

எல்லா ஜீவாத்மாக்களுக்குள்ளும் ஒளிரும் பரமாத்மா ஒன்றே. நாம் ஒருவர் மீது கொள்ளும் நேசம், பன்மை கடந்த ஒருமையான அந்த ஆத்மாவின் மீது கொள்ளும் நேசம் அன்றி வேறில்லை. சாமானியர்களுக்கு இத்தகைய அன்பின் தாத்பரியம் புரியாது.

யாருக்கு இத்தகைய பரந்த கண்ணோட்டம் உண்டோ, அவர்களுக்கு ‘சமதர்சித்வம்’ -அனைத்தையும் ஒன்றேயான ஆத்மாவாகக் காணும் தன்மை இயற்கையாகவே வந்துவிடும்.

அன்னை ஸ்ரீசாரதையின் தாய்மை அன்பு அத்தகையதே; அது ஒரு சாதாரணத் தாயின் குறுகிய தாயன்பை ஒத்ததல்ல. அவரிடம் ஒளிர்ந்த அன்பு ‘பரமப் பிரேமை’ என்னும் பரிபூரண அன்பு மயமாகும். தமது அன்பின் மூலம் பிறரையும் விரும்பப்படுபவராக மாற்றும் ஆற்றல் அவருக்கு இருந்தது.

ஸ்ரீசாரதையின் குழந்தைகளான நமக்கெல்லாம் அவர் கற்றுத் தந்த பாடம், எல்லாரும் நம்முடையவரே;‘யாரும் அன்னியர் அல்லர்’ என்பதே.

இதைப் பெறுவதற்கு எத்தகைய கண்ணோட்டம் நமக்கு வேண்டும், நம் மனதை எப்படிச் சரிசெய்து கொள்ள வேண்டும் என்பதற்கு அன்னையே வழிகாட்டியுள்ளார்.
அன்னை எத்தகைய உலகம் தழுவிய பிரேமையைப் பெற்றிருந்தாரோ, அந்தளவுக்குச் சாமானியர்களான நம்மால் அன்பு காட்ட இயலாதுதான். நாம் ‘அவித்யை’ எனும் மயக்கத்தில் சிக்கியிருப்பதால், பல சமயங்களில் அத்தகைய ஆழமான அன்பை நம்மால் பெற முடிவதில்லை. நாம் அன்பு செலுத்துவதில் மிகவும் சிக்கனமாக, ஏன் கஞ்சத்தனமாகவே இருக்கிறோம். அதனாலேயே துன்பப்படுகிறோம்.

ஆனால் அன்னையோ எல்லையற்ற தெய்விக அன்பின் வடிவமே ஆவார். அவர் அன்பெனும் போதைக்கு அடிமைப்பட்டுப் போயிருந்தார் என்றால் அது மிகையில்லை. அவரைப் பொறுத்தவரை அன்பு என்பது வெளிவேடமல்ல. தம்மிடம் வருபவர்களிடம் அன்பைச் சொரிந்து அவர்களைத் தம் அன்பால் முழுக்காட்டுவது அவரது சுபாவம்.

தாம் அன்பைச் செலுத்துபவருக்கு அதைப் பெறுவதற்கான தகுதி உண்டா இல்லையா என்று அவர் யோசித்ததே கிடையாது. அவரைப் பொறுத்தவரை, ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடரான சாரதானந்தரானாலும் சரி, திருடனான அம்ஜத்தானாலும் சரி அவரது அன்பைப் பெறும் தகுதியைப் பொறுத்தவரை முற்றிலும் சமமே!

அத்தகைய தெய்விக அன்பிலிருந்து ஒரு சில துளிகளாவது நாம் எடுத்து நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி, களங்கமில்லாத அந்த அன்பின் மூலம் கிட்டும் ஆனந்தத்தை அனுபவிப்போமாக.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s