சங்கடங்கள் நீக்கிட, சாரதையே வந்திடு!

சங்கடங்கள் நீக்கிட, சாரதையே வந்திடு!

ஸ்ரீசாரதாதேவி பிறப்பிலிருந்தே மகத்தானவர்; தம் வாழ்நாளிலும் எல்லையற்ற மேன்மையை அடைந்தவர்.

ஸ்ரீசாரதாதேவி யார்?இந்த உலகத்தவர் அல்லாமல், வேறு ஏதோ உயர் உலகத்தைச் சேர்ந்த அரிய ஆன்மாக்களில் ஒருவர். அவர் பிறந்தது எளிய சூழ்நிலையில்தான். எனினும் உலகை விட்டு மறைந்தபோதோ பலரின் வணக்கத்துக்கு உரியவர் ஆனார்.

அவரது வாழ்க்கையை எழுதியவர்கள், அவரைக் கன்னித்தாய், தவசீலர், ஜகன்மாதாவின் மொத்த உரு என்று பலவாறாகச் சித்தரித்திருக்கிறார்கள்.

எப்படிப் பார்த்தாலும் அவர் தம் காலத்தில் ஓர் ஒப்பற்ற பெண்மணியாகவும், சமய வரலாற்றில் ஒரு தனி இடம் பெற்றவராகவும் திகழ்ந்தார் என்றே கூற வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அவரிடமிருந்த, பார்வைக்குப் புலப்படாத சக்தி அவரது வாழ்வின் அன்றாட சந்தர்ப்பங்களிலும் அடிக்கடி வெளிப்பட்டது.
HM3_1
புரியாத புதிர் அவர்! அவருடன் நெருக்கமாக வாழ்ந்தவர்களால்கூட உண்மையில் அவரைப் புரிந்துகொள்ள இயலவில்லை. அன்னைக்குப் பணிவிடை புரிந்தவர்களுள் ஒருவரான சுவாமி அத்புதானந்தர் கூறுவார்: அன்னையைப் புரிந்து கொள்ளத் தவம் புரிய வேண்டும். அதன் பலனாகப் பாயும் அவரது அருளினாலே அவரை அறியலாம்.”

சுவாமி சாரதானந்தர் அதிக காலம் அன்னைக்குப் பணிவிடை புரிந்தவர். அவர் ஒரு பாடலை அடிக்கடி பாடுவார்:
அம்மா, நான் பல காலம் உன்னுடன் வாழ்ந்திருக்கிறேன்; உன்னை உன்னிப்பாகக் கவனித்திருக்கிறேன்.இப்போது என் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன்… என்னால் உன்னைப் புரிந்து கொள்ள இயலவில்லை”.

அன்னையின் ஆளுமையை அளவிடுவது கடினம்.ஆனால் அடிப்படையில் அனைவரையும் நேசிக்கும் தாயாக இருந்த அவரது எல்லையற்ற கருணையை அனுபவித்து அறிந்து கொள்வதில் ஒரு கஷ்டமும் இருக்கவில்லை.

இனம், மதம், மொழி எல்லாவற்றையும் கடந்து அன்னையின் வாழ்வைக் கவனமாகப் படிக்கும் – அவரது அருள் வட்டத்துக்குள் வரும் அனைவருக்கும் இது பொருந்தும்.அவரது ஆளுமையும் தாக்கமும் தர்க்கரீதியான விளக்கங்களை மீறியவை எனினும் அவரது அன்பை அனைவராலும் உணர முடிந்தது.

நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கு ஓர் அன்னை இருக்கிறாள் என நினைவில் கொள்ளுங்கள்” என்று உலகெங்கும் உள்ள தமது குழந்தைகளுக்கு அன்னை உறுதி கூறினார்.
தமது 67 வருட வாழ்க்கையில், குறிப்பாக, கடைசி 20 ஆண்டுகளில், அன்னை – ஒரு தாயின் பங்கை அதன் அதிகபட்ச லட்சிய நிலைக்கு உயர்த்தினார்.அவரது மகத்துவம் இதில்தான் அதிகமாக வெளிப்பட்டது.

முதலில், அவரிடம் பற்றுகளைக் கடந்த தன்னிகரற்ற தாயன்பு இருந்தது.அது அனைவரையும் அரவணைத்தது. தமது சீடர்களையும் உறவினர்களையும் மட்டுமின்றித் தமது கணவரையும்கூடத் தம் குழந்தையாகவே கருதினார் அன்னை!

மனிதர்களைப் பற்று என்னும் கயிற்றால் கட்டிப்போடும் மாயைக்கு எதிராக, அவரது அன்பு அனைவரிடமும் தங்கு தடையின்றிப் பெருகும் கருணையிலிருந்து ஊற்றெடுத்தது.
இந்தியர்கள் அந்நியருக்கு எதிராகப் போராட்டத்தில்
ஈடுபட்டிருந்தபோதும் அன்னை தம் சீடர்களிடம் ஆங்கிலேயரும் தம் குழந்தைகளே என்று கூறினார்.

அன்னை ராதுவிடம் நடந்து கொண்டது பற்றின் காரணமாகவே என்று தோன்றினாலும் அது உண்மையல்ல. ராதுவிடம் வைத்த அன்புப் பற்றை நீக்கிக் கொள்ள நினைத்த மாத்திரத்தில் அன்னையால் அதைச் செய்ய இயன்றது.

உண்மையில், ஒரு குடும்பத்தில் தோன்றும் எந்தவொரு குறுகிய பற்றும் அவரது பிறவிக்குணமான உலகளாவிய அன்பிற்குத் தடைபோட முடியவில்லை.
தொண்டினையே வழிபாடாக்கியவர்!: அன்னையின் வாழ்க்கையே இடையறாத அன்புத் தொண்டின் நெடுங்கதை.
சிறுவயதில் அன்னை தம் பெற்றோர், சகோதர, சகோதரிகளுக்குப் பணிவிடை புரிந்தார்.வயதான காலத்தில் தம்மிடம் வந்த சீடர்களுக்கும் மனச்சாந்தியும் ஆசிகளும் வேண்டித் தம்மை அண்டிய அனைவருக்கும் அவர் சேவை புரிந்தார்.

கிராமத்தில் அன்னை வீட்டைத் துப்புரவு செய்தார்.உணவு சமைத்தார், பாத்திரங்களைத் துலக்கினார், நோயாளிகளுக்குப் பணிவிடை புரிந்தார், உறவினரைக் கவனித்துக் கொண்டார்.

பிறருக்குச் சேவை செய்யும்போது அவர் அவர்களை இறைவனின் உருவமாகவே கண்டார்.அதனால்தான் உலகியல் சங்கடங்களுக்கிடையிலும், அவரால் தம் பங்கை நேர்த்தியாகவும், இயல்பாகவும் ஆற்ற முடிந்தது.

மனஅமைதியை வழங்குபவர்: இதற்கும் மேலாக, அன்னை எப்போதும் தம்மைச் சார்ந்த அனைவருக்கும் புகலிடமும் மனஅமைதியையும் அளித்தார். தாயன்பில் தோய்ந்த அவரது சேவை அவரது குழந்தைகள் அனைவருக்கும் மிகவும் பிரியமானதாக இருந்தது.அன்னையின் இதயவாசல் திறந்து அவரது உலகம் தழுவும் அன்பு எனும் குளிர்காற்று அதன் வழியே வீசி இதமளித்தது.அது எவருக்கும் குறைவின்றிக் கிடைத்தது.
தமக்கு நெருக்கமானவர்கள், தெரிந்தவர்கள் மட்டும் என்று இல்லாமல் அன்னை அனைவரின் நலனிலும் ஆழ்ந்த, பொங்கிப் பெருகிய அக்கறை காட்டினார்.

துர்க்கா பூஜையில் சந்தி பூஜை எனும் புண்ணியவேளை போன்ற சுப நேரங்களில் அன்னை தமது தெய்விக நிலையைப் பற்றிய தீவிர உணர்வுடன் இருப்பார்; அப்போது தம்மிடம் நேரில் வந்து ஆசி பெற இயலாத பக்தர்களின் சார்பில் தமது பாதங்களில் மலரஞ்சலி செய்யுமாறு தமக்குப் பணிபுரிவோரிடம் கூறுவார்; அவர்களுக்காகத் தாமே பிரார்த்திப்பார்.

அன்னை, ஜகன்மாதா! எல்லாரும் இன்புற்றிருக்க அருள்வாய்!” என அடிக்கடி பிரார்த்தனை செய்வார். ‘ஸர்வபூத ஹிதேரதா: – எல்லா உயிர்களின் நலனில் நாட்டம் கொண்டவர்’ என்ற நாமாவுக்கேற்ப அன்னை அனைவரின் நலனுக்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்தார்.

சக்தியின் சமநோக்கு! : அன்னையின் இன்னொரு பண்பு சமநோக்கு என்ற ‘ஸமதர்சனம்’. கீதையில் கிருஷ்ணர், ‘நான் அனைவருக்கும் பொதுவானவன்.நண்பனோ, பகைவனோ எனக்கில்லை’ என்றார்.

இந்தச் சமதரிசனத்தினால்தான் அன்னையின் தாயன்பும் அதனின்றெழுந்த அக்கறையும் பக்தர்களுக்குக் கிடைத்தன.உயர்ந்த பக்தர்களையும், தவறிழைத்துத் தறிகெட்டுப் போனவர்களையும் அன்னை சமமாகவே நடத்தினார்.
அன்னை பிறரிடம் குற்றம் காணாதவர்.‘ஓர் அன்னையால் தம் பிள்ளைகளிடம் குற்றம் காண முடியுமா, என்ன?’ என்பார் அன்னை.

அன்னை சமநோக்குடன் பழகினாலும் அதனால் ஒருவருக்கும் அவரது தனிப்பட்ட கவனிப்பும், அக்கறையும் கிடைக்காமல் போய் விடவில்லை.தொட்டால் சுருங்கியான சிலரும் அன்னை தம்மிடம் தனிக் கவனம் செலுத்தினார் என்றே உணர்ந்தனர். அவர் பழங்களை அளித்த போது தனக்குப் பிடித்த பழமே கிடைத்ததாகப் பலரும் கூறினர்.

பரந்த அன்பையும், சமதரிசனத்தையும் தனிப்பட்ட அக்கறையும் ஒவ்வொருவரிடமும் காட்டும் அவரது திறமை விளக்க இயலாதது.பலரும் அன்னையின் உருவில் தங்கள் தாயையே கண்டனர்; அல்லது மறைந்துவிட்ட தங்கள் அன்னையே தூய அன்னையின் உருவில் மீண்டும் தோன்றியதாக உணர்ந்தனர்.

அன்னையின் செயலிலும் சொல்லிலும் இடைவிடாமல் லோகமாதா பரிமளித்தாள் என ஏற்கனவே கண்டோம்.இதற்கு எடுத்துக்காட்டாக அவரது இறுதி உபதேசத்தைக் காண்போம்.

இந்த உலகம் முழுவதையுமே உனதாக்கிக் கொள், குழந்தாய்.ஒருவரும் உனக்கு அன்னியர் அல்லர்.உலகம் முழுவதுமே உன்னுடையதுதான்” என்று அன்னை ஒரு பக்தருக்குக் கூறினார்.

இதை அன்னை தம் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து
காட்டினார்; பிறருக்கும் உபதேசித்தார்.

நமது இன்றைய பிரச்னைகள் தீருமா? நமது தனிப்பட்ட, குடும்ப, தேச, உலக அளவிலும் இந்த லட்சியத்தை உண்மையாகவும் நம்பிக்கையுடனும் பின்பற்றி வந்தால் உலகியல் நம்முன் வைக்கும் அச்சமூட்டும் சவால்களை எளிதாகச் சமாளிக்கலாம். அத்தகைய அணுகுமுறையே நாம் அனைவரும் தேடும் நிரந்தர சாந்தியின் வாசலைத் திறக்கும்.

ஸ்ரீசாரதாதேவியின் தாயன்பு என்னும் சுகந்தம், அவரது அன்பு தோய்ந்த அக்கறை, ஈடுபாடு மிக்க சேவை முதலியவை அவரிடம் ஒளிவீசிக் கொண்டிருந்த பெரும் ஆசி மற்றும் குருதேவரின் உலகளாவிய இயக்கத்தின் பல்வேறு பகுதி
களே.அன்னை எங்கிருந்தாலும் அவரது தாயன்பு இனம், நம்பிக்கை போன்ற தடைகளை மீறி ஒளிர்ந்தது; அனைத்தையும் அரவணைக்கும் அவரது மனோபாவம் பிரகாசித்தது.

அன்னை பயன்படுத்தியது ஒரு தாயுள்ளத்தின் மொழியே ஆனதால் வெவ்வேறு மொழிகளைப் பேசும் அவரது குழந்தைகளின் அன்பை அவரால் பெற முடிந்தது. அவர்கள் பிரிட்டனிலிருந்து வந்தவர்களா, கிறிஸ்தவரா, இஸ்லாமியரா
என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டதில்லை.
அன்னையின் வாழ்க்கை அனைத்தையும் உள்ளடக்கியதாக இருந்ததோடு, செயல்முறை வேதாந்தத்தின் ஆதர்சமாகவும் திகழ்ந்தது.அவரது ஆன்மிக மேன்மை ராமகிருஷ்ண மடத்தின் துறவிகளுக்கு மட்டுமின்றி வாழ்க்கையின் பல படிகளில் இருந்தவர்களுக்கும் குருவாக வழிகாட்டியது.

அதனுடன் கூடவே அன்னை உலகியல் நாட்டம் மட்டுமே கொண்ட உறவினரைக் கொண்ட ஒரு பெரிய குடும்பத்தின் தலைவியாகவும் திகழ்ந்தார். இதோடு மீண்டும் மீண்டும்
பல்வேறு சூழ்நிலைகளில் பிறரை உயர்த்தும் அன்னையின் ஆன்மிகச் சக்தியைப் பலரும் அனுபவித்தனர்.

என்றும் தொடரும் அன்பு: அன்னையின் மகத்துவத்துக்குக் காரணம் எதுவானாலும் அவரது மகிமை உலகெங்கிலும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்திருப்பதை மறுக்க இயலாது. இன்றைய சுயநலமிக்க, பூசலில் சிக்குண்ட உலகில் பிரதிபலனை எதிர்பாராத தாயன்பைக் காண்பது அரிது.

இன்றும் அத்தாயன்பிற்காக அன்னையை நாடுபவர் பலர் உண்டு.உண்மையில் பக்தர்கள் இன்றும் அவரது அன்பும் அருளும் இயங்கியபடியே உள்ளன என நம்புகின்றனர்.

துன்ப வேளையில் மக்கள் அதிலிருந்து மீளவும், தம்மைக் காக்கவும் அன்னை ஸ்ரீசாரதாதேவியிடம் பிரார்த்திக்கின்றனர்.ஆக, அன்னையின் மகத்துவம் அவருக்கு இயல்பானது.அவர் இன்றைய பிரச்னைகளுக்குத் தீர்வுகாட்டுவதன் மூலம் பலருக்கும் உதவி வருகிறார்.

இன்று, உலகமயமாக்கல் என்ற புதிய கருத்து மக்களின் மீது திணிக்கப்பட்டுள்ளது.தொலைத் தொடர்பு மற்றும் பல சாதனைகள் உலகமயமாக்கலை எளிதாக்கிவிட்டன.
உலகமயமாதல் சிறப்புரிமை பெறுவதில் மனிதகுலத்தின் பல பிரிவுகளுக்கு இடையே உள்ள பல வேறுபாடுகளை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

இதன் விளைவாகத் தீவிரவாதமும் மிருகத்தனமான கொடூரமும் அதிகரித்துள்ளன; சுயநலமும் பெருகி வருகிறது; சிறப்புரிமை பெற்ற நாடுகளிடையே உரிமைப் பூசல்கள் மிகுந்துள்ளன.நடைமுறையில் மக்கள் உலகமயமாக்கலை ஒரு கேலிக்கூத்தாக ஆக்கிவிட்டனர்.

இன்றைய சூழ்நிலையின் அப்பட்டமான நிதர்சனம் அன்னையின் மகிமையையும் அனைவரையும் அரவணைக்கும் அவரது தாயுள்ளத்தையும் எடுத்துக் காட்டுகிறது.
வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகளும், சாதனைகளும், அதிர்ச்சி தரும் நிகழ்ச்சிகளுமே ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் இக்காலத்திலும்கூட அன்னையைப் போன்ற உயர்ந்த ஆன்மாக்களின் அன்றாட வாழ்வின் சிறு செயல்கள்கூட மக்களை ஆன்ம வழியில் ஊக்குவிக்கின்றன!
ஸ்ரீசாரதாதேவியைப் பொறுத்தவரையில் அவரது செயல்கள் அவரது பணிவு, மென்மை, அகங்காரமின்மை மற்றும் அவரது உலகளாவிய அன்பு ஆகியவற்றில் தோய்ந்திருந்தன.எனவே, அவரது வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டால் நிதானமாக, ஆனால் நிச்சயமாக உச்ச நிலையை அடைய முடியும்.

Author: சுவாமி பிரபானந்தர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s