சிறந்த சந்நியாசி சிறந்த இல்லத்தரசி

சிறந்த சந்நியாசி சிறந்த இல்லத்தரசி
– சுவாமி ரகுநாதானந்தர்

அக்னியும் அதன் எரிக்கும் சக்தியும் வேறல்ல. அது போல் ஸ்ரீராமகிருஷ்ணரில் நிலைத்தவர் ஸ்ரீசாரதா தேவியார்.

நம் காலத்திற்கேற்ற ஆன்மிக எழுச்சியை மக்களிடம் தூண்டுவதற்காக ஸ்ரீராமகிருஷ்ணர் தோன்றினார்.
ஸ்ரீராமகிருஷ்ணரும் அன்னையாரும் மிகச் சாதாரண மனிதர்களைப் போலப் பிறந்து வாழ்ந்தார்கள்.

‘எவர் ராமராகவும் கிருஷ்ணராகவும் வந்தாரோ, அவரே இன்று ராமகிருஷ்ணராக வந்திருக்கிறார்’ என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியதை நாம் சிறிதாவது புரிந்து கொண்டால் அவரது வாழ்வின் பெருமை நமக்குப் புரியும்.

‘ஸ்ரீராமகிருஷ்ணர் மற்றும் அன்னையாரைப் பற்றி நாம் இன்னும் முழுவதுமாகப் புரிந்து கொள்ள வில்லை’ என்று சுவாமி கம்பீரானந்தஜி மகராஜ் கூறுவதுண்டு.
HM8
யாருடைய மனம் ஆசாபாசங்களிலிருந்து விடுபட்டு தூய்மை அடைந்துள்ளதோ, அவர்கள்தான் குருதேவர் மற்றும் அன்னையாரை அறிந்து கொள்ள முடியும்.

பக்தர்களான நீங்கள் அவர்களைப் பற்றி நிறையப் படிக்கிறீர்கள். அவர்கள் கூறியபடி வாழ முயல்கிறீர்கள்.
ஆனால் நமது மனம் ஓர் உயர்ந்த நிலைக்குச் செல்லவில்லை என்றால் நமக்கு அவர்களிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காது.
அன்னையார் ஒரு சிறந்த இல்லறத்தலைவி, சிறந்த சந்நியாசினி என்று மட்டும் நாம் வரையறுத்துச் சொல்ல முடியாது. அவரது மற்ற பரிமாணங்களும் அவரது வாழ்க்கையைப் படித்தால் நமக்குப் புரியும்.

ஸ்ரீராமகிருஷ்ணருக்கு அடிக்கடி சமாதி நிலை ஏற்படும். தாங்கள் சாஸ்திரங்களில் படித்ததெல்லாம் அனுபவத்தில் கொண்டு வந்துள்ள பெரிய மகான் என்று ஒரு சிலர் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி அறிந்திருந்தனர்.
அப்படிப்பட்ட அனுபூதி நிலையை அன்னையாரும் அடைந்திருந்தார்.ஆனால் அதை அவர் வெளியே காட்டவே இல்லை. கோலாப் மா, யோகின் மா போன்றோர் மட்டுமே அவரது சமாதி நிலையைக் கண்டிருந்தார்கள்.

சாம்பல் பூசிய பூனையைப் போன்று அடக்கமாக இருந்துகொண்டு தம்மை வெளியுலகிற்குக் காட்டாமல் இருந்தார் அன்னை.

அன்னையைப் பற்றிய தெய்விக அனுபவங்கள் ஒரு சிலருக்குக் கிடைத்திருக்கின்றன.

சுவாமி கௌஷ்வரானந்தர் (ராம்மயி மகராஜ்) தமது இளம் வயது அனுபவத்தை ஒருமுறை கூறினார்.
பள்ளிக்கூடம் விட்ட பிறகு தினமும் அவர் அன்னையாருக்குச் சமையலறையில் உதவி செய்வார். தோட்டத்தில் பணி செய்வார்.
சுவாமி சாரதானந்த மகராஜ் கல்கத்தாவிலிருந்து அன்னையாரைத் தரிசனம் செய்ய ஜெயராம்பாடிக்கு வருவது வழக்கம். சிறுவனான ராம்மயியை அழைத்து, நீ போய் அன்னையார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பார்த்துவிட்டு வா. அவரை நான் வணங்க வேண்டும்” என்பார்.

‘அன்னையார் எப்போதும் காய்கறி நறுக்கிக் கொண்டிருக்கிறார்; அறையைச் சுத்தம் செய்கிறார்; சப்பாத்தி செய்து கொண்டிருக்கிறார்; அவரை எப்போது போய்ப் பார்த்தால் என்ன?’ என்று ராம்மயி நினைப்பார்.

அவர் அன்னையாரிடம் சென்று, அம்மா, மகராஜ் உங்களை நமஸ்கரிக்க வரலாமா? எனக் கேட்டார்” என்று வினவுவார். சரிப்பா அவரை வரச் சொல்” என்பார் அன்னையார்.

சுவாமி சாரதானந்தர் மிகவும் பயபக்தியுடன் மெதுவாக அன்னை முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவார். பிறகு அவரிடம், அம்மா, நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?” என்று கேட்பார்.

அன்னையும், நான் நன்றாக இருக்கிறேன் சரத். நீ நன்றாக இருக்கிறாயா?” எனக் கேட்பார்.
இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ராம்மயிக்கு ஒன்றுமே புரியாது. ஏனென்றால் இதே நாடகம் தினமும் நடக்கும்.

பிற்காலத்தில் சுவாமி கௌஷ்வரானந்தர், ‘குருதேவர், சுவாமிஜி மற்றும் சரத் மகராஜ் போன்றவர்கள் நமக்குக் கூறியிருக்கவில்லை என்றால், உண்மையிலேயே அன்னையார் என்ற மகாசக்தியைப் பற்றி எங்களுக்குத் தெரியவே வாய்ப்பில்லை’ என்று கூறுவார்.

குருதேவர் அன்னையாரிடம், ‘நான் போன பிறகு இந்த கல்கத்தாவில் உள்ள மக்களை யெல்லாம் பார்த்துக் கொள்’ என்று சொன்னார். அதற்கு அன்னையார், ‘நான் ஒரு பெண். நான் மட்டும் தனியாக என்ன செய்துவிட முடியும்’ என்று கேட்டார்.

அதற்கு குருதேவர், ‘நான் செய்ததைவிட நீ பல மடங்கு அதிகமாகச் செய்ய வேண்டி இருக்கும்’ என்று கூறினார். அவர் கூறியது போல் குருதேவரின் மறைவிற்குப் பிறகும் 34 வருடங்கள் உயிர் வாழ்ந்து எல்லோருக்கும் தொண்டு செய்து வந்தார் அன்னையார்.

இல்லறத்தில் வாழ்வது எப்படி என்பதை அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நமக்குப் படிப்பினை தருவதாக இருக்கிறது. எதை எப்படிப் பேச வேண்டும்? எதை எங்கு வைக்க வேண்டும்? எதை எப்படிச் செய்ய வேண்டும்? என்பதையெல்லாம் நாம் அவர் வாழ்க்கையிலிருந்து கற்கலாம்.

குருதேவர் அன்னையாரைப் பாரதப் பெண் மணிகளுக்கு ஓர் ஆதர்சமாக விட்டுச் சென்றார் என்பார்கள். ஆனால் அன்னையாரது வாழ்க்கையைப் படிக்கும்போது அவர் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் துறவிகளுக்கும் மற்றும் எல்லா சாதகர்களுக்கும் வழிகாட்ட வந்தவர் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அவரது வாழ்க்கை இல்லற வாழ்க்கை தனி, துறவற வாழ்க்கை தனி என்ற பிரிவுடன் இருக்க வில்லை. அவரது வாழ்க்கையில் இல்லறமும் துறவறமும் பின்னிப் பிணைந்து ஒன்றாகவே இருந்தது. அவரது ஒவ்வொரு வாக்கிலும் இல்லறம் எப்படி நடத்த வேண்டும். அதில் துறவறத்தின் மனோபாவம் எப்படி இருக்க வேண்டும்? என்பதை எடுத்துச் சொல்கிறார்.

பொதுவாக இல்லற வாழ்க்கை சிக்கல் மிகுந்ததாக உள்ளது. இன்பத்தின் பின்னால் சென்று துன்பத்தையே அதிகமாக அனுபவிக்கிறோம். இன்று சிரிப்பவர்கள் நாளை அழுவதைப் பார்க்கிறோம்.

அன்னையைப் போன்ற ஒருவரிடம் நம் மனம் செல்ல விரும்புகிறது. நாம் அவரைப் பிரார்த்தனை செய்கிறோம். அவர் சொன்னபடி நடக்க முயலுகிறோம்; முடியவில்லை.
ஆனால் அன்னையாரின் வாழ்க்கையில் பல பக்தர்கள், சீடர்கள், துறவிகள், பிரம்மசாரிகள் மற்றும் தாய்மார்கள் வந்து அவரது பாதகமலங்களில் அமர்ந்து, சரியான வாழ்க்கையை எப்படி வாழ்வது என்ற பாடத்தைக் கற்றுக் கொள்வதை நாம் காண முடிகிறது.
முழு தியாகத்தைப் புரிந்து சேவைக்கு வித்திட்டுப் போனார் ஸ்ரீராமகிருஷ்ணர். அந்த விதையிலிருந்து வளர்ந்த பெரிய மரமாக அன்னை ஸ்ரீசாரதா தேவியார் செயல்பட்டார்.

சேவை என்பது எப்படி இருக்க வேண்டும் என்று விளக்க அன்னையையே சங்கத்தலைவியாகக் கொண்டு ஸ்ரீராமகிருஷ்ண மடம் செயல்பட்டு வருகிறது.

இல்லறமாயினும் சரி, துறவறமாயினும் சரி நாம் எல்லோரும் ஒரு மாபெரும் இல்லறத்தில் இருக்கிறோம். துறவிகளுக்கும் இல்லறம் இருக்கிறது.

அன்னையாரிடம் சென்ற பல பக்தர்கள் மற்றும் துறவிகள் ‘எங்களது சொந்தத்தாயிடம் சென்றபோதுகூட இப்படிப்பட்ட நிம்மதியையும் அன்பையும் நாங்கள் பெற்றதில்லை’ என்று கூறியிருக்கிறார்கள்.

இப்பிறவியில் மட்டுமல்ல, ஜன்ம ஜன்மங்களுக்கும் அவர் நமக்குத் தாயாக இருக்கிறார்.
அவர் யார் தீங்கிழைத்தாலும் அதைச் சகித்துக் கொள்வார். சில சமயங்களில் மிகவும் விரக்தியடைந்து ‘என்ன இம்மாதிரியெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டியுள்ளதே’ என்றும் கூறுவார். ஆனால் அதன் பிறகு பாரபட்சமில்லாமல் அவர் எல்லோருக்கும் அன்பைப் பகிர்ந்து கொடுப்பார்.

பராசக்தி சொரூபினியாகிய அன்னையார் நமக்காக வந்தவர். அவரிடம் நாம் எங்கள் ‘மனதையும் கொஞ்சம் தூய்மைப்படுத்து, உன்னைப் பற்றி புரிந்து கொள்ளக்கூடிய தகுதியை எனக்குக் கொடு’ என்று பிரார்த்திப்போம்.
அந்த மகாசக்தியாக வாழ்ந்த அன்னையார் இன்றும் நம்முடன் வாழ்ந்து வருகிறார். நாம் மனமுருகி அவரிடம் பிரார்த்தனை செய்தால் அவர் நிச்சயம் நமக்கு உதவி புரிவார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s