நமக்கு மன அமைதி வேண்டுமென்றால்…

நமக்கு மன அமைதி வேண்டுமென்றால்…
– சுவாமி ஆத்மகணானந்தர்

HM9
அன்னை ஸ்ரீசாரதா தேவியாரின் அருள்நிலைக்குச் சிகரமான அன்பு மொழியை எவ்வாறு விளக்க முடியும்! அன்னைக்கு சகோதரி நிவேதிதை எழுதிய கடிதம் ஒன்றுள்ளது.
அதில், ‘அன்பு அம்மா, உங்களுக்கு ஒன்று தெரியுமா? உங்களுக்காக ஓர் அற்புதமான பாடலையோ, கவிதையையோ எழுதி அனுப்ப நினைக்கிறேன். ஆனால் உங்கள் திருமுன் அது வெற்றுச் சத்தமாகவோ, கூக்குரலாகவோதான் இருக்கும் என்று தோன்றுகிறது’ என எழுதுகிறார்.

உண்மையில் இறைவனின் அதிசயங்கள் அனைத்தும் அமைதியாகவே உள்ளன. அன்னையின் அன்பும் அப்படித்தான்.

அன்னையின் அன்பைப் பற்றித் திரும்பத் திரும்பப் பேசுவதா? அல்லது அவரது அன்பை அனுபவிப்பதா? உண்மையில் அன்பு என்பது அனுபவிக்கப்பட வேண்டியது; பேசக்கூடியதல்ல.

சுவாமி விவேகானந்தர் அதைத்தான் திரும்பத் திரும்பக் கூறுகிறார். சமயத்தை நாம் விவாதத்திற்குரியதாக, சடங்குகளாக, கேலிக்குரியதாக ஆக்கிவிட்டோம். சமயம் என்பது பேச்சல்ல; அது ஒரு தேவை.

அன்னையைப் பற்றி பேசுவது என்பது ஒரு வகையில் பார்த்தால் சுலபமாகத் தெரிகிறது. அவர் வாழ்வில் எத்தனை எத்தனை சம்பவங்கள்! சாதுக்கள், சாதகர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று அத்தனை பேரும் அன்னையைப் பற்றிய தங்கள் உணர்வுகளைச் சொல்லி இருக்கிறார்கள்.

நிவேதிதை மேலும் எழுதுகிறார்: குருதேவருக்கு ஆரத்தி நடந்து கொண்டிருந்தது. நான் உங்கள் அறையில் கண் மூடித் தியானத்தில் அமர்ந்து இருந்தேன். அது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை இப்போது உணர்கிறேன். உங்கள் திருவடியின் கீழ் ஒரு சிறு குழந்தையாக அமர்ந்திருப்பதே போதும் என்று ஏன் எனக்கு அப்போது தெரியாமல் போயிற்று!”

முரண்பாடுகளுக்கிடையே அன்னை அமைதியாக, இயல்பாக வாழ்ந்தார். அவர் மனதில் சஞ்சலமோ, வெறுப்போ கிடையாது.

‘மற்றவர்களிடம் தவறே காணக் கூடாது’ என்பதன் பொருள் என்ன? அன்னையார் மற்றவர்களின் தவறைக் கண்டு கண்டித்தும் இருக்கிறார்.

இதையெல்லாம் எப்படிச் செய்தார்? ஒரு தாயாக, தன்னுடையவர் என்ற தாய்மை உணர்வோடு அவர் சொல்லிக் கொடுப்பார்.

‘இந்த உலகையே உனதாக்கிக் கொள்’ என்கிறார் அவர். அனைத்து ஜீவராசிகளும் கிளி, பூனை போன்றவையெல்லாம் அவரது அன்பை அனுபவித்தன. உலகையே தமதாக்கிக் கொண்டு வாழ்ந்த காரணத்தால் முரண்பாடுகள் அவருக்கு இல்லாமல் இருந்தது.

பராசக்தியின் அவதாரமாக, ஒரு பரமஹம்சரின் துணைவியாக இருந்த ஒரு பெண்மணி, உலக மக்களை விட அதிக பற்றுதலோடு இருக்க முடியுமா? இது என்ன மாதிரியான ஆன்மிகம் என்று நினைக்கிறோம்.

இந்த அளவிற்கு ஒருவரால் எல்லோரையும் நேசிக்க முடியுமா?
அன்னையிடம் மந்திர தீட்சை பெற்ற ஒருவர் இறந்துவிட்டார். அந்தச் செய்தியைக் கேட்டு அன்னை அவரை நினைத்து, நினைத்து அழுதார். இந்த அன்பை நம்மால் உணர முடியுமா! படித்துப் பேசக் கூடிய அன்பா அது!

ஸ்ரீராமகிருஷ்ணர் ‘முரண்பாடுகளைக் கடந்து செல்பவன்தான் புத்திசாலி’ என்பார். முரண்பாடுகளைக் கடக்கும் சக்தியை அன்பால் மட்டுமே அளிக்க முடியும்.

நாம் சிறு சோதனைகளுக்கெல்லாம் அமைதி இழக்கிறோம். சோதனைக் காலங்களில் சமயம், கடவுள் ஆகிய நாம் கற்றதை எல்லாம் மறந்து நம்மையே இழந்துவிடுகிறோம்.

இன்று சமயத்திற்குக்கூட நிறைய விளம்பரம் செய்கிறார்கள். ஸ்ரீராமகிருஷ்ணர் ‘மலர் மலர்ந்தால் தானாகவே தேனீ வரும்’ என்பார். சமயத்திற்கு விளம்பரமும் ஆடம்பரமும் தேவையில்லை. அது எளிமையானது; தூய்மையானது; அன்பு மயமானது.

அன்னையார் உரக்கக்கூடப் பேசமாட்டாராம். இப்படி எளிமையாக வாழ்ந்த அன்னை இன்று எத்தனை பேரின் உள்ளங்களில் இடம் பெற்றிருக்கிறார்!

அன்னையாரின் காரியத்தை அவரே செய்கிறார். இரண்டு சாதுக்கள் சென்று கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு டீக்கடை. கடைக்காரர் இஸ்லாமியர். சாதுக்கள் டீ அருந்த கடைக்குச் சென்றார்கள். சுவரில் அன்னையாரின் படம் கொண்ட காலண்டர் ஒன்று இருந்தது. சாதுக்கள் கடைக்காரரிடம், இவரை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள்.

இவர் யார் என்பது தெரியவில்லை! அதற்காகத்தான் முயன்று கொண்டிருக்கிறேன்” என்றார் கடைக்காரர். மேலும் அவர், நான் சிறுவயதிலேயே தாயை இழந்துவிட்டேன். எல்லோருக்கும் தாய் இருக்கிறார்களே, என் தாய் உயிரோடிருந்தால் எப்படியிருப்பாள் என்று நான் தினசரி மிகவும் யோசிப்பதுண்டு, அப்படி நினைத்து நினைத்து என் மனதில் திடீரென்று ஒரு தாயின் உருவம் தோன்றலாயிற்று. அது மட்டுமல்ல, அந்தத் தாய் இரவில், கனவில் என் அருகில் அமர்வாள்; ஆறுதல் கூறுவாள்; என் தலையை அன்பாகத் தடவிக் கொடுப்பாள். ஒரு நாள் எப்படியோ திடீரென்று இந்த காலண்டர் என்னிடம் வந்தது. நான் கனவில் கண்ட பெண்மணி இவரேதான். இவர் யார்? தயவு செய்து சொல்லுங்கள் சுவாமி” என்று கேட்டார். சாதுக்கள் மலைத்து நின்றார்கள்.

உண்மையிலேயே இறைவனின் அதிசயங்கள் இயல்பாகவே அமைதியாகவே உள்ளன. அவை நாம் அறியாமலேயே நம் வாழ்க்கையில் நுழைகின்றன.

நாமாகச் சென்று ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று வாயால் சொல்ல முடியாது. அதையும் அன்னை நினைத்தால்தான் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன். இது எவ்வளவு எளிமையோ, அவ்வளவு கடினமானதும்கூட.

அன்னையின் உருவத்தை யார் பார்த்தாலும் அவரை ‘அன்னை’ என்றுதான் அடையாளம் காண்பார்கள். அன்னையின் திருவுருவைப் பார்த்தால் அதிலுள்ள அமைதி, தாயின் அழகு, தூய்மை ஆகியவற்றைப் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும்.

மருந்தை உட்கொண்டுவிட்டால் அது தானாகவே வேலை செய்யும். உணவு உட் கொண்டால் பசி தானாக அடங்கும். அதுபோல் இறைவன் மனதில் அமர்ந்துவிட்டால் மற்றவை தாமாகவே நடைபெறும். இறைவனை மனதில் அமர்த்துவதற்காகத்தான் நாம் செய்யும் பஜனை, சொற்பொழிவுகள் ஆகிய இத்தனை ஏற்பாடுகளும்.

இதயம் மலராமல் இருப்பதற்குக் காரணம் ஆணவம் என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர். ஆனால் அன்னையின் உதவியுடன் அதையும் சுலபமாக வெற்றி காணலாம்.

ஒருமுறை நாங்கள் கேதார்நாத் சென்றோம். யாத்திரை மிகவும் கஷ்டமாக இருந்தது. எப்படியோ யாத்திரை முடித்து திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது பார்வையற்ற ஓர் அம்மா தடியை ஊன்றிக் கொண்டு தட்டுத் தடுமாறி மேலே ஏறிக் கொண்டிருந்தார்.

அப்போது சுவாமி ஒருவர் அவரிடம், அம்மா, கஷ்டப்பட்டு மேலே போய் என்ன பார்க்கப் போகிறீர்கள்?” என்று கேட்டார்.
என்னால் இறைவனைப் பார்க்க முடியாதுதான். ஆனால் இறைவனால் என்னைப் பார்க்க முடியும் அல்லவா?” என்று அவர் பதில் சொன்னார். அவரது பக்தி, சிரத்தையைப் பார்த்து நாங்கள் மலைத்து நின்றோம்.

நம் அன்னையாரும் – நாம் அவரைப் பார்க்கவில்லையென்றாலும் – கண்டிப்பாக நம்மைப் பார்ப்பார், ஆசீர்வதிப்பார் என்று நான் நம்புகிறேன். அந்த ஒரு வழியில்தான் நம் மனதில் அமைதி ஏற்படுத்த முடியும்; அன்பை நிலைநாட்ட முடியும்.
நூறு ஆண்டுகளுக்கு முன்னால் சமூகத்தில் இருந்த ஜாதிக் கட்டுப்பாட்டைத் துணிச்சலாக மட்டுமல்ல இயல்பாக அவர் விலக்கினார்.
இன்றைக்கு முற்போக்கு, பகுத்தறிவு என்று என்னவெல்லாமோ பேசுகிறோம். ஆனால் அன்னையார் அதை அன்றே செய்து காட்டினார். சமுதாயம் என்ன சொல்லுமோ என்ற சிந்தனையில்லாமல், யாருடனும் வெறுப்பு இல்லாமல் அதைச் செய்தார்.

அன்பை அன்னையார் இயல்பாகவே பகிர்ந்து கொண்டார். அன்பு என்பது இயற்கை நியதி. ஆதலால் அது நினைத்த உடனே வெளிப்படுகிறது. அன்னையின் அன்பின் பரிமாணங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. இன்றும் நம்மால் அந்த அளவிற்கு அன்பை வழங்க முடியும் என்று தோன்றவில்லை.

நாம் அவரைத் தாயாக ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ, அவர் நம்மை கண்டிப்பாகக் குழந்தையாக ஏற்றுக் கொள்வார். அவர் அப்படி ஏற்றுக் கொண்டதால்தான், நாம் இங்கு ஒரு குடும்பமாக அமர்ந்திருக்கிறோம். அன்புடன், பரஸ்பரம் விட்டுக் கொடுத்து, ஒன்றாக இருக்கிறோம். அவர் நம்மை ஏற்றுக் கொண்டிருப்பதால்தான் இது சாத்தியம்.

அன்னையார் ‘மன அமைதி வேண்டுமானால் பிறர் குற்றத்தைக் காணாதே. மாறாக உன் குற்றத்தைப் பார்’ என்று சொல்கிறார்.
உண்மையில் நமக்கு மன அமைதி வேண்டு மென்றால், அன்னையில் காலடியில் ஒரு குழந்தையாக அமர்ந்திருந்தாலே போதும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s