அயல்நாட்டிலும் அன்னை!

நமது கடவுள் நம்பிக்கையை வலுப்படுத்தும் விதமான ஒரு நிகழ்ச்சி இதோ.

தூய அன்னை சாரதாதேவியின் அற்புத அருளானது உண்மையான பக்தர்களின் – அவர்கள் எங்கிருந்தாலும் – வாழ்க்கையில் நிறைவை வழங்குகிறது.

பிரேசில் நாட்டில் சாவோபோலோவிலுள்ள ராம கிருஷ்ண வேதாந்த ஆசிரமத்துத் துணைத் தலைவர் சுவாமி சுநிர்மலானந்தர் நேரில் கேட்ட செய்தி இது.
HM13
இன்று வெகுவேகமாக முன்னேறிவரும் பிரேசில் நாடு மலேரியாவால் அவதிப்பட்ட காலம்.

அரசாங்கம் மலேரியாவைத் தடுக்க அனைத்து வழிகளிலும் முயன்றது. அந்நோயைப் பற்றி ஆய்வு செய்யப் பலரை நியமித்தது. இதற்காக அவர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று மலேரியா சம்பந்தப்பட்ட கொசு இனங்களின் மாதிரிகளைச் சேகரித்தனர்.

அவர்களுள் ஓர் இளைஞர் ‘அதேர்பால் ப்ரான்சிஸ்கோ தே ஒலிவெய்ரா’ (Adherbal Francisco de Oliveira) என்பவர். மலேரியா பற்றி அறிய அவர் பல தீவுகளுக்குப் படகுகளில் சென்று குறிப்புகளைச் சேகரித்து வந்தார்.

இந்தப் பணிக்காக ஒலிவெய்ரா ஒரு சமயம் தீவு ஒன்றுக்குப் படகில் சென்றார். அன்று வந்த படகோட்டி விசித்திரமாகக் காணப்பட்டான். அவன் ஒலிவெய்ராவிடம் அன்னை சாரதாதேவியைப் பற்றிக் கூற ஆரம்பித்தான்!

ஒலிவெய்ராவிடம் காட்ட தூய அன்னையின் படம்கூட அவனிடம் இல்லை. கடலில் இன்னல்களை அவன் எதிர் நோக்கியபோதெல்லாம் தூய அன்னை ஸ்ரீசாரதாதேவியை மனதில் பிரார்த்தித்துக் கொண்டே மெழுகுவர்த்திகளை ஏற்றி வைப்பானாம்.

இவற்றை முதலில் ஒலிவெய்ரா நம்பவில்லை. நாட்கள் பல சென்றன. இருவரும் நண்பர்களாயினர்.
ஒரு நாள் வழக்கம் போல் படகில் இருவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கடல் கொந்தளித்தது. அலைகள் சீறிப் பாய்ந்தன. புயல் தோன்றியது. படகு கடலில் மூழ்கும் நிலை.

உடனே படகோட்டி அன்னை சாரதையைப் பிரார்த்திக்கத் தொடங்கினான். ஒலிவெய்ரா அன்னையின் படங்களைக் கண்டதில்லை. இருந்தாலும் படகோட்டியின் விசுவாசத்தை நம்பி அன்னையை அவரும் பிரார்த்தித்தார்.

தெய்வாதீனமாக அப்போது அவர்கள் ஒரு தீவைக் கண்டார்கள். மகிழ்ச்சி கரைபுரண்டோட, தீவில் படகை நிறுத்திவிட்டு நடக்க ஆரம்பித்தார்கள்.
அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. நீண்ட கூந்தலுடைய ஒரு பெண்மணி கையில் பிஸ்கட்டுகளுடனும், (பிரேஸில்காரர்களுக்கு மிகவும் பிடித்த) காபியுடனும் அவர்களை நோக்கி வந்தார்.

அப்பெண்மணியின் அன்பும் விருந்தோம்பலும் அவர்களை வியப்பில் ஆழ்த்தின. இருவரும் அவர் கொடுத்த காபியைக் குடித்தனர். பிஸ்கட்டுகளைத் தின்ற பிறகு அவருக்கு நன்றி கூறினர்.

‘புயலைப் பற்றிக் கவலை வேண்டாம். நலமுடன் நீங்கள் வீடு திரும்புங்கள்’ என அப்பெண்மணி கூறினார்.

காபி குடித்த உற்சாகத்திலும் அப்பெண்மணியின் ஆறுதல்மொழிகளாலும் இருவரும் அமைதி அடைந்து ஒரு பிரச்னையுமின்றித் தங்கள் இருப்பிடம் திரும்பினர்.

அவர்கள் இருவரும் பிற படகோட்டிகளிடம் தங்களை ஒரு தீவில் ஒரு பெண்மணி சூடான காபியுடன் உபசரித்ததையும் தாங்கள் புயலிலிருந்து தப்பியதையும் கூறினர்.

அதைக் கேட்டவர்கள் நம்ப மறுத்தார்கள். ‘பல காலமாக நாங்கள் இக்கடலில் சென்று வருகிறோம், நீங்கள் சொல்லும் இடத்தில் அப்படி ஒரு தீவு இல்லவே இல்லை’ என்று ஒரே குரலில் அனைவரும் கூறினர்.

அது ஒலிவெய்ராவுக்கு அதிர்ச்சி அளித்தது. இருந்தாலும் ‘சாண்ட மா’வை (Santa Mae – அவர் தூய அன்னையை அப்படி அழைத்தார்) அவர் நம்பினார். தினமும் அன்னையைத் தம் கற்பனையால் கண்டு தியானித்தார்.
ஐந்து ஆறு ஆண்டுகள் கடந்தன.

இந்தியாவிலிருந்து சென்ற ஒரு சந்நியாசி முதன் முதலாக ஒருமுறை ஒலிவெய்ராவுக்கு ஸ்ரீராமகிருஷ்ண – சாரதாதேவி – சுவாமிஜியின் புகைப்படங்களைக் காட்டினார். அதைக் கண்ட ஒலிவெய்ரா மெய்சிலிர்த்தார். அப்படத்திலிருந்த தூய அன்னையே அன்று தீவில் தமக்கும் படகோட்டிக்கும் காபி தந்தவர் என்று கண்டு புளகாங்கிதம் அடைந்தார்.

இது நடந்தது 1953 -ஆம் ஆண்டு. அன்று முதல் அன்னையிடம் தீவிர பக்தி கொள்ள ஆரம்பித்தார் ஒலிவெய்ரா.

அன்னையைப் பின்பற்றும் ஓர் ஆன்மிக இயக்கம் (ராமகிருஷ்ண மிஷன்) உண்டென்றும், அதில் சந்நியாசிகள் இருக்கிறார்கள் என்றும் அதற்கான ஒரு மையம் தமது பக்கத்து நாட்டில் உள்ளதென்றும் ஒலிவெய்ரா இறக்கும்வரை அறிந்திருக்கவில்லை.

ஆனால் அன்னையின் அருளால் தாம் மறையப்போகும் நாளை அவர் அறிந்திருந்ததாக அவரது மகன் கூறினார்.
ஒலிவெய்ரா மறைந்த ஐந்து ஆண்டுகளுக்குப்பின் அவரது மகன் – சலுஸ்டியானோ பிரான்சிஸோ, தம் தந்தை கற்றுத் தந்தபடி தினமும் தூய அன்னையிடம் பிரார்த்தனை செய்தார். பிரேசிலில் உள்ள ராமகிருஷ்ண மிஷனுக்குச் சென்றார்; சிறந்த பக்தரானார்.

இந்த சலுஸ்டியானோதான் தமது தந்தைக்குத் தூய அன்னை மீதிருந்த ஆழ்ந்த பக்தியையும், மேற்கூறிய நிகழ்ச்சியையும் பற்றிக் கூறினார். இவர் கடந்த 30 வருடங்களாக ஸ்ரீராம கிருஷ்ணரின் பக்தராக விளங்கி வருகிறார்.

இரண்டாம் உலகப் போர் நடந்த போதும் அதன் பின்னரும் பல இந்தியர்கள் பிரேசிலுக்கு வந்தனர். அவர்களுள் சிலர் ஆங்கில அரசிடம் பணி புரிந்தனர். வேறு சிலர் தப்பிப் பிழைக்க வந்தவர்கள். அவர்கள் கடல் வழி வந்தவர்கள். அவர்களுள் சிலருடன் அப்படகோட்டி பழகியிருக்கலாம். அவர்களிடமிருந்து தூய அன்னை ஸ்ரீசாரதாதேவியைப் பற்றி அவர் அறிந்திருக்கலாம் என்று சலுஸ்டியானோ மேலும் கூறினார்.

எங்கோ தூர தேசத்தில் ஒரு படகோட்டி ஸ்ரீசாரதாதேவியைப் பற்றி அறிந்து அவரது குடும்பத்தினரே பக்தர்களாயினர் என்றால் அது ஆச்சரியம் அல்லவா!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s