இன்றும் அவசியமான அன்னையின் அறிவுரை

இன்றும் அவசியமான அன்னையின் அறிவுரை
– ஸ்ரீமத் சுவாமி ரங்கநாதானந்தஜி மகராஜ்

நண்பர்களே! பக்தர்களே!

நம் நாடு ஒரு சுதந்திர நாடு, குடியரசு நாடு. குடியாட்சி என்றால் சாமானியர்களும் சமுதாயத்தின் மேல்தட்டில் உள்ளவர்களும் சமம்; வேறு வேறல்ல என்றே பொருளாகும். எனவே இக்காலத்தில் ஒரு புதிய ஒற்றுமையான மனோபாவம் நமக்குத் தேவை.
HM14
இத்தகைய சிறந்த பரிமாணம் தூய அன்னை ஸ்ரீசாரதா தேவியின் வாழ்க்கையில் காணக் கிடைக்கிறது. அவரால் அமெரிக்க, ஆங்கிலேய கிறிஸ்தவர்களை அரவணைத்
துக் கொள்ள முடிந்தது; அவர்களுடன் வாழ முடிந்தது, உணவு உட்கொள்ள முடிந்தது.

மிகவும் ஆசாரமான உயர்குலத்து அந்தணக் குடும்பத்தில் பிறந்தவரானாலும் அன்னை இதையெல்லாம் மீறி ஒரு சுதந்திரமான மனோபாவத்தை உருவாக்க வல்லவராய் இருந்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த சகோதரி நிவேதிதை, அமெரிக்கப் பெண்மணிகளான சகோதரி கிறிஸ்டீன், திருமதி சாரா புல், ஜோஸஃபீன் மெக்லவுட் முதலிய அனைவரையும் அன்னை ஏற்றுக் கொண்டார். அன்னை அம்ஜத் என்ற இஸ்லாமியரையும் நன்கு கவனித்துக் கொண்டார். அவர் சாப்பிட்ட இடத்தைத் தாமே சுத்தம் செய்தார். என்னவோர் அற்புதம் அது!

ஓர் ஆசாரமிக்க அந்தணக் குடும்பத்திலிருந்து வந்து, முறையான கல்வி ஏதும் பெறாவிட்டாலும் அன்னையின் வாழ்க்கையில் இத்தகைய பல நிகழ்ச்சிகள் உள்ளன. இந்தியாவுக்கு இவை தரும் பாடங்கள் பலப் பல.
நம் நாட்டில் மேல்ஜாதியினருக்கும் கீழ்ஜாதியினருக்குமிடையே உள்ள வேற்றுமை-தீண்டாமை என்ற ஒரு விநோதமான வியாதி உள்ளது. இது போன்றவை இந்தியாவைப் பாழாக்கி வருகின்றன. இப்போது அனைவரையும் சமமாகப் பாவிக்க வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. இறுதியாக இந்தச் சமத்துவம் வந்தே ஆக வேண்டும். இங்கு உயர்ந்தவரும் இல்லை; தாழ்ந்தவரும் இல்லை.

அன்னை ஸ்ரீசாரதாதேவி, ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் ஆகியோர் மனிதருக்கிடையேயான இசைவு, ஆண் – பெண் சமத்துவம், ஜாதி வேற்றுமையின்மை போன்றவற்றை எல்லாம் வாழ்ந்து காட்டியுள்ளனர்.

அன்னையும் குருதேவரும் சுவாமிஜியும் மனிதர்களைச் சமமாக நடத்த வேண்டும் என்ற செய்தியை நமக்கு அளித்துள்ளனர். உயர்ந்தவர் – தாழ்ந்தவர், ஜாதி, இனம் போன்ற வேற்றுமைகளே கூடாது. ஜாதிவெறியும் தீண்டாமையும் இந்தியாவிலிருந்து அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

கீதை அளிக்கும் பாடம் என்ன?
தர்மம் சீர்குலைந்து போகும் போதெல்லாம் மீண்டும் தர்மத்தை நிலைநாட்டக் கடவுள் அவதரிக்கிறார். இம்முறை சுவாமி விவேகானந்தரையும் அன்னை சாரதாதேவியையும் உடன் அழைத்துக் கொண்டு ஸ்ரீராமகிருஷ்ணர் அவதரித்துள்ளார். அதனால் இந்தியாவில் ஒரு முழுமையான மனிதகுல மேம்பாடு கைகூடியுள்ளது. இந்தியா முழுவதிலும் இவர்களது உபதேசங்கள் கடைப்பிடிக்கப்பட்டால் இந்த நூற்றாண்டில் தீண்டாமை, ஜாதிவெறி போன்ற பெருங்கறைகளை நீக்கும் சீரிய பணி உதயமாகும் என்று நம்புகிறேன்.

பல நூற்றாண்டுகளாக மேலைநாட்டவர் மிலேச்சர்கள் என்று நமக்குச் சொல்லித் தரப்பட்டுள்ளது. ஆனால் சுவாமிஜி இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் வசித்திருக்கிறார். மிலேச்சர்கள் என்ற சொல்லைக் கண்டு
பிடித்து வெளி உலகுடன் தொடர்பைத் துண்டித்துக் கொண்ட நாளன்றே இந்தியாவிற்குக் கதி மோட்சம் இல்லை என்றாகிவிட்டது” என சுவாமிஜி ஒருமுறை கூறினார்.

‘மிலேச்சன்’ என்ற கருத்தை இப்போது ஒழித்துக் கட்டியாக வேண்டும். மிலேச்சன் என்ற எண்ணமே கூடாது. தற்போது நம் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் கல்வி பயின்று வருகிறார்கள்.

தூய அன்னையின் வாழ்க்கை ஒரு மகத்தான உதாரணம். அவர் ஒரு தெய்விகப் பிறவி, முறையாகக் கல்வி பயிலாவிட்டாலும் வெளிநாட்டவரிடம் எவ்வாறு பழக வேண்டுமென்பதை அவர் காட்டியருளினார்.

தூய அன்னையின் புகைப்படம் நாம் கவனித்துப் பார்க்க வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும். இந்தப் புகைப்படங்களை எடுக்க ஏற்பாடு செய்தவர் யார் தெரியுமா? பாஸ்டனைச் சேர்ந்த பெண்மணி திருமதி சாரா புல் அன்னை
யைப் புகைப்படம் எடுக்க அவரிடம் அனுமதி வேண்டினார்.

முதலில் அன்னை அனுமதி அளிக்கவில்லை. பலவாறாக வேண்டிய பின் கடைசியில் சாரா புல், நான் உங்கள் புகைப்படத்தை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்று பூஜிக்க விரும்புகிறேன்” என்றார். அன்னை அரை மனதுடன் சம்மதித்தார். திருமதி சாரா புல் விதவிதமாக எடுத்த புகைப்
படங்கள் அனைத்திலும் அன்னை அமர்ந்த கோலத்தில் இருப்பதைக் காணலாம். ஒரு புகைப்படத்தில் ஒரு புறம் அன்னையும் மறுபுறம் சகோதரி நிவேதிதையும் அமர்ந்தவாறு காட்சியளிக்கிறார்கள். அந்த அழகான, பிரபலமான புகைப்படத்தை நாம் எல்லோரும் கண்டு மகிழ்கிறோம்.

அப்புகைப்படம் மேலை நாடுகள் மற்றும் கீழை நாடுகளின் ஒருமைப்பாட்டைக் குறிக்கிறது.

நமது ஜனநாயகம் இப்படித்தான் வலுவூட்டப்பட வேண்டும். இவ்விஷயத்தில் இந்தியா மிக மோசமான நிலையில் உள்ளது. 2000 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் தீண்டாமை, ஜாதி பேதம் போன்றவற்றையெல்லாம் கடைப்பிடித்து வந்துள்ளோம்.

ஆக, அன்னையின் வாழ்க்கை நமக்கு – இந்தியா முழுவதும் உள்ள நம் மக்கள் அனைவருக்கும் ஒரு பேருதாரணமாகும். ஒரு மகாத்மா செய்வதை எல்லாம் அனைவரும் பின்பற்றிச் செய்வர் என்று கீதை கூறுகிறது. இந்தியாவிலுள்ள அந்தணர்களும் மெத்தப் படித்த அறிஞர்களும் மனம் மாறித் தீண்டாமையை நீக்க முனைந்தால் பிறரும் அவ்வழியே நடக்க முயல்வர்.

யத்யதாசரதி சிரேஷ்ட: தத்ததேவேதரோ ஜன: நி
ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்ததனுவர்த்ததே நிநி
உத்தமர்கள் செய்து காட்டுவதையே பிறர் பின்பற்றுவர் என்பது இதன் பொருள். (கீதை 3.21)

நாம் இந்தப் படிப்பினையைக் கடைப்பிடித்தால் மட்டுமே நம் ஜனநாயகம் உண்மையானதாக விளங்கும். ஏற்கனவே இது அரசியலிலும் மொழி விஷயத்திலும் ஏற்பட்டுவிட்டது.

ஒவ்வொருவருக்கும் ஓர் ஓட்டு உண்டு. தீண்டத்தகாதவர், பழங்குடியினர் போன்றோருக்கும் அந்தணர், க்ஷத்திரியர் போன்ற உயர்குடியினருக்கும் தலைக்கு ஒரே ஓட்டுதான்.
நமது ஜனநாயக அரசியல் சட்டம் மனிதர்களிடையே இத்தகைய சமத்துவத்தைக் கொண்டு வந்துவிட்டது. இவ்வாறே எதிர்காலத்திலும் இதன் பெரும் விளைவுகளை நாம் காணலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்குரிமை. எஜமானனுக்கும் ஒரு வாக்கு, பணியாளனுக்கும் அவ்வாறே. எவருக்கும் இரு வாக்குகள் இல்லை – இன்று இம்முறையே நம் புதிய ஜனநாயகத்தின் வலிமையாகும்.

தூய அன்னையின் வாழ்க்கைச் செய்தி எங்கும் பரவும். குருதேவர், அன்னை, சுவாமிஜி ஆகியோரின் வாழ்வும் வாக்கும் வரும் தலைமுறைகளில் இந்தியாவிற்கு ஊக்கமளிக்கும். அதன் மூலம் நாட்டில் ஒற்றுமையையும் அமைதியையும் உருவாக்குவோம்; எல்லோரையும் மதிப்போம்.

அனைவரது இதயங்களிலும் இறைவன் குடியிருக்கிறான் என்று உபநிஷத்துகள், கீதை, பாகவதம் போன்ற நூல்களின் மூலம் நமது ஆச்சார்யர்கள் நமக்கு எடுத்துரைக்கிறார்கள். கீதையில் கண்ணன், ‘அர்ஜுனா! நான் அனைவரது இதயங்களிலும் குடியிருக்கிறேன்’ என்கிறார்.

இறைவன் அனைவரது உள்ளங்களிலும் இருக்கும்போது வேற்றுமைகளுக்கு இடமேது? நாம்தான் சமூக Žதியாக, செயற்கையான வேற்றுமைகளைக் கற்பித்துக் கொள்கிறோம். அவை மறைய வேண்டும். ஒருவனின் உள்ளத்திலுள்ள பரம சத்தியத்தைச் சார்ந்து எழுந்த உண்மை வெளிப்பட வேண்டும்.

‘அனைத்து ஜீவன்களின் இதயங்களிலும் குடி கொண்டுள்ள இறைவனே நாம்’ எனப்படுகிறது. ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை, சுவாமிஜி ஆகியோர் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிய இந்த வேதாந்த உபதேசங்கள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள மக்களை ஊக்கப்படுத்தும் என்று திண்ணமாக நம்புகிறேன்.

இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் வந்துள்ள இம்மாபெரும் கூட்டத்தில் கலந்து கொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். வரவிருக்கும் சில நாட்களில் நமக்குப் பேரூக்கம் கிடைக்கும் என்று நான் உறுதியாகக் கூறுவேன். நீங்கள் வீடு திரும்பும்போது இந்த ஊக்கத்துடனே செல்ல வேண்டும்.

தீண்டாமையை விலக்குங்கள். அதனால் ஜனநாயகம் வலுப்பெறும்; வேதாந்தக் கருத்துகளை மையமாகக் கொண்ட, விவேகானந்தர் விரும்பிய இந்தியா மலரும். வேதாந்தம் நாம் அனைவரும் ஒன்றே என்கிறது. அஹம் பிரம்மாஸ்மி; இது எல்லா ஜீவராசிகளுக்கும் பொருந்தும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s